உள்ளடக்கத்துக்குச் செல்

சிக்மரிங்ஞன் பிதேலிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிக்மரிங்ஞன் பிதேலிஸ்
மறைசாட்சி
பிறப்புஅக்டோபர் 1577
சிக்மரிங்ஞன்
இறப்புஏப்ரல் 24, 1622
சீவிஸ்
ஏற்கும் சபை/சமயங்கள்கத்தோலிக்கம்
அருளாளர் பட்டம்1729 by திருத்தந்தை பதிமூன்றாம் பெனடிக்ட்
புனிதர் பட்டம்1746 by பதினான்காம் பெனடிக்ட்
திருவிழாஏப்ரல் 24
பாதுகாவல்மறைபரப்பு பேராயம்

புனித சிக்மரிங்ஞன் பிதேலிஸ் கப்புச்சின் சபையை சேர்ந்த கத்தோலிக்க அருட்பணியாளர் மற்றும் மறைசாட்சியும் ஆவார்.

கல்வி சிறந்த பேரறிஞர்

[தொகு]

மார்க் ராய் என்ற இயற்பெயர் கொண்ட பிதேலிஸ், ஜெர்மனி நாட்டிலுள்ள சிக்மரிங்ஞன் என்ற நகரில் அக்டோபர் 1577 இல் பிறந்தார். நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்த பிதேலிஸ், தனது 23 வயதிலே மெய்யியல் மற்றும் எழுத்தியலில் பிரைபெர்க் இம்பெர்சைகு என்ற பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். தனது நகரின் பிரபுக்களோடு இணைந்து தனது 26-ம் வயதில் இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், போன்ற பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு புதிய மொழிகளை கற்று ஆழ்ந்த அறிவை பெற்றார். 1611-ம் ஆண்டில் நாட்டுச் சட்டத்திலும் திருச்சபை சட்டத்திலும் முனைவர் பட்டத்தை முடித்து பேரறிஞர் என்ற சிறப்பு பட்டத்தை பெற்றார்.

ஏழைகளின் வழக்கறிஞர்

[தொகு]

மார்க் ராய் தனது வழக்கறிஞர் பணியை என்சிசீம் என்ற நகரில் ஏழைகளுக்கு நீதி என்ற இலட்சிய வாக்கை கொண்டு தொடங்கினார். செல்வந்தர்களால் ஏமாற்றப்பட்ட, வஞ்சிகப்பட்ட ஏழை மக்களின் வழக்குகளை எடுத்து நடத்தி நீதியை நிலைநாட்டினார். எவ்வித இலாபத்தை எதிர்பாராமல் இலட்சியம் ஒன்றை மட்டுமே முன்னிறுத்தியதால் சக வழக்கறிஞர்களின் இன்னல்களுக்கு உள்ளாகி மனமுடைந்தார்.

கப்புச்சின் துறவி

[தொகு]

பணம், பொருள், பதவி என்ற உலகத்தின் போக்கும், நீதிமன்றங்களில் நீதிக்கு தண்டனை கிடைப்பதையும், ஏழைகள் அநியாயமாக நசுக்கபடுவதையும் கண்டு மனம் நொந்து, தனக்கு உகந்த பணி இதுவன்று என உதறி தள்ளி, செபதிலும், தபத்திலும், தனது பாதையை செலுத்தினார். ஏழைகளுக்கு பணி செய்ய கப்புச்சின் சபையை நாடினார், ஆனால், இவரது செல்வ செழிப்புடைய குடும்ப பின்னணி, மிகப்பெரிய படிப்பு ஆகியவை தடையாக இருந்தாலும் தொடர்ந்து போராடி குருவாகி கப்புச்சின் சபையில் தன்னை 1612 இல் இணைத்துக்கொண்டார்.

மறைபரப்பு பேராயத்தின் முதல் மறைச்சாட்சி

[தொகு]

பிரிவினை சபையினருக்கு சுவிஸ், பிரிகாளியா, பிரட்டிக்காவு, மேயன்பெல்ட் மற்றும் சுவபேயா பகுதிகளில் நற்செய்தியை முழங்கி பலரை மீண்டும் கத்தோலிக்க விசுவாசத்திற்கு திருப்பினார். இதனால் பிரிவினை சபையினரின் கடும் கோபத்துக்கு உள்ளாகி சீவிஸ் என்ற ஊரில் அமைந்த புரோடோஸ்டாண்ட் ஆலய பீடத்தில் 1622 ஏப்ரல் 24 இல் கொலை செய்யப்பட்டு கத்தோலிக்க விசுவாசத்திற்காக மரித்தார். அதே ஆண்டில் உலகெங்கும் நற்செய்தியை பரப்ப ஏற்படுத்தபட்ட மறைபரப்பு பேராயத்தின் முதல் மற்றும் கப்புச்சின் சபையின் முதல் மறைச்சாட்சியாவார்.

சான்றுகள்

[தொகு]

www.catholic.org/saints/saint.php?saint_id=3355 www.catholic-saints.info/...saints-a.../saint-fidelis-of-sigmaringen.htm www.traditioninaction.org/SOD/j176sd_FidelisSigmaringen4-24.shtml www.capuchins.org.nz/saints_and_blessed.htm ஆ. தைனிஸ், கப்புச்சின் சபையில் தூயவர்கள், தமிழக கப்புச்சின் சபை, கோயமுத்தூர், 2011, 37-43pp.