உள்ளடக்கத்துக்குச் செல்

ஷெல்ட் சண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஷெல்ட் சண்டை
இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையின் பகுதி

பஃபல்லோ ரக நீர்நில வண்டிகளில் ஷெல்ட் பகுதியில் பயணிக்கும் கனடிய படைகள்
நாள் அக்டோபர் 2, 1944–நவம்பர் 8, 1944
இடம் வடக்கு பெல்ஜியம், தென்மேற்கு நெதர்லாந்து
நேச நாட்டு வெற்றி;
ஆண்ட்வெர்ப் துறைமுகத்தில் சரக்குக்கப்பல் போக்குவரத்து துவங்கியது
பிரிவினர்
 கனடா
 ஐக்கிய இராச்சியம்
 பெல்ஜியம்
 நெதர்லாந்து
 நோர்வே
 போலந்து
 ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
கனடா ஹாரி செரார் (1வது கனடிய ஆர்மி)
கனடா கை சிம்மண்ட்ஸ் (நடைமுறை)
நாட்சி ஜெர்மனிகஸ்டாவ்-அடால்ஃப் வான் சாங்கன்
(15வது ஆர்மி)
பலம்
தெரியவில்லை 90,000
இழப்புகள்
கனடியர்கள்: 6,367
மொத்தம்: 12,873
~10-12,000
41,043 போர்க்கைதிகள்

ஷெல்ட் சண்டை (Battle of the Scheldt) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டைத்தொடராகும். வடக்கு பெல்ஜியம் மற்றும் தென்மேற்கு நெதர்லாந்தில் நடந்த இச்சண்டைகளில் நேச நாடுகளில் ஒன்றான கனடாவின் படைகள் ஷெல்ட் ஆற்றின் முகத்துவாரத்தை நாசி ஜெர்மனியின் படைகளிடமிருந்து கைப்பற்றின.[1]

ஜூன் 1944ல் நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த மேற்கு ஐரோப்பா மீது நேச நாடுகள் படையெடுத்தன. அடுத்த சில மாதங்களில் பிரான்சு, பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து நாடுகளின் பல பகுதிகள் ஜெர்மானியர்களிடமிருந்து மீட்கப்பட்டன. மேற்குப் போர்முனையில் நேச நாட்டுப்படைகளின் விரைவான முன்னேற்றம் வேறொரு சிக்கலை உருவாக்கியது. படைகளுக்குத் தேவையான தளவாடங்களைக் குறித்த நேரத்தில் ஐரோப்பாவிற்குக் கொண்டு செல்லப் போதுமான துறைமுகங்கள் நேச நாடுகளின் கைவசம் இல்லை. செப்டம்பர் மாதம் எரிபொருள் மற்றும் பிற தளவாடஙகளின் பற்றாக்குறையால் நேச நாட்டு முன்னேற்றம் தடைபடும் நிலை உருவானது. இதனால் பெல்ஜியத்தின் முக்கிய துறைமுகமான ஆண்ட்வெர்ப்பை நேச நாட்டுப் படைகள் கைப்பற்றின. ஆண்ட்வெர்ப் துறைமுகம் ஐரோப்பியத் தளவாடப் போக்குவரத்து நெரிசலை வெகுவாகக் குறைத்துவிடுமென்பது நேச நாட்டுத் தளபதிகளின் கணக்கு. ஆனால் ஆண்ட்வெர்ப் துறைமுகம் பிரிட்டானியப் படைகளின் வசமானாலும், அது அமைந்திருந்த ஷெல்ட் ஆற்றின் முகத்துவாரம் ஜெர்மானியர் வசமிருந்த்தால், எதிர்பார்த்தபடி துறைமுகத்தைப் பயன்படுத்த முடியவில்லை.

செப்டம்பர் மாதம் மார்க்கெட் கார்டன் நடவடிக்கையில் நேச நாட்டுப்படைகள் கவனம் செலுத்திக் கொண்டிருந்த போது, ஷெல்ட் முகத்துவாரப் பகுதியில் ஜெர்மானியப் படைகள் தங்கள் நிலைகளைப் பலப்படுத்திக்கொண்டிருந்தன. மார்க்கெட் கார்டனின் தோல்வியால் ஆண்ட்வெர்ப் துறைமுகத்தின் முக்கியத்துவம் அதிகரித்தது. அக்டோபர் 2ம் தேதி கனடிய முதலாம் ஆர்மியின் தலைமையில் நேசநாட்டுப் படைகள் ஷெல்ட் முகத்துவராத்தைக் கைப்பற்றும் பணியில் இறங்கின. அடுத்த ஐந்து வாரங்களுக்கு இப்பகுதியில் கடும் சண்டை நிகழ்ந்தது. நீர்நிலத் தாக்குதல்கள், கடும் ஜெர்மானிய எதிர்ப்பு, சீரற்ற நிலப்பரப்பில் முன்னேற்றம் என பல கடினமான தடைகளை முறியடித்து நவம்பர் 8ம் தேதி ஷெல்ட் முகத்துவாரப்பகுதியை நேசநாட்டுப் படைகள் கைப்பற்றின. இத்தொடர் சண்டையில் பன்னிரெண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நேசநாட்டுப் படைவீரர்கள் மாண்டனர், காயமடைந்தனர் அல்லது கைது செய்யப்பட்டனர். இவர்களுள் பாதிக்கு மேல் கனடியர்கள். இந்த இழப்புகளால் கனடிய ராணுவத்துக்குக் கட்டாயமாக ஆட்களைச் சேர்ப்பதில் சிக்கல் உண்டானது. ஷெல்ட் பகுதி முழுவதும் கைப்பற்றப்பட்டு மூன்று வாரங்களுள் ஆண்ட்வெர்ப் துறைமுகம் நேச நாட்டு சரக்குக்கப்பல் போக்குவரத்துக்குத் திறந்துவிடப்பட்டது.

பின்புலம்

[தொகு]

1940 முதல் ஜெர்மானியப் படைகளின் ஆக்கிரமிப்பில் இருந்த மேற்கு ஐரோப்பா மீது ஜூன் 6, 1944ல் நேச நாட்டுப் படைகள் கடல் வழியாகப் படையெடுத்தன. ஜூன் - செப்டம்பர் 1944ல் நடந்த சண்டைகளில் பிரான்சு, பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளின் பல பகுதிகள் ஜெர்மானியர்களிடமிருந்து மீட்கப்பட்டன. மேற்குப் போர்முனையில் சண்டையில் ஈடுபட்டிருந்த நேச நாட்டுப்படைகளுக்குத் தேவையான எரிபொருளும் தளவாடங்களும், பிரான்சின் துறைமுகங்கள் வழியாக இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் படைகளின் வேகமான முன்னேற்றத்தாலும், எதிர்பாராமல் விரைவில் கிடைத்த வெற்றிகளாலும், போதுமான தளவாடங்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் ஏற்கனவே கைபற்றிய துறைமுகங்கள் போக வேறு சில துறைமுகங்களையும் கைப்பற்றும் அவசியம் நேச நாட்டுப் படைகளுக்கு ஏற்பட்டது.

ஷெல்ட் சண்டை முன்னணி நிலவரங்கள்

மேற்கு ஐரோப்பாவின் அட்லாண்டிக் கடற்கரையில் அமைந்துள்ள பெருந்துறை முகங்களில் ஒன்று ஆண்ட்வெர்ப். பெல்ஜியம் நாட்டில் அமைந்திருந்த இந்த ஆழ்கடல் துறைமுகத்தை செப்டம்பர் 4ம் தேதி பிரிட்டானியப் படைகள் கைப்பற்றின. துறைமுகமும் ஆண்ட்வெர்ப் நகரமும் நேசநாட்டுப் படைகள் வசமானாலும், ஆண்ட்வெர்ப் அமைந்திருந்த ஷெல்ட் ஆற்றின் முகத்துவாரப் பகுதி ஜெர்மானியர் வசமிருந்தது. இதனால், துறைமுகத்தை உடனடியாக சரக்குப் போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியவில்லை. ஜெர்மனி மீதான போர் நீண்ட நாட்கள் தொடருமெனில் ஆண்ட்வெர்ப்பைச் சுற்றியுள்ள ஜெர்மானியப் படைகளை விரட்டி துறைமுகத்தை மீண்டும் திறப்பது நேச நாட்டுப் படைகளுக்கு அவசியமென்பதை இரு தரப்பும் உணர்ந்திருந்தன. ஆனால் செப்டம்பர் மாதம் முழுவதும் ஷெல்ட் முகத்துவாரத்தைக் கைப்பற்ற நேச நாடுகள் முயலவில்லை. மாறாக மார்க்கெட் கார்டன் நடவடிக்கை மூலம் ஜெர்மனியை விரைவில் தோற்கடிக்க முயன்றன. மார்க்கெட் கார்டனின் தோல்வியால், போர் 1944 இறுதிக்குள் முடிவுக்கு வராது என்பது தெளிவானது; ஆண்ட்வெர்ப்பின் முக்கியத்துவம் அதிகமானது. செப்டம்பர் மாதம் முழுவதும் ஷெல்ட் பகுதியின் ஜெர்மானியப் படை நிலைகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

ஷெல்ட் பகுதியின் புவி அமைப்பு தாக்கும் தரப்புக்குப் பாதகமாகவும், பாதுகாவலர்களுக்குச் சாதகமாகவும் அமைந்திருந்தது. ஆண்ட்வெர்ப் துறைமுகம் அட்லாண்டிக் கடலோரத்திலிருந்து சற்று தொலைவில், ஷெல்ட் முகத்துவாரத்தின் உட்பகுதியில் அமைந்துள்ளது. அதனை அடைய இரு கடல்வழிகளில் ஒன்றை கப்பல்கள் பயன்படுத்த வேண்டும். வடக்கு கடல்வழி, வால்கெரென் தீவு மற்றும் தெற்கு பெவ்லாந்து தீபகற்பத்தின் கரையோரமாக அமைந்துள்ளது. இவ்விரண்டும் ஜெர்மானியர் கைவசமிருந்தன. இரண்டாவது வழியான லியோபோல்டு கால்வாய்க்கு வடக்கிலிருந்த பிரெஸ்கென்ஸ் பகுதியும் ஜெர்மானியர் வசமிருந்தது. ஆண்ட்வெர்ப் துறைமுகத்தைக் கப்பல் போக்குவரத்துக்குத் திறந்த விட வேண்டுமென்றால், இப்பகுதிகளை நேசநாட்டுப் படைகள் கைப்பற்ற வேண்டும். இவற்றிலிருந்து ஜெர்மானியப்படைகளை விரட்டும் பொறுப்பு கனடிய முதலாம் ஆர்மிக்கு வழங்கப்பட்டது. இப்படைப்பிரிவில் 2வது கனடிய கோர், போலந்திய 1வது கவச டிவிசன், பிரிட்டானிய 1வது கொர், மற்றும் 49வது, 52வது பிரிட்டானிய டிவிசன்கள் இடம் பெற்றிருந்தன. ஜெர்மானியத் தரப்பில், ஜெனரல் கஸ்டாவ் அடால்ஃப்-வான் சாங்கன் தலைமையிலான 15வது ஆர்மிக்கு ஷெல்ட்டைப் பாதுகாக்கும் பொறுப்பு தரப்பட்டிருந்தது.

சண்டையின் போக்கு

[தொகு]
ஷெல்ட் சண்டை வரைபடம்

அக்டோபர் 2 முதல் நவம்பர் 8 வரை நீடித்த ஷெல்ட் சண்டை நான்கு கட்டங்களாக நடைபெற்றது:

  • ஆண்ட்வெர்ப் துறைமுகத்துக்கு வடக்கிலுள்ள பகுதிகளைக் கைப்பற்றி தெற்கு பேவ்லாந்துக்குச் செல்லும் வழிகளைக் கைப்பற்றுதல்.
  • பிரெஸ்கென்ஸ் இடைப்பகுதியைக் (Breskens pocket) கைப்பற்றுதல் (சுவிட்ச்பாக் நடவடிக்கை)
  • தெற்கு பெவ்லாந்தைக் கைப்பற்றுதல் (வைட்டாலிடி நடவடிக்கை)
  • வால்கெரென் தீவைக் கைப்பற்றுதல் (இன்ஃபாச்சுவேட் நடவடிக்கை)

வடக்கு நோக்கி முன்னேற்றம்

[தொகு]
ஷெல்ட் பகுதியில் நேசநாட்டு நீர்நில ஊர்திகள்

ஆண்ட்வெர்ப்புக்கு வடக்கில் உள்ள பகுதிகளைக் கைப்பற்றும் பணி செப்டம்பர் மாதமே துவங்கி விட்டாலும், கடினமான நிலப்பரப்பாலும், ஜெர்மானிய எதிர்ப்பாலும் எந்த முன்னேற்றமுமின்றி முடங்கிப் போனது. அக்டோபர் 2ம் தேதி மீண்டும் கனடியப் படைகள் வடக்கில் மெதுவாக முன்னேறத் தொடங்கின. இப்பகுதியின் நிலப்பரப்பில் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி சேறு கலந்திருந்தது முன்னேற்றத்தைத் தாமதப் படுத்தியது. பொறிகள், கண்ணிவெடிகள் போன்ற தடைகளை மீறி பெருத்த இழப்புகளூடே மெதுவாக முன்னேறி அக்டோபர் 16ம் தேதி வூன்ஸ்கிராஃப்ட் பகுதியைக் கனடியப் படைகள் கைப்பற்றின. இதனால் தெற்கு பெவ்லாந்து தீபகற்பத்துக்குத் தெற்கிலிருந்து செல்லும் பாதை நேசநாட்டுப் படை நகர்த்துதலுக்குத் திறக்கப்பட்டது. இக்கட்டத்தில் ஃபீல்டு மார்ஷல் பெர்னார்ட் மோண்ட்கோமரியின் ஆணையின் பேரில், பிரிட்டானிய 21வது ஆர்மி குரூப் ஷெல்ட்டுக்கான தாக்குதலில் இணைந்தது. அக்டோபர் 24ம் தேதி தெற்கு பெவ்லாந்து தீபகற்பத்தின் கழுத்துப் பகுதியைத் தாண்டி நேசநாட்டுப் படைகள் முன்னேறி விட்டன.

சுவிட்ச்பாக் நடவடிக்கை

[தொகு]

ஆண்ட்வெர்ப்பிலிருந்து வடக்கு நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த அதே சமயம், பிரெஸ்கென்ஸ் இடைப்பகுதியைக் கைப்பற்றவும் கனடியப் படைகள் முயன்றன. ஆண்ட்வெர்ப்புக்கு மேற்கே, ஷெல்ட் ஆற்றின் தென் கரையில் ஜெர்மானியர் கைவசம் இருந்த ஒரே பகுதி பிரெஸ்கென்ஸ் இடைப்பகுதி. இதைக் கட்டுப்படுத்துவோர் ஆண்ட்வெர்ப்புக்கு வரும் இரு கடல்வழிகளில் ஒன்றான லியோபோல்டு கால்வாயையும் கட்டுப்படுத்தலாம். இது ஜெர்மானியர் வசமிருக்கும் வரை லியோபோல்டு கால்வாய் வழியாகக் கப்பல்கள் செல்ல முடியாது. இவ்விடைப்பகுதியில் பலமான ஜெர்மானிய அரண்நிலைகள் அமைந்திருந்தன. இதனைக் கைப்பற்ற கனடியப்படைகள் முன் செய்திருந்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்திருந்தன. அக்டோபர் 6ம் தேதி தொடங்கிய புதுமுயற்சிக்கு சுவிட்ச்பாக் நடவடிக்கை என்று குறிப்பெயரிடப்பட்டிருந்து. ஐந்து வாரங்கள் கடும் சண்டையின் பின் கனடிய 3வது டிவிசன், பிரெஸ்கென்ஸ் இடைப்பகுதியை ஜெர்மானியரிடமிருந்து முழுவதும் மீட்டது. இத்துடன் ஷெல்ட் ஆற்றின் தென்கரை முழுவதும் நேசநாடுகள் வசம் வந்தது.

வைட்டாலிட்டி நடவடிக்கை

[தொகு]
ரோட்டோரம் சிக்கிக் கொண்ட ஒரு பீரங்கி இழு ஊர்தி (தெற்கு பெவ்லாந்து, அக்டோபர் 26)

அக்டோபர் 24ல் தெற்கு பெவ்லாந்து தீபகற்பத்தைக் கைப்பற்றும் முயற்சி ஆரம்பமானது. தீபகற்பத்தின் தெற்கிலிருந்து கனடிய 2வது காலாட்படை டிவிசன் தாக்கத் தொடங்கியது. சேற்று நிலங்கள், கன்னிவெடிகள், கடும் ஜெர்மானிய எதிர்ப்பு போன்ற தடைகளை முறியடித்து மெதுவாக முன்னேறியது. ஜெர்மானியப் பாதுகாவல் படைகள் கனடியர்களுடன் போரிட்டுக் கொண்டிருக்கையில் அவற்றின் பக்கவாட்டில், மேற்கிலிருந்து பிரிட்டானிய 52வது டிவிசன் நீர்நிலத் தாக்குதல் நடத்தியது. இந்த இருமுனைத் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ஜெர்மானியர் சரணடைந்தனர். தெற்கு பெவ்லாந்து நேசநாடுகள் வசமானது.

வால்கெரென் தீவு

[தொகு]
அக்டோபர் 31ல் வால்கெரெனின் படைநிலைகள்

ஷெல்ட் சண்டையின் இறுதி கட்டத்தில் நேசநாட்டுப் படைகள் வால்கெரென் தீவைத் தாக்கின. இத்தாக்குதலுக்கு வைட்டாலிட்டி நடவடிக்கை என்று குறிப்பெயரிடப்பட்டிருந்தது. அப்பகுதியில் மிகவும் பலமான ஜெர்மானியப் படைநிலைகள் இருந்தது இத்தீவில்தான். அதன் மேற்கு மற்றும் தெற்கு கடற்கரைகளில் நிறைய கடற்கரை பீரங்கிக் குழுமங்கள் நிறுவப்பட்டிருந்தன. நீர்நிலத் தாக்குதலிலிருந்து தீவினைப் பாதுகாக்க அதன் கடற்கரையெங்கும் அரண்நிலைகளை ஜெர்மானியர் உருவாக்கியிருந்தனர். இவற்றையும் மீறி தீவில் நேசநாட்டுப் படைகள் தரையிறங்கி விட்டால், அவர்களைத் தாமதப்படுத்த தீவின் முக்கிய நகரான விளிசிங்கெனைச் சுற்றி ஒரு பலமான அரண்நிலை அமைக்கப்பட்டிருந்தது. நிலம் வழியாக தெற்கு பெவ்லாந்திலிருந்து வால்கெரெனுக்குச் செல்லும் ஒரே வழியும், குறுகலாக இருந்ததது.

வான்வழி குண்டுவீச்சில் தகர்க்கப்படும் கடலணை

வால்கரெனின் பாதுகாவல் நிலைகளைக் குலைக்க பிரிட்டானிய குண்டுவீசி விமானங்கள் வால்கெரென் தீவின் கடலணை (dyke) மீது குண்டுவீசின. அக்டோபர் 3ம் தேதி வெஸ்ட்ஃபால்கே, 7ம் தேதி விளிசிங்கென், 11ம் தேதி வியர் ஆகிய இடங்களிலுள்ள கடலணைகள் தகர்க்கப்பட்டன. தீவினுள் கடல்நீர் புகுந்து வெள்ளக்காடாகியது; பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தீவின் மையப்பகுதி வெள்ளக்காடாகியதால், ஜெர்மானியப் பாதுகாவல் படைகள் தங்கள் அரண்நிலைகளை விட்டு வெளியேறி உயரமான நிலப்பரப்பிற்குப் போக நேர்ந்தது. மேலும் நீர்மட்டம் உயர்ந்ததால் நேசநாட்டு நீர்நிலத் தாக்குதல் ஊர்திகள் எளிதில் வால்கெரெனுக்குள் நுழைந்தன. அடுத்து ஒரே நேரத்தில் வால்கெரென் தீவை மூன்று திசைகளிலிருந்து நேசநாட்டுப் படைகள் தாக்கின - கிழக்கே தெற்கு பெவ்லாந்து சாலை வழியாக, மேற்கே கடல்வழியாக, தெற்கே ஷெல்ட் ஆற்றின் வழியாக.

வால்கெரென் தீவில் தரையிறங்கிய நீர்நில கவசவண்டிகள்

அக்டோபர் 31ம் தேதி தெற்கு பெவ்லாந்து சாலை வழியாக கனடிய 2வது காலாட்படை டிவிசனும், பிரிட்டானிய 52வது டிவிசனும் முன்னேறின. நவம்பர் 1ம் தேதி ஷெல்ட் ஆற்றின் வழியாக நீர்நிலத்தாக்குதல்கள் தொடங்கின. ஒரு வாரகால கடும் சண்டைக்குப்பின் விளிசிங்கென் நகரத்தை நேசநாட்டுப் படைகள் கைப்பற்றின. நவம்பர் 6ம் தேதி வால்கெரெனின் தலைநகர் மிடில்பெர்க் நேசநாடுகள் வசமானது. அடுத்த இரு நாட்களுள் எஞ்சியிருந்த ஜெர்மானியப் பாதுகாவல் நிலைகள் கைப்பற்றப்பட்டன. நவம்பர் 8ம் தேதி ஷெல்ட் முகத்துவாரப்பகுதி முழுவதும் நேசநாடுகள் கட்டுப்பாட்டில் வந்தது. அடுத்த மூன்று வாரங்களுக்கு அப்பகுதியில் ஜெர்மானியர்கள் நிறுவியிருந்த கடல் கண்ணிவெடிகளை அகற்றும் பணி நடைபெற்றது. நவம்பர் 28ம் தேதி ஆண்ட்வெர்ப் துறைமுகத்தில் சரக்குக்கப்பல் போக்குவரத்து துவங்கியது.

தாக்கம்

[தொகு]
நவம்பர் 30, 1944ல் ஆண்ட்வெர்ப் துறைமுகத்தில் மீண்டும் சரக்குப் போக்குவரத்து துவங்கியது. எஸ். எஸ். ஃபோர்ட் கட்டாரக்கி கப்பலிருந்து எண்ணெய்ப் பீப்பாய்கள் இறக்கப் படுகின்றன

ஐந்து வாரங்கள் நடைபெற்ற ஷெல்ட் சண்டையில் நேச நாடுகள் தரப்பில் 12,873 இழப்புகள் ஏற்பட்டன (மாண்டவர், காயமடைந்தவர் மற்றும் காணாமல் போனவர்). இவர்களுள் பாதிக்கு மேல் கனடியர்கள். ஏனைய நேச நாட்டுப் படைகளோடு ஒப்பிடுகையில் குறைவான ஆள்பலமே கொண்டிருந்த கனடிய ராணுவத்தில் ஏற்கனவே மேற்குப் போர்முனையில் ஏற்பட்டிருந்த இழப்புகளால் ஆள் பற்றாக்குறை உருவாகியிருந்தது. ஷெல்ட் சண்டையில் இழப்புகளால் இது மேலும் தீவிரமடைந்தது. பற்றாக்குறையைச் சரிக்கட்ட கனடிய அரசு ராணுவத்துக்கு கட்டாய ஆள் சேர்ப்பு முறையை அறிமுகப்படுத்தியது.

சண்டை முடிந்து மூன்று வாரங்களில் ஆண்ட்வெர்ப் துறைமுகம் சரக்குப் போகுவரத்துக்குத் திறந்து விடப்பட்டது. மேற்கு போர்முனையிலிருந்த நேசநாட்டுப் படைகளுக்கு மீண்டும் தளவாடங்கள் தடையின்றி கிடைக்கத் தொடங்கின. தளவாடப் பற்றாக்குறையால் தொய்வடைந்திருந்த நேச நாட்டு முன்னேற்றம் புத்துயிர் பெற்றது. மேற்கில் நேசநாட்டு மேல்நிலை உத்தியின் வெற்றிக்கு ஆண்ட்வெர்ப் போன்ற ஒரு ஆழ்கடல் துறைமுகத்தின் இன்றியமையாமையை உணர்ந்த ஜெர்மானிய தளபதிகள், அங்கு சரக்குப் போக்குவரத்தை முடக்க பெரும் முயற்சிகள் மேற்கொண்டனர். 1944ன் இறுதியிலும், 1945ன் துவக்கத்திலும் நூற்றுக்கணக்கான வி-2 வகை ஏவுகணைகள் ஆண்ட்வெர்ப் மீது ஏவப்பட்டன. அடுத்து நிகழ்ந்த பல்ஜ் சண்டையில் ஆண்ட்வெர்ப் நகரையும் துறைமுகத்தையும் கைப்பற்றுவது ஜெர்மானியப் படைகளின் முதன்மை இலக்காக இருந்தது.

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. The Battle of the Scheldt பரணிடப்பட்டது 2009-02-11 at the வந்தவழி இயந்திரம். Veterans Affairs Canada. Retrieved on: August 30, 2008.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷெல்ட்_சண்டை&oldid=3720456" இலிருந்து மீள்விக்கப்பட்டது