விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா தரக் கண்காணிப்பு
முந்திய ஆண்டு தொகுப்புகள் |
60ஆம் இடம் முக்கியமா அல்லது ஆழம் முக்கியமா?
[தொகு]வணக்கம். அன்ரன் நாம் 60ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டதுக்கு வருத்தம் தெரிவித்திருந்தார். நாம் கவனிக்க வேண்டியது கட்டுரை எண்ணிக்கை அளவை விட ஆழத்தில் மலையாள விக்கி மூன்றாம் இடத்தில் உள்ளது என்பதை தான். நான் வந்த புதிதில் தமிழ் விக்கி ஆழ அளவீடு ஒரு பின்னத்தில் இருந்ததாக நினைவு. தற்போது 29 உள்ளது. போன வார கூட்டுமுயற்சியிலும் யாரும் பங்களித்ததாக தெரியவில்லை. கட்டுரை எண்ணிக்கை கூட்டுவதை தவிர ஆழத்தையும் அதிகப்படுத்தும் நிலைமையில் நாம் உள்ளோம்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:19, 10 செப்டெம்பர் 2012 (UTC)
- ஆம், நல்ல கேள்வி தென்காசி சுப்பிரமணியன். கட்டுரை எண்ணிக்கை என்பது ஒரு அளவை மட்டுமே. ஏன் ஆழம் என இப்போது கணிக்கும் சுட்டெண்ணும் ஒரு அளவைதான். மெய்யான வளர்ச்சி என்பது விக்கிப் பங்களிப்பாளர்களின் ஊக்கம், கூட்டாக்கச் சூழல், கட்டுரைகளின் தரம் எனப் பல கோணங்களில் இருக்க வேண்டும்.
- 2005-ஆம் ஆண்டு என நினைக்கிறேன். கன்னட விக்கி விரைவாக வளர்ந்து கொண்டிருந்தது. அப்போது தமிழ் விக்கியில் இருந்த பயனர்கள் எண்ணிக்கையும் குறைவு. ஒரு போட்டியுணர்வு இருந்தாலும் வெறும் கட்டுரை எண்ணிக்கையில் கவனம் செலுத்தாமல் அப்போதைய முன்னுரிமைகளான இடைமுகம்-மென்பொருள் வழு நீக்கல், தமிழாக்கம், அடுத்து புதுப்பயனர்களைக் கவர்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டோம். கன்னட விக்கியில் என்ன சிக்கல் என உறுதியாகத் தெரியாது, ஆனால் அங்கு பெரும் தேக்கம் ஏற்பட்டுவிட்டது, மீள முடியாமல் உள்ளனர். அடுத்து இந்தி விக்கியும் தெலுங்கு விக்கியும் கட்டுரை எண்ணிக்கையைக் குறிவைத்துச் செயல்பட்டனர். மராட்டி விக்கியில் ஒரு சொல் கட்டுரைகளை இட்டு வைத்தனர். கட்டுரை நீளம் குறைவானதால் ஆங்கில உள்ளடக்கத்தைப் போட்டு வைத்தார்கள். விளைவு, குப்பை களையப்படாமலேயே உள்ளது, தேங்கியும் நிற்கிறது. தெலுங்கில் மாற்றம் கொணடு வந்து கொணடிருக்கிறார்கள். வங்க விக்கியில் அவர்கள் விருப்பத்துக்கு மாறாக கூகுள் கட்டுரைகள் நிறைய ஏற்றப்பட்டன, இதனால் எண்ணிக்கை கூடினாலும் குப்பை பெருகியது. அவர்கள் தக்க நேரத்தில் முடிவெடுத்து களையெடுத்தார்கள். இதற்கிடையில் மலையாள விக்கியும் தமிழ் விக்கியும் தான் தரத்திலும், பங்களிப்பிலும் கவனம் செலுத்தின. இன்று தலை நிமிர்ந்து எடுத்துக்காட்டு விக்கிக்களாக உள்ளோம்.
- இன்னும் ஆற்ற வேண்டிய பணிகள் நிறைய இருந்தாலும் விரைவு பொருட்டு தரத்தையோ அடிப்படைக் கோட்பாடுகளையோ விட்டுவிடாமல் வளரும் வழிகளை ஆராய வேண்டும். (உடைந்த கண்ணாடிக் கோட்பாட்டின்படி தரம் குறையக் குறைய மேலும் குப்பைதான் சேரும்.) -- சுந்தர் \பேச்சு 16:21, 11 செப்டெம்பர் 2012 (UTC)
விக்கி தரவுகள் கண்காணிப்பு
[தொகு]சுப்பிரமணி, நாம் கட்டுரை எண்ணிக்கை அடிப்படையில், அதுவும் உலகளவிலோ இந்திய அளவிலோ எத்தனையாவது இடத்தில் இருக்கிறோம் என்பது ஒரு பொருட்டே அன்று. இது போன்ற ஒப்பீடுகளை அவ்வப்போது பார்த்துக் கொள்ளலாமே தவிர, ஏற்ற இறக்கங்களைக் கண்டு வருந்தவோ விட்ட இடத்தைப் பிடிக்க முனையவோ தேவை இல்லை. நாம் ஓடுவது ஒரு பந்தயம் என்பதை விட நமது தேவைக்காக ஓடுகிறோம் என்பதே முக்கியம். ஆங்கில விக்கிப்பீடியாவை அனைவரும் நாடுவது போன்று தமிழ் மக்கள் அனைவரும் திரும்பத் திரும்ப வந்து படித்துப் பயன்பெறக்கூடிய அளவுக்குத் தரமாகவும் அனைத்துத் தலைப்புகளிலும் கட்டுரைகள் ஆக்கும் வரை நாம் எத்தனை இலட்சம் கட்டுரைகள் கொண்டிருந்தாலும் எத்தனையாவது இடத்தில் இருந்தாலும் பயன் இல்லை. எனவே, இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று வரையறுத்து, அதை நோக்கி சீராகவும் தொடர்ந்தும் மிகவும் காலம் தாழ்த்தி விடாலும் ஓட வேண்டும் :)
ஆழம் என்பது விக்கிப்பீடியாக்களின் தரம் / தொகுப்பு நடவடிக்கைகளை அறிந்து கொள்ள உதவும் ஒரு குத்து மதிப்பான அளவையே. அதுவும் ஒரு இலட்சத்துக்கும் குறைவான கட்டுரைகளைக் கொண்ட விக்கிப்பீடியாக்களில் 300க்கு மேற்பட்ட ஆழம் இருந்தால் செல்லுபடியாகாது என்பதனைக் காணலாம். இதன் காரணமாகவே வங்காள விக்கியின் ஆழம் வெற்றிடமாக விடப்பட்டுள்ளது. இதே அடிப்படையில் 26,000+ கட்டுரைகளை மட்டுமே கொண்ட மலையாள விக்கிப்பீடியாவின் ஆழம் 285 என்பது ஏறக்குறைய செல்லாத ஒன்று தான். எனவே, மலையாள விக்கி ஒட்டு மொத்த விக்கிப்பீடியாக்களிலும் ஆழத்தின் அடிப்படையில் மூன்றாவது இடத்தில் உள்ளது என்ற தரவும் செல்லாது.
http://meta.wikimedia.org/wiki/Wikipedia_article_depth கூறுவது;
The formula assumes that a relatively high number of page edits and the presence of support pages means articles have been updated. And the latter support pages are assumed to be a more important factor.
In the list of Wikipedias, depth is currently defined as:
The depth can be simplified to the equivalent formula below:
NonArticles are talk pages, redirects and user pages. Total is simply NonArticles + Articles.
Article depth is a rough indicator of a Wikipedia’s quality, showing how frequently its articles are updated. It does not refer to academic quality, which cannot be computed, but to Wikipedian quality, i.e. the depth of collaborativeness—a descriptor that is highly relevant for a Wikipedia.
மேற்கண்ட வரையறையின் படி அதிகப்படியான Non-articles எனப்படும் வழிமாற்றுகள், பேச்சுப் பக்கங்கள் உடைய விக்கிப்பீடியாக்களின் ஆழம் கூடுதலாக இருக்கும். மலையாள, வங்காள விக்கிகளைக் கண்டால், அவற்றின் கட்டுரைப் பக்கங்களை விட மொத்த பக்கங்களின் எண்ணிக்கை அண்ணளவாக முறையே ஆறு மடங்கு, பத்து மடங்கு உள்ளது. ஒரு கட்டுரைக்கு ஒரு பேச்சுப் பக்கம் என்று வைத்தால் கூட இது மிக அதிகமானது. எனக்குத் தெரிந்த அளவில் மலையாள விக்கியில் ஆங்கில வழிமாற்றுகள் உண்டு. இதே போல் இன்னும் பல வகைகளில் கூடுதல் பக்கங்களை உருவாக்கி இருக்கலாம். தமிழ் விக்கியில் இவை குறித்த தெளிவான கொள்கைகள் உள்ளதால், நாம் முதலில் இருந்தே தேவையற்ற பக்கங்களை உருவாக்கவில்லை. எனவே, இந்த வகையில் தமிழ் விக்கியின் ஆழம் குறைந்திருந்தாலும் அது தரத்தைப் பாதிக்கும் ஒன்றாக இல்லை.
தொகுப்புகளை மட்டும் பார்த்தால் கூட, நம்மில் பலரும் முழுமையான கட்டுரைகளை ஒரே மூச்சில் ஏற்றும் வழக்கம் கொண்டுள்ளோம் (எ.கா - மயூரநாதன், நிரோசன், புண்ணியாமீன், தானியங்கிக் கட்டுரைகள், கூகுள் கட்டுரைகள்). தானியங்கிகளைக் கூட கண்மூடித்தனமாக இயக்குவதில்லை. இயன்ற அளவில் ஒரே தொகுப்பில் பல திருத்தங்களைச் செய்யவே முனைகிறோம். இதன் காரணமாகவும் தொகுப்புகள் எண்ணிக்கை குறைந்து ஆழம் குறைவாக வரும்.
10 ஆயிரத்துக்கும் மேல் ஆனால் ஒரு இலட்சத்துக்கும் குறைவாக உள்ள விக்கிகளின் அட்டவணையைப் பார்க்கும் போது, தமிழ் விக்கிப்பீடியாவின் நிலை கீழ்வருமாறு:
- கட்டுரை எண்ணிக்கை - 19ஆவது இடம்
- நிருவாகிகள் எண்ணிக்கை - இரண்டாவது இடம் ( கூடுதல் நிருவாகிகள் -> கூடுதல் பொறுப்புப் பகிர்வு - > கூடுதல் துப்புரவு -> கூடுதல் தரம் )
- பதிவு செய்த பயனர் எண்ணிக்கை - 12வது இடம் ( பயனர் வரத்து, பொதுப் பயன்பாட்டைக் குறிக்கலாம்)
- தொகுப்பில் ஈடுபடும் பங்களிப்பாளர்கள் - ஏழாவது இடம்
- படிமங்கள் எண்ணிக்கை - ஏழாவது இடம்
- ஆழம் - நான்கு விக்கிப்பீடியாக்கள் மட்டுமே நம்மை விடக் கூடுதலாக கட்டுரைகள் வைத்திருக்கும் அதே வேளையில் கூடுதல் ஆழத்துடனும் திகழ்கின்றன. அவை தாய், கிரேக்கம், எளிய ஆங்கிலம், சியார்ச்சிய
விக்கிப்பீடியாக்கள். எளிய ஆங்கிலத்தின் நிலைக்கு விளக்கமே தேவை இல்லை. மற்றவை யாவும் பெரும்பான்மையாக அறிவுப் புலங்களில் பயன்படக்கூடிய ஒரு நாட்டின் முதன்மை மொழிகள். தமிழ் மொழி எதிர்கொள்ளும் சிக்கல்களை நோக்கும் போது, நாம் கண்டுள்ள முன்னேற்றம் புரிந்து கொள்ளத்தக்கதே. (கட்டுரை எண்ணிக்கை குறைவாக உள்ள விக்கிகளின் மிகை ஆழம் என்பது மேலே விளக்கியபடி உண்மை நிலவரத்தைச் சுட்டாமல் இருக்கலாம். )
மலையாள விக்கி எங்கு முந்துகிறது என்றால், நம்மை விட சரி பாதி மக்கள் தொகை உள்ள மக்களாகிய அவர்கள் கிட்டதட்ட நம்மை ஒத்த அளவு புகுபதிகை செய்த பயனர்களைக் கொண்டுள்ளார்கள். நம்மை விட கூடுதலாக ஒவ்வொரு மாதமும் பங்களிக்கும் பயனர்களைக் கொண்டுள்ளார்கள். நம்மை ஒத்த அளவு மிக முனைப்பான பங்களிப்பாளர்களைக் கொண்டுள்ளார்கள். இது அவர்களின் இரட்டிப்பு வீச்சைக் காட்டுகிறது. நம்மை விட மிகத் தெளிவாகத் திட்டமிட்டு, இணைந்து செயற்பட்டு, பல முன்னோடித் திட்டங்களைச் செயற்படுத்துகிறார்கள். ஆண்டு தோறும் நடத்தும் பங்களிப்பாளர் ஒன்று கூடல்கள், அரசு மூலம் பள்ளிகளில் அறிமுகமாக இருத்தல், விக்கிப்பீடியா தொடர்பான குறுந்தட்டுகளை வெளியிடல், அது தொடர்பான மென்பொருள்களை உருவாக்குதல் என்று இவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த வகையில் தான் நாம் மலையாள விக்கியை ஒப்பிட்டுப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். (அவர்களும் பல வகைகளில் நம்மை ஒப்பு நோக்கி கற்று வருகிறார்கள் என்பதும் உண்மை : ) )
கடந்த சில மாதங்களாக வெளியிடப்பட்டு வரும் விக்கி தரவுகள் முன்னுக்குப் பின் முரணாகவோ சரியான வகையில் பதிவாகாததாகவோ தோன்றுகிறது. எனவே, இவற்றை ஒரு குறிப்புக்குப் பார்த்து விட்டு நாம் வழமையான பணிகளை இன்னும் முனைந்து செய்வதே சரியாக இருக்கும். வெள்ளத்தனைய மலர் நீட்டம் என்பது போல் தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியும் தரமும் இருக்கும். எனவே, இது தொடர்பாக நமது கவனத்தைச் செலுத்துவோம். மற்றவை தாமாக கை கூடும்--இரவி (பேச்சு) 20:41, 11 செப்டெம்பர் 2012 (UTC) விருப்பம்--மணியன் (பேச்சு) 01:29, 12 செப்டெம்பர் 2012 (UTC) விருப்பம் -- சுந்தர் \பேச்சு 03:03, 12 செப்டெம்பர் 2012 (UTC) விருப்பம்-- மயூரநாதன் (பேச்சு) 03:35, 21 செப்டெம்பர் 2012 (UTC) விருப்பம் --செல்வா (பேச்சு) 03:49, 9 சனவரி 2013 (UTC)
கட்டுரையளவு
[தொகு]- ஒரு கட்டுரை சிறப்பாக இருக்க குறைந்தது எத்தனை எண்ணுண்மிகள்(bytes)இருக்க வேண்டும்?வேறு பிற அளவுகோல்கள் என்னென்ன?அதன் அடிப்படையில் வேகமாகவும், தரமானதாவும் கட்டுரைகளை உருவாக்கும் நோக்கத்துடன் கேட்கிறேன். மேலும்,அவரவர் உருவாக்கியக் கட்டுரைகளை, இந்த அளவுகோல்களைக் கொண்டு மறுசீரமைப்பும் செய்யலாம்.--த♥ உழவன் +உரை.. 04:47, 12 செப்டெம்பர் 2012 (UTC)
இரவியின் நீண்டதொரு விளக்கம் விக்கிப்பீடியாக்களின் இன்றைய நிலையைத் தெளிவுபடுத்தியுள்ளது. எண்ணுண்மி என்று சரியாக மாற்றியதற்கும் பயன்படுத்தியதற்கும் நன்றி User:தகவலுழவன்--மதனாகரன் (பேச்சு) 11:12, 12 செப்டெம்பர் 2012 (UTC)
- தகவலுழவன், என் கருத்தில் இரண்டாயிரம் எண்ணுண்மிகளாவது இருத்தல் நல்லது. தலைப்பின் வரையறையை முதல் வரியில் தந்து ஒரு மூன்று வரிகளாவது தலைப்பைப் பற்றி எழுதியிருக்க வேண்டும் (குறைந்தது). இயன்றவரை தலைப்பைப் பற்றி ஒரு பத்து வரிகளிலாவது விளக்கியிருந்தால் நல்லது. நபர் சார்ந்த கட்டுரையானால் ஒரு வாழ்க்கைச் சுருக்கத்துடன் அந்த நபர் எதற்காகப் பெயர் பெற்றவர் என்பதைச் சான்றுடன் விளக்கியிருக்க வேண்டும். அறிவியற் கட்டுரையெனில் விளைவையோ தோற்றப்பாட்டையோ பற்றிய வரையறை, கண்டுபிடிப்பாளர், அதன் காரணத்தைப் பற்றிய எளிய விளக்கம், பயன்கள் போன்றவை இருக்குமாறு முயல வேண்டும். இதேபோல துறைவாரியாகக் குறைந்தபட்ச தேவைகளை நாமே வரையறுத்துக் கொண்டு செயல்படலாம். -- சுந்தர் \பேச்சு 12:42, 12 செப்டெம்பர் 2012 (UTC)
ஆகா, இவ்வுரையாடல் இவ்வளவு நீளும் என்று எதிர்பார்க்கவில்லை. :)-
இருந்தாலும் இரவியின் விளக்கத்தின் கூர்மை எனக்கு புடிச்சிருக்குது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:28, 12 செப்டெம்பர் 2012 (UTC)
- இரவியின் நுட்பமான கண்ணோட்டக் குறிப்புகள் எனது சிந்தனையை அகலமாக்கியது. சுந்தர்! இனி நீங்கள் கூறிய அளவுகோல்களைக் கருத்தில் வைத்து, புதிய கட்டுரைகளை உருவாக்குவேன்.மதனா!
உங்களின் விக்சனரி பயனர் பக்கத்தை தயவு செய்து மாற்றுங்களேன். சொல்லாக்கத்தில் ஆர்வம் இருந்தும், அப்பக்கத்திலுள்ள,
//விக்சனரியில் பங்களிப்பதிலிருந்து விலகிக் கொள்கிறேன்!//உங்களின் குறிப்புகள் நெருடலாக உள்ளது. இது எனது வேண்டுகோள்.அக்குறிப்புகளை நீக்கி, விக்சனரியில் பங்களிக்க வந்தமைக்கு நன்றி.மதனா!--த♥ உழவன் +உரை.. 04:38, 21 செப்டெம்பர் 2012 (UTC)- தென்காசியாரே! உங்களால் தான் இரவியின் மேலாண்மையை நானும் சிறது கற்றுக் கொண்டேன். நன்றி.மீண்டும் சந்திப்போம்.வணக்கம்.--த♥ உழவன் +உரை.. 05:57, 13 செப்டெம்பர் 2012 (UTC)
ஆழம், கட்டுரை எண்ணிக்கை
[தொகு]சுந்தரும், இரவியும் மிகவும் தெளிவாக ஆழம், கட்டுரை எண்ணிக்கை என்பன தொடர்பான விளக்கங்களை முன்வைத்துள்ளனர். இவற்றுக்கும் மேல் விளக்கங்கள் தேவைப்படா. எனினும் என்னுடைய சில கருத்துக்களையும் முன்வைக்கலாம் என எண்ணுகிறேன். பொதுவாகத் தர அளவீடுகள் என்ன நோக்கத்தையும், சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டனவோ அத்தகைய நிலைமைகளில் தான் அவ்வாறான தர அளவீடுகளுக்குச் சரியான பொருள் இருக்கும். விக்கிப்பீடியாக்களைப் பொறுத்தவரை அவை மக்களுக்குப் பயன்படக்கூடிய தரமுள்ள விடயங்களைத் தரும் வகையில் இயல்பாக வளரும் நிலையில் தான் தர அளவீடுகள் பொருள் கொண்டவையாக இருப்பதாகக் கொள்ள முடியும்.
"ஆழம்" என்பதற்கான தர அளவீட்டை உருவாக்கியவர்கள், ஒரு கட்டுரைக்கான தொகுப்புக்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தால் அது கட்டுரைகள் பலரால் தொடர்ந்து மேம்படுத்தப்படுவதையும் விரிவாக்கப்படுவதையும் கட்டுரைகள் குறித்த தொடர்ச்சியான உரையாடல்கள் இடம்பெறுவதையும், காட்டுவதாகக் கொண்டனர். அதேபோல, கட்டுரைகள் அல்லாத பக்கங்கள் அதிகரிக்கும்போது ஒருபுறம் கட்டுரைகளின் விளக்கும் திறன் கூடும் என்றும், மறுபுறம் பல கட்டுரைகள் தொடர்பில் பயனர்களின் ஈடுபாடு உள்ளதைக் காட்டும் கருதினர். இதனால்தான் ஆழத்தைக் கணிப்பதற்கான சூத்திரத்தில் தொகுப்புக்களின் எண்ணிக்கை, கட்டுரைகள் அல்லாத பக்கங்களின் எண்ணிக்கை என்பவற்றுக்கு முக்கியத்துவம் தந்துள்ளனர். ஆனால், தேவையற்ற வழிமாற்றுக்களை உருவாக்குதல், உரையாடல்கள் எதுவும் இடம்பெறாமலேயே பேச்சுப் பக்கங்களைத் திறத்தல் என்பன போன்ற நடவடிக்கைகளால் சிலர் ஆழத்தைக் கூட்டிக் காட்டுகின்றனர். இவ்வாறாகப் பெறப்படும் தர அளவீடுகளுக்கு எவ்வித பொருளும் கிடையாது.
இயல்பான நிலையில் குறைந்த எண்ணிக்கையான பயனர்கள் கட்டுரைகளின் எண்ணிக்கையை விரைவாகக் கூட்ட முயலும்போது ஆழம் குறைகிறது. கட்டுரைகளை உருவாக்கும்போது கட்டுரைகளை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துவதன் மூலமே கட்டுரை எண்ணிக்கைக்கும் ஆழத்துக்கும் இடையில் ஒரு சமநிலையை எட்ட முடியும். ஆழம், கட்டுரை எண்ணிக்கை இரண்டையும் ஒருங்கே அதிகரித்துச் செல்வதற்கு முனைப்பாகச் செயல்படக்கூடிய பயனர்கள் கூடுதலாகத் தேவை.
ஆழத்தைக் கூட்டுவதற்காக இயல்பான செயல்பாடுகளுக்குப் புறம்பாக எதுவும் செய்யத்தேவை இல்லை என்பதே எனது கருத்து. ஆனால், தமிழ் விக்கிப்பீடியாவின் இயல்பான வளர்ச்சியில் அக்கறை செலுத்துவதே தற்போதைய தேவை. இயல்பான வளர்ச்சி என்னும்போது,
- பயன்படத்தக்கனவும், தரமானவையும், முழுமையானவையுமான கட்டுரைகளின் உருவாக்கம்,
- பல்வேறு துறைகளையும் சார்ந்த கட்டுரைகளின் உருவாக்கம்,
- முனைப்பான பயனர்களைக் கூட்டுவதற்கான நடவடிக்கைகள்
என்பவற்றைக் கவனத்தில் கொள்ளவேண்டும். அளவுக்கு அதிகமான குறுங் கட்டுரைகளைத் தவிர்ப்பது நல்லது. --- மயூரநாதன் (பேச்சு) 05:21, 21 செப்டெம்பர் 2012 (UTC)
- விளக்கமான தங்களது கருத்துக்களுக்கு நன்றி.மயூரநாதன்! மாதம் ஒரு முறை கூட்டு முயற்சியிலே, ஒரு புதுக்கட்டுரையை முன்னிலைப்படுத்தி உருவாக்கினால் நன்றாக இருக்கும். அதனால் பெருங்கட்டுரைகளும் கூடும்.மாதம் ஒரு கட்டுரை என்பதை, பின்பு அதிகபடுத்தலாமென்றே எண்ணுகிறேன். ஏனெனில், நேரமின்மையால் தான் பலர் குறுங்கட்டுரையை உருவாக்குகின்றனர். புதுபெருங்கட்டுரையில், ஓரிரு வரிகள் அனைவரும் எழுதினால் கூட, அப்புதுக்கட்டுரை சிறப்பாக அமையும் என்றே எண்ணுகிறேன்.அதனால், தரவுப்புள்ளிகளும் அதிகமாகும் அல்லவா?--த♥ உழவன் +உரை.. 05:47, 21 செப்டெம்பர் 2012 (UTC)
மயூரநாதன், இயல்பான வளர்ச்சி குறித்த தங்கள் மூன்று பரிந்துரைகள் முற்றிலும் பொருத்தமானவை. புதிய பங்களிப்பாளர்களை ஈர்த்து இருக்கிற கட்டுரைகளை மேம்படுத்தத் தொடங்கினாலே பல துறை கட்டுரைகள் தாமாக உருவாகத் தொடங்கும். தகவல் உழவன், கூட்டு முயற்சிக் கட்டுரையின் தாக்கம் சிறிதளவே. ஒட்டு மொத்த விக்கியின் தரத்தை மேம்படுத்த இன்னும் முனைப்பான முயற்சிகள் தேவை. தற்போது கூட்டு முயற்சியில் புதிய கட்டுரைகளைத் தொடங்காவிட்டாலும் கிட்டத்தட்ட புதுக்கட்டுரை அளவிருந்த பல குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி உள்ளோம்.--இரவி (பேச்சு) 04:39, 22 செப்டெம்பர் 2012 (UTC)
குறைந்தது 3 வரி கட்டுரைகள் என்ற விதியில் மாற்றம் தேவை
[தொகு]தமிழ் விக்கிப்பீடியாவில் தற்போது 2 கிலோ பைட்டுக்குக் குறைவாக உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை - 18823. அதாவது மொத்த கட்டுரைகளில் 31%.
தமிழ் விக்கிப்பீடியாவில் தற்போது 5 கிலோ பைட்டுக்குக் குறைவாக உள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை - 42137. அதாவது மொத்த கட்டுரைகளில் 69%.
தூது என்னும் கட்டுரையை எடுத்துக்காட்டுக்குப் பார்த்தோமானால், 2 கிலோ பைட்டு அளவுடைய இக்கட்டுரையில் தோராயமாக 6 வரிகள் உள்ளன. எனவே, 3 வரிகள் போதும் என்ற நம்முடைய வழிமுறை பல 1 கிலோ பைட்டு அளவுடைய கட்டுரைகளையே சேர்த்திருக்கிறது. அதிலும், ஆங்கில எழுத்துகளைக் காட்டிலும் தமிழ் ஒருங்குறி எழுத்துகளுக்கு பைட்டு அளவு அதிகம் என்பதால் இந்த 1 கிலோ பைட்டு அல்லது மூன்று வரிகள் மிகக் குறைவான உள்ளடக்கத்தையே சேர்க்கிறோம்.
இவற்றில் பல கட்டுரைகள் பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல் தேங்கியுள்ளன.
பார்க்க:
பல கட்டுரைகள் ஓரிரு முறைக்கு மேல் இற்றைப்படுத்தப்படுவதேயில்லை.
பார்க்க - குறைவான திருத்தங்களைக் கொண்ட கட்டுரைகள்
அரை பைட்டு அளவு கட்டுரைகள் கூட உள்ளன:
பார்க்க: மிகச் சிறிய கட்டுரைகள்
இந்திய அளவில் கட்டுரைகளின் பைட்டு அளவில் பிற விக்கிப்பீடியாக்கள் எப்படி உள்ளன என்பதின் 2012 ஆம் ஆண்டு நிலவரத்தை இங்கு காணலாம்:
http://shijualex.in/analysis-of-the-indic-language-statistical-report-2012/
இந்நிலைக்குக் காரணம்:
(இதில் பெரும்பாலான காரணங்கள் எனது பங்களிப்புக்கும் பொருந்தும்)
- ஒரு கட்டுரையில் குறைந்தது 3 வரிகள் இருந்தால் போதும் என்ற விதி
- பிற பயனர்கள் உருவாக்கிய கட்டுரைகளைக் கவனித்துப் போதிய அளவு மேம்படுத்தாமை.
- கட்டுரைகளைத் தொடங்கிய பிறகு தொடர்ந்து அவ்வப்போது வந்து இற்றைப்படுத்தவோ விரிவாக்கவோ தவறுவது.
- கட்டுரை எண்ணிக்கையை மட்டும் கருத்திற் கொண்டு செயற்படுவது.
மேற்கூறிய காரணங்களில் 2, 3, 4 ஆகியவற்றை மாற்றிக் கொண்டால் இந்நிலையை மாற்றலாம். ஆனால், உடனடியாக இந்தக் காரணங்களின் தன்மையில் மாற்றத்தைக் கொண்டு வருவது கடினம் என்பதால் காரணம் 1ஐக் கவனிப்பது பயன் தரும்.
என்னுடைய பரிந்துரை:
- கட்டுரைகள் குறைந்தது 3 வரிகள் இருக்க வேண்டும் என்பதனை 6 வரிகள் என மாற்றலாம். இது அனைத்து பயனர்களுக்கும் பொருந்த வேண்டும்.
- 50 கட்டுரைகள் எழுதிய பயனர்கள் யாவரும் புதுப்பயனர் நிலையைத் தாண்டி ஓரளவு விக்கிநெறிமுறைகளை அறிந்தவர்கள் எனக் கருதலாம். இவர்கள் உருவாக்கும் கட்டுரைகள் 5 கிலோ பைட்டு அளவுக்குக் குறையாமலும் பகுப்புகள், மேற்கோள்கள், படங்கள், வெளியிணைப்புகள் கூடியவையாகவும் உருவாக்க வேண்டும்.
இந்த விதிக்கான விலக்குகள்:
- ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரையே 5 கிலோ பைட்டுக்குக் குறைவாக இருக்கும் நிலை அல்லது பெரிதாக இருந்தாலும் மொழிபெயர்க்கும் அளவுக்குத் தரமாக இல்லாத நிலை.
- ஆங்கில விக்கிப்பீடியாவில் இல்லாத கட்டுரைகள் ஆனால் தமிழ் விக்கிப்பீடியாவில் இடம்பெறுவதற்கான குறிப்பிடத்தக்கமை உள்ள கட்டுரைகள் (குறிப்பாக, தமிழ் நோக்கில்). போதிய தரவுகள் இல்லாத நிலையில் இவை குறித்து 6 வரிகள் அல்லது 5 கிலோ பைட்டுக்குக் குறைவாக எழுதலாம்.
- ஏற்கனவே உள்ள கட்டுரைகளை இந்த விதியின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டாம். ஆனால், அவற்றை மேம்படுத்துவதற்கு முனைய வேண்டும்.
அனைவரின் கருத்துகளையும் வரவேற்கிறேன்.--இரவி (பேச்சு) 13:09, 8 ஏப்ரல் 2014 (UTC)
மேலே கடந்த உரையாடலொன்றில் மயூரநாதன் முன்வைத்த கருத்து முக்கியமானது. பயன்படத்தக்கனவும், தரமானவையும், முழுமையானவையுமான கட்டுரைகளின் உருவாக்கம் இப்போதுள்ள கட்டுரைகள் ஒவ்வொன்றும் அவ்வாறுள்ளனவா என்பது உறுதிசெய்யப்பட வேண்டியுள்ளது. நன்றி. கோபி (பேச்சு) 13:31, 8 ஏப்ரல் 2014 (UTC)
இந்த தடை மேல் தடை மேல் தடையை முற்றிலும் எதிர்க்கிறேன்
[தொகு]- வரையறைகள், சிறிய அறிமுகங்கள் மிகவும் பெறுமதி வாய்தவை. அதனை மூன்று வரிகளில் செய்ய முடியும்.
- தனிப்பக்கத்தைக் உருவாக்குவதன் மூலம் கூகிள் தேடலில் இலகுவாகக் கிட்டும்.
- தனிக் கட்டுரைகளை உள் இணைப்புக்கள் கொடுக்கலாம், வெளியில் பகிரலாம், பகுப்பில் இடலாம், பட்டியலில் இடலாம்.
- கட்டுரையை தொடர்பாக மேலும் மேலும் இறுக்கமான வரையறைகளை உருவாக்குவது பயனர் பங்களிப்புக்கு தடை, ஊக்கத்துக்கு தடை.
- ஒவ்வொரு கட்டுரையும் பயன்படுத்தக்கனவை என்று எப்படி வரையறை செய்வீர்கள்?
- விக்கியின் தன்மையே அது என்று முழுமையானது இல்லை, அதற்கு என்று இறுதித் திகதி இல்லை, அதை யாரும் மேம்படுத்தலாம் என்பதுவே. ஆகவே "முழுமையானதா" என்று பார்ப்பது கடைமட்டும் ஒரு கட்டுரை விக்கியில் இருப்பதற்க்கு தடையாக அமையக் கூடாது.
- புதுப்பயனர்களுக்கு இது ஒரு பெருந்தடையாக இருக்கும்.
- கோபி/ரவி ஆகியோர் கட்டுரைப் பங்களிப்புக்கள் விரிவாகச் செய்யாதால், அவர்கள் இந்தக் குறிப்பான கொள்கை உருவாக்கம் குறித்து போதிய புரிதல் இருக்காது என்று கருதுகிறேன். இருக்கும் கட்டுரைத் தலைப்புகள் எல்லோருக்கும் ஈடுபாடானவை அல்லாதாக இருக்கலாம். ஆகவே அவர்கள் கூறுவது போல, அவற்றை மேம்படுத்துங்கள், புதியவற்றை உருவாக்காதீர்கள் என்று கட்டளை இட முடியாது. விதிகளை உருவாக்குவதை விடுத்து, சிறந்த எடுத்துக்காட்டுக்களாக விளங்கினால் நன்று.
- மேலே குறிப்பிட்ட புள்ளிவிபரங்களைப் பெரும்பாலான பயனர்கள் குறுங்கட்டுரைகள உருவாக்க விரும்புகிறார்கள் என்று கூட எடுத்துக்கொள்லலாம்.
- ஊடங்களின் மதிப்பீட்டுக்கும் எதோ ஒரு வகையில் குறுங்கட்டுரைகள் உதவுகின்றன.
--Natkeeran (பேச்சு) 13:52, 8 ஏப்ரல் 2014 (UTC)
நற்கீரன், இப்படியான ஓர் உரையாடலில் சொல்லப் பயன்படும் என்பதற்காக முன்பொரு காலத்தில் (long long ago) ஒரு கட்டுரையினை என் கவனிப்புப் பட்டியலில் சேர்த்துக் கொண்டேன். அது என்கார்ட்டா கலைக்களஞ்சியம் கட்டுரை. என்கார்ட்டா கைவிடப்பட்டபோது விக்கிமீடியாவின் வெற்றியையிட்டுப் புளகாங்கிதமடைந்த சில உரையாடல்கள் தமிழ்ச் சூழலில் நடந்தன. அப்போது வேடிக்கையாக என்கார்ட்டா கட்டுரையினைப் பார்வையிட்டேன். என்கார்ட்டா நிறுத்தப்பட்டமை அங்கே இற்றைப்படுத்தப்படவில்லை.
இறுதித் திகதியற்ற கலைக்களஞ்சியமல்லவா? எப்போது அது இற்றைப்படுத்தப்படும் என்று பார்த்து அது இற்றைப்படுத்தப்படுவதற்கான காலம் பற்றி ஓர் குறிப்பு எழுதலாமென நினைத்திருந்தேன். இன்று இங்கே குறிப்பிட்டதால் அது இன்றே இற்றைப்படுத்தப்படும். ஆனால் இற்றைப்படுத்தப்படாத பல்லாயிரம் பக்கங்கள் இருக்கப்போகின்றன.
இது தமிழில் இயங்க நினைக்கும் சமூகத்துக்குச் செய்யப்படும் துரோகம் என்கிறேன் நான். நன்றி. கோபி (பேச்சு) 14:40, 8 ஏப்ரல் 2014 (UTC) குறிப்பு: இரவி, நீங்கள் கட்டுரை எழுதாத ஆள். விக்கிப்பீடியா பற்றிய புரிதலற்ற நீங்கள் கொள்கைகள் பற்றி பக்கம் பக்கமாக எழுதிக் குவிப்பது சரியல்ல. வேறெங்கோ விக்கிப்பீடியாவை நாசம் செய்தவரென்ற பட்டமும் வாங்கியிருந்தீர்கள். :) 14:40, 8 ஏப்ரல் 2014 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவின் மிக மோசமான போக்கு பயனர்கள் தாம் தொடங்கிய கட்டுரை எண்ணிக்கையினை முன்னிறுத்தியமை. பலவிதமான அறிவுத்துறைகளை எழுத்து அவற்றிலெல்லாம் சிறியதென்றாலும் முழுமையான கட்டுரைகளை உருவாக்கும் நோக்கத்தோடு மயூரநாதன் தான் தொடங்கிய கட்டுரை எண்ணிக்கை தொடர்பாக புள்ளிவிபரங்கள் எடுத்துவந்தார். அதனைப் பின்பற்றி (அடியேனும்) எண்ணிக்கை சார்ந்து கட்டுரைகளைத் தொடங்கியமையும் தொடங்கிய கட்டுரைகளை விரிவாக்காமற் போனமையும் நடந்தேறியது. தொடங்கிய பயனர்கள் அக்கட்டுரைகளைத் தம்முடையதாகக் கருதி எண்ணிகைகளை முன்னிறுத்தியமையும் ஏனைய கட்டுரைகளை வளர்த்தெடுக்காமையும் ஒரு போக்காகவே மாரிவிட்டது. அது பயனர்கள் எல்லோரும் குறுங்கட்டுரை எழுத விரும்புபவர்கள் எனும் முடிவில் வந்து நிற்கிறது.
எத்தனை பைட்டு, எத்தனை வரி என்பனவெல்லாம் முக்கியமே அல்ல. மூன்று வரியோ முன்னூறு வரியோ முழுமையாக இருக்க வேண்டும். அவ்வாறில்லாவிடின் அது ஏமாற்று வேலையே. அவ்வாறான ஏமாற்று வேலையினை நானும் செய்துள்ளேன் என்பது இப்பொழுது புரிகிறது. நன்றி. கோபி (பேச்சு) 14:53, 8 ஏப்ரல் 2014 (UTC)
- கவனிப்பில் சேர்த்த நேரம் இற்றைப்படுத்தி இருக்கலாம். இது எண்ணிக்கை சார்ந்து இல்லை. ஈடுபாடு சார்ந்தது. இயங்கு முறைகள் சார்ந்தது. இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நீங்கள் கருதி, திணிக்க முடியாது. விக்கியில் ஒரு கட்டுரையின் முழுமை என்பது ஒரு சிறு கூறு, முதன்மைக் கூறு இல்லை. அது என்றுமே நிறைவு பெறாதது, முழுமை அடையாதது. நீங்கள் முன்வைக்கும் பரிந்துரைகளை ஓரளவாவது செய்த்து பாருங்கள். எ.கா 100 கட்டுரைகளை முழுமை அடையச் செய்யுங்கள். எனக்கு இல்லை உபதேசம், ஊருக்கடி என்பது போல் அல்லவா மேலே உள்ள உங்கள் கருத்துக்கள் அமைகின்றன. --Natkeeran (பேச்சு) 15:15, 8 ஏப்ரல் 2014 (UTC)
நற்கீரன், ஈடுபாடு சார்ந்து பங்களிப்பது என்றால் கருத்துச் சொல்ல ஈடுபாடுள்ளவர்கள் கருத்துத்தான் சொல்வார்கள்; கட்டுரை எழுத மாட்டார்கள். கவனிப்பில் சேர்த்த நேரம் இற்றைப்படுத்தி இருக்கலாம் தான். ஆனால் கவனிப்பில் சேர்த்த காலத்திலேயே த.வி.யில் எனக்கிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டேன். இப்போதும் நான் எதனையும் திணிக்க வரவில்லை. மோசடி வேலை நடந்துகொண்டிருக்கிறது என்கிறேன். தமிழ் சார்ந்து இயங்கும் சமூகத்தின் அறிவுச்செயற்பாடுகளை மொண்ணையாக்காதீர்கள் என்கிறேன். புளகாங்கிதமடைய இங்கே ஒன்றுமில்லை என்கிறேன். கோபி (பேச்சு) 15:24, 8 ஏப்ரல் 2014 (UTC)
- கருத்துச் சொல்பவர்கள் கருத்துக்கள் சொல்லாம். ஆனால் கட்டுரைகள் எழுதுபவர்களைக் குளப்ப வேண்டாம், அவர்களுக்கு தடைகளை உருவாக்க வேண்டாம். நம்பிக்கை இழந்த பின்பு இந்தளவு வாக்குவாதம் ஏன்? யாரும் இங்கு புளகாந்திம் அடையவில்லை. தமிழ்ச் சமூகத்தில் பல குறைபாடுகள் உண்டு. ஆனால் அதை எல்லாவற்றை விக்கியில் தீர்க்க முடியாது. ஒருவரிடம் சுத்தியல் இருப்பதால், எல்லாப் பிரச்சினைகளும் அறையப்படவேண்டிய ஆணிகள் அன்று. --Natkeeran (பேச்சு) 15:30, 8 ஏப்ரல் 2014 (UTC)
//உபதேசம், ஊருக்கடி என்பது போல் அல்லவா மேலே உள்ள உங்கள் கருத்துக்கள் அமைகின்றன. --Natkeeran (பேச்சு) 15:15, 8 ஏப்ரல் //
நற்கீரன், ஒரு பிரச்சினையினை நான் முன்வைத்தமைக்கு நீங்கள் தந்த நற்சான்றுக்கு நன்றி. த.வி.யில் என் பங்களிப்பில் பத்தில் ஒரு பகுதி கூடச் செய்யாதவர்கள் த.வி.யின் பிதாமகர்களாக கட்டற்ற உள்ளடக்கத்தின் காவல் தெய்வங்களாக நடமாடுவது பற்றி எக்காலத்திலும் எவரும் எதுவும் சொல்லப் போவதில்லை.
//நீங்கள் முன்வைக்கும் பரிந்துரைகளை ஓரளவாவது செய்த்து பாருங்கள். //
த.வி.யில் நான் செய்த துப்பரவுப் பணிகள் யாவும் மிக எளிதாக மறக்கப்படுகின்றன. நல்லது.
தமிழில் இன்னொரு பொதுக் கலைக்களஞ்சியம் உருவாகப் பொருளாதாரச் சாத்தியங்கள் இல்லை என்பதால் இருக்கும் ஒரே கலைக்களஞ்சியம் ஆழமற்ற குப்பையாகிவிடுவதன் அவலத்தினைச் சுட்டிக் காட்டினேன். அவ்வளவுதான்.
கோபி (பேச்சு) 15:55, 8 ஏப்ரல் 2014 (UTC)
உங்கள் தனிப்பட்ட பங்களிப்புக்களையோ, நல்நோக்கையோ அணுவளவேனும் நான் கேள்விக்குட்பத்தவில்லை. 3 வரிக் கட்டுரை அல்லது குறுங்கட்டுரைகள் ஏன் நல்லது என்று 10 புள்ளிகள் வரை முன்வைத்துள்ளேன். விக்கி என்பது ஆழமற்ற படைப்புகளையும், ஆழமான படைப்புக்களையும் சேர்ந்தே கொண்டிருக்கும். ஆனால் மேற்படி இறுக்குவதால் ஆழம் கிடைக்கும் என்பதற்கு சான்றுகள் இல்லை. மேற்கோள்கள் சேர்ப்பது, விக்கியாக்கம் தொடர்பான பணிகளை பயனர்களின் கவனதுக்குக் கொண்டுவருவது நல்லதே. --Natkeeran (பேச்சு) 16:31, 8 ஏப்ரல் 2014 (UTC)
நற்கீரன், சில விக்கிப்பீடியாக்களில் என்ன குப்பையும் கொட்டலாம். கேட்க ஆள் இல்லை. நாம் குறைந்தது மூன்று வரி என்கிறோம். மலையாள விக்கிப்பீடியாவில் ஒரு வரிக் கட்டுரை எழுதலாம். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் அவற்றைத் துப்புரவு செய்யும் பணியை மேற்கொள்கிறார்கள். வங்காள விக்கிப்பீடியாவில் கூகுள் கட்டுரைகளுக்கு முற்றிலும் தடை. நாம் நடுவில் தடை செய்தோம். இந்தி விக்கிப்பீடியா எல்லா கூகுள் கட்டுரைகளையும் ஏற்றுக் கொண்டு இப்போது எப்படிச் சீராக்குவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆக, ஒவ்வொரு விக்கிப்பீடியாவிலும் ஒவ்வொரு தர எல்லை இருக்கிறது. இவை தடைகள் அல்ல.
தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய 2005களில் கணினியில் தமிழைப் பார்ப்பதே பெரும்பாடாக எழுத்துரு உதவிப் பக்கம் தந்து கொண்டிருந்தோம். தமிழில் எழுதுவதும் சிரமம். ஆனால், இப்போது ஒருங்குறித் தமிழில் எழுதிப் பழகிய இரண்டு இணையத் தலைமுறைகள் முடிந்து மூன்றாவது தலைமுறை வந்து விட்டது (ஒவ்வொரு 5 ஆண்டும் ஒரு இணையத் தலைமுறையாக இனங்காணக்கூடிய போக்கு தென்படுகிறது). தமிழ் விக்கிப்பீடியாவைப் பொருத்தவரை 2003-2009 வரை ஒரு தலைமுறை. 2010 கட்டுரைப் போட்டிக்குப் பிறகு தமிழ்விக்கி10 நடத்திய 2013 வரையான காலகட்டம் இரண்டாவது தலைமுறை. இப்போது அடுத்த தலைமுறையாக புதிய பங்களிப்பாளர்களை உருவாக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்.
ஒரு Tweetஏ 140 எழுத்துகளைக் கொண்டிருக்கும் போது, அவற்றுக்கும் குறைவான எழுத்துகளில் நாம் கொண்டிருப்பதை ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரை என்று சாதிப்பதால் என்ன பயன்?
மூன்று வரிக் கட்டுரை என்ற அளவைக் கூட்டலாம் என்ற பரிந்துரையை இதற்கு முன்பே பவுல் போன்றோர் முன்வைத்துள்ளனர்.
மூன்று மூன்று வரியாக மொத்தம் 30 வரிகளில் 10 கட்டுரைகள் எழுதும் ஒரு புதுப்பயனரை ஆறு ஆறு வரிகளாக 5 கட்டுரைகள் எழுதித் தாருங்கள் என்று கேட்பது எவ்வாறு அவருடைய ஊக்கத்தைக் குறைக்கும்? தவிர, ஒரு மாத கால நீக்கல் வார்ப்புரு இடும்போது மற்ற பல பயனர்களும் அக்கட்டுரையை விரிவாக்க முடியுமே? புதுப்பயனர் தான் விரிவாக்க வேண்டும் என்றில்லை.
http://stats.wikimedia.org/EN/TablesWikipediaTA.htm#editdistribution பாருங்கள்.
ஆயிரம் தொகுப்புகளுக்கு மேல் செய்த வெறும் 82 பயனர்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் 84.9% வீதம் தொகுப்புகளைச் செய்துள்ளார்கள். இவர்கள் மொத்த விக்கிப்பீடியரில் 1.5% மட்டுமே. புதுப்பயனர்களுக்குத் தடை என்ற பெயரில் நாம் இளக்கும் கொள்கைகள் கூடுதல் தொகுப்புகளைச் செய்யும் நெடுநாள் பயனர்களாலேயே பயன்படுத்தப்படுகின்றன. எனவே, புதுப்பயனர்களுக்குத் தடையாக இருக்கும் என்ற வாதம் செல்லாது.
அதே வேளை, நெடுநாள் பயனர்கள் இன்னும் கூடுதல் தரமுடைய கட்டுரைகளைத் தொடக்கத்திலேயே தருவதன் மூலம் தமிழ் விக்கியின் தரத்தைப் பெருமளவு உயர்த்த முடியும்.
பூங்கோதை, மயூரநாதன், மணியன், பவுல், கலையரசி (சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே) போல் செறிவுள்ள கட்டுரைகளை எழுதும் பயனர்கள் நம்மிடையே உள்ளனர். நல்ல எடுத்துக்காட்டுகளுக்குப் பஞ்சம் இல்லை. இருந்தும் ஏன் 69% கட்டுரைகள் 5 கிலோ பைட்டுக்கு கீழ் உள்ளது?
5 கிலோ பைட்டு என்பதற்கு எவ்வளவு எழுத வேண்டும்?
பார்க்க: நடுநிலை நாடு.
இதில் உள்ளது போல் இரண்டு பத்திகள் எழுதினாலே 5 கிலோ பைட்டு வந்து விடும் நிலையில், இந்தப் பரிந்துரை அவ்வளவு கடினமானதா? இத்தகைய ஒரு பரிந்துரை இல்லாமலேயே ஏற்கனவே பலரும் தொடக்கத்திலேயே செறிவான கட்டுரைகளை உருவாக்கி வருகிறார்கள்.
இந்த வரையறைக்கு உட்பட்ட ஒரு பயனராக இந்த 5 கிலோ பைட்டு தர எல்லை எனக்கு ஒரு சுமையாக இல்லை. சொல்லப் போனால், இப்படி ஒரு வரையறை இருந்தால் ஒத்திப் போடாமால் எல்லா கட்டுரைகளையும் சீரான தரத்துடன் தர முடியும்.
குறுங்கட்டுரைகள் பயன் - இடர் குறித்து ஏற்கனவே விக்கிப்பீடியா பேச்சு:கட்டுரை ஒன்றிணைப்பு#மாற்றம் தேவை பகுதியில் போதிய விளக்கம் அளித்துள்ளேன்.
குறுங்கட்டுரைகளை விரிவாக்க அண்மைய மாற்றத் தூண்டுல்கள், கட்டுரைப் போட்டி ஒன்று ஒரு புறம் அகவயமான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டே வருகிறோம். ஆனால், அவை போதிய பயன் அளிக்கவில்லை. எனவே தான், புறவயமாக நமக்கு நாமே வைக்கும் தர எல்லையை உயர்த்திக் கொள்ளலாமே என்று இப்பரிந்துரை.
எனவே, தரத்தை எவ்வாறு உயர்த்தலாம் என்பதற்கான உங்கள் புறவயமான பரிந்துரைகளையும் முன்வையுங்கள். உரையாடி இணக்க முடிவு நோக்கி நகர்வோம்.
சாலையில் போக்குவரத்து குறிமரங்கள் நிற்கின்றன என்பதற்காக எல்லாரும் தாமாக ஒழுங்காக விபத்தில்லாமல் வண்டியோட்டுவதில்லை. குறைந்தது, இந்தியா போன்ற நாடுகளில். போக்குவரத்துக் காவலர் வேண்டும். நேர்மையான, இலஞ்சமற்ற தடுப்பு முறைகள் வேண்டும். ஓட்டுநர் உரிமம் முறையாக வழங்கப்பட வேண்டும். கொள்கை எவ்வளவு முக்கியமோ அந்தளவு முறைமைகளும் (system) வழிமுறைகளும் முக்கியம். மேற்குலகில் தாமாக நடக்கும் பல இங்கு தாமாக நடக்கா. ஆங்கில, மேற்குலக விக்கிகள் நன்கு வளர்கின்றன என்றால் அங்கு கட்டுரை விரிவாக்கம், துப்புரவு என்று பல்வேறு பணிகளிலும் ஆர்வம் காட்டி எல்லா இடங்களிலும் விக்கி முறைகளைப் பின்பற்றுவோர் நிறைய இருக்கின்றனர். நாம் நமக்கு வசதிப்பட்ட இடங்களில் மட்டும் விக்கி முறைகளை வலியுறுத்திக் கொண்டு மற்ற இடங்களில் தமிழ்ச் சூழலைக் காட்டிச் சலுகை கோரிக்கொண்டிருந்தால் தமிழ் விக்கிப்பீடியா ஒரு தரமான கலைக்களஞ்சியமாக வளர்வதற்கு எந்த உறுதியும் இல்லை.
நன்றி.
பி.கு. கருத்தைப் பற்றி மட்டும் உரையாடுவோமே? எனக்கும் கோபிக்கும் போதிய கட்டுரையாக்க அனுபவம் இல்லாமலா நிருவாக அணுக்கத்தோடு நீடிக்க விடுகிறீர்கள் :) கருத்து சொல்பவர்கள் கட்டுரை எழுதுபவர்களைக் குழப்ப வேண்டாம் என்பதெல்லாம் விக்கிப்பண்புகளுக்கு முரணானது. --இரவி (பேச்சு) 10:28, 14 ஏப்ரல் 2014 (UTC)
தமிழ் விக்கிபீடியா கட்டுரைகளில் தமிழ் நடை
[தொகு]- நம் கட்டுரைகள் மக்களைப் போய்ச் சேர வேண்டும்; குறிப்பாக இளைஞர்கள் இவை பயனுள்ளவை என்று நினைக்க வேண்டும்.
- ஆங்கில விக்கி கட்டுரைகளைவிட, தமிழ் விக்கி கட்டுரைகளைப் படிப்பது மிக எளிது என இளைஞர்கள் எண்ண வேண்டும்.
- புதிய சொற்கள் தூய தமிழில் எழுதும் போது, ஆங்கிலச் சொல்லையும் அடைப்புக்குள் கொடுப்பது மிகவும் தேவையானது. இத்துடன் ஆங்கிலக் கட்டுரையின் இணைப்பையும் கொடுப்பது நல்லது.
- சொற்றடர்கள் (sentences ) மிக நீளமாக இல்லாது, சிறிதாக இருப்பது நல்லது. குறிப்பாக, அறிவியல் கட்டுரைகள் எழுதும் போது.
- ஆங்கிலக் கட்டுரைகளை மொழி பெயர்க்கும் போது, தமிழ் நடை நமக்கு உகந்ததாக இருக்க வேண்டும்.
- இறுதியாக, அறிவியல் கட்டுரைகள் எழுதும் போது, ஒரு பத்து அல்லது பன்னிரண்டாம் வகுப்பு மாணவனுக்கு எவ்வளவு புரியும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
தரக்கட்டுப்பாடு
[தொகு]வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவின் தரக்கட்டுப்பாட்டுக் கொள்கையைப் பற்றி அறிய விரும்புகிறேன். இதுவரையிலும் உருவாக்கப்படாமல் இருந்தால், தற்போது அதனை உருவாக்க வேண்டுகிறேன். எனக்குத் தெரிந்தவரையில் தற்போது ஆதாரமற்ற கட்டுரைகளை தரமற்றவைகளாகக் கருதுகிறேன். குறுங்கட்டுரைகளுக்கென மூன்று வரியாக உள்ள அளவை ஐந்து முதல் பத்து வரியாக மாற்றவும் வேண்டுகோள் விடுக்கிறேன். கட்டுரையின் அளவு மட்டுமின்றி, தேவையான அடிப்படைத் தகவல்களையும் உள்ளடக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:01, 14 திசம்பர் 2015 (UTC)
- தரமற்றவை என்றால் என்ன? அவை நீக்கப்பட வேண்டுமா? அல்லது அவை தரமற்ற கட்டுரைகள் எனக் கட்டுரையிலேயே தெரியப்படுத்த வேண்டுமா?--Kanags \உரையாடுக 07:21, 14 திசம்பர் 2015 (UTC)
- தரமற்ற கட்டுரைகளை மேம்படுத்த வேண்டும். அதற்கு அக்கட்டுரைகளின் பட்டியல் தேவை. கூட்டுமுயற்சியாக ஏற்கனவே உள்ள தரமற்ற கட்டுரைகளை மேம்படுத்த வேண்டும். புதியதாக உருவாக்கப்படும் கட்டுரைகளுக்கு சில கூடுதல் தேவைகளை உருவாக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, புதிய குறுங்கட்டுரைகளை உருவாக்கும் போது ஓரிரன்று சான்று இருத்தல் நலம். குறுங்கட்டுரைகளை விட சற்று பெரிய கட்டுரைகளுக்கு ஒரு படிமம், இரண்டு மூன்று சான்றுகள் என்று நமக்கு நாமே சில தரக்கட்டுப்பாடுகளை உருவாக்க வேண்டும். கடந்த ஓரிரு மாதத்தில் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி நன்கு உள்ளது. இத்தருணத்தைப் பயன்படுத்தி கட்டுரைகளின் தரத்தையும் உயர்த்த வேண்டுகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:56, 14 திசம்பர் 2015 (UTC)
- விக்கியில் கட்டுரைகளை மேம்படுத்தும் நோக்கில் தரம் பிரிக்கலாம். ஆனால் இப்படித்தான் கட்டுரை கட்டாயம் அமைய வேண்டும் என்று உயர் தர நியமத்தை உருவாக்குவது நன்று அன்று. அப்படி என்றால் கல்வியாளர்கள் மட்டும்தான் பங்களிக்க முடியும் போன்ற ஒரு நிலை வரும். அது விக்கியின் பரந்துபட்டவர்களிடம் இருந்து சிறிக சிறுகப் பங்களிப்புக்களை உள்வாங்கி உருவாக்கும் முறையில் இருந்து மாறிவிடும். அதாவது நாங்கள் பங்களிப்புக்கு உயர் தடைகளை உருவாக்குவதை தவிர்த்தல் வேண்டும். தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வுப் பரப்புரைகள், கருவிகளை உருவாக்குதல் போன்ற செயற்பாடுகள் ஊடாக முன்னெடுக்க வேண்டும். புதிதாக உருவாக்கப்படும் கட்டுரைகள் பயிற்சியின் ஊடாக வருபவர்களால் உருவாக்கப்படுவதால், பயற்சி மேம்படுத்த வேண்டும் என்று கருதுகிறேன். பயற்சியுடன் அந்தப் பயன்ர்களை பின்தொடர்ந்து கூடிய ஆதரவினை வழங்குவதற்கான கட்டமைப்புத் தேவை. --Natkeeran (பேச்சு) 14:47, 14 திசம்பர் 2015 (UTC)
- இப்படித்தான் என்ற குறைந்தபட்ச தர நியமத்திற்கான கொள்கையை உருவாக்க வேண்டும். கல்வியாளர்கள் மட்டும்தான் பங்களிக்க முடியும் என்ற நிலை இராது, ஏனெனில் இது ஒரு கூட்டுமுயற்சியே. கட்டுரை உருவாக்குபவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக, தரநியமம் குறித்த தகவல்களையே வழங்குகிறது. யார்வேண்டுமானாலும் தரத்தை உயர்த்தலாம். புதியதாக வரும் விக்கிப்பீடியர்களுக்கு நான் காட்டும் கட்டுரைகள் சில, பட்டாம்பூச்சி, இந்தோனேசியா உள்ளிட்டவை. விழிப்புணர்வுப் பரப்புரைகள் மட்டுமின்றி, கட்டுரை தர மேம்பாட்டு வாரம்/ மாதம் என ஒதுக்கி அனைத்து விக்கிப்பீடியர்களின் நேரத்தையும் உழைப்பையும் பயன்படுத்தி தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை மேம்படுத்த வேண்டும். பயிற்சி பட்டறைகளில் கட்டுரைகளின் தரம் குறித்த பயிற்சியையும் வழங்க வேண்டும். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:07, 16 திசம்பர் 2015 (UTC)
அண்மையில் பெங்களூரில் நடந்த விக்கிமீடியர் சந்திப்பில் விக்கிப்பீடியா திட்டங்களின் நிலை (தரம் அன்று) குறித்து முறையாக அறிய வேண்டும் என்று பேசினோம். ஒருவேளை, இந்தப் பின்னணியில் தினேசு இங்கு இந்த உரையாடலைத் தொடங்கி இருக்கலாம். தமிழ் விக்கிப்பீடியா தொடக்கம் முதலே இவ்வாறான உரையாடல்களை நிகழ்த்தியிருக்கிறோம் என்பது இங்குள்ள தொகுப்புகளைக் கொண்டு அறியலாம்.
என்னுடைய பரிந்துரை:
தரமானது, தரமற்றது இன்ற இரட்டை நிலைப்பாட்டில் இருந்து பல்வேறு தரங்களில் கட்டுரைகள் உள்ளன, இருக்கலாம் என்பதை இனங்கண்டு ஏற்க வேண்டும். இதற்கு en:Wikipedia:Version 1.0 Editorial Team/Assessment போன்ற முறையை நாம் உருவாக்க வேண்டும். இப்போது நம்மிடையே சிறப்புக் கட்டுரைத் தரம், முதற் பக்கக் கட்டுரைத் தரம் ஆகியவை வரையறுக்கப்பட்டுள்ளன. குறுங்கட்டுரை வரையறை அனைவரும் அறிந்ததே. புதிதாக, அடிப்படைக் கட்டுரை, நல்ல கட்டுரை ஆகிய இரண்டு புதிய தரங்களை வரையறுக்கலாம். இவ்வாறு வரையறுத்த பின், பயனர்கள் தங்களுக்கு ஈடுபாடுள்ள கட்டுரைகளைத் தரமுயர்த்த பதக்கங்கள் தந்து ஊக்குவிக்கலாம். ஒவ்வொரு மாதமும் பல்வேறு பயனர்கள் ஈடுபாடு கொள்ளக்கூடிய, எளிதில் பங்களிக்கக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த துறைகளை இனங்கண்டு, அத்துறை சார் கட்டுரைகளில் முக்கியமானவற்றைக் குறைந்தது அடிப்படைக் கட்டுரை தரம் அளவுக்காவது முன்னேற்ற முயல வேண்டும். முக்கியமான கட்டுரைகளை இனங்கான இக்கருவி உதவும். தினேசு பரிந்துரைக்கும் பல்வேறு தரக்கூறுகள் ஓர் அடிப்படைக் கட்டுரைக்கான வரையறைக்குப் பொருந்தும். --இரவி (பேச்சு) 05:57, 17 திசம்பர் 2015 (UTC)
இவற்றையும் பார்க்க
[தொகு]- விக்கிப்பீடியா:மைல்கற்கள்
- த.வி. வாசகர்கள் [1] [2] - அமெரிக்கப் புள்ளி விவரம் (இங்கிருந்து பெற்றவை)
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை ஆழம்