சிக்குன்குனியா
சிக்குன்குனியாத் தீ நுண்மம் | |
---|---|
தீநுண்ம வகைப்பாடு | |
குழு: | Group IV ((+)ssRNA)
|
குடும்பம்: | |
இனம்: | |
துணையினம்: | சிக்குன்குனியா தீ நுண்மம்
|
சிக்குன்குனியா (Chikungunya) என்பது ஒரு தீ நுண்மத்தால் (வைரசால்) பரவும் நோய் ஆகும். இந்த நோய்க்குக் காரணமான தீ நுண்மமானது ஆல்பாத் தீ நுண்மம் வகையைச் சார்ந்தது ஆகும். இந்தத் தீ நுண்மம் ஈடிசு இகிப்தி (Aedes egypti) வகை கொசுக்கள் (இலங்கைத் தமிழ்: நுளம்பு) மூலம் பரவுகின்றன.
இது ஒரு உயிர்க்கொல்லி நோய் அல்ல. ஆனால் 2005-2006 ஆண்டுகளில் ஏறத்தாழ 200 பேர் வரை ரீயூனியன் தீவில் சிக்குன்குனியா தொடர்பான சூழலில் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் உள்ளன.[1]
2006ஆம் ஆண்டில் பல இந்திய மாநிலங்களில் இந்நோய் தொற்றியது. செப்டம்பர் 2006 நிலவரப்படி ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் இந்நோய் கண்டறியப்பட்டுள்ளது. அக்டோபர் 12, 2006 வரை கேரளத்தில் மட்டும் 125 பேர் இந்நோய் தொடர்பாக இறந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்து உள்ளது. இறந்தவர்களில் பெரும்பான்மையோர் ஆலப்புழை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். கேரள அரசு இதை தொற்று நோயாகவும் தமிழக அரசு இதை அறிவிக்கப்பட வேண்டிய நோயாகவும் அறிவித்துள்ளன[2].[broken citation]
2006ஆம் ஆண்டில் இலங்கையில் 100, 000 இற்கும் மேற்பட்டவர்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டனர் [3]. இலங்கையின் தமிழர்கள் பெருமளவில் வாழும் வடக்குக் கிழக்கிலேயே இந்நோய்த்தாக்கம் கூடுதலாக அறியப்பட்டது பின்னர் இது நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பயணிகளினால் பரவியது [4] யாழ்ப்பாணத்தில் 20% மானவர்கள் பாதிக்கப்பட்டனர்[5]. [broken citation]
தற்பொழுது இந்த தீ நுண்மம் ஈடிஸ் அல்போபிக்டஸ் (Aedes Albopictus) அல்லது புலிக் கொசு என்ற வகை கொசு மூலமூம் பரவும் என்று பாரிசில் உள்ள பாஸ்டர் கழகத்தில் கண்டறிந்துள்ளார்கள்.
வரலாறு
[தொகு]இந்நோயின் பெயரான "சிக்குன் குனியா" மகொன்டெ (Makonde) மொழியில் இருந்து வந்ததாகும், இதன் பொருள் வளைந்து இருத்தலைக் குறிக்கின்றது, இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மூட்டு வலியினால் கை கால்கள் மடங்கி குனிந்த நிலையில் இருப்பதால் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. தங்கானிக்கா (தன்சானியாவின் பிரதான நிலப்பகுதி) நாட்டுக்கும் மற்றும் மொசாம்பிக் நாட்டுக்கும் இடையில் உள்ள மகொன்டெ மேட்டுநிலத்தில் 1952ஆம் ஆண்டு இந்த நோய் பரவியதைத் தொடர்ந்து மரியன் ராபின்சன் மற்றும் W.H.R.லூம்ஸ்டன் ஆகியோர் 1955ஆம் ஆண்டு இந்நோய் குறித்து முதன்முதலில் ஆராய்ந்து விளக்கினார்கள்.
1955ஆம் ஆண்டு அறிக்கையின்படி சிக்குன் குனியா என்னும் சொல் மகொன்டெ மொழியின் வேர் வினைச்சொல்லான முறுக்கப்படுதல் என்னும் பொருள் தரும் "குன்குனியாலா" (kungunyala) என்பதில் இருந்து தோன்றியது, ஆராய்வின் தொடர்ச்சியில் ராபின்சன் கூனி வளைந்து இருக்கும் நிலையைக் குறிக்கின்றது எனப் பயன்படுத்தினார். இச்சொல் சுவாகிலி மொழியில் இருந்து பிறந்தது எனத் தவறான எண்ணம் நிலவுகின்றது.
அறிகுறிகள்
[தொகு]மிகைக் காய்ச்சலும் மூட்டு வலியும் இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகும். 39 °C, (102.2 °F) அளவு வரைக்கும் காய்ச்சல் இருக்கக்கூடும். தலைவலி மற்றும் ஒளி ஒவ்வாமையும் இருக்கக்கூடும். பெரும்பாலும், ஓரிரு நாட்கள் நீடித்த பின்னர் காய்ச்சல் குறைந்து விடும். எனினும், கடுமையான தலைவலி, மூட்டுவலி, தூக்கமின்மை ஆகியவை ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை நீடிக்கக்கூடும்.
பண்டுவம் (சிகிச்சை)
[தொகு]சிக்குன்குனியா நோய்க்கு என்று தனிப்பட்ட முறையில் இதுவரை மருந்துகள் ஏதும் இல்லை. 2000ஆம் ஆண்டில் இது குறித்த தடுப்பூசிச் சோதனைகள் செய்யப்பட்டாலும், ஆய்வுக்கான நிதி நிறுத்தப்பட்டதால், தற்பொழுது தடுப்பூசிகள் ஏதும் இல்லை. இந்நோயை உறுதி செய்வதற்கான இரத்தப் பரிசோதனை முறையை குலாலம்பூரில் உள்ள மலாய் பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது. இந்நோய்க்கான மருந்தாக குளோரோகுவின் (Chloroquine) அமையக்கூடும் என்று உலகெங்கும் நடக்கும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்நோய் தாக்கியவர்கள் மேலும் கொசுக்கடிக்கு உள்ளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.இதன் மூலம் நோய் மற்றவர்களுக்குப் பரவுவத்தைக் குறைக்கலாம். இயன்ற வரை வீட்டுக்குள்ளே கொசுவலையின் பாதுகாப்புடன் இருத்தல் நலம் மின்விசிறிகளையும் (fan) கொசுவின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தப் பாவிக்கலாம். மூட்டு வலியின் போது பிறரின் கவனிப்புடன் கூடிய ஓய்வு மிகவும் அவசியமாகும். மிதமான உடற்பயிற்சிகளும் நகர்வும் மூட்டு முடக்கத்துக்கு இதமாக இருந்தாலும் கடினமான பயிற்சிகள் எதிர்மறை விளைவை ஏற்படுத்தக் கூடும்.
ஹோமியோபதி மருத்துவ முறையில் சிக்குன்குனியாவுக்கு மருந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும் இத்தகவல் இன்னும் அறிவியல் முறைப்படி உறுதி செய்யப்படவில்லை. பச்சிலைகளை கொண்டு பண்டுவம் செய்யும் யுனானி மருத்துவ முறை மருந்துகள் மூட்டு வலியைக் குறைப்பதாக கூறப்படுகிறது என்றாலும் இது சிக்குன்குனியாவுக்கு எதிர்ப்பான மருந்தா என்று உறுதி செய்யப்படவில்லை.
சித்த மருத்துவம்
[தொகு]சிக்குன்குனியாவிற்கு பயனளிக்கும் மருந்து சித்த மருத்துவத்தில் உள்ளதாக தமிழக அரசின் உடல்நலம் மற்றும் குடும்ப நலத்துறையின் ஆதார இணைமம் அறிவிக்கிறது [6]. கீழ்க்கண்ட சித்த மருத்துவப் பொருள்கள் பரிந்துரைக்கப்படுகின்றன:
- சுதர்சன் சூரம்
- திரிதோடா மாத்திரை
- நிலவேம்பு கஷாயம்
- பிண்ட தைலம் (வெளி பயன்பாட்டிற்கு)
- கர்ப்பூராதி தைலம் (வெளி பயன்பாட்டிற்கு)
நோய்த் தடுப்பு
[தொகு]சிக்குன்குனியா தீ நுண்மங்களை கொண்டு திரியும் பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்களிடம் இருந்து விலகி இருப்பது இந்நோயைத் தடுப்பதற்கான சிறந்த வழிமுறையாகும். வீட்டுக்கு அருகில் நீர்த் தேங்காமல் பார்த்துக் கொள்வதும் தேங்கிக் கிடக்கும் நீரில் DEET போன்ற கொசு ஒழிப்பு மருந்துகளை தெளிப்பதும் நோய் பரப்பும் கொசுக்களுக்கு இடம் தராமல் தடுக்கும். கை கால்களை மறைக்கும் நீளமான உடுப்புகளை அணிவதும் கதவு, சாளரங்களை திரையிட்டு மறைப்பதும் கொசுக் கடியைக் குறைக்கும்.
கொசுக்கள்
[தொகு]ஈடிசு ஈஜிப்டை, ஈடிசு அல்போபிக்டசு இரு வகைக் கொசுக்களுமே பொதுவாக திறந்தவெளிப் புறங்களில் தான் கடிக்கின்றன; இருப்பினும் ஈஜிப்டை வகைக் கொசு வீடுகளின் உள்புறங்களிலும் உலவுவதால் உள்புறங்களிலும் கடிக்கின்றன; பெரும்பாலும் இவை பகல் நேரங்களிலும், அதிலும் குறிப்பாக விடியல் , மாலை நேரங்களில் அதிகம் கடிப்பவை. இவை இரவில் கடிப்பதில்லை; அதிலும் பெண் கொசுக்கள் தான் கடிக்கின்றன.[7]
இக்கொசுக்களின் இயற்கையான எதிரிகள்
[தொகு]தட்டான் என்றழைக்கப்படும் தும்பிகளின் இளம்புழுக்கள் (dragon-fly nymphs) இவற்றின் திறனான இயற்கை எதிரிகள்;
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணைகள்
[தொகு]- ↑ "terradaily". Mar 21, 2006. பார்க்கப்பட்ட நாள் 30 April 2011.
- ↑ அறிவிக்கப்பட வேண்டிய நோய்கள் பட்டியலில் சிக்குன் குனியா பரணிடப்பட்டது 2007-09-29 at the வந்தவழி இயந்திரம் MSN தமிழ். அணுகப்பட்டது நவம்பர் 22, 2006 (தமிழில்)
- ↑ இலங்கையில் 100, 000 இற்கும் மேற்பட்டவர்கள் சிக்குன்குனியாவால் பாதிப்பு பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம் டெய்லிநியூஸ் அணுகப்பட்டது டிசம்பர் 13, 2006 (ஆங்கில மொழியில்)
- ↑ பயணிகளினால் பரவும் சிக்குன்குனியா டெய்லிநியூஸ் அணுகப்பட்டது டிசம்பர் 13, 2006 (ஆங்கில மொழியில்)
- ↑ யாழ்ப்பாண மக்களின் பிரச்சினைக்கு மேலதிகமாக சிக்குன் குனியாவும் வருத்துகின்றது டெய்லிமிரர் அணுகப்பட்டது டிசம்பர் 13, 2006 (ஆங்கில மொழியில்)
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-09-24. பார்க்கப்பட்ட நாள் 2009-11-24.
- ↑ [உலக சுகாதார மையம் http://www.who.int/mediacentre/factsheets/fs327/en/]
வெளி இணைப்புகள்
[தொகு]- சிக்குன்குன்யா காய்ச்சல்- சில குறிப்புகள் (தமிழில்)
- சிக்குன்குனியா இலங்கையில் பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம் மோர்னிங்க்லீடர் (ஆங்கில மொழியில்)
- சிக்குன்குனியா டெங்குவைப் போன்று அபாயமானதல்ல சண்டே டைம்ஸ் (ஆங்கில மொழியில்)
- சிக்குன்குனியா பற்றிய கட்டுரை பரணிடப்பட்டது 2007-03-15 at the வந்தவழி இயந்திரம் மைக்ரோசாப்ட் வேட் (ஆங்கில மொழியில்)
- சிக்குன் குனியா தமிழ அரசு என்ன செய்கின்றது - முகுந்தராஜின் வலைப்பதிவு (தமிழில்)
- சிக்குன்குனியா பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம் பற்றி களனிப் பல்கலைக் கழக விலங்கியற்துறை விரிவுரையாளர் குமுதினி டெய்லி நியூஸ் ஊடாக (ஆங்கில மொழியில்)
- ‘Super-adapted’ chikungunya virus a possibility