உள்ளடக்கத்துக்குச் செல்

கிறித்தவ தன்விளக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிறித்தவ தன்விளக்கம் அல்லது கிறிஸ்தவ விசுவாச விளக்கவியல் (Christian apologetics) என்பது கிறித்தவ இறையியலின் ஒரு பகுதியாக அமைந்து, கிறித்தவ மறைக்குப் பகுத்தறிவு அடிப்படைகளை வழங்கி, மறுப்புகளுக்குப் பதில் அளிக்கின்ற துறை ஆகும். கிறிஸ்தவா்கள் நம்புகின்ற விஷயங்கள் உண்மையிலேயே ஏற்றுக்கொள்ளப்படத்தக்கவையா என்ற கேள்விக்கு பதில் சொல்லும் துறை இது. கிரேக்கத்தில் "அப்பொலொகீயா" (கிரேக்க மொழி: ἀπολογία) என அழைக்கப்படும் இத்துறைச் சொல் "பதில் அளித்தல்", "தன்னிலை விளக்கல்", "மறுமொழி கொடுத்தல்" என்னும் பொருள்படும்.[1]

வரலாற்றில் கிறித்தவ தன்விளக்கம்

[தொகு]

கிறித்தவ சமய வரலாற்றில் "தன்விளக்கம்" வெவ்வேறு வடிவங்களில் அமைந்தது. புனித பவுல் விவிலியக் காலத்திலும், பின்னர் திருச்சபையின் தொடக்க நூற்றாண்டுகளில் ஒரிஜன் (Origen), அகுஸ்தீன், யுஸ்தின், தெர்த்தூல்லியன் போன்ற திருச்சபைத் தந்தையரும் (Fathers of the Church), நடுக்காலத்தில் அக்வீனா தோமா, கான்டெர்பரி அகுஸ்தீன் போன்ற இறையியலாரும் கிறித்தவ சமயத்திற்குத் தன்விளக்கம் அளித்தோருள் குறிப்பிடத்தக்கவர் ஆவர்.

அறிவொளிக் கால கட்டத்தில் பிளேசு பாஸ்கால் (Blaise Pascal) என்பவரும், நவீன காலத்தில் ஜி.கே. செஸ்டர்டன் (G.K. Chesterton), சி.எஸ். லூயிஸ் (C.S. Lewis) ஆகியோரும், தற்காலத்தில் டக்ளஸ் வில்சன் (Douglas Wilson), ஆல்வின் ப்ளான்டிங்கா (Alvin Plantinga) மற்றும் வில்லியம் லேன் க்ரேக் (William Lane Craig) ஆகியோரும் கிறித்தவ தன்விளக்கத் துறையில் சிறந்து விளங்குவோர் ஆவர்.

கிறித்தவ தன்விளக்க அறிஞர்கள் வரலாறு, மெய்யியல் விவாதங்கள், அறிவியல் ஆய்வுகள் மற்றும் பிற அறிவுத்துறைகள் ஆகியவற்றின் துணையோடு கிறித்தவத்தின் உண்மையை நிலைநாட்ட முனைந்துள்ளனர். கிறித்தவ தன்விளக்கத் துறையிலிருந்து வேறுபட்ட, ஆனால் அதோடு தொடர்புடைய ஒரு விவாத முறை "கிறித்தவ தாக்கல்" (Christian polemic) ஆகும். இது பிற சமயங்களின் நம்பிக்கையைத் தாக்குவதிலும், தனது கொள்கையே உண்மையென நிலைநாட்டுவதிலும் அடங்கும். 1263il எசுப்பானிய அரசவையில் நிகழ்ந்த "பார்சலோனா தர்க்கம்" (Disputation of Barcelona) என்பது இவ்வகையானதே.[2][3]

கிறித்தவ தன்விளக்கம் என்பதன் வரலாற்றுப் பின்னணி

[தொகு]

கிரேக்க மொழியில் "அப்பொலொகீயா" (apologia = ἀπολογία) என்னும் சொல் "அப்பொலொகேஓமாய்" (apologeomai = ἀπολογέομαι) என்ற மூலத்திலிருந்து பிறந்து, "பதில் கொடுத்தல்", "மறுமொழி வழங்கல்", "தற்காத்தல்", "தன்னிலை நிறுவுதல்" போன்ற பொருள்களைத் தரும். ஒரு நீதிமன்றத்தில் கூண்டிலேறி நிற்பவர் தன் சார்பான வாதத்தை முன்வைக்கும் பின்னணியில் இச்சொல் பயன்பட்டது. அதிலிருந்து இலக்கிய மரபாக முகிழ்த்தது.

பண்டைய கிரேக்க மெய்யியல் ஞானி சாக்ரடீசு தமது விவாதங்கள் வழியாக இளையோரைத் தவறான வழியில் இட்டுச் சென்றார் என்றும், கிரேக்க நகர்-நாடுகள் ஏற்றக் கடவுளரைத் தாம் ஏற்க மறுத்தார் என்றும், தம் உள்ளத்தில் பேசுகின்ற தெய்வசக்தி தம்முள்ளே இருந்ததாகக் கூறினார் என்றும் குற்றம் சாட்டப்பட்டபோது, சாக்ரடீசின் மாணவரான பிளேட்டோ", சாக்ரடீசு வழங்கியதாக ஒரு "தன்விளக்கம்" (apologia) அளித்தார்.[4]

இந்தக் கிரேக்க இலக்கிய உத்தியைக் கிறித்தவ அறிஞர்கள் கையாளத் தொடங்கினர். இவ்வாறு அவர்கள் கிரேக்க கலாச்சாரத்தைக் கிறித்தவ நம்பிக்கையோடு இணைக்க முடிந்தது. இம்முயற்சி குறிப்பாகக் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் நிகழ்ந்தது. அப்போது கல்லியேனுசு (Gallienus) என்ற உரோமைப் பேரரசன் காலத்தில் கிறித்தவ சமயத்தின் மட்டில் சகிப்புத்தன்மை காட்டப்பட்டது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி 40 ஆண்டுகள் அடங்கிய அக்கால கட்டம் "திருச்சபையின் சிறிய அமைதிக் காலம்" (Little Peace of the Church) என்று அழைக்கப்படுகிறது. அப்போது கிறித்தவர்கள் தங்கள் மத நம்பிக்கையைக் கடைப்பிடிக்க சுதந்திரம் இருந்தது. அவர்கள் வழிபாட்டு இடங்கள் கட்டிக் கொண்டார்கள். கல்லறைத் தோட்டங்களை உடைமையாகக் கொண்டிருந்தார்கள். அவர்களிடமிருந்து நீரோ காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் திருப்பிக் கொடுக்கப்பட்டன.

கிறித்தவ நம்பிக்கையும் கிறித்தவர்களின் வாழ்க்கையும் உரோமைப் பேரரசுக்கு எவ்வித ஆபத்தையும் விளைவிக்கப் போவதில்லை என்றும், கிறித்தவ நம்பிக்கையானது உரோமைப் பேரரசு சமூகத்திற்கு நன்மையாகவே அமையும் என்றும் எடுத்துக்கூறி, அதற்கான காரணங்களையும் கிறித்தவ அறிஞர்கள் முன்வைத்தார்கள். அதற்காக அந்த அறிஞர்கள் கிரேக்க கலாச்சாரத்திலும் இலக்கிய மரபிலும் நிலவிய "தன்விளக்கம்" என்னும் உத்தியைக் கையாண்டார்கள். கல்லியேனுசு காலத்தில் நிலவிய அமைதி தொயோகிளேசியன் மன்னன் காலத்தில் (ஆட்சி: 284-311) குலைந்தது. மன்னன் கிறித்தவர்களைத் துன்புறுத்த ஆரம்பித்தான்.[5]

கிறித்தவ அறிஞர்கள் "தன்விளக்கம்" என்னும் உரைப் பாணியைக் கையாண்டது அவர்கள் கிரேக்க கலாச்சாரத்திலிருந்து நலமானவற்றை ஏற்றுக்கொண்டதைக் காட்டுகிறது.[6] அவர்கள் கிரேக்க மெய்யியலை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கவில்லை. மாறாக, பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட கிரேக்க மெய்யியலுக்கு கிறித்தவம் மெருகூட்டியதாக அவர்கள் காட்டினர்.[7] இருப்பினும், கிறித்தவம் பகுத்தறிவை மட்டுமே அடிப்படையாகக் கொள்ளாமல் கடவுள் மனிதருக்கு வெளிப்படுத்திய உண்மைகளையும் அறிவிப்பதால் ஒருவித இழுபறி இருந்ததையும் அவர்கள் காட்டினார்கள்.[8]

இரண்டாம் நூற்றாண்டில் கிறித்தவ தன்விளக்கம்

[தொகு]

கி.பி. இரண்டாம் நூற்றாண்டில், கிறித்தவ தன்விளக்க அறிஞர்கள், கிறித்தவக் கொள்கைகளை எடுத்துரைத்ததோடு, அக்கொள்கைகளை எதிர்த்தவர்களின் வாதத்திற்கு எதிர்வாதமாகப் பதிலும் அளித்தார்கள்.[9] மேலும், கிறித்தவக் கொள்கையை ஏற்பதா மறுப்பதா என்று தயக்கமுற்றோருக்கு அதை ஏற்பதற்கான காரணங்களை அவர்கள் காட்டினார்கள்.[10]

திருச்சபையின் தொடக்க காலத்தில் எழுந்த "மறைசாட்சிகள் வரலாறு" என்னும் இலக்கியப் படைப்பில் கிறித்தவ தன்விளக்க அறிஞர்கள், குற்றம் சாட்டப்பட்ட மறைசாட்சிகள் உண்மையிலே யாதொரு குற்றமும் செய்யவில்லை என்று வாதாடி, "தன்விளக்கம்" அளித்தார்கள். அவர்கள், கிறித்தவ சமயம் பகுத்தறிவுக்கு எதிரான மதக்கொள்கை அல்லவென்றும், மனித அறிவு எடுத்துக்கூறுவதையே கிறித்தவமும் கூறுகிறது என்றும், கிறித்தவர்கள் பாருலகு அனைத்தையும் படைத்துக் காத்து ஆளுகின்ற ஒரே கடவுளையே வழிபடுகின்றனர் என்றும் வாதிட்டார்கள். மேலும், கிறித்தவர்கள் உரோமைப் பேரரசர்களுக்கு உரிய மரியாதையை அளிக்க ஒருபோதும் தயங்கியதில்லை என்றும், சட்டம் ஒழுங்குகளை எவ்வகையிலும் மீறுவதில்லை என்றும், அவர்கள் உரோமைப் பேரரசனை ஒரு தெய்வமாக ஏற்று பலிசெலுத்தி வழிபடாததற்கு ஒரே காரணம் அவர்கள் உலகமனைத்தையும் ஆண்டுநடத்தும் ஒரே கடவுளிடம் நம்பிக்கை கொண்டிருப்பதாலேயே என்றும் வாதாடினர்.[11]

திருச்சபையின் வரலாற்றை எழுதிய சிறந்த வரலாற்றாசிரியர்களுள் காலத்தால் முற்பட்டவர் யூசேபியுசு (Eusebius) ஆவார். அவர் கி.பி. 3-4ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர். கிறித்தவத்தின் தன்விளக்கம் போன்று எழுதப்பட்ட திருத்தூதர் பணிகள் என்னும் புதிய ஏற்பாட்டு நூல் யூசேபியுசுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்தது.[12]

கிறித்தவத்தின் தொடக்க காலத்தில் "தன்விளக்கம்" என்னும் இலக்கிய உத்தியைப் பயன்படுத்தி சில ஆசிரியர்கள் கிறித்தவர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்த உதவினர்.[10] இவ்வாறு, ஒரிஜன் (Origen) என்பவர் தமக்குப் பல ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து இறந்தவரும் கிறித்தவத்தை விமரிசித்தவருமான ஒருவரின் வாதத்தை எடுத்து, அதைப் பகுப்பாய்வு செய்து, அந்த வாதத்திற்குப் பதில்மொழி அளிக்கும் வகையில் நூல்கள் எழுதினார்.[13]

மேலே குறிப்பிட்ட ஒரிஜன், தெர்த்தூல்லியன் போன்ற பண்டைய கிறித்தவ ஆசிரியர்கள் தவிர, மறைசாட்சி யுஸ்தின், அலெக்சாந்திரியா கிளமெந்து, மற்றும் தியோஜெனேத்து மடலின் ஆசிரியர் போன்றோர் "தன்விளக்க" நூல்கள் எழுதினர்.[14]

ஹிப்போவின் அகஸ்டீன் (354-430) தலைசிறந்த "தன்விளக்க" ஆசிரியராகத் திகழ்ந்தவர்.[15]

"தன்விளக்கம்" என்பது உள்ளடக்கம், பாணி, தொனி, வாதமுறை முதலியவற்றில் ஒரு தனி வகை என்று சிலர் கருதுகின்றனர். வேறு சிலர் கருத்துப்படி, இவ்வகை இலக்கியப் பாணியின் குறிக்கோள் அதை வேறுபடுத்திக் காட்டுகிறது என்பர்.[16]

திரிபுக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு

[தொகு]

கிறித்தவத் தன்விளக்கம் என்பது, சில வேளைகளில் திரிபுக் கொள்கைகளை மறுத்தும் எதிர்த்தும் எழுதப்பட்டது.[17] அவ்வேளைகளில் அது ஒருவித தாக்குதலாகவும் அமைந்தது.[18] தெர்த்தூல்லியன் உரோமைப் பேரரசுக்கும் கிறித்தவத்திற்கும் இடையே ஒற்றுமைகளைக் காண்பதைவிட, உரோமைப் பேரரசைத் தாக்கியும், எதிர்த்தும் எழுதினார்.[19]

கிறித்தவ தன்விளக்கத்திற்கு விவிலிய அடிப்படை

[தொகு]

விவிலியத்தில் பல இடங்கள் கிறித்தவ தன்விளக்கத்திற்கு ஆதாரமாகக் காட்டப்படுகின்றன:

"உங்கள் உள்ளத்தில் கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு அவரைத் துயவரெனப் போற்றுங்கள். நீங்கள் எதிர்நோக்கி இருப்பதைக் குறித்து யாராவது விளக்கம் கேட்டால் விடையளிக்க நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாய் இருங்கள்" (1 பேதுரு 3:15)

இந்த விவிலியப் பகுதியில் கிறித்தவ தன்விளக்கம் என்பது கட்டாயமாகச் செய்யப்பட வேண்டிய ஒன்று என்னும் கருத்து தெரிகின்றது.[20]

[[எசாயா (நூல்)|எசாயா நூலில் வரும் ஒரு சொற்றொடொரும் கிறித்தவ தன்விளக்கத்திற்கு ஆதாரமாகக் காட்டப்படுகிறது. அங்கே கடவுள் தம் எதிரிகளை நோக்கி, "வாருங்கள், இப்பொழுது நாம் வழக்காடுவோம்" எனக் கூறுவதாக உள்ளது (எசாயா 1:18).[21]

மேலும், திருப்பாடல்கள் நூலில் வருகின்ற

"வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வானவெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது" (திருப்பாடல்கள் நூல் 19:1)

என்னும் பகுதியும் கிறித்தவ மறை "தன்விளக்கம்" அளிக்க ஆதரவாகக் காட்டப்படுகிறது.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் வருகின்ற ஒரு பகுதியும் இத்தகைய ஆதாரமாக உள்ளது:

"ஏனெனில் கண்களுக்குப் புலப்படா அவருடைய பண்புகள் - அதாவது, என்றும் நிலைக்கும் அவரது வல்லமையும் கடவுள் தன்மையும் - உலகப் படைப்பு முதல் அவருடைய செயல்களில் மனக் கண்களுக்குத் தெளிவாய்த் தெரிகின்றன. ஆகவே அவர்கள் சாக்குபோக்கு சொல்வதற்கு வழியே இல்லை" (உரோமையர் 1:20)

[22]

கிறித்தவ தன்விளக்கத்தின் வரலாறு

[தொகு]

கடவுள் இருக்கின்றார் என்பதை நிலைநாட்டும் வகையில் புனித அக்வீன் தோமா என்னும் இறையியல் அறிஞர் (1225–1274) ஐந்து வாதங்களைத் தமது "இறையியல் சுருக்கம்" (Summa Theologiae) என்னும் நூலில் முன்வைத்தார். அவர் எழுதிய "பிற சமயத்தாருக்கு மறுப்பு" (Summa contra Gentiles) என்னும் நூல் "தன்விளக்க" வகையது.[23][24]

பிலேசு பாஸ்கால் என்னும் சிந்தனையாளர் தமது நூலாகிய "சிந்தனைகள்" (Pensées) என்னும் படைப்பில் கீழ்வருமாறு கூறுகிறார்:

"மனிதர்கள் மதத்தை இழிவாகக் கருதுகிறார்கள். அது ஒருவேளை உண்மையாக இருக்குமோ என்றெண்ணி அதை வெறுக்கிறார்கள். இந்நிலை மாற வேண்டும் என்றால், முதன்முதலில் நாம் மதம் என்பது பகுத்தறிவுக்கு முரணானது அல்ல என்று காட்ட வேண்டும். மதத்தின் மட்டில் மதிப்பு எழ வேண்டும் என்றால் அது மதிப்புக்குரியதெனக் காட்ட வேண்டும். அது உண்மையானதேயென மனிதர்கள் எதிர்பார்த்திடும்படி நாம் மதத்தை மனிதர் அன்போடு ஏற்றிடச் செய்ய வேண்டும். இறுதியாக, மதம் என்பது உண்மையானதேயென நாம் காட்ட வேண்டும்"

[25][26]

நவீன காலத்தில் கிறித்தவ தன்விளக்கம்

[தொகு]

நவீன காலத்தில் கிறித்தவ தன்விளக்கம் பல முறைகளில் நிகழ்கிறது. 20ஆம் நூற்றாண்டைப் பொறுத்தமட்டில், உரோமன் கத்தோலிக்க கிறித்தவர்களுள் கீழ்வருவோர் கிறித்தவ தன்விளக்கம் அளித்துள்ள அறிஞர் ஆவர்:

  • ஜி.கே. செஸ்டர்டன் (G.K. Chesterton)[27]
  • ரோனல்ட் நாக்ஸ் (Ronald Knox)
  • கார்ல் கீட்டிங் (Karl Keating)
  • ஸ்காட் ஹான் (Scott Hahn)

ஆங்கிலிக்கன் சபையைச் சார்ந்த கிறித்தவ தன்விளக்க அறிஞர்களுள் சி.எஸ். லூயிஸ் (C. S. Lewis)[28] , நற்செய்தி அடிப்படைக் கிறித்தவர்களுள் நோர்மன் கைஸ்லர் (Norman Geisler), லூத்தரன் சபையைச் சார்ந்த ஜான் வார்விக் மோன்கோமெரி (John Warwick Montgomery), பிரெஸ்பிடோரியன் சபையைச் சார்ந்த பிரான்சிசு ஷேஃபர் (Francis Schaeffer).

கால்வினியப் பின்னணியில் கோர்டன் க்ளார்க் (Gordon Clark), கொர்னேலியஸ் ஃபான் தில் (Cornelius Van Til) என்பவர்கள் மெய்யியல் அடிப்படையிலான கிறித்தவ தன்விளக்கம் அளித்துள்ளனர்.

மற்றும் சில கிறித்தவ தன்விளக்க அறிஞர்கள்: ஜாஷ் மெக்டோவெல் (Josh McDowell), ரவி சக்கரியாஸ் (Ravi Zacharias), கியூ றாஸ் (Hugh Ross), லீ ஸ்ட்ரொபெல் (Lee Strobel, ஹூகோ ஆந்தனி மெய்னெல் (Hugo Anthony Meynell), திமோத்தி ஜே. கெல்லெர் (Timothy J. Keller), ஆல்வின் ப்ளாந்திங்கா (Alvin Plantinga), வில்லியம் லேன் க்ரேக் (William Lane Craig), ஜான் லென்னக்ஸ் (William Lane Craig), பீட்டர் க்ரீப்ட் (Peter Kreeft).

கிறித்தவ தன்விளக்கத்தின் பல வகைகள்

[தொகு]

கிறித்தவ தன்விளக்கத்தின் வகைகளுள் கீழ்வருவன அடங்கும்:

  • வரலாற்று, சட்டமுறை தன்விளக்க முறை
  • முற்கோள் தன்விளக்க முறை
  • மெய்யியல் தன்விளக்க முறை
  • இறைவாக்கு தன்விளக்க முறை
  • கொள்கை தன்விளக்க முறை
  • விவிலிய தன்விளக்க முறை
  • நன்னெறி தன்விளக்க முறை
  • அறிவியல் தன்விளக்க முறை

வரலாற்று, சட்டமுறை தன்விளக்க முறை

[தொகு]

இயேசு கிறிஸ்து சாவினின்று உயிர்பெற்றெழுந்தது ஒரு வரலாற்று உண்மை என்று நிலைநாட்டுவதற்கு சைமன் கிரீன்லீஃப், ஜான் வார்விக் மோன்ட்கோமெரி போன்றோர் மேலைநாட்டு சட்ட முறை அளவீடுகள் அடிப்படையைக் காட்டுகின்றனர். [29][30] மேலும், இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு சட்டமுறையான தடயங்கள் உண்டா என்னும் அணுகுமுறை பயன்படுகிறது.[31] கிறித்தவ சமய நம்பிக்கையானது பேகனிய கருத்துகளிலிருந்து பிறந்தது என்பதை மறுத்து எட்வின் எம். யமுச்சி போன்றோர் வாதாடுகின்றனர்.[32][33]

இயேசுவின் புதுமைகள்

[தொகு]

புதிய ஏற்பாட்டின் நற்செய்திகளின்படி, இயேசு நோயுற்றோருக்கு குணமளித்தார், இறந்தோரை உயிர்பெற்றெழச் செய்தார், பார்வையற்றோருக்குப் பார்வை அளித்தார். மேலும் பல புதுமைகளைச் செய்தார். சி.எஸ். லூயிஸ் (C. S. Lewis),[34] நோர்மன் கைஸ்லர் (Norman Geisler)],[35] வில்லியம் லேன் க்ரேக் (William Lane Craig) மற்றும் சட்டமுறைப் பாணியில் கிறித்தவ தன்விளக்கம் அளிக்கும் அறிஞர்கள் கருத்துப்படி, எல்லாம் வல்ல கடவுள் ஒருவர் இருக்கின்றார் என்பதை நாம் ஏற்றுக்கொண்டால் அவர் அதிசய செயல்களைச் செய்யும் திறன் கொண்டவர் என்பதையும் ஏற்றாக வேண்டுமென வாதாடுகின்றனர்.[36][37][38]

இறைவாக்கு அடிப்படையில் தன்விளக்க முறை

[தொகு]

பீட்டர் ஸ்டோனர் (Peter Stoner) என்பவர் தமது "அறிவியல் பேசுகிறது" (Science Speaks) என்னும் நூலில், விவிலிய இறைவாக்குகள் உண்மையிலேயே நிறைவேறியுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி, கடவுள் ஒருவரே வருங்காலத்தை அறிபவர் என்று கூறுகிறார்.[39]

கிறித்தவ தன்விளக்க அறிஞர் ஜாஷ் மெக்டோவெல் (Josh McDowell) என்பவர் பழைய ஏற்பாட்டு முன்னறிவுப்புகள் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் எவ்வாறு நிறைவேறின என்பதைக் குறிப்பிட்டு வாதாடுகின்றார். இயேசு எந்தக் குல வழியில் பிறப்பார், எந்த இடத்தில் பிறப்பார் என்பதையும், அவர் கன்னியிடமிருந்து பிறப்பார் என்பதையும், அவர் புதுமைகள் ஆற்றுவார் என்பதையும் குறித்த பழைய ஏற்பாட்டு முன்னறிவுப்புகள் இயேசுவின் வாழ்க்கையில் நிறைவேறின. மேலும் இயேசுவின் சாவு, உயிர்த்தெழுதல் போன்றவை குறித்தும் வழங்கப்பட்ட முன்னறிவிப்புகள் இயேசுவின் நிறைவேறின.[40]

மேலும், பிலேசு பாஸ்கால் (Blaise Pascal) கூற்றுப்படி, கிறித்தவ சமயம் உண்மையானது என்று நிலைநாட்ட, இறைவாக்குகள் மிக வலுத்த ஆதாரமாக உள்ளன. இயேசுவே முன்னறிவுப்புகள் வழங்கியதோடு, அவர்குறித்த முன்னறிவிப்புகளும் அவரிடத்தில் நிறைவேறின. இதில் கிறித்தவம் பிற சமயங்களிலிருந்து வேறுபடுகின்றது. இத்தகைய முன்னறிவிப்புகள் நான்கு ஆயிரம் ஆண்டுக் காலகட்டத்தில் வழங்கப்பட்டவை.[41]

விவிலிய அடிப்படையில் கிறித்தவ தன்விளக்க முறை

[தொகு]

இத்தகைய தன்விளக்கம் இரு முக்கிய பொருள்கள் பற்றியது. அதாவது, விவிலியத்தில் இப்போது உள்ள நூல்கள் "திருநூல்கள்" என்று ஏற்கப்பட்ட வரலாற்றை நிலைநாட்டுவது. இவ்வாறு திருச்சபையால் ஏற்கப்பட்ட நூல் வகை "விவிலியத் திருமுறை" (biblical canon) என அழைக்கப்படுகிறது. மேலும், விவிலிய நூல்களில் கூறப்படுவன உண்மையே என்று காட்டுவதும் இவ்வகை தன்விளக்கத்தின் உள் அடங்கும்.

இந்த விளக்க முறையை எடுத்துரைக்கும் ஆசிரியர்களுள் சிலர்: ராபர்ட்டு டிக் வில்சன் (Robert Dick Wilson), க்ளீசன் ஆர்ச்சர் (Gleason Archer), நோர்மன் கைஸ்லர் (Norman Geisler), ஆர்.சி. ஸ்ப்ரவுல் (R. C. Sproul).

இயேசுவின் வாழ்வு, போதனை, சாவு, உயிர்த்தெழுதல் ஆகியவற்றை எடுத்துரைக்கின்ற நற்செய்தி நுல்கள் நம்பகமானவையே என்று நிலைநாட்டும் முயற்சியைப் பல அறிஞர்கள் மேற்கொண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக, க்ரேக் ப்ளோம்பெர்க் (Craig Blomberg) எழுதிய The Historical Reliability of the Gospels என்னும் நூலைக் குறிப்பிடலாம்.[42] மேலும், மார்க் டி. ராபர்ட்ஸ் (Mark D. Roberts) என்பவர் எழுதிய Can We Trust the Gospels? என்னும் நூலும் இதில் அடங்கும்.[43]

மெய்யியல் அடிப்படையிலான தன்விளக்க முறை

[தொகு]

கிறித்தவ தன்விளக்கத்தின் ஒரு பகுதியாக அமைவது மெய்யியல் அடிப்படையிலான தன்விளக்கம் ஆகும். கடவுள் இருக்கிறாரா? கடவுள் இருக்கிறார் என்று நிலைநாட்டுவதற்கான மெய்யியல் நிரூபணங்கள் யாவை? கடவுளே அனைத்தையும் படைத்தாரென நிலைநாட்டுவது எப்படி? கடவுள் அனைத்திற்கும் மேலான வல்லமையும் உடையவர், அனைத்தையும் அறிபவர் என்று எவ்வாறு நிலைநாட்டலாம்? இத்தகைய கேள்விகளுக்கு விடைதேடுவதே மெய்யியல் அடிப்படையிலான தன்விளக்க முறை ஆகும்.

கிறித்தவ தன்விளக்கம் கடவுள் ஒருவரே பலரல்ல எனவும், அனைத்துமே கடவுள்தாம் என்பது தவறு என்றும் நிலைநாட்ட முனைகிறது. கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஏழு வகை விளக்கச் சான்றுகள் தரப்படுகின்றன: 1) "பிரபஞ்சம் உளதால் கடவுள் உண்டு" (Cosmological argument) என்னும் விளக்கச் சான்று: காரியம் இருந்தால் அதற்கான காரணம் இருக்க வேண்டும் என்னும் தத்துவத்தின் அடிப்படையில் இந்த விளக்கச் சான்று அமைகிறது.[44][45][46]
2) "இலக்கு உளதால் கடவுள் உண்டு" (Teleological argument) என்னும் விளக்கச் சான்று: மனிதர் வாழும் இவ்வுலகில் குறிக்கோளை உள்ளடக்கிய ஓர் ஒழுங்குமுறை உள்ளது. ஏனோதானோவென்று எதுவும் நடப்பதில்லை. எனவே இத்தகைய ஒழுங்கை ஏற்படுத்தியவர் கடவுளே. இந்த விளக்கச் சான்றை அளிப்போருள் சிசரோ (Cicero]), அக்வீன் தோமா (Thomas Aquinas), வில்லியம் பேலி (William Paley), மைக்கல் பேகே (Michael Behe) என்பவர்களும் உண்டு.[47]
3) "கருத்திலிருந்து பொருளுக்கு" (Ontological argument) என்னும் விளக்கச் சான்று. மனித சிந்தனையில் கடவுள்பற்றிய கருத்து எழுதலே கடவுள் உள்ளார் என்பதற்குச் சான்றாகிறது.
4) "அறநெறி உளதானால் கடவுளும் உண்டு" (Moral Argument) என்னும் விளக்கச் சான்று. அறநெறி விழுமியங்கள் உலகில் உண்டு என்பது உண்மையென்றால், அந்த விழுமியங்களின் முழுமையாகக் கடவுள் உள்ளார் என்று இவ்விளக்கச் சான்று அமைகிறது.[48]
5) "பகுத்தறிவு இருப்பதால் கடவுள் உண்டு" (Transcendental argument) என்னும் விளக்கச் சான்று. இதன்படி, மனிதர் பகுத்தறிவு கொண்டவர் என்பதாலும், சிந்தனைத் திறம் கொண்டவர் என்பதாலும் அதற்கு அடிப்படையாகக் கடவுள் இருக்க வேண்டும் எனும் முடிவு எட்டப்படுகிறது. 6) "மாற்றம் இருந்தால் மாறாத பரம்பொருள் உண்டு" (Argument from contingency) என்னும் விளக்கச் சான்று. இவ்வுலகில் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இந்த மாற்றங்களுக்குத் தொடக்கமாக, ஆனால் தாமே மாற்றமுறாதவராகக் கடவுள் உள்ளார் என்பது இந்த வாதம்.
7) "கடவுள் நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும் உளதால் கடவுள் உண்டு" (Presuppositional Argument) என்னும் விளக்கச் சான்று.

பிலேசு பாஸ்கால் (Blaise Pascal) என்னும் மெய்யியலார் கருத்துப்படி, கடவுள் இருக்கிறார் என்று அறுதியாக நிறுவ முடியாத நிலையில், கடவுள் இல்லை என்றும் அறுதியாக நிறுவ முடியாத நிலையில், கடவுள் இல்லை என்பதைவிட கடவுள் இருக்கிறார் என்று ஏற்பதே அறிவுடைமை [49]

அறநெறி காட்டும் கடவுள் எனும் தன்விளக்கம்

[தொகு]

இந்த அணுகுமுறைப்படி, மனிதரின் உள்ளத்தில் அறநெறி உணர்வும் மனச்சான்றும் உள்ளது. "நன்மையைச் செய், தீமையைத் தவிர்" என்னும் குரல் மனித உள்ளத்தில் எப்போதுமே எதிரொலிக்கிறது. இதிலிருந்து இந்த அறநெறிச் சட்டத்தை மனித உள்ளத்தில் எழுதிய கடவுள் இருக்கிறார் என்னும் முடிவு பெறப்படுகிறது. கத்தோலிக்க தன்விளக்க அறிஞர் பீட்டர் க்றீஃப்ட் (Peter Kreeft) என்பவர் இந்த அணுகுமுறையைக் கையாளுகின்றார்.[50]

மேலும், இந்த அணுகுமுறையில் மனிதரின் பாவ நிலையும் அந்நிலையிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற ஏக்கமும் கருத்தில் கொள்ளப்பட்டு, அத்தகைய விடுதலையைக் கொடுப்பவரே கடவுள் என்னும் பெயரால் அறியப்படுகிறார் என்பதும் ஏற்கப்படுகிறது. எ.டு.: யோனத்தான் எட்வர்ட்சு (Jonathan Edwards)[51]

அறிவியல் அடிப்படை கிறித்தவ தன்விளக்கம்

[தொகு]

விவிலியமும் அறிவியலும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல என்னும் அடிப்படையில் இத்தன்விளக்கம் அமைகிறது. மேலும் அறிவியல் உண்மைகள் விவிலிய உண்மையை ஆதரிக்கின்றன என்பதும் இக்கொள்கையின் அம்சமாகும்.[52][53]

கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்விநூல் கூற்றுப்படி,

"அறிவியல் ஆய்வுகள் மனிதர்களின் அறிவைப் பெருமளவு வளர்த்துள்ளன. அந்த ஆய்வுகள் மனிதர்களைப் பற்றியும் அவர்கள் வாழ்கின்ற இப்பிரபஞ்சத்தைப் பற்றியும் கவனம் செலுத்தியுள்ளன. அனைத்தையும் படைத்து ஆளுகின்ற கடவுளின் மாட்சியை இன்னும் அதிகமாக வியந்து போற்றிட இத்தகைய அறிவியல் கண்டுபிடிப்புகள் நமக்குத் தூண்டுதலாக உள்ளன" (க.தி.ம. எண் 287)

"[54]

மரீன் மெர்சேன் (Marin Mersenne) என்னும் அறிஞர் வான்வெளி பொறியியல் தத்துவங்களை ஆய்ந்து, அவை கடவுள் நம்பிக்கையை ஆதரிப்பதைத் தம் கிறித்தவ தன்விளக்க ஆய்வுகளில் காட்டியுள்ளார்.[55] சீனா சென்று கிறித்தவத்தைப் பரப்பிய கிறித்தவ அறிஞரான மத்தேயோ ரிச்சி (Matteo Ricci) (1552–1610) என்பவரும் கிறித்தவ நம்பிக்கையும் அறிவியலும் ஒன்றோடொன்று இணைந்துபோவதை விளக்கியுள்ளார்.[56]

நவீன காலத்தில் பெரு வெடிப்புக் கோட்பாடு என்னும் அறிவியல் முற்கோள் கிறித்தவக் கொள்கையை ஆதரிப்பதாகக் காட்டப்படுகிறது.[57][58]

இப்பிரபஞ்சமும் மனிதரும் எவ்வாறு தோன்றினர் என்பதை விளக்குகின்ற அறிவியல் அறிவும், அதே பொருள்பற்றி விவிலியம் கூறுகின்ற கருத்தும் ஒன்றுக்கொன்று முரண் அல்ல என்று பல கிறித்தவ தன்விளக்க ஆசிரியர்கள் நிலைநாட்டுகின்றனர். "இறை அடிப்படைக் கூர்ப்புக் கொள்கை" (Theistic Evolution) தரும் விளக்கப்படி, இப்பிரபஞ்சத்தில் முதன்முதலாக உயிர் தோன்றி, எளிய அமைப்பிலிருந்து படிப்படியாக அதிகமான வளர்ச்சி அடைந்து, பண்பட்டு, மேம்பட்டு, கூர்ப்பு முறையில் முன்னேறியது. இந்த விளக்கம் விவிலியத்தில் காணப்படுகின்ற "படைப்பு வரலாறு" பற்றிய போதனையை எவ்விதத்திலும் மறுப்பதில்லை. கடவுள் எப்போதுமே "படைப்பின் கடவுளே." அவருடைய படைப்புத் திறனின் கீழேயே பிரபஞ்சமும் மனிதரும் வளர்ந்து கூர்ப்பு முறையில் முன்னேறிவந்துள்ளனர். இக்கருத்தை டெனிசு லமூரோ (Denis Lamoureux) என்னும் அறிஞர் தமது Evolutionary Creation: A Christian Approach to Evolution என்னும் நூலில் விளக்குகிறார்[59]

பியேர் தையார் தே ஷார்தேன் (Pierre Teilhard de Chardin) என்னும் அறிஞர் இருபதாம் நூற்றாண்டில் அறிவியல் உண்மைகள், குறிப்பாகக் கூர்ப்புக் கொள்கை (படிவளர்ச்சிக் கொள்கை) அளிக்கும் அறிவியல் உண்மைகள் விவிலியத்தில் பிரபஞ்சத்தைப் படைக்கின்ற கடவுள் கொள்கையோடு இணைந்து போவதே என்று காட்டினார்.[60] ஆனால் அவர் முன்மொழிந்த கருத்து கத்தோலிக்க திருச்சபை அதிகாரிளுக்கு அவ்வளவு ஏற்புடையதாகத் தோன்றவில்லை.[61]

பிரபஞ்சத்தின் படைப்புடன் தொடர்புடைய கிறித்தவ தன்விளக்கம்

[தொகு]

இந்த அணுகுமுறையில் மூன்று வகைகள் உள்ளன. பூமி மிக அண்மைக் காலத்தில் படைக்கப்பட்டது எனும் கருத்து; பூமி பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் படைக்கப்பட்டது என்னும் கருத்து; இறைத் தொடர்புடைய கூர்ப்புக் கொள்கை.

  • பூமி மிக அண்மைக் காலத்தில் படைக்கப்பட்டது என்னும் கொள்கையைக் கொண்டுள்ளோர் மிகச் சிலரே ஆவர். அவர்கள் விவிலியத்தில் காணப்படும் படைப்பு வரலாற்றை எழுத்துக்கு எழுத்து என்று பொருள் கொள்கின்றனர். விவிலியம் தரும் ஆண்டுக் கணக்கின்படி பூமி சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்தான் படைக்கப்பட்டது என்று அவர்கள் வாதாடுகிறார்கள். அவர்கள் பூமியின் தோற்றம்பற்றி அறிவியல் தருகின்ற கணிப்பை ஏற்க மறுக்கின்றார்கள். மேலும் பண்டைக் காலத்தில் மெத்துசேலா போன்றோர் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்தனர் என்று விவிலியத்தில் காணும் பகுதிகளையும் (தொடக்க நூல் 5:21-27) அவர்கள் எழுத்துக்கு எழுத்து உண்மை என்று விளக்கம் தருகின்றனர்.[62][63] எ.டு.: நோவா காலத்தில் நிகழ்ந்த பெருவெள்ளம் பற்றிய செய்தி (தொடக்க நூல் 6);[64][65] பாபேல் கோபுரம்பற்றிய விவிலியச் செய்தி (தொடக்க நூல் 11).[66][67][68] விவிலியம் கடவுளால் வெளிப்படுத்தப்பட்டது என்பதால் அதில் வரும் எல்லாத் தகவல்களையும் அப்படியே எழுத்துக்கு எழுத்து பொருள்கொள்ள வேண்டும் என்று கூறப்படும் இக்கருத்தை மிகப் பெரும்பான்மையான கிறித்தவ சபைகள் ஏற்பதில்லை.
  • அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் பூமி மிகப் பழங்காலத்திலேயே உருவானது என்னும் கருத்தை ஏற்போர், விவிலியத்தில் பிரபஞ்சம் ஆறு நாள்களில் கடவுளால் படைக்கப்பட்டது என்பதை உண்மை என்று ஏற்றாலும், அதற்கு வேறுவிதமான விளக்கம் தருகின்றனர். பிரபஞ்சமும் அதில் அடங்கிய அனைத்தும் கடவுளின் படைப்பேயென இவர்கள் ஏற்கின்றனர். விவிலியத்தில் படைப்புப் பற்றி வரும் பகுதிகளுக்கு எழுத்துக்கு எழுத்து என்று விளக்கம் கொடுப்பது முறையாகாது என்றும், அதை உருவக முறையில் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் இவர்கள் கூறுகின்றனர். எனவே, அறிவியல் கணிப்புப்படி பிரபஞ்சம் 13.8 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்பதை இவர்கள் ஏற்கும் வேளையில், அத்தகவலை விவிலிய படைப்பு வரலாற்றோடு ஒருங்கிசையச் செய்ய முடியும் என்றும் கருதுகின்றனர்.[69] என்வே, பூமி 4.54 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்னும் அறிவியல் செய்தியை அவர்கள் ஏற்பர்.[70]

இவர்கள் தரும் ஒரு சில விளக்கங்கள்:
1) திருப்பாடல்கள் 90:4: "ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன."
2) 1 பேதுரு 3:8: "அன்பார்ந்தவர்களே, நீங்கள் ஒன்றை மறந்துவிட வேண்டாம். ஆண்டவரின் பார்வையில் ஒரு நாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒரு நாள் போலவும் இருக்கின்றன."
இங்கே, ஆயிரம் என்னும் எண் "மிக நீண்ட காலத்தைக் குறிக்கும் எண்" எனப் பொருள் கொள்ளப்படலாம். அவ்வாறெனில் இந்த எண்களை உருவகமாகக் கொள்ள வேண்டுமே அன்றி, எழுத்துக்கு எழுத்து என்று விளக்கலாகாது. 3) ஹியூ ராஸ் (Hugh Ross) போன்ற சில அறிவியல் அறிஞர்கள் தரும் விளக்கப்படி, "நாள்" என்பதைக் குறிக்கின்ற "யோம்" (yom) என்னும் எபிரேயச் சொல்லுக்கு "பகல் நேரம்", "24 நான்கு மணி நேரம்", "நெடுங்காலம்" போன்ற பல பொருள்கள் உண்டு. எனவே, ஆறு நாள்களில் படைப்பு நிகழ்ந்தது என்பதை ஆறு நெடுங்காலங்களில் படைப்பு நிகழ்ந்தது என்று கொண்டு, அச்செய்தியை அறிவியல் தகவலோடு இசைவுறப் பொருத்திப் பொருள் தர முடியும் என்று அவர் கருத்துத் தெரிவிக்கிறார்.[71][72]

  • அறிவியல் காட்டுகின்ற கூர்ப்புக் கொள்கையை விவிலிய படைப்பு வரலாற்றோடு இணைத்து, இசைவுற விளக்கம் தர முடியும் என்று பெரும்பாலான கிறித்தவ தன்விளக்க அறிஞர்கள் கருதுகின்றனர்.

அனுபவ அடிப்படையில் கிறித்தவ தன்விளக்கம்

[தொகு]

சில அறிஞர்கள், கிறித்தவ தன்விளக்கம் விவாதங்களின் அடிப்படையிலோ வரலாற்றுச் செய்திகளின் அடிப்படையிலோ தரப்படுவதல்ல என்றும், ஒவ்வொருவரின் உள் அனுபவத்திலேயே அது நிகழ்கிறது என்றும் கூறுவர்.[73]

குறிப்புகள்

[தொகு]
  1. "ἀπολογία". Blue Letter Bible-Lexicon. பார்க்கப்பட்ட நாள் 7 May 2012. {{cite web}}: Cite has empty unknown parameter: |unused_data= (help)
  2. Kahlos, Maijastina (2007). Debate and Dialogue : Christian and Pagan Cultures c. 360-430. Aldershot: Ashgate. pp. 7–9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7546-5713-2.
  3. Ernestine, van der Wall (2004). "Ways of Polemicizing: The Power of Tradition in Christian Polemics". In T L Hettema and A van der Kooij (ed.). Religious Polemics in Context. Assen: Royal Van Gorcum. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-232-4133-9.
  4. Plato, Apology 24b; compared to Christian apologetics by Anders-Christian Jacobsen, "Apologetics and Apologies—Some Definitions," in Continuity and Discontinuity in Early Christian Apologetics (Peter Lang, 2009), p. 14.
  5. Kevin Butcher, Roman Syria and the Near East (Getty Publications, 2003) p. 378.
  6. Graham Anderson, The Second Sophistic: A Cultural Phenomenon in the Roman Empire (Routledge, 1993, 2003), p. 203.
  7. Jacobsen, "Apologetics and Apologies, p. 6.
  8. Mark Edwards, Martin Goodman, Simon Price and Christopher Rowland, introduction to Apologetics in the Roman Empire : Pagans, Jews, and Christians (Oxford University Press, 1999, 2002), pp. 10–11.
  9. Jacobsen, "Apologetics and Apologies, p. 8.
  10. 10.0 10.1 Jacobsen, "Apologetics and Apologies, p. 14.
  11. Maureen A. Tillby, "North Africa", in Cambridge History of Christianity: Origins to Constantine (Cambridge University Press, 2006), vol. 1, p. 388, citing the Martyrum Scillitanorum Acta.
  12. Margaret M. Mitchell, "Gentile Christianity," p. 107, and "Emergence of the Written Record" p. 193, in Cambridge History of Christianity, vol. 1.
  13. Jacobsen, "Apologetics and Apologies, p. 14 et passim.
  14. Dulles, Avery Robert Cardinal (2005). A History of Apologetics. San Francisco: Ignatius Press. pp. 31–42. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89870-933-4.
  15. Dulles, Avery Robert Cardinal (2005). A History of Apologetics. San Francisco: Ignatius Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89870-933-4.
  16. Jacobsen, "Apologetics and Apologies, pp. 19–20.
  17. Jacobsen, "Apologetics and Apologies, pp. 5, 17.
  18. Simon Price, "Latin Christian Apologetics: Minucius Felix, Tertullian, and Cyprian," in Apologetics in the Roman Empire, pp. 106–107. pp. 16–17, 22; p. 32, note 41.
  19. Adolf Martin Ritter, "Church and State up to c. 300 CE", in Cambridge History of Christianity, vol. 1, pp. 531–532.
  20. Sproul, R C (2009). Defending Your Faith. Wheaton: Crossway Books. p. 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4335-0315-8.
  21. Geisler, Norman L (1988). Christian Apologetics (Paperback ed.). Grand Rapids: Baker Book House. pp. 11–12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8010-3822-7.
  22. Anderson, Owen (2008). Reason and Worldviews. Plymouth, U.K.: University Press of America. p. 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7618-4038-9.
  23. Dulles, Avery Robert Cardinal (2005). A History of Apologetics. San Francisco: Ignatius Press. p. 120. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89870-933-4.
  24. L Russ Bush, ed. (1983). Classical Readings in Christian Apologetics. Grand Rapids: Zondervan. p. 275. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-310-45641-X.
  25. Pascal, Blaise. Pensées. p. 187. {{cite book}}: Unknown parameter |trans_title= ignored (help)
  26. Groothuis, Douglas (2011). Christian Apologetics. Downers Grove: IVP Academic. pp. 25–31. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8308-3935-6.
  27. Chesterton, G K (2008). The Everlasting Man. Radford: Wilder Publications. p. 180. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-60459-246-X.
  28. Lewis, C S (2001). "The Shocking Alternative". Mere Christianity (HarperCollins ed.). San Francisco: HarperSan Francisco. pp. 54–56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-06-065288-8.
  29. Greenleaf, Simon. "Testimony of the Evangelists". University of Missouri-Kansas City School of Law. பார்க்கப்பட்ட நாள் 8 May 2012.
  30. Montgomery, John Warwick (2004). "The Jury Returns: A Juridical Defense of Christianity". In John Warwick Montgomery (ed.). Evidence for Faith. Edmonton: Canadian Institute for Law, Theology, and Public Policy. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-896363-17-2. பார்க்கப்பட்ட நாள் 8 May 2012.
  31. Ankerberg, John. "Could the Evidence Stand-Cross Examination in a Modern Court of Law?". The Evidence for the Resurrection of Jesus Christ. Ankerberg Theological Research Institute. Archived from the original on 23 அக்டோபர் 2007. பார்க்கப்பட்ட நாள் 8 May 2012. {{cite web}}: Unknown parameter |coauthors= ignored (help)
  32. Yamauchi, Edwin. "Easter: Myth, Hallucination, or History". பார்க்கப்பட்ட நாள் 8 May 2012.
  33. "Refuting the Myth that Jesus Never Existed". James Hannam. 6 October 2001. பார்க்கப்பட்ட நாள் 8 May 2012.
  34. Peters, Thomas C. (1997). Simply C. S. Lewis: A Beginner's Guide to the Life and Works of C. S. Lewis. Wheaton, Illinois: Crossway Books. pp. 180–184. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89107-948-3.
  35. Geisler, Norman L. (1988). Christian Apologetics. Grand Rapids, Michigan: Baker Academic. pp. 29, 30. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8010-7186-7.
  36. "Are Miracles Logically Impossible?". Come Reason Ministries, Convincing Christianity. பார்க்கப்பட்ட நாள் 2007-11-21.
  37. ""Miracles are not possible," some claim. Is this true?". ChristianAnswers.net. பார்க்கப்பட்ட நாள் 2007-11-21.
  38. Paul K. Hoffman. "A Jurisprudential Analysis Of Hume's "in Principal" Argument Against Miracles" (PDF). Christian Apologetics Journal, Volume 2, No. 1, Spring, 1999; Copyright ©1999 by Southern Evangelical Seminary. Archived (PDF) from the original on 2007-10-26. பார்க்கப்பட்ட நாள் 2007-11-21.
  39. Chapter 2, Science Speaks, Peter Stoner
  40. McDowell, Josh. The New Evidence that Demands a Verdict. p. chapter 8. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help); Unknown parameter |nopp= ignored (help)
  41. Pascal, Blaise (1966). Pensées. England: Penguin Group. pp. x, xii, xiii.
  42. Bloomberg, Craig (1987). The Historical Reliabilty of the Gospels. Downeres Grove: Inter-Varsity Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87784-992-7.
  43. Roberts, Mark D. (2007). Can We Trust The Gospels. Crossway. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-58134-866-8.
  44. "Evidences for God from Space". Archived from the original on 2005-08-02. பார்க்கப்பட்ட நாள் 2013-10-15.
  45. "Apologetics Press - "So Long, Eternal Universe; Hello Beginning, Hello End!"". Archived from the original on 2005-11-12. பார்க்கப்பட்ட நாள் 2013-10-15.
  46. Keith H. Wanser, physics
  47. "A brief history of design". Archived from the original on 2005-11-21. பார்க்கப்பட்ட நாள் 2013-10-15.
  48. Morality Apart From God: Is It Possible?
  49. Challenging Believers to Think and Thinkers to Believe[தொடர்பிழந்த இணைப்பு]
  50. Kreeft, Peter (1994). Handbook of Christian Apologetics. Downers Grove: Intervarsity Press. pp. 72. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8308-1774-3.
  51. Select Sermons | Christian Classics Ethereal Library
  52. Jitse M. van der Meer and Scott Mandelbrote, Nature and Scripture in the Abrahamic Religions: Up to 1700, BRILL, 2009, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-17191-6, p. 295.
  53. Kenneth Boa and Robert M. Bowman, Faith Has Its Reasons: Integrative Approaches to Defending the Christian Faith, Biblica, 2006, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-932805-34-6,p. 173.
  54. Catechism of the Catholic Church, 2nd ed. #287.
  55. Avery Cardinal Dulles, A History of Apologetics, 2nd ed., Ignatius Press, 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89870-933-4, p. 159.
  56. Jean Lacouture (tr. Jeremy Leggatt), Jesuits: A Multibiography, Counterpoint Press, 1997, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-887178-60-0, p. 189.[தொடர்பிழந்த இணைப்பு]
  57. Louis Markos, Apologetics for the Twenty-First Century, Crossway, 2010, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4335-1448-6, p. 134.
  58. James Stroud, Mere Christian Apologetics, Xulon Press, 2011, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-61379-449-5,p. 19.
  59. Evolutionary creation, Denis Lamoureux
  60. Dulles, p. 297 ff.
  61. Warning Considering the Writings of Father Teilhard de Chardin பரணிடப்பட்டது 2007-12-14 at the வந்தவழி இயந்திரம், Sacred Congregation of the Holy Office, June 30, 1962.
  62. "Living for 900 years – Creation Magazine". Archived from the original on 2008-09-07. பார்க்கப்பட்ட நாள் 2013-10-16.
  63. CH311: Vapor canopy's effect on lifespan
  64. Why Does Nearly Every Culture Have a Tradition of a Global Flood?
  65. Get Answers: Noah's Flood
  66. Is there archaeological evidence of the Tower of Babel? - ChristianAnswers.Net
  67. CONFUSION OF LANGUAGES – Is there any reference in early Mesopotamian literature to what happened at the Tower of Babel?
  68. The Tower of Babel—Legend or History?
  69. "Cosmic Detectives". The European Space Agency (ESA). 2013-04-02. பார்க்கப்பட்ட நாள் 2013-04-23. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  70. "The age of the Earth in the twentieth century: a problem (mostly) solved". The Geological Society of London 2001. 2001. பார்க்கப்பட்ட நாள் 2013-04-23. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  71. Ross, Hugh (31 Dec. 1990). "Response to Genesis and the Big Bang by Gerald Schroeder". Reasons To Believe. Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-10-16. {{cite web}}: Check date values in: |date= (help); Unknown parameter |coauthors= ignored (help)
  72. Russell, Ryan. "Day 1 (Genesis 1:1-5)". Genesis: verse-by-verse Bible Study. Christian Knowledge. Archived from the original on 2012-07-24. பார்க்கப்பட்ட நாள் 3 Dec. 2010. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  73. Lewis, Gordon R. (1990). Testing Christianity's Truth Claims: Approaches to Christian Apologetics. Lanham, MD: University Press of America Inc.