உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்ரடிகெஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொரிந்திய தலைகவசத்துடன் பெயர் தெரியாத ஸ்ட்ராட்டெகயின் மார்பளவு சிலை; கிரேக்க சிற்பத்தின் எட்ரியானிக் உரோமானிய நகல் தோராயமாக கிமு 400

ஸ்ரடிகெஸ் (Strategos, பன்மை strategoi, Latinized strategus, ( கிரேக்கம்: στρατηγός, pl. στρατηγοίστρατηγοί ; டோரிக் கிரேக்கம் : στραταγός, stratagos ; "இராணுவத் தலைவர்" என்று பொருள்படும்) என்பது கிரேக்க மொழியில் இராணுவத் தளபதி என்று பொருள்பட பயன்படுத்தப்படுகிறது. எலனியக் காலம் மற்றும் பைசாந்தியப் பேரரசில் இந்த சொல் இராணுவ ஆளுநரை விவரிக்கவும் பயன்படுத்தப்பட்டது. நவீன எலனிய இராணுவத்தில் இது மிக உயர்ந்த அதிகாரி பதவியாகும்.

சொற்பிறப்பியல்

[தொகு]

ஸ்ரடிகெஸ் என்பது இரண்டு கிரேக்க சொற்களான stratos மற்றும் agos ஆகியவற்றின் கலவையாகும். ஸ்ரடொஸ் (στρατός) என்றால் "இராணுவம்", அதாவது "பரவியது" என்பதாகும். அகொஸ் (ἀγός) என்பது "தலைவர்" என்பதாகும்.

செவ்வியல் கிரேக்கம்

[தொகு]

ஏதென்ஸ்

[தொகு]

செவ்வியல் ஏதென்சில், கிமு 6 ஆம் நூற்றாண்டிலேயே ஸ்ரடிகெஸ் பதவிகள் இருந்தன. ஆனால் கிமு 501 இல் கிளீசுத்தனீசுவின் சீர்திருத்தங்களால் மட்டுமே இது மிகவும் அடையாளம் காணக்கூடிய வடிவத்தைப் பெற்றது: ஏதெனசின் ஒவ்வொரு பழங்குடியின பிரிவிலிருந்தும் ஆண்டுதோறும் பத்து ஸ்ரடிகெஸ்கள் தேந்தெடுக்கப்படுமாறு கிளீஸ்தீனஸ் அரசியல் அமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவந்தார். இந்த பத்து பேரும் சம அந்தஸ்தில் இருந்தனர். இராணுவ நிர்வாகம் முழுவதும் இவர்களின் வசமே இருந்தது. மேலும் அதுவரை மூத்த இராணுவத் தளபதி என்று இருந்த போலிமார்ச் என்ற பதவியை மாற்றியமைத்தார். [1] கிமு 490 இல் நடந்த மாரத்தான் போரில் ( எரோடோட்டசின் கூற்றுப்படி) ஸ்ரடிகெஸ்கள் தங்களுக்குள் வாக்களித்து தங்களுக்குள் ஒருவரை தலைமைத் தளபதியாக தேர்ந்தெடுத்துக் கொண்டனர். மேலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாள் என சுழற்சி முறையில் தலைமைப் பதவியை வகித்தனர். கிமு 486 ஆம் ஆண்டிலிருந்து மற்ற ஆர்கோன்களைப் போலவே ஸ்ரடிகெஸ்களும் மக்கள் அவையில் வாகளிப்பின் மூலம் ஆண்டுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஸ்ரடிகெஸ்களுக்கான தேர்தல் ஆண்டில் வசந்த காலத்தில் நடத்தப்பட்டது. ஒரு ஸ்ரடிகெஸ் இறந்துவிட்டால் அல்லது பதவியில் இருந்து நீக்கப்பட்டால், அவருக்குப் பதிலாக இடைத்தேர்தல் நடத்தப்படும்.

ஏதென்சின் பொற்காலத்தின் போது அரசியல்வாதி மற்றும் ஜெனரலாக இருந்த பெரிக்கிள்ஸ்

ஒரு ஆண்டு இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் மீண்டும் போட்டியிடலாம். ஒருவரே பல ஆண்டுகளுக்கு மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

ஒவ்வொரு பழங்குடியினரிடமிருந்தும் ஒரு ஸ்ரடிகெஸ் தேர்ந்தெடுப்பது என்ற கொள்கையை கண்டிப்பாக கடைபிடிப்பது சுமார் கிமு 440 வரை இருந்தது. அதற்குப் பிறகு ஒரே பழங்குடியினரிடமிருந்து இரண்டு ஸ்ரடிகெஸ் தேர்ந்தெடுக்கப்படவதும் நடந்தது. காரணம் ஏதாவது ஒரு பழங்குடியினர் பிரிவிலிருந்து ஸ்ரடிகெஸ் தேர்ந்தெடுக்கப்படாமல் விடப்பட்டிருக்கலாம், ஒருவேளை பொருத்தமான வேட்பாளர் கிடைக்காமல் போயிருக்கலாம்.[1]

ஸ்ரடிகெஸ் பதவிக்கு மதிப்பும் மரியாதையும் மிகுதியாக இருந்தது. இதற்கு தகுந்த பொறுப்புகளும் இருந்தன. இவர்கள் போர்க்களத்தில் படைகளை நடத்திச் செல்லும் தளபதிகளாக மட்டுமல்லாமல், இராணுவச் செலவை நிர்ணயிப்பவர்களாகவும், ஏதென்சுக்கு வெளி நாடுகளில் இருந்து ஒழுங்காக உணவு தானியங்கள் கிடைத்துக் கொண்டிருப்பதற்கு ஏற்பாடு செய்பவர்களாகவும் இருந்தனர். இவர்களில் பொறுப்புகள் காலம் செல்லச் செல்ல கூடிவந்தன. அரசாங்கத்தின் வரவு செலவுகள் இவர்களின் மேற்பார்வைக்கு உட்பட்டன.

கிமு 5 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், இராணுவ அதிகாரத்தோடு அரசியல் அதிகாரமும் இவர்கள் கைகளுக்கு வந்து சேர்ந்தது. பல ஸ்ரடிகெஸ்கள் தங்கள் இராணுவப் பணியுடன் அரசியல் பாத்திரத்தையும் சேர்த்துக்கொண்டனர். இவர்களில் குறிப்பிடத்தகவர்களாக தெமிஸ்ட்டோக்ளீஸ், அரிசுடடைடீசு, சிமோன், பெரிக்கிள்ஸ் ஆகியோர் இருந்தனர்; என்றாலும்கூட, அவர்களின் அதிகாரம் அவர்களின் பதவியிலிருந்தால் அல்ல, மாறாக அவர்களின் சொந்த அரசியல் செல்வாக்கிலிருந்து பெற்றனர். 5 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அரசியல் அதிகாரம் குடிமையியல் சொல்லாட்சியினருக்குச் சென்றதால், ஸ்ரடிகெஸ்கள் தங்கள் இராணுவ கடமைகளில் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டர்.[1]

ஆற்றல் மிக்கவர்களாக இருந்த போதிலும் இவர்கள் எக்லேசியா அவையின் அதிகாரத்துக்கு உட்பட்டவர்களாக இருந்தனர். அவசியம் என்னும்போது இவர்களை அவைக்கு அழைத்து விசாரிக்கவும், இவர்களின் பணிகளை ஆய்வு செய்யும் அதிகாரமும் அவைக்கு இருந்தது. அவையில் யாருக்கு எதிராக வாக்களிக்கப்பட்டால், அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு, நடுவர் மன்றத்தால் விசாரிக்கப்பட்டார். 430 இல் பெரிக்கிள்ஸ் ஸ்ரடிகெஸ் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் மேலும் அபராதமும் விதிக்கப்பட்டார். 406 இல் அர்கினுசே போரில் கடற்படைக்கு கட்டளையிட்ட எட்டு ஸ்ட்ராட்டெகாய்ஸ்களில் ஆறு பேர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டனர்.

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Rhodes, Peter J. (2015). "Strategos I. Classical Greece". Brill's New Pauly. Brill Online. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரடிகெஸ்&oldid=3419473" இலிருந்து மீள்விக்கப்பட்டது