உள்ளடக்கத்துக்குச் செல்

சின்ன வீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சின்ன வீடு
இயக்கம்பாக்யராஜ்
தயாரிப்புசி. கே. கண்ணன்
எம். கே. ராமச்சந்திரன்
கதைபாக்யராஜ்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுபி. ஆர். விஜயலட்சுமி
படத்தொகுப்புஏ. செல்வநாதன்
கலையகம்ஜெயா விஜயா மூவீசு
விநியோகம்சரண்யா சினி கம்பைன்சு
வெளியீடு11 நவம்பர் 1985
ஓட்டம்143 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சின்ன வீடு (chinna veedu) 1985ஆம் ஆண்டு பாக்யராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி, கதாநாயகனாக நடித்து வெளிவந்த தமிழ்த் திரைப்படம். வணிகரீதியில் வெற்றி பெற்ற திரைப்படம்.[சான்று தேவை] நடிகை கல்பனா தமிழில் அறிமுகமான முதல் திரைப்படம். இவர் 1983ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான முந்தானை முடிச்சு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ஊர்வசியின் சகோதரி ஆவார்.

கதைச்சுருக்கம்

[தொகு]

மதனகோபால் (பாக்யராஜ்) மிக அழகான பெண்ணைத் திருமணம் செய்ய விரும்பும் இளைஞன். பெற்றோர்களின் வற்புறுத்தலால் அவன் விருப்பமின்றி பாக்யலட்சுமியைத் (கல்பனா) திருமணம் செய்யும் சூழல் ஏற்படுகிறது. பெண்ணின் நிழற்படத்தைப் பார்த்து அவள் மிகப் பருமனாக இருப்பதைக் கண்டு, தான் விரும்பியதுபோல் இல்லாததால் அதிர்ச்சியடைகிறான். திருமண நாளன்று தப்பித்துச்சென்று ராணுவத்தில் சேர நேர்காணலில் கலந்துகொள்ளச் சென்றவனைக் கண்டுபிடித்து அவன் சகோதரிக்கு பாக்யலட்சுமியின் சகோதரனைத் திருமணம் செய்வதால், மதனகோபாலுக்கும் கட்டாயப்படுத்தித் திருமணம் செய்துவைக்கிறார்கள்.

விருப்பமில்லாதத் திருமணத்தால் முதல் இரவில் மனைவியிடம் அவள் தனக்குப் பொருத்தமில்லாதவள் எனவே உன்னுடன் வாழ முடியாது என்று சண்டையிடுகிறான். பாக்கியலட்சுமி அவன் நிலையை புரிந்து அமைதியுடன் இருக்கிறாள். இருவரும் உடலுறவு தொடர்பின்றி வாழ்கிறார்கள். பாக்கியலட்சுமியைத் திருமணம் செய்து அவளுக்கு வாழ்வு கொடுத்துத் தியாகம் செய்துள்ளதாக எண்ணும் மதனகோபால் அவளின் தந்தையிடம் (ஜெய்கணேஷ்) மரியாதையின்றி நடந்துகொள்கிறான். கணவனை மிகவும் நேசிப்பதாலும் தன்னுடைய தாழ்வு மனப்பான்மையாலும், அவனது முட்டாள்தனங்களை சகித்துக் கொள்கிறாள் பாக்கியலட்சுமி. மாமனாரின் உதவியால் கிடைக்கும் வங்கி வேலைக்குச் செல்லும் மதனகோபால் அங்கு தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்று அனைவரிடமும் அறிமுகப்படுத்திக் கொள்கிறான். பாக்யலட்சுமியின் வீட்டிற்கு வரும் அவளின் சகோதரன் சக்ரவர்த்தி (சக்ரி டோலெட்டி) மதனகோபாலின் நடவடிக்கைகளை அவனைப் பின்தொடர்ந்து அறிந்து தன் சகோதரியிடம் தெரிவிக்கிறான். தன் மகள் கர்ப்பமாக இருப்பதை அறியும் கோபாலின் தாய் (கோவை சரளா), மருமகள் இன்னும் கர்ப்பம் தரிக்கவில்லை என்று திட்டுகிறாள். இதனால் கோபப்பட்டு மனைவியுடன் உறவுகொள்ளும் மதனகோபால் தான் இரக்கப்பட்டு உறவுகொண்டதாகக் கூறுகிறான். இதைக்கேட்டுக் கோபப்படும் பாக்கியலட்சுமி கணவனின் அன்பைத்தான் விரும்புகிறேன் இரக்கத்தை அல்ல என்று சொல்கிறாள்.

மரகதாம்பாள் என்ற பெண் வங்கியில் வாங்கிய கடனைக்கேட்டுச் செல்லும் மதனகோபாலிடம் அவளின் பேத்தி பானு(அனு) தாங்கள் இருவரும் பணக்கஷ்டத்தில் இருப்பதாகக் கூறுகிறாள். இதனால் இரக்கப்பட்டு வங்கியில் கடனைத் திரும்பிச் செலுத்த காலநீட்டிப்புப் பெற்றுத்தருகிறான். இதனால் பானுவுடன் நெருக்கமாகப் பழகத்துவங்கி அவள் வீட்டுக்கு அடிக்கடி வருகிறான். பானுவுடன் உறவுகொள்ளும் அவனைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்கிறாள். அவன் ஏற்கனவே திருமணமானவன் என்பதை அறிந்து அதிர்ச்சியாகிறாள். ஒரு குடும்பப்பெண்ணின் வாழ்க்கையைக் கெடுத்துவிட்டதாக எண்ணி அங்கிருந்து வெளியேறுகிறான். ஆனால் பானு பாலியல் தொழில் செய்து சம்பாதிப்பவள். மரகதாம்பாள் அவளுடைய வேலைக்காரி. இவர்கள் இருவரும் திட்டமிட்டு மதனகோபாலை தங்கள் சதிவலையில் சிக்கவைத்துள்ளார்கள். இதே சமயம் பாக்கியலட்சுமி கர்ப்பமானதால் அவள் மீது அன்போடு நடந்துகொள்கிறான். மதனகோபால் தன்னை சந்திக்கவராததால் தன்னிடமிருந்து தப்பிக்க விடக்கூடாது என என்னும் பானு தான் கர்ப்பமாக இருப்பதால் தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி மிரட்டுகிறாள். விபச்சார வழக்கில் தன்னை கைது செய்ய வரும் காவல்துறையிடம் தான் மதனகோபாலின் மனைவி என்று சொல்வதை மதனகோபாலும் ஒத்துக்கொள்கிறான்.

இந்தச் செய்தியறிந்த மதனகோபாலின் குடும்பத்தினர் அவனைத் திட்டுகின்றனர். ஆனாலும் பாக்கியலட்சுமி தன் கணவன்மீது நம்பிக்கையுடன் இருக்கிறாள். பானுவின் பித்தலாட்டத்தை கையும் களவுமாக பிடிக்கும் மதனகோபால் இனி தன் வாழ்வில் தலையிடக்கூடாது என்று எச்சரிக்கிறான். இதனால் கோபமடையும் பானு தன்னை இரண்டாம் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக அவன்மீது காவல்நிலையத்தில் புகார் செய்ய அவன் கைது செய்யப்படுகிறான். பாக்கியலட்சுமி தன் கணவனை விட்டுவிடும்படி பானுவிடம் வைக்கும் வேண்டுகோளைப் புறக்கணித்து நீதிமன்றத்தில் சந்திக்கலாம் என்கிறாள். நீதிமன்றத்தில் இதற்குமுன் பானு நிறையபேர் ஏமாற்றப்பட்டுள்ளதை ஆதாரத்தோடு நிரூபிக்கும் பாக்கியலட்சுமி வழக்கில் வெற்றி பெறுகிறாள். இதனால் பாக்யலட்சுமியை பழிவாங்க அவளைக் கொல்லத் திட்டமிடுகிறாள் பானு. இதை அறிந்து பானுவைக் காப்பாற்ற வருகிறான் மதனகோபால். அந்த சண்டையில் கணவனைக் காப்பாற்றச் செல்லும்போது நிறைமாத கர்ப்பிணியான பாக்கியலட்சுமி படுகாயமடைகிறாள். பின் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவளுக்குக் குழந்தை பிறக்கிறது. அதன்பின் மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்துகின்றனர்.

நடிகர்கள்

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

நடிகை கல்பனா தமிழில் அறிமுகமான முதல் திரைப்படம். இவர் 1983 ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான முந்தானை முடிச்சு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆன ஊர்வசியின் சகோதரி ஆவார். தன் 23 வயதில் பாக்கியராஜின் தாயாக வயதானத் தோற்றத்தில் கோவை வட்டார வழக்கில் பேசிச் சிறப்பாக நடித்து பெரும் பாரட்டைப் பெற்றார் கோவை சரளா. தமிழ் திரைப்படங்களில் முதல் பெண் ஒளிப்பதிவாளராக பி.ஆர்.விஜயலட்சுமி இப்படத்தில் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

இசை

[தொகு]

இப்படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா. "சிட்டுக்குருவி" என்று துவங்கும் பாடல் புஷ்பலத்திகா ராகத்தில் இசையமைக்கப்பட்டது.

வ.எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் கால அளவு
1 அட மச்சமுள்ள எஸ். பி. பாலசுப்பிரமணியம் , எஸ்.ஜானகி, எஸ். பி. சைலஜா, டி. வி. கோபாலகிருஷ்ணன் முத்துலிங்கம் 05:07
2 சிட்டுக்குருவி எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி வைரமுத்து 04:33
3 ஜாக்கிரத ஜாக்கிரத இளையராஜா, தீபன் சக்ரவர்த்தி நா. காமராசன் 03:45
4 ஜாமம் ஆகிப்போச்சு மலேசியா வாசுதேவன், கே. எஸ். சித்ரா குருவிக்கரம்பை சண்முகம் 04:33
5 வா வா சாமி எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி சின்னக்கோனார் 04:30
6 வெள்ளை மனம் உள்ள மச்சான் மலேசியா வாசுதேவன், சுனந்தா புலமைப்பித்தன் 04:22

சர்ச்சை

[தொகு]

2018ல் விஜய் நடிப்பில் உருவான சர்கார் திரைப்படம் வெளியாவதற்கு முன்பு ஏற்பட்ட அப்படத்தின் கதை தொடர்பான சர்ச்சையில் பேட்டியளித்த இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் சின்ன வீடு திரைப்படத்தின் கதையும் அதற்கு முன்னர் வெளியான கோபுரங்கள் சாய்வதில்லை திரைப்படத்தின் கதையையும் ஒப்பிட்டு கேள்வி எழுப்பியிருந்தார். இதுகுறித்து எழுத்தாளர் சத்யப்ரியன், இந்த சர்ச்சைகளுக்கு முன்பே பாக்யராஜ் ஒரு மேடையில் பேசியத்தைக் குறிப்பிடுகிறார். "முந்தானை முடிச்சு படத்திற்கு முன்பே ஏ.வி.எம் நிறுவனத்திற்கு சின்ன வீடு படத்தை எடுக்க விரும்பியதாகவும், படத்தின் பெயர் காரணமாகவும், கலைமணி அவர்கள் இதேபோல் கதையை சொந்தப்படமாக எடுப்பதை அறிந்த ஏ.வி.எம் அதில் குறுக்கிட விரும்பாததால் முந்தானை முடிச்சு படத்தை இயக்கினேன்" என்று பாக்யராஜ் பேசியுள்ளார் பரணிடப்பட்டது 2020-09-24 at the வந்தவழி இயந்திரம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/k-bhagyaraj-ready-to-direct-chinna-veedu-2-movie/articleshow/67600304.cms
  2. https://antrukandamugam.wordpress.com/2016/01/27/30660/
  3. https://antrukandamugam.wordpress.com/2017/12/17/chinna-veedu-anu/
  4. https://www.discogs.com/Ilaiyaraaja-Chinna-Vedu/release/9296076
  5. http://www.puthiyathalaimurai.com/news/cinema/53358-ar-murugadoss-hits-back-with-proof-of-sarkar-story-issue-in-detail.html
  6. https://patrikai.com/is-chinn-vedu-a-stolen-story-bhagyaraj-has-already-explained/ பரணிடப்பட்டது 2020-09-24 at the வந்தவழி இயந்திரம்
  7. https://tamil.indianexpress.com/entertainment/ar-murugadoss-blames-director-bhagyaraj-on-sarkar-issue/
  8. https://tamil.filmibeat.com/news/cinematographer-director-makes-come-back-tamil-cinema-048127.html

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்ன_வீடு&oldid=4161249" இலிருந்து மீள்விக்கப்பட்டது