நிசாத நாடு
நிசாத நாடு அல்லது நிடத நாடு (Nishada kingdom) (niśāda), மகாபாரத காவியம் கூறும் பண்டைய பரத கண்ட நாடுகளில் ஒன்றாகும்.[1] நிசாத இன மக்களின் பெயராலேயே, நிசாத நாடு அழைக்கப்படுகிறது. நிசாத இன மக்களில் புகழ் பெற்றவர்கள் வால்மீகி, குகன், நளன் மற்றும் ஏகலைவன் ஆவார்.
நிசாத இன மக்கள் காடுகளிலும்; மலைகளிலும் விலங்குகளை வேட்டையாடியும், ஆறுகளில் மீன் பிடித்தும், படகோட்டியும் வாழ்க்கை நடத்துபவர்கள்.[2] இவர்கள் விந்திய மலைத்தொடர்களில் வாழ்பவர்கள் என்று மகாபாரதம் கூறுகிறது. (மகாபாரதம் 12: 58).
நிசாத நாட்டின் அமைவிடம்
[தொகு]நிசாத நாடு ஆரவல்லி மலைத்தொடரில், தற்கால இராஜஸ்தான் மாநிலத்தின் பில்வாரா மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டது. ஏகலைவன் ஆட்சி செய்த நிசாத நாடு மட்டுமின்றி, மத்திய இந்தியா மற்றும் தென்னிந்தியாவில் பல நிசாத இன மக்களின் நாடுகள் இருந்தது. நிசாத இன ஏகலைவன், மத்திய இந்தியாவின் பில் பழங்குடி இனத்தைச் சார்ந்தவர் என மகாபாரதம் கூறுகிறது.[3]
இராமாயணக் குறிப்புகள்
[தொகு]இராமாயண காவியம் இயற்றிய வால்மீகி முனிவர் நிசாத இன வேடுவர் ஆவார். பதினான்கு ஆண்டுகள் காடுறை வாழ்வு மேற்கொள்வதற்காக இலக்குவனுடன் சென்ற இராமரையும், சீதையையும், கங்கை ஆற்றை கடக்க படகோட்டி உதவிய குகன், நிசாத இன மன்னர் ஆவார்.[4]
மகாபாரதக் குறிப்புகள்
[தொகு]மகாபாரதம் கூறும் நிசாதர்கள் அல்லது சபரர்கள் காட்டில் வேட்டையாடுபவர்கள் எனக் குறித்துள்ளது.[5] நிசாத இனத்தவர்கள் காடுகளையும், மலைகளையும், ஆறுகளையும் ஆளும் மக்கள் என்றும், நிசாதர்களின் மன்னரை வேணன் என்றும் அழைப்பர். (மகாபாரதம் 12: 58 & 12: 328). விதர்ப்ப நாட்டு இளவரசி தமயந்தியை மணந்த நிசாத நாடு அல்லது நிடத நாட்டின் மன்னர் நளன் ஆவார். (மகாபாரதம் 3: 61)
குரு நாட்டின் மன்னர் சந்தனுவின் இரண்டாம் மனைவி சத்தியவதி, கங்கை ஆற்றில் படகோட்டும் நிசாத இன மீனவப் பெண் ஆவார்.
துரோணரை மனதளவில் குருவாகக் கொண்டு, அவரது உருவச்சிலை அமைத்து வழிபட்டு, வில் வித்தையை முழுவதுமாக கற்றவர் ஏகலைவன். கை கட்டை விரலை குரு தட்சணையாக கேட்ட துரோணருக்கு, ஏகலைவன் தன் கட்டை விரலை வெட்டிக் கொடுத்தவர். (மகாபாரதம், ஆதி பருவம், அத்தியாயம் )
நிசாதர்களின் புகழ்பெற்ற மன்னர் ஏகலைவன், துவாரகை நகரை முற்றுக்கையிட்ட போது, கிருட்டிணால் போரில் கொல்லப்பட்டார்.[6]
நளன் - தமயந்தி வரலாறு
[தொகு]நிசாதர்களின் புகழ் பெற்ற மன்னர் வீரசேனரின் மகன் நளன், விதர்ப்ப நாட்டு இளவரசி தமயந்தியை மணந்து, சூதாட்டத்தில் நாட்டை இழந்து, மனைவியை துறந்து, பின்னர் இருவரும் ஒன்றிணையும் வரலாற்றை, வன பருவத்தின் போது முனிவர்களால் தருமருக்கு கூறப்படுகிறது. (மகாபாரதம், வன பருவம், அத்தியாயம் 50 & 61)
குருச்சேத்திரப் போரில் நிசாதர்கள்
[தொகு]குருச்சேத்திரப் போரில் நிசாத இனப் படைகள், பாண்டவர் அணியிலும், கௌரவர் அணியில் இணைந்து போரிட்டனர்.
பாண்டவர் அணியில்
[தொகு]தென்னிந்திய நிசாதர்கள், பாண்டவர் அணியில் இணைந்து போரிட்டனர். (மகாபாரதம், துரோண பருவம், அத்தியாயம், 6: 50 & 8: 49)
கௌரவர் அணியில்
[தொகு]கௌரவர் அணியின் சார்பாக போரிட்ட வட இந்திய நிசாத நாட்டு இளவரசன் கேதுமது என்பவனை, கலிங்கர்களுடன், வீமன் தனது கதாயுதத்தால் அடித்துக் கொன்றான். (மகாபாரதம் 6: 54) குருச்சேத்திரப் போரில், நிசாத நாட்டுப் படைகள் பல முறை போரிட்டுள்ளது. (6: 118), (7: 44), (8: 17, 20, 22, 60, 70).
இதனையும் காண்க
[தொகு]உசாத்துணை
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gopal, Ram (1983). India of Vedic Kalpasūtras (2 ed.). Motilal Banarsidass. p. 116. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780895816351. பார்க்கப்பட்ட நாள் 9 March 2016.
- ↑ Anand; Sekhar, Rukmini (2000). Vyasa and Vighneshwara. Katha. p. 31. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788187649076. பார்க்கப்பட்ட நாள் 9 March 2016.
- ↑ Robin D. Tribhuwan (2003). Fairs and Festivals of Indian Tribes. Discovery Publishing House. p. 233. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788171416400. பார்க்கப்பட்ட நாள் 9 March 2016.
- ↑ Ramayana by Valmiki, Gita Press publication, Gorakhpur, India
- ↑ The Cultural Process in India by Irawati Karve, Vol. 51, Oct., 1951 (Oct., 1951), pp. 135-138
- ↑ Manish Kumar. Eklavya. Prabhat Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789351861447.