உள்ளடக்கத்துக்குச் செல்

புதுமைப்பித்தன்

விக்கிமேற்கோள் இலிருந்து

புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 - மே 5, 1948), மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  • இலக்கியத்தில் சுவையம்சம் என்பது ஜீவத்துடிப்பில்தான் இருக்கிறது.[1]
  • பேயும் பிசாசும் இல்லை என்றுதான் நம்புகிறேன். ஆனால், பயமாக இருக்கிறது.[1]
  • வார்த்தைகளை வைத்துக்கொண்டு ஜனங்களைப் பயங்காட்டுவது ரொம்ப லேசு.[1]
  • பொதுவாக என்னுடைய கதைகள் உலகத்துக்கு உபதேசம் செய்யும் ஸ்தாபனம் அல்ல! பிற்கால நல்வாழ்வுக்கு சௌகரியம் பண்ணி வைக்கும் இன்ஷ்யூரன்ஸ் ஏற்பாடும் அல்ல. எனக்குப் பிடிக்கிறவர்களையும் பிடிக்காதவர்களையும் கிண்டல் செய்து கொண்டிருக்கிறேன். சிலர் என்னோடு சேர்ந்துகொண்டு சிரிக்கிறார்கள். இன்னும் சிலர் கோபிக்கிறார்கள்.[1]
  • வேதாந்திகள் கைக்குள் சிக்காத கடவுள் மாதிரிதான் நான் பிறப்பித்துவிட்டவைகளும். அவை உங்கள் அளவுகோல்களுக்குள் அடைபடாதிருந்தால் நானும் பொறுப்பாளியல்ல, நான் பிறப்பித்து விளையாடவிட்ட ஜீவராசிகளும் பொறுப்பாளிகளல்ல; உங்கள் அளவுகோல்களைத்தான் என் கதைகளின் அருகில் வைத்து அளந்து பார்த்துக்கொள்கிறீர்கள் என்று உங்களுக்குச் சொல்லிவிட விரும்புகிறேன்.
  • உண்மையே இலக்கியத்தின் ரகசியம்.
  • வாழ்க்கையில் ஒருவெறி ஏற்பட்டால்தான் பிடிப்புடன் முன்னேறி வாழமுடியும். அதைச் சமயம் கொடுக்கிறது. அது சொல்லுகிற மோட்சத்தைக் கொடுக்காவிட்டாலும் இது போதும். அந்த மோட்சத்தைவிட இது மேலானது.[2]
  • கவிதையைப் போதனைக்குரிய கருவிசாக உபயோகப்படுத்தும் வரை அது கவிதையாக இருக் காது. அதன் ரசனை கெட்டு விடுகிறது.[3]
  • நல்ல இலக்கியமென்றால், எத்தனை நந்திகள் வழிமறித்துப் படுத்துக்கொண்டாலும் இவை உரிய ஸ்தானத்தை அடைந்தே தீரும். பனைமரத்தில் ஊசியைச் சொருகிக் கொண்டு சுமந்து நடந்த பரமார்த்த குருவின் சீடர்கள் போல, எத்தனைபேர் சுமந்து வந்தாலும் பரங்கிக்காய் குதிரை முட்டையாகி விடாது.[3]
  • உணர்ச்சி விஷயங்களில், இனிமேல் என்ற பிரச்சினையைப் பெண்களே சீக்கிரத்தில் கவனிக்கக் கூடியவர்கள், தன்னை ஒப்பு க்கொடுப்பது, தன்னுடைய வாழ்க்கையை ஓர் ஆண்மகனிடம் பணயமாக வைப்பது எவ்வளவு சீக்கிரத்தில் நடக்கிறதோ, அவ்வளவு விரைவிலேயே வருங் காலத்தைப் பற்றித் திட்டம் போடும் திறனும் படைத்து விடுகிறார்கள் அப் பெண்கள்.[3]
  • வகுப்பில் இரண்டு கெட்டிக்காரர்கள் இருந்தால், இரண்டு பேர்களுக்கும் நட்பு ஏற்படுவது இயற்கை; பகைமை ஏற்படுவதும் சகஜம். இவை இரண்டும் அற்று இருப்பது விதிக்கு விலக்கு[3]

பெரிய மீன் சின்ன மீனைத் தின்னலாம், ஆனால் சின்ன மீன் அதற்கும் சின்ன மீனைத் தின்றால் பெரிய மீன் ‘குற்றம் செய்கிறாய்!’ என தண்டிக்க வருகிறது. இது தான் சமூகம்![3]

  • ஒழுக்கமும், தர்மமும், மோட்சமும் கவிஞனது உள்ளத்தில் ஊறி, இருதயத்தின் கனிவாக வெளிப்படும் இசைதான் கவிதையாகும்.[3]
  • உடற்கூறு நூல் படியாவிட்டால் உயிர் வாழ முடியாதென்று சொல்ல முடியாது. அதைப் போல் இலக்கணம் இல்லாவிட்டால், கவிதை இருக்க முடியாதென்று கூற முடியாது. ஆனால் கவிதையை ரஸிப்பதற்குக் கவிதை என்றால் என்ன வென்று தெரிந்திருக்க வேண்டும். [3]
  • தற்காலத்தில் பண்டிதர்கள் இலக்கியம் எது என்று கவனிக்க முடியாமல் எல்லாவற்றையும் புகழ்ந்து கொண்டு இடர்ப்படுவதற்குக் காரணம் அவர்கள் இலக்கியம் என்றால் என்னவென்று அறியாததுதான்.[3]
  • வாழ்க்கையின் அர்த்தத்தைச் சொல்லுவது தத்துவம், வாழ்க்கையைக் சொல்வது, அதன் ரசனையைச் சொல்வது இலக்கியம்.[3]
  • சிறுகதை, வாழ்க்கையின் சாளரங்கள். வாழ்க்கையின் ஒரு பகுதியை அல்லது ஒருவரின் தனி உணர்ச்சியை அல்லது ஒரு குண சம்பவத்தை எடுத்துச் சித்திரிப்பது.[3]
  • கலை, தர்ம சாஸ்திரம் கற்பிக்க வரவில்லை; ஒழுக்க நூலை இயற்ற வரவில்லை. உடற்கூறு நூலை எடுத்துக் காட்ட வரவில்லை. பத்துத் தலை ராவணனும், ஆறுதலை சுப்ரமணியனும், உடற்கூறு நூலுக்குப் புறம்பான அபத்தமாக இருக்கலாம். ஆனால் ஒரு கொள்கையை இலட்சியத்தை உணர்த்தக்கூடியது, அது தான் கலையின் இலட்சியம். [3]
  • வாழ்க்கைப் பாதையில் கணவனும், மனைவியுமாகச் செல்லுகையில், மஞ்சள் பூப் போல் இருந்த சமூகம், பந்துக்கள் அவன் பிரிந்தவுடன், முட்களாகக் குத்துகிறார்கள்.[3]
  • தெரிந்ததைச் சொல்லுவதற்குப் புஸ்தகமா, தெரியாததை அறிவதற்குப் புஸ்தகமா? இரண்டிற்கும்தான்.[3]
  • கவிஞன் உலகத்தின் உண்மைகளை, வாழ்க்கையின் ரகஸியங்களை வேறு விதமாகப் பார்க்கிறான். அவன் கண்கள் உணர்ச்சிக் கண்கள். கனவுக் கண்கள்.[3]
  • கவிதையில், சரியான வார்த்தைகள், சரியான இடத்தில் அடைய வேண்டும். கவிஞன் வார்த்தைகளை எடுத்து கோர்ப்பதில்லை. உணர்ச்சியின் பெருக்கு, சரியான வார்த்தைகளைச் சரியான இடத்தில் கொண்டு கொட்டுகிறது. -புதுமைப்பித்தன்[3]
  • கத்தி விழுங்குபவனும் கவிராயனும் ஒன்றல்ல. கவிராயன் நாம் செய்யக் கூடிய காரியத்தைத்தான், நாம் எப்படிச் செய்ய விரும்புகிறோமோ அந்த அளவு ஆணித்தரமான அழுத்தத்துடன் செய்கிறான் என்பவை தவிர நாம் செய்ய முடியாத காரியத்தை அவன் செய்கிறான் என்பதல்ல. -புதுமைப்பித்தன்[3]
  • நமது இலக்கியமானது நெடு நாள் பட்ட வளர்ச்சி கண்டது. அதன் வார்த்தை அமைதிகளே கவிதைப் பண்பு கொண்டு, நடைபயிலும் சிறு குழந்தைக்கு நடைவண்டி போல அமைந்து கிடப்பதால், பேரிகை கொட்டி பிழைப்பதைவிட, கவிதை கட்டிப் பிழைப்பது இலகுவான காரியமாகி விட்டது.-புதுமைப்பித்தன்[3]
  • மோகனமான பகற் கனவுகள் காண்பதில் கவிஞனுக்கு இணையாகக் காதலர்களைத்தான் ஒருவாறு கூறலாம்.-புதுமைப்பித்தன்[3]
  • கவிஞன் எப்பொழுதும் ஒரு இலட்சிய உலகில் வசிப்பவன். அவனது உள் மனத்தின் உணர்ச்சி ஊற்றுக்களிலிருந்து ஜீவசக்தி பெற்று வரும் வார்த்தைகள் தாம் கவிதைகள்.-புதுமைப்பித்தன்[3]
  • கடவுள் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? ஒரு கூட்டத்தின் பாதுகாப்பிற்கு அது அவசியமானால் ஒரு பொய்யைச் சொல்லித்தான், கடவுள் என்ற பிரமையைச் சிருஷ்டித்தால் என்ன?[3]
  • இந்தக் கடவுள் விஷயம் ரொம்ப ஸ்வாராஸ்யமானது. அது தனிமனிதனுக்கு ஒரு தைரியத்தைக் கொடுக்கிறது. சமூகத்திற்கு ஒரு சக்தியைக் கொடுப்பது போல், நாஸ்திகம் தர்க்கத்தில் நிஜமகே இருக்கலாம். அது சுவாரஸ்யமற்றது. வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ஏற்படுத்த முடியாதது.[3]

சிறுகதைகளில் இருந்து மேற்கோள்கள்

[தொகு]
  • நான் ஓடினால் காலம் ஓடும். நான் அற்றால் காலம் அற்றுப்போகும்.[4]
  • இருட்டுக்கும் பயத்துக்கும் ஒளிவிடம் இல்லாத பகலிலே எல்லாம் வேறு மாதிரியாகத் தான் தோன்றுகிறது.[5]
  • மதுரைக்கு வழி வாயிலே.[6]
  • சிக்கிரிப் பவுடர் காப்பி மாதிரிதான் இருக்கும்; ஆனால் காப்பி அல்ல; சில பேர் தெய்வத்தின் பேரைச் சொல்லிக்கொண்டு ஊரை ஏமாற்றி வருகிற மாதிரி.[6]
  • மனிதன் கடவுளைப் படைத்தான். அப்புறம் கடவுள் மனிதனை சிருஷ்டிக்க ஆரம்பித்தான்.[7]
  • மனிதன் தன் திறமையை அறிந்து கொள்ளாமல் செய்த பிசகுக்கு கடவுள் என்று பெயர்.[7]
  • மனிதனுக்கு உண்டாக்கத்தான் தெரியும். அழிக்கத் தெரியாது. அழியும் வரை காத்திருப்பதுதான் அவன் செய்யக்கூடியது.[7]
  • சென்னையிலே தர்ம சிந்தனை ஒரு போக வஸ்து.[8]
  • அந்த சிங்கிகுளத்துப் பெண் மூவாயிரம் ரூபாயைப் பணயமாக வைத்து, அவனுடன் வாழ்க்கையைப் பிணைத்துக் கொள்ள சம்மதிக்கும் பொழுது, ஐந்து ரூபாய்க்கு இரண்டு மணிநேரம் சரி தானே? [9]

பிற இணைப்புகள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 புதுமைப்பித்தன் சிறுகதைகள். நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு
  2. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 31-40. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 3.13 3.14 3.15 3.16 3.17 3.18 3.19 3.20 முல்லை பிஎல். முத்தையா (1998). புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள். நூல் 28-63. முல்லை பதிப்பகம். Retrieved on 22 ஏப்ரல் 2020.
  4. 'கயிற்றரவு' சிறுகதையில்
  5. 'காஞ்சனை' சிறுகதையில்
  6. 6.0 6.1 'கடவுளும் கந்தசாமிபிள்ளையும்' சிறுகதையில்
  7. 7.0 7.1 7.2 'சாமியாரும், குழந்தையும், சீடையும்' சிறுகதையில்
  8. 'நம்பிக்கை' சிறுகதையில்
  9. 'ஒப்பந்தம்' சிறுகதையில்
"https://ta.wikiquote.org/w/index.php?title=புதுமைப்பித்தன்&oldid=19877" இலிருந்து மீள்விக்கப்பட்டது