உள்ளடக்கத்துக்குச் செல்

முதலாம் லூசியஸ் (திருத்தந்தை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருத்தந்தை முதலாம் லூசியஸ்
Pope Lucius I
22ஆம் திருத்தந்தை
ஆட்சி துவக்கம்சூன் 25, 253
ஆட்சி முடிவுமார்ச்சு 5, 254
முன்னிருந்தவர்கொர்னேலியுஸ்
பின்வந்தவர்முதலாம் ஸ்தேவான்
பிற தகவல்கள்
இயற்பெயர்லூசியஸ்
பிறப்புதெரியவில்லை
உரோமை; உரோமைப் பேரரசு
இறப்புமார்ச் 5, 254
உரோமை; உரோமைப் பேரரசு
புனிதர் பட்டமளிப்பு
திருவிழாமார்ச்சு 4
லூசியஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

திருத்தந்தை முதலாம் லூசியஸ் (Pope Lucius I) உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட 253 சூன் 25ஆம் நாளிலிருந்து அவர் இறப்பு நிகழ்ந்த 254 மார்ச்சு 5ஆம் நாள் வரை ஆட்சி செய்தார்.[1] அவருக்கு முன் பதவியிலிருந்தவர் திருத்தந்தை கொர்னேலியுஸ் ஆவார். திருத்தந்தை முதலாம் லூசியுஸ் கத்தோலிக்க திருச்சபையின் 22ஆம் திருத்தந்தை ஆவார்.

  • லூசியுஸ் (இலத்தீன்: Lucius) என்னும் பெயர் இலத்தீன் மொழியில் "ஒளிநிறைந்தவர்" எனப் பொருள்படும்.

திருத்தந்தை தேர்தல்

[தொகு]

திருத்தந்தை கொர்னேலியுஸ் மறைச்சாட்சியாக உயிர்துறந்ததும் முதலாம் லூசியுஸ் 253, ஜூன் 25இல் புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்தந்தையான ஒருசில நாள்களுக்குள்ளே உரோமைப் பேரரசன் கால்லுஸ் (Gallus) லூசியுசை நாடுகடத்தினார். அவர் நாடுகடத்தப்பட்ட இடம் சீவித்தா வேக்கியா என்னும் உரோமைத் துறைமுகப் பட்டினமாக இருக்கலாம். அங்குதான் திருத்தந்தை கொர்னேலியுசும் நாடுகடத்தப்பட்டு இறந்தார்.

மன்னன் கால்லுஸ் இறந்து, வலேரியன் ஆட்சிக்கு வந்ததும் கிறித்தவர்களைத் துன்புறுத்தும் செயல் சிறிதே தளர்த்தப்பட்டது. அப்போது திருத்தந்தை லூசியுஸ் நாடுகடத்தப்பட்ட பிற கிறித்தவர்களோடு உரோமைக்குத் தப்பிவந்தார்.

கிறித்தவத்தைக் கைவிட்டோரை மீண்டும் வரவேற்றல்

[தொகு]

லூசியுஸ் உரோமைக்கு வந்ததும், அவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பாராட்டு தெரிவித்து கார்த்தேஜ் நகர் ஆயர் புனித சிப்பிரியான்[2] எழுதிய கடிதம் அவர் கைகளில் கிடைத்தது. மற்றுமொரு கடிதத்தில் சிப்பிரியான் திருத்தந்தை லூசியுஸ் கடைப்பிடித்த அருள்பணி முறையைப் பாராட்டுகிறார். அதாவது, மன்னன் டேசியஸ் காலத்தில் உரோமைத் தெய்வங்களுக்குப் பலிசெலுத்தி, தங்கள் கிறித்தவ நம்பிக்கையை மறுதலித்த கிறித்தவர்கள் மனம் வருந்தி மீண்டும் திருச்சபைக்கு வந்தால் அவர்களுக்கு மன்னிப்பு அளித்து அவர்களைத் திருச்சபையின் ஒன்றிப்பில் ஏற்றுக்கொள்ளும் கொள்கையை லூசியுசும் கடைப்பிடித்தார். அவருக்கு முன்னர் திருத்தந்தையாக இருந்த கொர்னேலியுசும் அவ்வாறே செய்திருந்தார்.

ஆனால், நோவாசியான்[3] என்னும் உரோமைக் குரு அச்சமயம் தம்மைத் திருத்தந்தையாக அறிவித்துக்கொண்டு எதிர்-திருத்தந்தையாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தார். அவர் கருத்துப்படி, தங்கள் கிறித்தவ நம்பிக்கையை மறுதலித்த கிறித்தவர்களை மீண்டும் திருச்சபையில் ஏற்கவேண்டுமானால் அவர்களுக்கு மறு திருமுழுக்கு கொடுக்க வேண்டும். இந்த்க் கடுமையான போக்கை சிப்பிரியான் கண்டித்தார். அதைத் திருத்தந்தை லூசியுசும் கண்டித்தது சரியே என்று சிப்பிரியான் தம் கடிதத்தில் கூறுகிறார்.

இறப்பும் அடக்கமும்

[தொகு]

"திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis) என்னும் பண்டைக் கிறித்தவ ஏடு முதலாம் லூசியுஸ் மறைச்சாட்சியாக இரத்தம் சிந்தி இறந்தார் என்று கூறினாலும், அவர் அவ்வாறு இறக்கவில்லை, மாறாக இயல்பாகவே உயிர்துறந்தார் என்று தெரிகிறது. ஆயினும், அவர் தம் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு, பெரிதும் துன்புற்று, அதற்குச் சான்றுபகர்ந்ததால் அவரைத் "துதியர்" (Confessor) என்று கூறலாம்.[4]

திருத்தந்தையின் உடல் உரோமையில் ஆப்பியா நெடுஞ்சாலையில் உள்ள புனித கலிஸ்துஸ் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு நடத்திய அகழ்வாய்வின்போது, ஜோவான்னி பத்தீஸ்தா தெ ரோஸ்ஸி என்பவர் "LOUKIOS" என்று கிரேக்கத்தில் எழுதப்பட்ட கல்வெட்டைக் கண்டுபிடித்தார். அந்தக் கிரேக்கச் சொல் "Lucius" என்று இலத்தீனில் வரும். இவ்வாறு லூசியுசின் கல்லறை அடையாளம் காணப்பட்டது.

புனித லூசியுசின் மீபொருள்கள்

[தொகு]

திருத்தந்தை லூசியுசின் மீபொருள்கள் டைபர் நதிக்கரை புனித செசிலியா கோவிலுக்குக் கொண்டுசெல்லப்பட்டு வணக்கத்துக்கு வைக்கப்பட்டன. அவருடைய தலைப் பகுதி டென்மார்க்கில் கோபன்ஹாகனில் உள்ளது. அந்நாட்டில் புராடஸ்டாண்டு சீர்திருத்தம் நிகழ்ந்தபின் எஞ்சிய மிகச்சில மீபொருள்களுள் இது ஒன்றாகும்.

ஆதாரங்கள்

[தொகு]
  1. திருத்தந்தை முதலாம் லூசியுஸ்
  2. புனித சிப்பிரியான்
  3. நோவாசியான்
  4. Martyrologium Romanum (Libreria Editrice Vaticana, 2001 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 99-209-7210-7 பிழையான ISBN)

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lucius I
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர் உரோமை ஆயர்
திருத்தந்தை

251–253
பின்னர்