ஐம்பூதங்கள்
இப்பிரபஞ்சமும் அனைத்து ஜீவராசிகளும் பஞ்சபூதங்கள் அல்லது ஐம்பூதங்கள் ஆகியவைகளின் சேர்க்கையினால் ஆனது ஆகும். வானம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் ஆகியவை ஐம்பூதங்களாகும். இந்தக் கூட்டுப் பொருட்களின் பகுதிகள் பஞ்சீகரணத்தினால், இப்பிரபஞ்சம் மற்றும் ஜீவராசிகள் தோன்றின.
உலகம் ஐம்பூதங்களினால் ஆனது எனவும் அவற்றின் தோற்றம் குறித்தும் புறநானூறு பின்வருமாறு விளக்குகிறது
மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை
புறநானூறு 2, அடி 1-6
உலகம் ஐம்பூதங்களால் ஆனது என தொல்காப்பியம் பின்வருமாறு விளக்குகிறது
நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம்
தொல்காப்பிய பொருளதிகார மரபியல் 635
பௌத்தம் நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகிய நாற்பெரும் அடிப்படைகள் உள்ளதென்ற கருத்தினைக் கொண்டது.
இந்து
[தொகு]பஞ்சபூதங்கள், சிவனுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது.[1] பஞ்சபூதங்களின் சேர்க்கையால் பிரபஞ்சமும் சீவராசிகளும் எவ்வாறு தோன்றியது என சாங்கிய சாத்திரங்கள் தெளிவாக உணர்த்துகிறது. பஞ்சபூதங்கள் மாயையின் வெளிப்படாக தோன்றியது. படைப்பின் துவக்கத்தில், முக்குணங்களின் நிலைகுலைவினால் சடப்பிரபஞ்சமும் உணர்வுடன் கூடிய சீவராசிகளும் தோன்றியது என்றும் சாங்கிய தத்துவம் கூறுகிறது.
ஆகாயம் (விண்வெளி)
[தொகு]முதலில் ’ஆகாயம்’ (விண்வெளி) எனும் பூதம் ’ஒலி’ எனும் ஒரே குணத்துடன் தோன்றியது. ஆகாயத்திற்கு தன்னில் அனைத்து சடப்பொருள்களுக்கு இடமளிக்கும் தன்மை உள்ளது. ஆகாயம் மற்ற நான்கு பூதங்களான காற்று, தீ, நீர் மற்றும் மண் ஆகியவைகள் தோன்றக் காரணமாக உள்ளது.
ஆகாயம் எனும் பூதத்தை யாராலும் தொட முடியாது பார்க்கவும் முடியாது. ஆகாயத்தை எவராலும் தொட முடியாது, குளிர், வெப்பம், உலர்தல், மணம் போன்ற குணங்கள் அற்றது. ஆகாயம் என்பது வெற்றிடம் ஆகும். எனவே ஆகாயம் எனும் பூதம் எதனாலும் கரைபடாதது. ஆகாயத்தை உலகப் படைப்புக்கு காரணமான ஹிரண்யகர்பன் (பிரம்மாண்டம்) (தங்க முட்டை) (Golden Egg) என வேதம் உரைக்கிறது.
சில உபநிடதங்கள் ஆகாயம் ஒரு உருவமற்ற, குணங்களற்ற, எதனுடனும் சேர்க்கை இல்லாத காரணத்தினாலும், வெற்றிடம் என்பதாலும் பிரம்ம தத்துவத்திற்கு எடுத்துக்காடாக ஆகாயத்தை கூறுகிறது. சில மெய்யியல் தத்துவவாதிகள் ஆகாயத்தை பஞ்சபூதங்களில் ஒன்றாக சேர்ப்பதில்லை. காரணம் மற்ற சடபூதங்களைப் போல், ஆகாயம் உருவம் மற்றும் குணங்களற்று இருப்பதால்தான்.
காற்று (வாயு)
[தொகு]’ஆகாயம்’ எனும் பூதத்தின் ஒரு பகுதியிலிருந்து ’காற்று’ (வாயு) எனும் பூதம், ’தொடு உணர்வு’ (ஸ்பர்சம்) எனும் குணத்துடனும், ஆகாயத்தின் சொந்த குணமாக ஒலி எனும் குணத்துடனும் தோன்றியது. எனவே காற்று தன் சொந்த குணமான தொடு உணர்வுடன், ஆகாயத்தின் ஒலி எனும் குணத்துடன் இரண்டு குணங்கள் கொண்டுள்ளது. காற்று எனும் பூதத்தின் இயல்பு ஒரு பொருளை உலர்த்தும் சக்தி படைத்தது. காற்றில் பிராணன் எனும் பிராணவாயு ஒரு சீவனை காப்பதால், அதையும் பிரம்ம த்த்துவமாக சில உபநிடதங்கள் காற்று எனும் பூதத்தின் சிறப்பை விளக்குகிறது.
வாயு தத்துவமானது அலைந்து திரியும் குணம், பொருட்களை உலர்த்தும் தன்மை, சூட்சுமமான தன்மை, அறிவு, மனம், பார்க்க இயலாமை, சுவாசிக்கும் பிராண வாயு மற்றும் உயிர் ஆகிய தன்மைகளுடன் போற்றப்படுகிறது. காற்றின் வடிவம் வட்டம் என்றும் அதன் நிறம் நீலம் என்று சாத்திரங்கள் கூறுகிறது.
நெருப்பு (அக்னி)
[தொகு]படம்காற்று எனும் பூதத்தின் ஒரு பகுதியிலிருந்து ’தீ’ எனும் பூதம் ’உருவம்’ (ரூபம்) எனும் குணத்துடன் தோன்றியது. அத்துடன் ஆகாயம் மற்றும் காற்றின் குணங்களான ஒலி மற்றும் தொடு உணர்வு குணங்களுடன் தன் சொந்த குணமான உருவம் எனும் குணத்துடன் ’தீ’ எனும் பூதம் மூன்று குணங்கள் கொண்டுள்ளது.
யாகம் அக்னி ஹோத்திரம் போன்ற சமயச் சடங்குகளில் அக்னியின் பங்கு சிறப்பானது. யாகத்தில் சொறியப்படும் ஹவிஸ் எனும் சிறப்பான உணவுப் பொருட்களை அக்னி எனும் பூதம்தான் தேவர்களுக்கும் இறந்த முன்னோர்களுக்கும் கொண்டு செல்கிறது. அதனால் தேவர்களும், இறந்த நமது முன்னோர்களும் மனம் மகிழ்ந்து நம்மை வாழ்த்துவர் என்பது இந்துக்களின் நம்பிக்கை. தீயின் குணம் தேஜஸ், நிறம் சிவப்பு.
நீர்
[தொகு]தீ எனும் பூதத்தின் ஒரு பகுதியிலிருந்து திரவ நிலையில் உள்ள ‘நீர்’ எனும் பூதம் ’சுவை’ எனும் குணத்துடன் உண்டானது. அத்துடன் ஆகாயம், காற்று, தீ எனும் பூதங்களின் குணங்களான ஒலி, தொடு உணர்வு மற்றும் உருவம் (ரூபம்) எனும் மூன்று குணங்களுடன் தன் சொந்த குணமான சுவை எனும் குணத்துடன், நான்கு குணங்களுடன் நீர் எனும் பூதம் விளங்குகிறது.
ஓடும் ஆற்று நீரில் முக்கிக் குளிப்பதால், செய்த பாவங்கள் நீங்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. எனவே கங்கை, காவேரி போன்ற ஆறுகளை இந்துக்கள் புனிதமானவைகள் என்று நம்பிக்கையுடன் ஆறுகளில் முக்கிக் குளிக்கின்றனர். மேலும் தானம், சத்தியம் செய்யும் போது நீரைச் சொரிந்து சாட்சியாக வைத்து செய்கின்றனர். நீர் எனும் பூதம் இந்துக்களின் புனிதமான ஒன்றாகும்.[2] தாயைப் பழித்தாலும் தண்ணீரை பழிக்கக்கூடாது என்ற பழமொழி மூலம் நீர் எனும் பூதத்தின் சிறப்பு அறியப்படுகிறது. நீரின் குணம் பொருட்களை தூய்மைப்படுத்துவது.
நிலம் (பிருதிவி)
[தொகு]நீர் எனும் பூதத்திலிருந்து ’நிலம்’ எனும் பூதம் ’வாசனை’ எனும் குணத்துடன் தோன்றியது. அத்துடன் ஆகாயம், காற்று, தீ, நீர் எனும் நான்கு பூதங்களின் குணங்களான ஒலி, தொடு உணர்வு, உருவம் (ரூபம்), சுவை எனும் நான்கு குணங்களுடன், தன் சொந்த குணமான வாசனை எனும் குணத்துடன் ஐந்து குணங்களைக் கொண்டது மண் (பிருதிவி) எனும் பூதம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The Pratyabhijñā Philosophy, G.V.Tagare, 2002, pag. 25
- ↑ Symbolism of Place, John Fraim, http://www.symbolism.org/writing/books/sp/home.html, cap. 7