உள்ளடக்கத்துக்குச் செல்

பெர்ல் பக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.



பெர்ல் எஸ் பக்
பெர்ல் எஸ் பக்
பிறப்பு ஜூன் 26, 1892
ஹில்ஸ்பரோ, மேற்கு வர்ஜீனியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள்
இறப்பு மார்ச் 6, 1973
டான்பி, வெர்மாண்ட், ஐக்கிய அமெரிக்க நாடுகள்


பெர்ல் பக் (Pearl S. Buck, ஜூன் 26, 1892மார்ச் 6, 1973) என்னும் பெண்மணி ஒரு புகழ் பெற்ற அமெரிக்க புதின எழுத்தாளர் (நாவலாசிரியர்). இவர் 1932 ஆம் ஆண்டில் புலிட்சர் பரிசும், 1938 ஆம் ஆண்டில் நோபல் பரிசும் பெற்ற எழுத்தாளர்.

வாழ்க்கை

[தொகு]

இவர் 1892ல் பிறந்த பொழுது இவருடைய பெயர் பெர்ல் கம்ஃவொர்ட் சிடென்ஸ்ட்ரிக்கர் (Pearl Comfort Sydenstricker) என்பதாகும். இவர் அமெரிக்காவில் உள்ள மேற்கு வர்ஜீனியாவில் ஹில்ஸ்பரோ என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய தாயாரின் பெயர் காரொலீன் சிடென்ஸ்ட்ரிக்கர். தந்தையாரின் பெயர் அப்சலோம் (ஆண்ட்ரூ) சிடென்ஸ்ட்ரிக்கர். பெற்றோர் இருவரும் கிறித்துவ மதத்தின் உட்பிரிவாகிய தென்பகுதிப் பிரெஸ்பிட்டேரியன் மதம் பரப்புவோர்களாக இருந்தனர். இவர்களின் குடும்பத்தை சீனாவில் ஜியாங்சு மாவட்டத்தில் உள்ள ஷென்ஜியாங்கு நகருக்கு அனுப்பி வைத்த பொழுது பெர்ல் அவர்கள் மூன்று மாத குழந்தையாக இருந்தார். இவர் திரு குங்கு என்னும் சீன ஆசிரியரிடம் இருந்து சீன மொழியை தாய்மொழி போலவே கற்று வந்தார். இவர் தம்து 18 ஆம் அகவையில் (வயதில்), அதாவது 1910ல், அமெரிக்காவுக்குத் திரும்பி வந்து, ராண்டால்ஃவ்-மக்கான் பெண்கள் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற பின் மீண்டும் சீனாவுக்குத் திரும்பினார். சினாவுக்குத்திரும்பிய பின் வேளாண்மைத்துறைப் பொருளாதார வல்லுநர் திரு ஜான் லாசிங் பக் (John Lossing Buck) என்பவரை மே 13, 1917 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு காரொல் என்னும் ஒரு பெண்குழந்தைப் பிறந்தது, எனினும் இக்குழந்தைக்கு மூளை பற்றிய ஒரு கடும் நோய் (மரபணுவழித் தோன்றும் பிழையால் ஏற்படும் ஃவீனைல்-கீட்டோனூரியா, பி.கே.யூ, Phenylketonuria (PKU) என்னும் நோய்) ஏற்பட்டது. பின்னர் 1925ல் பெர்ல் பக் குடும்பத்தினர் ஜேனிஸ் (Janice) என்னும் பெண்ணைத் தத்து எடுத்துக்கொண்டனர். பெர்ல் பக் அவர்களின் குடும்பம் சீனாவில் உள்ள நான்ஜிங் மாவட்டத்திற்குக் குடி பெயர்ந்த பின் பெர்ல் பக் அவர்கள் அங்குள்ள நான்கிங் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் கற்பித்து வந்தார். 1926ல் மீண்டும் ஒருமுறை முதுகலைப் பட்டப் படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்கே நியூயார்க் மாநிலத்தில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற பின் சீனாவுக்குத் திரும்பினார். பக் குடும்பத்தினர் 1934ல் சீனாவில் இருந்து வெளியேறினர். அக்காலத்தில் சீனாவில் ஏற்பட்ட அரசியல் மாறுதல்களினால் இவ்வெளியேற்றம் நிகழ்ந்தது. சீனாவில் இருந்து திரும்பிய பின் அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாநிலத்தில் வாழ்ந்தார். தன் கணவர் ஜான் பக் அவர்களுடன் மண முறிவு கொண்டு, பின்னர் 1935ல் ரிச்சர்ட் ஜே. வால்ஷ் (Richard J. Walsh) என்னும் புத்தக வெளியீட்டாரை மறு மணம் செய்து கொண்டார். இவ் விரண்டாம் கணவருடன் சேர்ந்து ஆறு குழந்தைகளைத் தத்து எடுத்து வளர்த்து வந்தனர்.

எழுத்து

[தொகு]

பெர்ல் பக் அவர்களின் எழுத்துப் பணி 1930ல் தொடங்கியது. 1930ல் எழுதிய முதல் படைப்பானது கிழக்குக் காற்று, பேற்குக்காற்று என்னும் பொருள் படும் ஈஸ்ட் விண்ட் வெஸ்ட் விண்ட் (East Wind West Wind) என்பதாகும். ஆனால் 1931ல் எழுதிய த குட் எர்த் (The Good Earth) (நல்லுலகம்) என்னும் கதையே மிகப்புகழ் வாய்ந்தது. இவருடைய படைப்புகளிலேயே இதுவே தலைசிறந்ததாகக் கருத்தப்படுகின்றது. இக்கதையின் பின்னணி சீனாவில் நிகழ்வதாய் அமைந்துள்ளது. வாங் லுங் என்னும் உழவாளியைப் பற்றியது. வாங் லுங் அவர்களுக்கு மண்மீது இருந்த அன்பு பற்றியும், அவர் எவ்வாறு கடும் பஞ்சம் முதலிய இடர்ப்பாடுகளில் உழன்று பின் மீண்டுவருகிறார் என்பதைப் பற்றியும் மிக அழகாக எழுதியுள்ளார். இக்கதைக்காக பெர்ல் பக் அவர்களுக்கு 1932ல் புலிட்சர் பரிசு வழங்கப்பட்டது. பின்னர் 1938ல் நோபல் பரிசும் வழங்கப்பட்டது.

நற்பணிகள்

[தொகு]

பெர்ல் பக் அவர்கள் மாந்த உரிமைகளைக் காப்பது பற்றி மிகவும் உணர்வெழுச்சியுடன் பணியாற்றினார். (வளரும்).

பெர்ல் பக் பற்றிய நூற்குறிப்புகள்

[தொகு]

வாழ்க்கை வரலாறுகள்

[தொகு]
  • The Exile (1936)
  • Fighting Angel (1936)

தன் வரலாறுகள்

[தொகு]
  • My Several Worlds (1954)
  • A Bridge For Passing (1962)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்ல்_பக்&oldid=2707645" இலிருந்து மீள்விக்கப்பட்டது