உள்ளடக்கத்துக்குச் செல்

கருட சேவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருட சேவை

கருட சேவை அல்லது கருட வாகன சேவை என்பது வைணவத் தலங்களில் திருமால் கருட வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்வாகும். இந்நிகழ்வு வைணவக் கோயில்களின் பிரம்மோற்சவ விழாவில் நடைபெறுகிறது.

தொன்மக் கதை

[தொகு]

திருமால் சீனிவாசனாக திருப்பதியில் இருந்த பொழுது, தான் வைகுண்டத்தில் இருந்ததைப் போல இங்கும் இருக்க ஆசை கொண்டார். அதனை அறிந்த கருடன், வைகுண்டத்தில் இருக்கும் ஏழு மலையையும் பெயர்த்து எடுத்து திருப்பதியில் சேர்த்தார். அங்கு திருமால் சீனிவாசனாக குடியிருக்கிறார். தான் ஆசைப்பட்டதை செய்த கருடனை தன்னுடைய வாகனமாக ஆக்கிக் கொண்டார். இதனை நினைவு படுத்தும் விதமாக திருப்பதியில் கருட சேவை பிரம்மோற்சவ திருவிழாவின் பொழுது நடத்தப்படுகிறது. [1] தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், திருநாங்கூர், கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் கருட சேவை நடைபெறுகிறது.

காஞ்சி கருட சேவை

[தொகு]

காஞ்சிபுரம் நகரில் வருடத்திற்கு மூன்று முறை கருட சேவை கொண்டாடப்படுகிறது. வைகாசி பிரம்மோற்சவம், ஆனி மாதம், சுவாதி நட்சத்திரம் கூடிய பெரியாழ்வார் சாற்றுமுறை, ஆடி மாதம் பௌர்ணமி கஜேந்திர மோட்சம் ஆகிய விழாக்களின்போது கொண்டாடப்படுகிறது. கி.பி.15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிலேடைப் புலவரான கவி காளமேகம், இந்த சேவையைக் கண்டதாகக் கூறுவர். [2]

11 கருட சேவை

[தொகு]

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருநாங்கூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 11 வைணவத் தலங்களிலிருந்தும் திருமால் கருட வாகனத்தில் கொண்டுவரப்பெற்று திருநாங்கூர் கோயிலில் 11 கருட சேவை தரிசனம் நடைபெறுகிறது. தை அமாவாசைக்கு மறுநாள் இந்நிகழ்வு நடைபெறுகிறது. இந்நாளின் இரவு 11 கருட வாகன சேவை நடைபெறுகிறது. வீதிகளில் உலா வந்த பிறகு அந்தந்த திருமால் கோயில்களுக்கு அவ்வாகனங்கள் செல்லுகின்றன. [3]

12 கருட சேவை

[தொகு]

கும்பகோணத்தில் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு அடுத்து வருகின்ற 3ஆவது திதியான அட்சய திருதியையில் காலையில் இவ்விழா கொண்டாடப்பெறுகிறது. கும்பகோணத்திலுள்ள சார்ங்கபாணி, சக்கரபாணி, இராமஸ்வாமி, ராஜகோபாலஸ்வாமி, [கு 1] வராகப்பெருமாள், வெங்கட்ராயர் அக்ரகாரம் பட்டாபிராமர், மல்லுக தெரு சந்தான கோபாலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், புளியஞ்சேரி வேணுகோபால சுவாமி, மேலக்காவேரி வரதராஜப்பெருமாள், நவநீதகிருஷ்ணன், சோலையப்பன் தெரு ராமசுவாமி ஆகிய 12 வைணவ கோயில்களைச் சேர்ந்த உற்சவப் பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்தில் புறப்பட்டு பெரிய கடைத் தெருவில் ஒரே இடத்தில் எழுந்தருளுகின்றனர். [4] [5]

24 கருட சேவை

[தொகு]
தஞ்சாவூர் கருட சேவை 15 சூன் 2017

தஞ்சாவூரில் வைகாசி, ஆனி திங்களில் காலையில் கருட சேவை கொண்டாடப்பெறுகிறது. 1934 முதல் இக்கருட சேவை நடைபெற்று வருகிறது. மூன்று திவ்ய தேசப் பெருமாள் கோயில் உட்பட 24 கோயில்களைச் சேர்ந்த கோயில்களைச் சேர்ந்த உற்சவ மூர்த்திகள் வெண்ணாற்றங்கரையிலிருந்து புறப்பட்டு தஞ்சாவூர் கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய வீதிகளில் எழுந்தருளுகின்றனர். [6] கருட சேவைக்கு அடுத்த நாள் நவநீத சேவை கொண்டாடப்படுகிறது.

குறிப்புகள்

[தொகு]
  1. கும்பகோணம் நகரில் தோப்புத்தெருவில் மற்றொரு ராஜகோபாலசுவாமி கோயில் கும்பகோணம் தோப்புத்தெரு ராஜகோபாலசுவாமி கோயில் உள்ளது. 12 கருட சேவைக்குரிய கோயில் இந்த இரண்டில் எது என்பது உறுதி செய்யப்படவேண்டும்.

ஆதாரங்கள்

[தொகு]
  1. கருடசேவையின் முக்கியத்துவம்! மார்ச் 12,2014
  2. காஞ்சி கருட சேவை!, தினமணி, 25 மே 2015
  3. "பாவம் போக்கும் கருட சேவை மாலை மலர் செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28". Archived from the original on 2014-02-05. பார்க்கப்பட்ட நாள் 2015-04-08.
  4. 12 கருட சேவை தரிசனம், தி இந்து, 5 மே 2016
  5. "கும்பகோணத்தில் அட்சய திருதியை முன்னிட்டு ஒரே பந்தலில் 12 பெருமாள் கோயில்களின் கருட சேவை உற்சவம் நடைபெற்றது, நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம், தினச்சங்கு, 10 மே 2016". Archived from the original on 2018-05-14. பார்க்கப்பட்ட நாள் 2017-07-12.
  6. 24 ஆலயங்களில் கருட மகோத்சவம், தினமணி, 9 சூன் 2017
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருட_சேவை&oldid=3548111" இலிருந்து மீள்விக்கப்பட்டது