உள்ளடக்கத்துக்குச் செல்

கூரத்தாழ்வார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூரத்தாழ்வார் (English:Koorathazhwar / Koorathalwar)
பிறப்புஸ்ரீவத்சாங்கர்
திருக்கூரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு
இறப்புதிருவரங்கம், தமிழ்நாடு

சர் கூரத்தாழ்வார் இராமானுசரின் மாணாக்கருள் முதன்மையானவர். ஸ்ரீவத்சாங்கர் என்ற இயற்பெயர் கொண்டு மிகுந்த தனவந்தனாகவும், ஞானவானாகவும் காஞ்சிபுரத்தை அடுத்த கூரம் என்னும் ஊரில் வாழ்ந்தவர். ஞானத்தில் சிறந்த ஆண்டாள் இவரது மனைவியின் பெயர். தேசத்தின் பிறப்பகுதிகளில் இருந்து காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டுள்ள வரதராசப் பெருமாளை வழிபட வரும் அடியார்களுக்குத் தினமும் அன்னதானம் செய்வதையே பெரும்பேறாய்ச் செய்துவந்தவர். ஒருமுறை திருக்கச்சி நம்பிகளிடம் பெருந்தேவி தாயார் (காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டுள்ள வரதராசப் பெருமாளின் மனையாள் - லட்சுமிதேவி) கூரத்தாழ்வாரின் செல்வம் மற்றும் அன்னதானம் குறித்து வியப்பு மேலிட உரையாடியமைக் கேட்டு அதனால் தனக்கு அகங்காரம் உண்டாகிவிடுமோ என அஞ்சித் தன்னுடைய பெருஞ்செல்வமனைத்தும் அறச்செயல்களுக்குத் தானமாக வழங்கித் தன் குருவாகிய இராமானுசரையே அடி பணிந்தார். இராமானுசரைவிட 8 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வியாசப்பட்டர், பராசரப்பட்டர் எனும் இவருடைய இரண்டு குமாரர்களில் பராசரப்பட்டர் பிற்காலத்தில் புகழ்பெற்ற வைணவ ஆச்சாரியனாகி ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கு இன்றும் புகழப்படும்படியான ஓர் உரை எழுதியுள்ளார். புகழ்பெற்ற இராமானுச நூற்றந்தாதி இயற்றிய திருவரங்கத்தமுதனார் கூரத்தாழ்வாரின் மாணாக்கருள் ஒருவர்.

குருபக்தி

[தொகு]

திருவரங்கத்தில் இருந்த இராமானுசருக்கு மாணாக்கனாகும் பொருட்டு, கூரத்திலிருந்து தன் மனைவியை அழைத்துக்கொண்டு திருவரங்கம் செல்லும் வழியில் காட்டிடையே திருடர் பற்றிய அச்சத்தில் வந்த மனையாளை நோக்கி "மடியில் கனம் இருந்தாலன்றோ வழியில் பயம். ஏதாவது வைத்திருக்கிறாயா" என்றார். அதற்குச் சிறுவயது முதலே கூரத்தாழ்வார் உண்பதற்குப் பயன்படுத்திய தங்கவட்டிலைத் திருவரங்கத்தில் கணவருக்குப் (கூரத்தாழ்வாருக்காக) பயன்படுத்துவதற்காக வைத்திருப்பதாகச் சொல்லவே அதனை வாங்கி விட்டெறிந்துவிட்டுச் சென்றாராம்.

திருவரங்கத்தில் யாசகம் பெற்று வாழ்ந்த கூரத்தாழ்வார் தம்பதிகள் ஒருநாள் உணவு கிடைக்காமல் பட்டினி கிடந்தனர். மனைவி ஆண்டாள் இறைவன் அரங்கநாதனிடம் வேண்டிட, அரங்கநாதன் கோயில் ஊழியர்கள் மூலம் உணவு தந்தருளினார்.

நாலூரான் என்னும் அமைச்சரின் தந்திரத்தால் மதியிழந்த உறையூர்ச் சோழன், இராமானுசரைக் கைது செய்ய ஆணையிட்டான். கூரத்தாழ்வார் தம் குருவைப்போல் வேடம் தரித்துக்கொண்டு அரசனிடம் சென்று முடிவில், அரசன் ஆணையால் கூரத்தாழ்வாரின் கண்கள் தோண்டப்பட்டன. 12 ஆண்டுகள் இதே நிலையிலேயே திருமாலிருஞ்சோலை மலையில் வாழ்ந்துவந்தார்.

இயற்றிய நூல்கள்

[தொகு]
  1. ஸ்ரீ அதிமாநுஷ ஸ்தவம்
  2. சுந்தரபாஹூ ஸ்தவம்
  3. வரதராஜ ஸ்தவம்
  4. வைகுண்ட ஸ்தவம்
  5. ஸ்ரீ ஸ்தவம்,
  6. தாடீபஞ்சகம்
  7. ப்ரார்தனபஞ்சகம்

என ஏழு வடமொழி நூல்களை இயற்றியுள்ளார்.

சாதனைகள்

[தொகு]

இவரின் உதவியினாலேயே சுவாமி இராமானுசர் தன் குருவாகிய ஆளவந்தாருக்குச் செய்துகொடுத்த மூன்று சபதங்களை நிறைவேற்றினார். அன்னமிடுவதோடு நில்லாது, இராமானுசருக்காகவும் வைணவத்திற்காகவும் தன் இரு கண்களையும் இழந்தார்.

திருமங்கையாழ்வார் பாடல்களில் 'பெரிய திருமொழி'க்கு இவர் தனியன் பாடிய புலவர். கட்டளைக் கலித்துறையால் அமைந்துள்ள அந்தப் பாடல்[1]

மறைவு

[தொகு]

சோழன் மறைவுக்குப் பின் திருவரங்கம் திரும்பிய இராமானுசரின் வேண்டுதலுக்கிணங்க காஞ்சி வரதராசப்பெருமாளிடம் வேண்டி இழந்த கண்ணைத் தெரியச் செய்யும்படி வேண்ட இறைவன் அருளினார். மகிழ்ச்சியோடு திருவரங்கம் திரும்பி மீண்டும் ஆசாரியன் கைங்கர்யத்தில் ஈடுபடுத்திக் கொண்டு தன்னுடைய 123-ஆம் அகவையில் திருநாட்டுக்கு எழுந்தருளினார். வருத்தமுற்ற இராமானுசருக்கு ஆசாரியனை வரவேற்கவே முன்னரே திருநாடு செல்வதாக முகமன் கூறிச் சென்றார்.

அடிக்குறிப்பு

[தொகு]
  1. நெஞ்சக்(கு) இருள்கடி தீபம் அடங்கா நெடும்பிறவி
    நஞ்சுக்கு நல்ல அமுதம் தமிழநன் னூல்துறைகள்
    அஞ்சக் கிடக்கும் ஆரண சாரம் பரசமயப்
    பஞ்சுக் கனலின் பொறி,பர காலன் பனுவல்களே

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூரத்தாழ்வார்&oldid=3646839" இலிருந்து மீள்விக்கப்பட்டது