உள்ளடக்கத்துக்குச் செல்

துப்ருக் முற்றுகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துப்ருக் முற்றுகை
மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் பகுதி

டோபுருக் அரண்நிலைகளில் ஆஸ்திரேலிய வீரர்கள்
நாள் 10 ஏப்ரல் – 27 நவம்பர் 1941
இடம் துப்ருக், லிபியா
தெளிவான நேச நாட்டு வெற்றி[1]
பிரிவினர்
 ஆத்திரேலியா
செக்கோசிலோவாக்கியா செக்கஸ்லொவாக்கியா
போலந்து போலந்து
ஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியம்
இந்தியா பிரிட்டானிய இந்தியா
நாட்சி ஜெர்மனி நாசி ஜெர்மனி
இத்தாலி இத்தாலி
தளபதிகள், தலைவர்கள்
ஆத்திரேலியா லெஸ்லி மோர்ஸ்ஹெட் (செப் '41 வரை)
ஐக்கிய இராச்சியம் ரொனால்ட் ஸ்கோபி (fசெப் '41 முதல்)
நாட்சி ஜெர்மனி எர்வின் ரோம்மல்
பலம்
27,000[2] 35,000
இழப்புகள்
3,000+ மாண்டவர் + காயமடைந்தவர்
941 போர்க்கைதிகள்
8,000

துப்ருக் முற்றுகை (டொப்ருக் முற்றுகை, Siege of Tobruk) இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு முற்றுகை. இது மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் ஒரு பகுதியாகும். இதில் ஜெனரல் எர்வின் ரோம்மல் தலைமையிலான இத்தாலிய-ஜெர்மானியப் படைகள் டோபுருக் துறைமுகத்தைக் கைப்பற்ற முயன்று தோற்றன.

1940ல் இத்தாலியின் எகிப்து படையெடுப்புடன் வடக்கு ஆப்பிரிக்காவில் இரண்டாம் உலகப் போர் நிகழ்வுகள் தொடங்கின. இதற்கு நேச நாட்டுப் படைகள் நிகழ்த்திய எதிர்த்தாக்குதலை சமாளிக்க முடியாமல் இத்தாலி நாசி ஜெர்மனியின் உதவியை நாடியது. பெப்ரவரி 1941ல் ஜெர்மனியின் ஆப்பிரிக்கா கோர் படைப்பிரிவு ஜெனரல் எர்வின் ரோம்மல் தலைமையில் இத்தாலியின் உதவிக்காக வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனைக்கு அனுப்பப்பட்டது. வந்திறங்கிய ஒரு மாதத்துள் நிலையை ஓரளவு சீர் செய்த ரோம்மல் இத்தாலி இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் இறங்கினார். மார்ச் 25ம் தேதி மேற்கு நோக்கி ரோம்மலின் முன்னேற்றம் தொடங்கியது. அவரது முதன்மை இலக்குகளில் ஒன்று லிபியக் கடற்கரையோரச் சாலையின் மேல் அமைந்திருந்த டோபுருக் துறைமுகத்தைக் கைப்பற்றுவது. துப்ருக்கை ஜனவரி மாதம் இத்தாலியிடமிருந்து நேச நாட்டுப் படைகள் கைப்பற்றிய பின்னர் அதனைப் பாதுக்காக்கும் பொறுப்பு ஆஸ்திரேலியப் படைகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவை தவிர வேறு சில பிரித்தானிய இந்தியப் படைப்பிரிவுகளும் டோபுருக்கில் இருந்தன. ஆக மொத்தம் 36,000 நேச நாட்டுப் படை வீரர்கள் டோபுருக்கில் இருந்தனர். ஏப்ரல் 10ம் தேதி டோபுருக்கை அடைந்த ரோம்மலின் படைகள் அதனை முப்புறமும் முற்றுகையிட்டன. (கடல்புறம மட்டும் சூழப்படவில்லை). ஆப்பிரிக்கா கோரைத் தவிர சில இத்தாலிய டிவிசன்களும் இம்முற்றுகையில் பங்கேற்றன.

முற்றுகை தொடங்கிய சில நாட்களுக்குள்ளாகவே துப்ருக்கைக் கைப்பற்ற முதல் பெரும் தாக்குதலை நடத்தினார் ரோம்மல். ஏப்ரல் 11ம் தேதி எல் ஆடெம் சாலை வழியாக நடைபெற்ற இத்தாக்குதலை நேச நாட்டுப்படைகள் முறியடித்துவிட்டன. முதல் தாக்குதல் தோற்றபின்னரும் அடுத்த சில வாரங்களில் வேறு திசைகளில் இருந்து துப்ருக்கைத் தாக்கிய ரோம்மல் அவற்றிலும் தோல்வியை சந்தித்தார். ஆரம்ப கட்ட தாக்குதல்களுக்குக்குப் பின்னர் இரு தரப்பினரும் ஒரு நீண்ட முற்றுகைக்குத் தயாராகினர். பல மாத காலம் நீடித்த இந்த முற்றுகையின் போது பிரிட்டானியப் படைகள் டோபுருக்கை விடுவிக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டன. மே மாதம் தொடங்கப்பட்ட பிரீவிட்டி நடவடிக்கையும் ஜூனில் நிகழ்ந்த பேட்டில்ஆக்சு நடவடிக்கையும் தோல்வியடைந்தன. நவம்பரில் நடத்தப்பட்ட குரூசேடர் நடவடிக்கை வெற்றி பெற்று, டோபுருக்கை முற்றுகையிட்டிருந்த ரோம்மலின் படைகள் விரட்டப்பட்டன. நவம்பர் 18ம் தேதி 240 நாட்கள் நீடித்திருந்த டோபுருக் முற்றுகை முடிவு பெற்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Jentz, p. 128
  2. Fitzsimons (2007), p. 250.