உள்ளடக்கத்துக்குச் செல்

புதுச்சேரி ஆயி மண்டபம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயி மண்டபம், புதுச்சேரி

ஆயி மண்டபம் என்பது புதுச்சேரி மாநில அரசின் சின்னமாகத் திகழ்கிற மண்டபமாகும். இது புதுவை மாநில சட்டப்பேரவைக்கு எதிரேயுள்ள பாரதி பூங்காவில் அமைந்துள்ளது. கிரேக்க - ரோமானிய கட்டிடக்கலை அழகுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவுச்சின்னம் 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆயி என்ற தாசி, குளம் வெட்டி குடிநீர்ப் பஞ்சம் தீர்த்த மக்கள் தொண்டின் நினைவைப் போற்றும் வகையில் எழுப்பப்பட்டுள்ளது.

வரலாறு

[தொகு]

கிருஷ்ணதேவராயர் தமது ஆளுகைக்குட்பட்டிருந்த புதுவையைப் பார்க்க வரும்போது முத்தரையர்பாளையத்தில் இருந்த ஒரு கோயில் போன்ற மாளிகையைக் கண்டு வணங்குகிறார். அது தாசி ஆயியின் இல்லம். தாசியின் இல்லத்தைக் கண்டு மன்னர் கும்பிடுவதைக் கண்ட சிலர் நகைக்க உண்மை அறிந்து கிருஷ்ணதேவராயர் கோபம்கொண்டு மாளிகையை இடிக்க உத்தரவிட்டதாகவும், ஆயி அரசரிடம் இறைஞ்சி அவகாசம் பெற்று அம்மாளிகை இருந்த இடத்தில் மக்களுக்குப் பயன்படும் வகையில் குளம் வெட்டியதாகவும் வழங்கிவருகிறது. இதுவே முத்தரையர்பாளையம் ஆயி குளம் என்பதாகும். பின்னர் புதுச்சேரி பிரன்ச்சு குடியிருப்பான பின்பு, புதுவையில் ஏற்பட்ட தண்ணீர்த் தட்டுப்பாட்டை நீக்க கவர்னர் போன்டெம்ப்ஸ் வேண்டுகோளின்பேரில், பிரெஞ்சு மன்னர் மூன்றாம் நெப்போலியன் அனுப்பிவைத்த பொறியாளர் லாமைரெஸ்சே ஆயி குளத்திலிருந்து இன்று பாரதி பூங்கா உள்ள இடம்வரை கால்வாய் வெட்டினார். இது புதுச்சேரியின் குடிநீர்த் தட்டுப்பாட்டுப் பிரச்சினையைத் தீர்த்தது. இவ்வாறு தனது மாளிகையை இடித்து குளம்வெட்டி மக்கள் தொண்டாற்றிய தாசியின் கதையை அறிந்த மூன்றாம் நெப்போலியன் பணித்ததின் பேரில் ஆயியைச் சிறப்பிக்கும்பொருட்டு இம்மண்டபம் ஏற்படுத்தப்பட்டது. இது கட்டப்பட்ட காலம் 1852 - 1870 ஆகும்[1][2].

குறிப்புதவி

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]