இயேசு தோற்றம் மாறுதல்
நற்செய்திகளின்படி |
இயேசுவின் வாழ்வு |
---|
விவிலியம் வலைவாசல் |
இயேசு தோற்றம் மாறுதல் (ஆங்கில மொழி: Transfiguration of Jesus) என்பது புதிய ஏற்பாட்டின்படி ஒரு மலையின்மீது இயேசு கிறிஸ்து தோற்றம் மாறிய நிகழ்வினைக்குறிக்கும்.[1][2] ஒத்தமை நற்செய்தி நூல்கள் (மத்தேயு 17:1–9, மாற்கு 9:2-8, லூக்கா 9:28–36) மூன்றிலும் இந்நிகழ்வு குறிக்கப்பட்டுள்ளது. மேலும் பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகத்திலும் இது பற்றிய குறிப்பு உள்ளது (2 Peter 1:16–18)[1]
இவ்விவரிப்புகளின்படி இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவருடைய ஆடைகள் வெள்ளை வெளேரென ஒளிவீசின. அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர். இருவரும் இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது இயேசுவின் திருமுழுக்கின்போது நிகழ்ந்ததுபோலவே தந்தையாம் கடவுள் மேகத்தினின்று, ″இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்″ என்று கூறியதாக விவரிக்கப்பட்டுள்ளது.[1]
இயேசு தோற்றம் மாறுதல் நிகழ்வு நற்செய்திகளில் விவரிக்கப்படுள்ள இயேசுவின் புதுமைகளில் ஒன்றாக கருதப்படுகின்றது.[2][3][4] ஆயினும் இது இயேசுவிலேயே நிகழ்வதால் நற்செய்திகளின் பிற புதுமைகளைக்காட்டிலும் இது மாறுபட்டதாகும்.[5] தாமஸ் அக்குவைனஸ் இந்நிகழ்வை இயேசுவின் மிகப்பெரும் புதுமை என விவரித்துள்ளார். மேலும் அவர் இந்நிகழ்வு இயேசுவின் திருமுழுக்கின் நிறைவு என்றும் கிறித்தவ வாழ்வின் இலக்கான விண்ணகத்தின் முழுமையான எடுத்துக்காட்டு என்றும் கூறியுள்ளார்.[6] இயேசுவின் தோற்றம் மாறும் நிகழ்வும் அவருடைய திருமுழுக்கு, சாவு, உயிர்ப்பு மற்றும் விண்ணேற்றம் ஆகியவற்றொடு சேர்த்து அவரின் இவ்வுலக வாழ்வில் நடந்த மிக முக்கிய நிகழ்வாக கருதப்படுகின்றது.[7][8]
கிறித்தவ இறையியலின்படி இந்நிகழ்வு இயேசுவின் இறைத்தன்மையினை வெளிப்படுத்துவதாகவும், மனிதத்தையும் இறைவனையும் ஒன்றுபடுத்தும் பாலமாக இயேசு இருப்பதை எடுத்தியம்புவதாகவும் நம்பப்படுகின்றது.[9]
புதிய ஏற்பாட்டில் இயேசுவின் உருமாற்றம் பற்றிய பாடங்கள்
[தொகு]“ | ”என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்”— மாற்கு 9:7 | ” |
மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய நற்செய்திகளை உள்ளடக்கிய ஒத்தமை நற்செய்திகளில் இயேசு தோற்றம் மாறிய நிகழ்ச்சி நடுப்பகுதியில் விவரிக்கப்படுகிறது.[10][11] காண்க:
- மத்தேயு 17:1-9
- மாற்கு 9:2-8
- லூக்கா 9:28-36
அந்த நிகழ்ச்சி ஒத்தமை நற்செய்திகளில் ஒரு மைய நிகழ்ச்சியாக அமைக்கப்பட்டுள்ளது. அந்நிகழ்ச்சிக்குச் சற்று முன்னர்தான் மற்றொரு முக்கிய நிகழ்ச்சி நடந்திருந்தது. அதில் திருத்தூதர் பேதுரு “நான் யார்?” என்று இயேசு கேட்ட கேள்விக்குப் பதில்மொழியாக “நீர் மெசியா” என்று அறிக்கையிட்டிருந்தார். காண்க: மத்தேயு 16:16; மாற்கு 8:29; லூக்கா 9:20.
இயேசு தோற்றம் மாறிய நிகழ்ச்சி, அவர் யார் என்பதை வெளிப்படுத்துகின்ற மற்றொரு நிகழ்ச்சியாக உள்ளது. இயேசு உண்மையிலேயே “கடவுளின் மகன்” என்று அந்நிகழ்ச்சியின்போது திருத்தூதர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது.[11]
நற்செய்திகள் தருகின்ற தகவல்படி, இயேசு மூன்று சீடர்களை, அதாவது பேதுரு, யோவான், யாக்கோபு ஆகிய மூவரையும் அழைத்துக்கொண்டு ஒரு மலைக்கு ஏறிச் செல்கிறார். மலையின் பெயர் குறிப்பிடப்படவில்லை. அங்கே அம்மலையில் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் “தோற்றம் மாறுகிறார்” (மத்தேயு 17:2). அப்போது “அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின”. அந்நேரத்தில் பழைய ஏற்பாட்டு வரலாற்றில் சிறப்புமிகு தலைவர்களாயிருந்த மேசே, எலியா ஆகிய இருவரும் தோன்றி இயேசுவோடு உரையாடியதை சீடர்கள் காண்கின்றார்கள்.
லூக்கா நற்செய்தியில் இயேசுவின் தோற்றம் மாறியபோது, சீடர்கள் இயேசுவின் “மாட்சியை” கண்டதாகக் குறிக்கப்படுகிறது (லூக்கா 9:32).
இயேசுவின் தோற்றம் மாறிய காட்சியின்போது தோன்றிய மோசே, எலியா ஆகியோர் சீடர்களின் கண்களிலிருந்து மறையும் வேளையில் பேதுரு இயேசுவை நோக்கி, அவர்கள் தங்கியிருக்க கூடாரங்கள் அமைக்கலாமா என்று வினவுகின்றார். இயேசுவோடு பேசிக்கொண்டிருந்த மோசே, எலியா ஆகியோர் மேலும் சிறிது காலம் தங்கியிருக்கலாமே என்ற எண்ணத்தில் அவர் கேட்டதாகத் தெரிகிறது. ஆனால் அதற்கிடையில் ஒளீமயமான ஒரு மேகம் அவர்கள் மேல் நிழலிட்டது. அந்த மேகத்திலிருந்து ஒரு குரல் வெளிப்பட்டது: “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்.” இதைத் தொடர்ந்து சீடர்கள் முகங்குப்புற விழுந்தார்கள் அவர்களைப் பேரச்சம் மேற்கொண்டது. ஆனால் இயேசு அவர்களை அணுகிச் செல்கிறார். அவர்களைத் தொட்டு, “எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்” என்றார். சீடர்கள் நிமிர்ந்து பார்க்கின்றனர். ஆனால் இப்போது அவர்கள் இயேசுவை மட்டுமே காண்கின்றனர்; மோசே, எலியா ஆகியோர் மறைந்துவிட்டனர் (மத்தேயு 17:5-8).
இயேசுவும் சீடர்களும் மலையிலிருந்து கீழே இறங்குகிறார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, “மானிட மகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை இக்காட்சியைப் பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது” என்று கட்டளையிடுகிறார். “இறந்து உயிர்த்தெழுதல்” என்பதன் பொருள் என்னவென்று விளங்காமல் சீடர்கள் ஒருவர் ஒருவரோடு பேசிக்கொண்டார்கள் என்று மாற்கு குறிப்பிடுகிறார் (மாற்கு 9:10).[12]
மேலே தரப்பட்ட ஒத்தமை நற்செய்திகள் பகுதிகள் தவிர புதிய ஏற்பாட்டின் வேறு இடங்களிலும் இயேசுவின் தோற்ற மாற்றம் பற்றிய குறிப்புகள் உள்ளன. 2 பேதுரு 1:16-18: "நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் பற்றி நாங்கள் உங்களுக்குத் தெரிவித்தபோது சூழ்ச்சியாகப் புனைந்த கதைகளை ஆதாரமாகக் கொண்டு பேசவில்லை. நாங்கள் அவரது மாண்பை நேரில் கண்டவர்கள். 'என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்' என்று மாட்சிமிகு விண்ணகத்திலிருந்து அவரைப்பற்றிய குரல் ஒலித்தபோது, தந்தையாகிய கடவுளிடமிருந்து மதிப்பும் மாட்சியும் பெற்றார். தூய மலையில் அவரோடு இருந்தபோது விண்ணிலிருந்து வந்த இக்குரலொலியை நாங்களே கேட்டோம்." யோவான் நற்செய்தியில் 1:14: "வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்" என்னும் பகுதியும் இயேசுவின் தோற்ற மாற்றத்தைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது.
புதிய ஏற்பாட்டின் பிற பகுதிகளில் வரும் குறிப்புகளைக் கீழ்வருமாறு காட்டலாம். தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தில் "இப்போது நாம் அனைவரும் முக்காடு இல்லா முகத்தினராய் ஆண்டவரின் மாட்சியைப் பிரதிபலிக்கிறோம். இவ்வாறு மேன்மேலும் மாட்சிபெற்று, அவர் சாயலாக மாற்றமடைகிறோம். இவையெல்லாம் ஆவியாம் ஆண்டவரின் செயலே" (3:18) என்று கூறுகிறார். இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டோர் "தோற்ற மாற்றம்" அடைவர் என்பது இங்கே குறிக்கப்படுகிறது. மேலும் அவர்கள் "ஆண்டவரின் மாட்சியைப் பிரதிபலிப்பர்." இயேசு தோற்றம் மாறியது, நம்பிக்கை கொண்டோர் தோற்றம் மாறுவதற்கு அடித்தளம் ஆகிறது.[13][14]
மத்தேயு 17ஆம் அதிகாரத்தில், இயேசுவின் தோற்ற மாற்றத்தின்போது யோவான் கூட இருந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், யோவான் நற்செய்தியில் அக்குறிப்பு இல்லை.[15][16][17]
இதிலிருந்து சிலர் யோவான் நற்செய்தியை எழுதியவர் யோவான் அல்ல என்ற முடிவுக்கு வருகின்றனர். வேறு சிலர் பல்வேறு விளக்கங்கள் தருகின்றனர்.[15][16] எடுத்துக்காட்டாக, நான்காம் நூற்றாண்டு கிறித்தவ ஆசிரியரான செசரியா யூசேபியஸ் என்பவர் விளக்கப்படி, யோவான் நற்செய்தியானது, பிற மூன்று நற்செய்திகளில் வரும் தகவல்களை அப்படியே மீண்டும் எடுத்துக் கூறவில்லை. மாறாக, அந்த மூன்று நற்செய்திகளிலும் காணப்படாத சிலபல விவரங்களை யோவான் தருகின்றார்.[15]
மேலும், இயேசு இறுதி இராவுணவின்போது நற்கருணை ஏற்படுத்திய தகவல் யோவானில் இல்லை. மற்ற மூன்று நற்செய்திகளும் அதுபற்றி விரிவான தகவல்கள் தருகின்றன. இதிலிருந்து யோவான் ஓர் இறையியல் அளவீட்டைக் கொண்டு தம் நற்செய்தி நூலை அமைத்தார் என்றும், ஒரு சில மையக் கருத்துகளை வலியுறுத்த விரும்பினார் என்றும் தெளிவாகத் தெரிகிறது.[15][16][16][17]
இறையியல் விளக்கம்
[தொகு]இயேசு தோற்றம் மாறிய நிகழ்ச்சிக்கு கிறித்தவ இறையியல் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. அந்நிகழ்ச்சி நடந்த இடம் ஒரு "மலை". கடவுளும் மனிதரும் சந்திக்கும் இடமாக "மலை" கருதப்பட்டது. மலைமீது இயேசு தோற்றம் மாறினார் என்பது கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இயேசு பாலமாக உள்ளார் என்பதைக் காட்டுகிறது.
இயேசு யார் என்னும் கேள்விக்கு அவருடைய தோற்ற மாற்ற நிகழ்ச்சி பதிலிறுக்கிறது. அதாவது, இயேசு "கடவுளின் மகன்" என்னும் செய்தி வானிலிருந்து வந்ததோடு, "இவருக்குச் செவிசாயுங்கள்" என்னும் கட்டளையும் தரப்பட்டது. இதை ஒத்த விதத்தில் இயேசுவின் திருமுழுக்கு நிகழ்ச்சியும் அமைந்தது கவனிக்கத் தக்கது.[18]
இயேசு தோற்றம் மாறிய நிகழ்ச்சியின்போது மோசே மற்றும் எலியா ஆகியோர் உடனிருந்தனர் என்னும் செய்தியிலும் இறையியல் அர்த்தம் உள்ளது. பழைய ஏற்பாட்டில் கடவுளின் செய்தியை மக்களுக்கு வழங்கிய தலைவர் மோசே. அதுபோலவே, எலியா என்னும் இறைவாக்கினரும் மக்களுக்கு இறைவனின் வார்த்தையை எடுத்துக் கூறிய தலைசிறந்த இறைவாக்கினராக இருந்தவர். அவர்களைவிடவும் மேலானவராக இயேசு வந்தார். ஏனென்றால் இயேசு உண்மையிலேயே "கடவுளின் மகன்".[18] அந்த நிகழ்ச்சி இயேசுவின் மாட்சிமையையும் மதிப்பையும் வெளிப்படுத்தியது என்று 2 பேதுரு கூறுகிறது (காண்க: 2 பேதுரு 1:16-18)[19]
இறப்புக்குப் பின்னரும் மனிதர் இயேசுவோடு மகிமை பெறுவர் என்னும் கருத்தும் இந்த நிகழ்ச்சியின் வழி தெரிகிறது. இறந்துபோன மோசே மற்றும் எலியா ஆகியோர் இயேசுவோடு மகிமை பெற்றதுபோல எல்லா மனிதரும் பேறு பெறுவர் என்னும் கருத்து இங்கே உள்ளடங்கியுள்ளது.[20]
இறையியல் வரலாற்றில்
[தொகு]திருச்சபையின் தொடக்க காலத்திலிருந்தே இயேசுவின் தோற்ற மாற்றம் இறையியல் பார்வையில் சிந்திக்கப்பட்டு வந்துள்ளது. இரண்டாம் நூற்றாண்டுத் திருச்சபைத் தந்தையான புனித இரனேயு என்பவர் பின்வருமாறு கூறுகிறார்: "கடவுளுக்கு மாட்சியாக அமைவது உயிரோட்டம் கொண்ட மனிதரே. உண்மையான மனித வாழ்வு கடவுளைக் காண்பதில் அடங்கும்." [21]
பண்டைய திருச்சபைத் தந்தையருள் ஒருவரான ஓரிஜென் என்பவரின் இறையியல் சிந்தனை மிகுந்த தாக்கம் கொணர்ந்தது.[22] இயேசு தம் சீடரை நோக்கி, "மனுமகன் இறந்தோரிடமிருந்து உயிர்பெற்றெழுகின்ற வரையிலும் நீங்கள் கண்ட காட்சியை யாரிடமும் கூறவேண்டாம்" என்று கூறியதிலிருந்து இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கும் அவருடைய தோற்ற மாற்றத்திற்கும் இடையே ஒரு தொடர்பு உளதை அறியலாம் என்று ஓரிஜென் கூறினார்.[22]
இயேசுவின் தோற்ற மாற்றத்தின்போது அவர் ஒளிமயமாகத் தோன்றினார் என்னும் கருத்தின் அடிப்படையில் அந்த "ஒளி" எப்பொருளைக் குறிக்கிறது என்ற விளக்கம் பாலைநிலத் தந்தையர் (Desert Fathers) என்னும் தொடக்க கால இறையியலாரால் வழங்கப்பட்டது.[22] இதிலிருந்து "ஒளி இறையியல்" என்னும் கருத்தாக்கம் உருவானது.[22] இந்த இறையியல் பார்வையின் அடிப்படையில் இயேசுவின் தோற்ற மாற்றத்தைச் சித்தரிக்கின்ற திருவோவியங்கள் எழுந்தன. சீனாய் மலையில் உள்ள புனித கத்தரீனா துறவியர் இல்லத்தில் உள்ள திருவோவியம் இப்பாணியைச் சார்ந்ததே.[23] [24] இந்த திருவோவியம் மேலதிக இறையியல் விளக்கத்திற்கு அடிப்படையாக அமைந்திருக்கலாம்.[24]
இயேசு தோற்றம் மாறிய வேளையில் அவருடைய ஒளிமிகு தோற்றத்தைக் கண்டு அதை உள்வாங்கும் வகையில் சீடர்களின் புலன்களும் ஒருவிதத்தில் ஒளிமயமாகி, உருமாற்றம் பெற்றன என்று புனித மாக்சிமுசு (Saint Maximus the Confessor) கூறுகிறார்.[25]"இப்போது நாம் அனைவரும் முக்காடு இல்லா முகத்தினராய் ஆண்டவரின் மாட்சியைப் பிரதிபலிக்கிறோம். இவ்வாறு மேன்மேலும் மாட்சிபெற்று, அவர் சாயலாக மாற்றமடைகிறோம். இவையெல்லாம் ஆவியாம் ஆண்டவரின் செயலே" (2 கொரிந்தியர் 3:18) என்று புனித பவுல் கூறுவதை ஒட்டி, தொடக்க கால இறையியலார் "இயேசு கிறிஸ்துவை நம்பி ஏற்போர் கடவுள் பற்றிய அறிவைப் பெறுவர். அதுவே அவர்களுடைய உருமாற்றத்திற்கு அடித்தளம் ஆகும்" என்று விளக்கம் அளித்தனர்.[14][26][27]
மேற்குத் திருச்சபை இயேசுவின் சிலுவைச் சாவை வலியுறுத்துவதாகவும், கீழைத் திருச்சபை இயேசு தோற்றம் மாறிய நிகழ்ச்சியை வலியுறுத்துவதாகவும் பொதுவாகக் கருதப்பட்டாலும், இரு திருச்சபைகளும் மேற்கூறிய இரு நிகழ்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளன என்பதே உண்மை.[28] என்றாலும், மேற்குத் திருச்சபை மரபைச் சார்ந்த புனிதர்களான புனித பிரான்சிசு, பியட்ரல்சினாவின் பியோ போன்றவர்கள் இயேசுவின் காயங்களைத் தம் உடலில் அடையாளமாகப் பெற்றதாக நம்பப்படுகிறது. ஆனால் கீழை மரபில், புனித செராபிம், சிலூவான் போன்றோர் உள்ளொளியால் உருமாற்றம் பெற்றனர் என்று நம்பப்படுகிறது. முதல் மரபு சிலுவையின் பொருளையும், இரண்டாம் மரபு உருமாற்ற ஒளியின் பொருளையும் ஏற்பது தெரிகிறது.[29][30]
இயேசு தோற்றம் மாறிய இடம்
[தொகு]இயேசு தோற்றம் மாறிய இடமாக, 3ஆம் நூற்றாண்டிலிருந்தே அடையாளம் காட்டப்படுவது தாபோர் மலை ஆகும்.[31]
அம்மலை பல நூற்றாண்டுகளாகவே ஒரு திருத்தலமாக இருந்துவந்துள்ளது. எனினும் இயேசுவின் தோற்ற மாற்றம் நிகழ்ந்த இடமாக வேறு இடங்களும் அடையாளம் காட்டப்பட்டுள்ளன.
இயேசு தோற்றம் மாறிய நிகழ்ச்சித் திருவிழா
[தொகு]பல கிறித்தவ திருச்சபைக் குழுக்கள் இயேசு தோற்றம் மாறிய விழாவைச் சிறப்பிக்கின்றன. 9ஆம் நூற்றாண்டளவில் இவ்விழா வெவ்வேறு வடிவங்களில் இருந்துவந்தது. ஆகத்து 6ஆம் நாள் அவ்விழாவைக் கொண்டாடுமாறு திருத்தந்தை மூன்றாம் கலிஸ்து பணித்தார். அந்நாள் பெல்கிரேட் முற்றுகையின் (1456) நினைவாக நிர்ணயிக்கப்பட்டது.[32] கத்தோலிக்க திருச்சபை, சிரிய மரபுவழி சபை, கிழக்கு மரபுவழி சபைகல், ஆங்கிலிக்க சபை போன்றவை இவ்விழாவை ஆகத்து 6ஆம் நாள் கடைப்பிடிக்கின்றன.
உரோமன் கத்தோலிக்க சபையில், இயேசு தோற்றம் மாறிய நிகழ்ச்சியை விவரிக்கின்ற நற்செய்திப் பகுதி தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிற்றுக் கிழமை அறிக்கையிடப்படுகிறது.[33][34]
படத்தொகுப்பு
[தொகு]இயேசு தோற்றம் மாறியதைச் சித்தரிக்கும் ஓவியங்கள்
[தொகு]-
ஓவியர்: ஜோவான்னி பெல்லீனி. சுமார் 1490
-
ஓவியர்: பியேத்ரோ பெருஜீனோ. சுமார் 1500
-
ஓவியர்: இரபயேல். சுமார் 1520
-
ஓவியர்: கிறிஸ்தோஃபனோ கெரார்டி. ஆண்டு: 1555
திருவோவியங்கள்
[தொகு]-
நோவ்கோரோத் கலைப்பாணி. காலம்: 15ஆம் நூற்றாண்டு
-
கிரேக்க தெயோஃபானெசு. காலம்: 15ஆம் நூற்றாண்டு
-
உருசிய நாட்டின் யாரோச்லாவல் பகுதியில் உள்ள திருவோவியம். ஆண்டு: 1516
-
ஓவியர்: ஆந்த்ரேய் ஈவானோவ். ஆண்டு:1807
கோவில்களும் துறவியர் இல்லங்களும்
[தொகு]-
தாபோர் மலையில் உள்ள கிழக்கு மரபுவழி துறவியர் இல்லம்
-
இயேசு தோற்றம் மாறிய பெருங்கோவில். இடம்: தாபோர் மலை
-
இயேசு தோற்றம் மாறிய பெருங்கோவில். இடம்: தாபோர் மலை
-
தாபோர் மலையில் உள்ள பிரான்சிஸ்கு சபைக் கல்லறைத் தோட்டம்
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Transfiguration by Dorothy A. Lee 2005 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8264-7595-4 pages 21-30
- ↑ 2.0 2.1 Lockyer, Herbert, 1988 All the Miracles of the Bible பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-310-28101-6 page 213
- ↑ Clowes, John, 1817, The Miracles of Jesus Christ published by J. Gleave, Manchester, UK page 167
- ↑ Henry Rutter, Evangelical harmony Keating and Brown, London 1803. page 450
- ↑ Karl Barth Church dogmatics பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-567-05089-0 page 478
- ↑ Nicholas M. Healy, 2003 Thomas Aquinas: theologian of the Christian life பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7546-1472-2 page 100
- ↑ Essays in New Testament interpretation by Charles Francis Digby Moule 1982 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-23783-1 page 63
- ↑ The Melody of Faith: Theology in an Orthodox Key by Vigen Guroian 2010 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8028-6496-1 page 28
- ↑ Transfiguration by Dorothy A. Lee 2005 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8264-7595-4 page 2
- ↑ The Cambridge companion to the Gospels by Stephen C. Barton ISBN pages 132–133
- ↑ 11.0 11.1 The Content and the Setting of the Gospel Tradition by Mark Harding, Alanna Nobbs 2010 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8028-3318-1 pages 281–282
- ↑ Mark by Douglas R. A. Hare 1996 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-664-25551-0 page 104
- ↑ Systematic Theology by Lewis Sperry Chafer 1993 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8254-2340-6 page 86
- ↑ 14.0 14.1 The Synoptics: Matthew, Mark, Luke by Ján Majerník, Joseph Ponessa, Laurie Watson Manhardt 2005 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-931018-31-6, page 121
- ↑ 15.0 15.1 15.2 15.3 Metamorphosis: The Transfiguration in Byzantine Theology And Iconography by Andreas Andreopoulos (Oct 30, 2005) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0881412953 pages 43-44
- ↑ 16.0 16.1 16.2 16.3 The Gospel According to John by D. A. Carson (Dec 31, 1991) ISBN pages 92-94
- ↑ 17.0 17.1 The Bible Knowledge Commentary by John F. Walvoord and Roy B. Zuck (Jul 1, 1983) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0882078127 page 268
- ↑ 18.0 18.1 Metamorphosis: the Transfiguration in Byzantine theology and iconography by Andreas Andreopoulos 2005 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88141-295-3 pages 47–49
- ↑ The Bible knowledge background commentary: John's Gospel, Hebrews-Revelation by Craig A. Evans பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7814-4228-1 pages 319–320
- ↑ The Gospel and Its Meaning by Harry Lee Poe 1996 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-310-20172-1 page 166
- ↑ Andrew Louth, "Holiness and the Vision of God in the Eastern Fathers" in Holiness: past and present by Stephen C. Barton 2002 ISBN pages 228–234
- ↑ 22.0 22.1 22.2 22.3 Metamorphosis: the Transfiguration in Byzantine theology and iconography by Andreas Andreopoulos 2005 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88141-295-3 pages 60–65
- ↑ Festival icons for the Christian year by John Baggley 2000 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-264-67487-1 pages 58–60
- ↑ 24.0 24.1 Metamorphosis: the Transfiguration in Byzantine theology and iconography by Andreas Andreopoulos 2005 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88141-295-3 Chapter 2: "The Iconography of the Transfiguration" pages 67–81
- ↑ Rossi, Vincent. "Orthodoxy & Creation: The Transfiguration of Creation". The Orthodox Fellowship of the Transfiguration. பார்க்கப்பட்ட நாள் 2010-08-06.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Gregory Palamas by Saint Gregory Palamas, John Meyendorff 1988 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8091-2447-5 page 14
- ↑ The Wiersbe Bible Commentary: The Complete New Testament by Warren W. Wiersbe 2007 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7814-4539-6 page 167
- ↑ The Gospel and Its Meaning Harry Lee Poe 1996 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-310-20172-1 page 177
- ↑ The Divine Trinity by David Brown 1985 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87548-439-5 page 39
- ↑ The Catholic tradition by Thomas Langan 1998 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8262-1183-6 page 139
- ↑ Meistermann, Barnabas (1912), "Transfiguration", The Catholic Encyclopedia, vol. XV, New York: Robert Appleton Company, பார்க்கப்பட்ட நாள் 2007-08-15, citing Origen's Comm. in Ps. 88, 13
- ↑ Christian liturgy by Ignatius Puthiadam 2003 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7109-585-2 page 169
- ↑ Word & Worship Workbook for Year B: For Ministry in Initiation, Preaching, Religious Education and Formation, Mary Birmingham, 1999, p. 188
- ↑ Roman Missal, 2002, Second Sunday of Lent
வெளி இணைப்புகள்
[தொகு]- "The Transfiguration of Our Lord", Butler's Lives of the Saints
- "Transfiguration". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.
- The Mountain of the Transfiguration by Michele Piccirillo
- Pope Benedict XVI on Transfiguration of Jesus
- The Holy Transfiguration of our Lord God and Savior Jesus Christ Orthodox icon and synaxarion