சோழகங்கம் ஏரி
சோழகங்கம் ஏரி (தற்காலத்தில் பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது) என்பது தமிழ்நாட்டின், அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள ஒரு ஏரியாகும்.
வரலாறு
[தொகு]சோழப் பேரரசின் மன்னனான இராசேந்திர சோழன் கி.பி. 1012 இருந்து 1044 வரை சோழப் பேரரசை ஆண்டார். இவன் தனது காலத்தில் கங்கைகொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரையும், அங்கு இந்த ஏரியையும் வெட்டினான். வட இந்தியாவுக்கு தன் படைகளை அனுப்பி பல வட இந்திய அரசர்களை வெற்றிகொண்டு அதன் அடையாளமாக கங்கையிலிருந்து பொற்குடங்களில் கங்கை நீரை கொண்டுவந்து அந்த நீரை தான் வெட்டிய பெரிய ஏரியில் கலந்து அதனை ‘சோழகங்கம்’ என்ற பெயரைச் சூட்டினான்.[1] இந்த ஏரிக்காக கொள்ளிடத்திலிருந்து அறுபது கல் தொலைவுக்குக் கால்வாய் வெட்டி, சோழகங்கத்துக்கு நீர்வழித் தடம் உருவாக்கப்பட்டது. கல்லணைக்கு ஏறத்தாழ 5 கல் கிழக்கே அன்பில் - செங்கரையூர் சாலையில் - கொள்ளிடத்தின் வடகரையில் அரியூரை அடுத்து அந்த நீர்வழித் தடத்தின் தலைவாய் அமைந்திருந்தது. அங்கு அமைக்கப்பட்ட மதகின் எச்சம் இன்றும்கூட கொள்ளிடத்தின் வடகரையை ஒட்டிச் சிதைந்த நிலையில் உள்ளது.[2]
பரப்பும் ஆயக்கட்டும்
[தொகு]இந்த ஏரி 16 மைல் நீளமும் 3 மைல் அகலமும் கொண்டதாக வெட்டப்பட்டது. நீரை வெளியேற்ற கலிங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதன் வடிகாலாக வீராணம் ஏரி இருந்தது. இந்த ஏரியானது குருவாலப்பர் கோவில், ஆமணக்கன் தோண்டி, உட்கோட்டை, பிச்சனூர் என்னும் நான்கு ஊராட்சிகளை தழுவிக் கிடக்கிறது. 4800 மீட்டர் நீளம் கொண்ட இதன் மொத்த பரப்பளவு 824 ஏக்கர். மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதி 2,811 சதுர கிலோ மீட்டர். கரை உயரம் 35.280 மீட்டர். மிகையான நீர்மட்ட அளவு 34.080 மீட்டர். ஏரியின் மொத்த கொள்ளளவு 0.3241 கோடி கன மீட்டர். பதிவு பெற்ற ஆயக்கட்டு நிலங்கள் 1574 ஏக்கர். பதிவு பெறாத ஆயக்கட்டு நிலங்கள் ஆயிரம் ஏக்கர் ஆகும். இந்த ஏரி 1957க்குப் பிறகு தூர்வாரப்படாமல் பல ஆக்கிரமிப்புகளுக்கு ஆளாகியுள்ளது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ டாக்டர். மா. இராசமாணிக்கனார். "இராசேந்திர சோழன்". கட்டுரை. விக்கிமூலம். பார்க்கப்பட்ட நாள் 15 ஆகத்து 2018.
- ↑ க.நெடுஞ்செழியன் (14 ஆகத்து 2018). "கடலில் கலக்கும் காவிரி: உயிர்பெறுமா சோழகங்கம்?". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 15 ஆகத்து 2018.
- ↑ குள.சண்முகசுந்தரம் (25 சூன் 2015). "பூர்வாங்கத்தைத் தேடி ஒரு பயணம்: மண்ணாகிப் போன பொன்னேரி என்ற சோழகங்கம்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 15 ஆகத்து 2018.