உள்ளடக்கத்துக்குச் செல்

வட்டக் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வட்டக் கோட்டை
அமைவிடம்கன்னியாகுமரி (பேரூராட்சி), இந்தியா
ஆள்கூற்றுகள்8°07′30″N 77°33′54″E / 8.125°N 77.565°E / 8.125; 77.565
வட்டக் கோட்டை is located in தமிழ் நாடு
வட்டக் கோட்டை
Location in Tamil Nadu, India

வட்டக் கோட்டை (அல்லது 'வட்ட வடிவத்தில் அமைந்த கோட்டை') (Vattakottai Fort) என்பது தமிழ்நாட்டில் கன்னியாகுமரிக்கு அருகில் அமைந்துள்ள கோட்டையாகும். திருவிதாங்கூர் அரசின் கரை ஓரங்களைக் கண்காணிக்கவும் கடல் வழியாக அந்நியர்களின் படையெடுப்புகளில் இருந்து நாட்டை பாதுகாக்கும் நோக்கத்துடனும் படைவீடுகளுடன் இந்தக்கோட்டை 18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. எதிரிகளை வீழ்த்துவதற்காக 3.5 ஏக்கர் நிலத்தில் 25 மீட்டர் உயரத்தில் இக்கோட்டை கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோட்டையானது கன்னியாகுமரியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

வரலாறு

[தொகு]

இந்தக் கோட்டை டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் கடற்படை அலுவலராக இருந்து, 1741-ஆம் ஆண்டில் இடம்பெற்ற குளச்சல் சண்டையில் வேணாட்டு படையுடன் மோதிய டச்சுத் தளபதியான இயுஸ்ட்டாச்சியஸ் டி லனோய் மேற்பார்வையில் செங்கற்கோட்டையாக இருந்த இந்தக் கோட்டை கற்கோட்டையாக மாற்றிக் கட்டப்பட்டது. காலப்போக்கில் அவர் வேணாடு அரசரின் நம்பிக்கைக்கு உரியவராகி வேணாடு மன்னர் பால மார்த்தாண்டன் முதலாம் திருவடி அவர்களால் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

கோட்டை அமைப்பு

[தொகு]

1809-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் வேணாட்டு அரசை தோற்கடித்தபோது இந்த கோட்டையை அழிக்காமல் விட்டுவிட்டனர். உள் கொத்தளங்களுக்குள் பீரங்கிகள் கொண்டுசெல்ல வசதியாக சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளது. நுழைவு வாயிலில் வேணாட்டு அரசின் சின்னமான யானைச் சிலைகள் வரவேற்கின்றன. கோட்டைக்குள் கண்காணிப்பு அறை, ஓய்வறை ஆயுதசாலை ஆகியவையும் உள்ளன. மண்டபத்தில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதால் கி.பி 12-ஆம் நூற்றாண்டில் இந்த கோட்டை பாண்டியர்களின் கைவசமிருந்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

பாதுகாப்பு

[தொகு]

தற்போது, இந்தக்கோட்டையின் சில பாகங்கள் கடலுக்குள் அமைந்திருக்கின்றது. இந்த கோட்டையின் பராமரிப்பு இந்திய தொல்பொருளியல் ஆராய்ச்சித் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் துறையானது அண்மையில் இந்தக் கோட்டையின் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டது.

சுற்றுலாத் தலம்

[தொகு]

இந்தக் கோட்டை இப்பொழுது பயணிகள் மிகவும் விரும்பும் சுற்றுலாத்தலமாக திகழ்கிறது. அமைதியான சூழ்நிலையில், ஒருபுறம் கடல் அலைகளின் காட்சியுடனும், மற்றொரு புறம் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களின் காட்சியுடனும் அமைந்துள்ளது. மேலும் கடற்கரை ஓரத்தில் காணப்படும் கறுப்பு நிறத்தில் அமைந்த மணல், இதன் மற்றுமொரு சிறப்பாகும்.

நிழற்படங்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வட்டக்_கோட்டை&oldid=3910732" இலிருந்து மீள்விக்கப்பட்டது