திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்
திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் (Srivilliputhur Megamalai Tiger Reserve) இந்தியாவின் 51வது புலிகள் காப்பகமாகவும், தமிழ்நாட்டின் 5வது புலிகள் காப்பகமாக, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் மேகமலையின் மேற்குத் தொடர்ச்சி மலைக்காட்டுப் பகுதிகளை புலிகள் சரணாலயமாக அறிவித்து, தமிழ்நாடு அரசு 9 பிப்ரவரி 2021 அன்று அரசாணை வெளியிட்டது.[1][2]ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் பெரியாறு புலிகள் காப்பகத்தின் தொடர்ச்சியாக ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ள்து. இதன் நீட்சியாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் வனவிலங்கு சரணாலயம் இந்த புதிய புலிகள் காப்பகத்துடன் இணைக்கப்படுகிறது.
இப்புதிய சிறீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் மொத்தப் பரப்பளவு 1.01 இலட்சம் ஹெக்டேர் ஆகும். இதில் 64,186.21 ஹெக்டேர் பரப்பளவு புலிகள் வாழும் பகுதியாகவும், 37,470.92 ஹெக்டேர் நிலப்பரப்பு பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும் இருக்கும்.[3][4][5]
இந்த புலிகள் காப்பகத்தின் வடக்கில் மதுரை வனக்கோட்டமும், கிழக்கில் விருதுநகர் வனக்கோட்டமும், தெற்கில் திருநெல்வேலி வனக்கோட்டமும், மேற்கில் தேனி வனக்கோட்டம் மற்றும் பெரியாறு புலிகள் காப்பாகமும் எல்லைகளாக இருக்கும்.
முதன்மை வனப்பராமரிப்பு அதிகாரி (Chief Conservator of Forests) பதவி தரத்தில் ஒரு கள இயக்குநரின் தலைமையில் இந்த புலிகள் காப்பகம் பராமரிக்கப்படும். இந்த புலிகள் பாதுகாப்பகத்தின் தலைமை அலுவலகம் மதுரையில் செயல்படும்.
இங்கே ஐந்துவகை காடுகள் உள்ளன. புலி, சிறுத்தை, செந்நாய், காட்டுமாடு, யானை, மான், நகமற்ற நீர்நாய், கேளையாடு, சருகுமான், சோலைமந்தி, இருவாச்சி, கருநாகம் போன்ற விலங்குகள் இங்கு காணப்படுகின்றன. தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாடு சுமார் 250க்கும் மேற்பட்ட எண்ணிக்கியில் வாழ்கின்றன.
வைகையாற்றின் நீர்பிடிப்புப் பகுதியில் 1016 சதுர கிலோமீட்டர் காடு புலிகள் காப்பகமாக அறிவிக்கபட்டுள்ளதால். இந்த வனப்பகுதி பாதுகாக்கபட்டு காட்டில் தாவரங்களின் நெருக்கம் அதிகமாகும். இதனால் எதிர்காலத்தில் வைகைக்கு இங்கிருந்து வரும் நீரின் அளவு அதிகரித்து வைகையின் நீராதாரம் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 51st Tiger Reserve in India to come up in Meghamalai
- ↑ "ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயமாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு". Archived from the original on 2021-02-08. பார்க்கப்பட்ட நாள் 2021-02-12.
- ↑ ‘Srivilliputhur-Megamalai as fifth tiger reserve will boost conservation efforts’
- ↑ TN gets its fifth tiger reserve in Srivilliputhur – Megamalai
- ↑ Centre approves Srivilliputhur-Megamalai Tiger Reserve in Tamil Nadu
- ↑ வைகைக்கு உயிர்தரும் மேகமலை, கட்டுரை, பாரதி பிரபாகர், இந்து தமிழ், 2021 ஏப்ரல் 17