உள்ளடக்கத்துக்குச் செல்

மார்லீன் டீட்ரிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மர்லீன் டீட்ரிக்

மேடைப் பயம் என்னும் ஆங்கிலப் படத்தில் (1950)
இயற் பெயர் மாரீ மகதலீன் டீட்ரிக்
பிறப்பு (1901-12-27)27 திசம்பர் 1901
பெர்லின்-சோபேர்க், ஜெர்மனி
இறப்பு 6 மே 1992(1992-05-06) (அகவை 90)
பாரிஸ், பிரான்ஸ்
நடிப்புக் காலம் 19191984
துணைவர் ருடோல்ப் சீபர் (1924–1976)
பிள்ளைகள் மரியா ரீவா (b. 1924)
இணையத்தளம் http://www.marlene.com/

மர்லீன் டீட்ரிக், (Marlene Dietrich - டிசம்பர் 27 1901–மே 6 1992) ஜெர்மனியில் பிறந்த அமெரிக்க நடிகையும் பாடகியும் ஆவார்.[1][2][3] 1910 ஆம் ஆண்டு முதல் 1980 வரை இவருடைய திரைத் தொழில் வரலாற்றில் புகழ் மங்காத வகையில் புதுமையைக் கையாண்டு வந்தார். ஹாலிவூட்டில் பிரபலமான முதல் ஜேர்மன் நடிகை இவர் எனக் கருதப்படுகிறது. இவரது நீண்டகால நடிப்புத் தொழிலில் இவர் தொடர்ச்சியாகப் புகழ் பெற்றவராகவே இருந்தார். 1920 ஆம் ஆண்டளவில் இவர் பெர்லின் நகரில் ஒரு காபரேப் பாடகியாகவும், திரைப்பட நடிகையாகவும் இருந்தார். 1930 இல் இவர் ஒரு ஹாலிவூட் நடிகை ஆனதுடன், இரண்டாம் உலகப் போர் முன்னரங்கப் பகுதிகளில் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். போரின் போது மக்களுக்கு ஆற்றிய சேவைகள் காரணமாக இவருக்கு அமெரிக்கா, பிரான்சு, பெல்சியம், இசுரேல் ஆகிய நாடுகள் கௌரவிப்புக்களை வழங்கின. பின்னர் 1950–1970 காலப்பகுதியில் அனைத்துலக அளவில் மேடை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். தனது தொழில் வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் இவர் பொழுது போக்குத் துறையின் குறியீடாக விளங்கினார். 1999 ஆம் ஆண்டில் அமெரிக்க திரைப்பட நிறுவனம் டீட்ரிக் இனை தலைசிறந்த ஒன்பதாம் ஹொலிவூட் நடிகையாக பிரகடனம் செய்தது.[4]

சிறு பராயம்

[தொகு]

டீட்ரிக் 1901 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி ஜெர்மனியிலுள்ள பெர்லின் நகரின் ஒரு பகுதியான ஷோபேர்க் (Schöneberg) என்னும் இடத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் மாரீ மகதலீன் டீட்ரிக். இவரது தந்தை லூயிஸ் எரிக் ஒட்டோ டீட்ரிக், தாயார் வில்ஹெமீனா எலிசபெத் ஜோசபீன் டீட்ரிக். மர்லீனுக்கு ஒரே தமக்கை. பெயர் எலிசபெத். இவர்களது தாயார் பெர்லினில் இருந்த வசதியான குடும்பம் ஒன்றிலிருந்து வந்தவர். இவர்கள் பெர்லினில் மணிக்கூடு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வந்தனர். காவல்துறை லெப்டினண்ட்டாக இருந்த மர்லீனின் தந்தையார் பிராங்கோ-பிரஷ்யப் போரின் போது படையில் பணியாற்றியவர். இவர் 1907 ஆம் ஆண்டில் இறந்தார். அவரது நெருங்கிய நண்பரும், முதலாவது லெப்டினன்டுமான எடுவார்ட் வொன் லோச் என்பவர் வில்ஹெமினாவுடன் நெருங்கிப் பழகினார். 1916 ஆம் ஆண்டில் இருவரும் மணம் செய்து கொண்டனர். ஆனாலும், முதலாம் உலகப் போரின்போது காயப்பட்ட எடுவார்டும் விரைவில் இறந்துவிட்டார்.

வொன் லோச், வில்ஹிமீனாவின் பிள்ளைகளைச் சட்ட முறையான பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டிராததால், மர்லீனும் தமக்கையும் வொன் லோச் என்னும் குடும்பப் பெயரைக் கொண்டிருக்கவில்லை. குடும்பத்தில் இவரை லேனே என அழைத்தனர். மர்லீனுக்குப் 11 வயதாக இருக்கும்போது, இவரது இரண்டு முதல் பெயர்களையும் சுருக்கி அக்காலத்தில் பொதுவான வழக்கில் இராத மர்லீன் என்னும் பெயரை வைத்துக்கொண்டார்.

மர்லீன் டீட்ரிக், 1906–1918 காலப் பகுதியில் பெண் பிள்ளைகளுக்கான அகஸ்ட்டே விக்டோரியா பள்ளியில் பயின்றார். இவர் பள்ளியில் படிக்கும் காலத்தில் வயலின் கற்றுக் கொண்டதோடு நாடகத்திலும் கவிதையிலும் ஆர்வம் கொண்டிருந்தார். வயிலினில் புகழ் பெறவிரும்பிய அவரது கனவு மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக நிறைவேறாது போயிற்று.

தொழிலின் தொடக்க காலம்

[தொகு]
மொரோக்கோ என்னும் படத்தில் டீட்ரிக் (1930)

1921 ஆம் ஆண்டில், நாடக இயக்குனரான மக்ஸ் ரெயின்ஹாட்டின் நாடக அக்கடமியில் சேர எடுத்த முயற்சியில் டீட்ரிக் தோல்வி அடைந்தாலும், பின்னர் அவரது நாடகங்களில் மர்லீன் பணியாற்றினார். அங்கே இவர் பாடல் குழுவினரில் ஒருவராகவும், சிறு வேடங்களில் நடிப்பவராகவும் இருந்தார். அக்காலத்தில் இவர் சிறப்புக் கவனம் எதையும் பெற்றதாகத் தெரியவில்லை.

மர்லீனின் 1922ல் தனது முதலாவது படத்தில் நடித்தார். அக்காலத்திலேயே அதே படப்பிடிப்புத் தளத்தில் வேறொரு படப்பிடிப்பில் இருந்த அவரது எதிர்காலக் கணவரான ருடோல்ப் சீபரை மர்லீன் சந்தித்தார். டீட்ரிக்கும் சீபரும் 1924 மே 17 ஆம் திகதி மணம் செய்து கொண்டனர். அவர்களது ஒரே மகளான மரியா எலிசபெத் சீபர் 1924 டிசம்பர் 13 ஆம் திகதி பிறந்தார். இவர் பின்னர் மரியா ரீவா என அழைக்கப்பட்டார்.

1920களில் டீட்ரிக், பெர்லினிலும், வியன்னாவிலும் தொடர்ந்து நாடகங்களில் நடித்து வந்ததுடன் படங்களிலும் நடித்தார். மேடையில் வில்லியம் ஷேக்ஸ்பியர், பர்னாட்ஷா ஆகியோர் எழுதிய நாடகங்களில் நடித்த இவருக்கு வேறுபட்ட முக்கியத்துவங்கள் கொண்ட பாத்திரங்கள் கிடைத்தன. எனினும் இசை நாடகங்களிலேயே இவருக்கு அதிக கவனம் கிடைத்தது. 1920களில் படங்களிலும் இவருக்குக் குறிப்பிடத்தக்க பாத்திரங்கள் கிடைத்தன. 1929ல் வெளிவந்த நீலத் தேவதை (The Blue Angel) என்னும் படம் இவருக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இப் படத்தை இயக்கியவர் ஜோசெப் வொன் ஸ்டேர்ன்பர்க் என்பவர். இவர் பின்னர் டீட்ரிக்கைக் கண்டுபிடித்தவர் என்னும் பெருமையைப் பெற்றார். "மீண்டும் காதலில் விழுந்தேன்" (Falling in Love Again) என்னும் டீட்ரிக்கின் பாடலை அறிமுகப்படுத்தியதன் மூலமும் இப்படம் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகின்றது.

திருப்புமுனை

[தொகு]
டீட்ரிக்கின் திருப்புமுனை படமான நீலத்தேவதை என்ற படத்தில் The Blue Angel (1930)
சாங்காய் எக்ஸ்பிரஸ் என்ற படத்தில் மர்லீன் டீட்ரிக்கின் ஒளிப்படம் (1932)

1929 ல் மர்லீன் டீட்ரிக் UFA-பாராமவுண்ட் நிறுவனங்களால் இணைந்து தயாரிக்கப்பட்ட நீலத் தேவதை (The Blue Angel (1930) என்ற படத்தில் லோலா லோலா என்ற கதாபாத்திரத்தில் கேப்ரே பாடகியாக நடித்தது அவருக்கு மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது. மர்லீன் டீட்ரிக்கின் நடிப்புத்திறனை உலகிற்கு அறிமுகம் செய்த பெருமை இப்படத்தை இயக்கிய ஜோசப் வான் ஸ்டென்பெர்க்கையே (Josef von Sternberg) சாரும். இப்படத்தில் இவர் பாடிய மீண்டும் காதலில் வீழ்ந்தேன் என்ற தனிமுத்திரைப் பாடல் குறிப்பிடத்தக்க புகழைப் பெற்றுத்தந்தது இப்பாடல் செருமனியைச் சேர்ந்த எலக்டோரோலா (Electrola) இசை நிறுவனத்தாலும் பின்னர் 1930 ல் பாலிடோர் மற்றும் டெக்கா நிறுவனத்திலும் பதிவு செய்யப்பட்டன [5]..

திரைப்பட நடிகை

[தொகு]

நீலத் தேவதை படத்தின் பன்னாட்டு மட்டத்திலான வெற்றியின் பலத்தினாலும், ஹாலிவூட்டில் ஏற்கெனவே ஓரளவுக்கு நிலைபெற்றுவிட்ட வொன் ஸ்டேர்ன்பர்க் கொடுத்த ஊக்கம் காரணமாகவும் பராமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு டீட்ரிக் ஐக்கிய அமெரிக்காவுக்குச் சென்றார். இந் நிறுவனம், எம்ஜிஎம் நிறுவனத்தின் புகழ்பெற்ற சுவீடிய நடிகையான கிரேட்டா கார்போவுக்கு மாற்றாக ஜெர்மானியரான டீட்ரிக்கை அறிமுகப்படுத்தியது. ஸ்டேர்ன்பர்க் இயக்கிய டீட்ரிக்கின் முதல் அமெரிக்கப் படமான "மொரோக்கோ"வே ஆஸ்கார் விருதுக்காக நியமனம் பெற்ற டீட்ரிக்கின் ஒரே படமாகும்.

திரைப்பட வரலாற்றுக்கு டீட்ரிக்கின் மிக முக்கியமான பங்களிப்பு வொன் ஸ்டேர்ன்பர்க் இயக்கி டீட்ரிக் நடித்து 1930க்கும் 1935க்கும் இடையில் வெளிவந்த ஆறு திரைப்படங்களான மொரோக்கோ, டிஸ்ஒனேர்ட், ஷாங்காய் எக்ஸ்பிரஸ், புளொண்ட் வீனஸ், த ஸ்கார்லட் எம்பிரெஸ், த டெவில் இஸ் எ வுமன் என்பனவாகும்.

ஹாலிவூட்டில், வொன் ஸ்டேர்ன்பர்க், மர்லீன் டீட்ரிக்குடன் பயனுள்ள வகையில் பணிபுரிந்து டீட்ரிக் ஒரு கவர்ச்சியான பெண் என்னும் கருத்து ஏற்பட உதவினார். டீட்ரிக் உடற் பருமனைக் குறைக்க ஊக்கப் படுத்தியதுடன், நல்ல பயிற்சி கொடுத்து அவரை நடிகை ஆக்கினார். இதற்குப் பதிலாக டீட்ரிக்கும் வொன் ஸ்டேர்ன்பர்க் மீது நம்பிக்கை வைத்து நடித்தார்.

தலைசிறந்த ஆடை வடிவமைப்பாளர்களுக்கு டீட்ரிக் புதுப்பாணி அலங்கார அடையாளமாகவும் திரை நட்சத்திரமாகவும் திகழ்ந்ததால் இவருக்குப் பின்னர் நடிக்க வந்த நட்சத்திரங்கள் கூட அவரது பாணியை பின்பற்றத்தொடங்கினர்.புதுப்பாணி அலங்காரம் பற்றி டீட்ரிக்கிற்கு தெரிந்தது போல் வேறெந்த நடிகைகளுக்கும் தெரியாது என எட்டு ஆசுகர்கள் விருதுகளைப் பெற்ற அமெரிக்கப் பெண் ஆடை வடிவமைப்பாளர் எடித் எட் கூறியுள்ளார். 1960 ல் தி அப்சர்வர் என்ற இங்கிலாந்து வாரப்பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டியில் இவ்வாறு கூறுகிறார் “நான் படத்திலுள்ள கதாபாத்திரத்திற்காக உடையணிகிறேன். எனக்காக அல்ல, பொது மக்களுக்காக அல்ல, புதுப்பாங்கிற்காக அல்ல, ஆண்களுக்காகவும் அல்ல நான் எனக்காக உடையணிந்திருந்தால் இவ்வளவு சிரமப்பட மாட்டேன். ஆடைகள் எனக்கு சலிப்பை உண்டாக்குகின்றன. நான் வன் துணியாடை (ஜீன்ஸ்) அணிய விரும்புகிறேன். நான் அதனை நேசிக்கிறேன். நான் அவற்றை ஆண்களுக்கான ஒரு பொது கடையில் வாங்கி அணிகிறேன் , நிச்சயமாக; நான் பெண்களின் கால்சட்டை அணிய முடியாது. எனது தொழிலுக்காக வேண்டுமானால் பெண்கள் ஆடைகளை அணிவேன்” [6] . அவர் நடித்த சில படங்களில் வெளிப்படையாக பாலியல் நெறிமுறைகளை மீறியது, இருபால் கூறுடைய (androgynous) பட பாத்திரங்கள் மற்றும் இருபாலீர்ப்பு போன்றவை டீட்ரிக்கின் சில வேறுபட்ட கதாபாதிதிரங்களாக பார்க்கப்படுகிறது [7].

இறுதி காலம்

[தொகு]

1975 செப்டம்பர் 29 அன்று ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரத்தில் ஒரு மேடை நிகழ்ச்சியின் போது தவறி விழுந்து தொடையில் காயம் ஏற்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு ஜூன் 24 அன்று அவரது கணவர் ருடால்ப் புற்றுநோயால் இறந்தார். டயட்ரிச் இறுதியாக டேவிட் போவி நடித்த "ஜெஸ்ட் எ ஜிகோலோ"(1979) என்ற படத்தில் தலைப்புப் பாடலைப் பாடினார்.அத்துடன் அவரது திரைவாழ்வு முடிவடைந்தது.

ஒரு மது மற்றும் வலி நிவாரணிகளைச் சார்ந்து அவருடைய வாழ்க்கையின் இறுதி 11 ஆண்டுகளைப் பெரும்பாலும் படுக்கையிலேயே கழித்தார்.இந்த நேரத்தில் அவர் தனது சுயசரிதையை என் உயிரை எடுத்துக்கொள் என்று பொருள்படும் நேகட் நுர் மைன் லெபென்(Nehmt nur mein Leben) என்ற நூலை எழுதினார்.இது 1979 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது .

தனது 90 ஆவது வயதில் 1992 மே 7 அன்று பாரிசில் அவருடைய குடியிருப்பில் சிறுநீரகச் செயலிழப்பால் டயட்ரிச் மரணமடைந்தார். அவர் ஒரு நாத்திகராக இருந்தும் 1992 ஆம் ஆண்டு மே 14 ல் பாரிஸின் லா மாடெலெய்ன் கத்தோலிக்க தேவாலயத்தில் அவரது இறுதிச் சடங்கு நடைபெற்றது.பேர்லின் சுவர் வீழ்ச்சிக்குப் பின்னர் டயட்ரிசின் உடல் அவர் விருப்பப்படி அவரது சொந்த ஊரில் அவரது தாயின் கல்லறைக்கு அருகில் புதைக்கப்பட்டது.

1992 இல் பெர்லினின் செனோபெர்க்கில் டீட்ரிக் பிறந்த இடமான (Schöneberg) லெபெர்ஸ்ட்ரே 65 (Leberstraße 65) ல் அவரது நினைவு தகடு ஒன்று திறக்கப்பட்டது. 1997 ஆகத்து 14 ம் நாள் செருமனி அரசு டீட்ரிக்கின் உருவப்படம் பதித்த அஞசல் தலையை வெளியிட்டது.

ஆடம்பர பேனா தயாரிப்பு நிறுவனமான மான்ட்பிளாங்க் (MontBlanc) (மார்லின் டீட்ரிக்) "Marlene Dietrich" என்ற பெயர் பதித்த வரையறுக்கப்பட்ட பதிப்புகளை டீட்ரிக்கின் நினைவை போற்றும் விதமாக வெளியிட்டு சிறப்பித்தது. அப்பேனா பிளாட்டின முலாம் பூசப்பட்ட ஆழ் நீலநிற நீலக்கல் (sapphire) பதிக்கப்பட்டிருந்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Marlene Dietrich to be US Citizen". Painesville Telegraph. 6 March 1937. https://news.google.com/newspapers?id=VPtlAAAAIBAJ&sjid=WUgNAAAAIBAJ&pg=5104,3190136&dq=marlene+dietrich+american+citizen&hl=en. 
  2. "Citizen Soon". The Telegraph Herald. 10 March 1939. https://news.google.com/newspapers?id=UN5BAAAAIBAJ&sjid=AaoMAAAAIBAJ&pg=5899,2663618&dq=marlene+dietrich+american+citizen&hl=en. 
  3. "Seize Luggage of Marlene Dietrich". Lawrence Journal World. 14 June 1939. https://news.google.com/newspapers?id=YSRdAAAAIBAJ&sjid=vloNAAAAIBAJ&pg=3524,1115404&dq=marlene+dietrich+american+citizen&hl=en. 
  4. "AFI's 50 Greatest American Screen Legends". American Film Institute இம் மூலத்தில் இருந்து 25 அக்டோபர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141025072655/http://www.afi.com/100Years/stars.aspx. பார்த்த நாள்: 30 August 2014. 
  5. இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் The Blue Angel (1930)
  6. "From the Observer archive, 6 March 1960: Marlene Dietrich's wardrobe secrets". தி கார்டியன். பார்க்கப்பட்ட நாள் 11 September 2016.
  7. Gammel 2012, ப. 373.

வெளியிணைப்புகள்

[தொகு]