ஏ. எம். ராஜா
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
ஏ. எம். ராஜா | |
---|---|
பிறப்பு | சூலை 1, 1929 சித்தூர் மாவட்டம், ஆந்திரா, இந்தியா |
இறப்பு | 8 ஏப்ரல் 1989 | (அகவை 59)
இசை வடிவங்கள் | கருநாடக இசை |
தொழில்(கள்) | திரைப்பட பின்னணிப் பாடகர் |
இசைத்துறையில் | 1950கள் முதல் 1989 வரை |
ஏமல மன்மதராஜு ராஜா சுருக்கமாக ஏ. எம். ராஜா (சூலை 1, 1929 - ஏப்ரல் 8, 1989) தென்னிந்தியாவின் பிரபலமான திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவர். 1950களில் இருந்து 1970கள் வரை தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் பல பாடல்களைப் பாடியுள்ளார். அவர் பல படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். இவரது மனைவி பிரபலப் பாடகி ஜிக்கி.[1][2][3]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]ராஜா ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் ராமச்சந்திரபுரத்தில் மன்மதராஜு, லட்சமம்மா ஆகியோருக்குப் பிறந்தார். மூன்று வயதில் தந்தையை இழந்த ராஜாவின் குடும்பம் ரேணுகாபுரத்துக்குச் சென்று குடியேறியது. அங்கேயே உயர்நிலைப்பள்ளிவரை படித்த ராஜா கல்லூரிப்படிப்புக்காக சென்னைக்கு வந்தார். 1951ல் பச்சையப்பா கல்லுரியில் பிஏ (இளங்கலை) முடித்தார்.
திரையிசைப் பாடகராக
[தொகு]இசையார்வம் கொண்ட ஏ. எம். ராஜா கர்னாடக இசையிலும் மேற்கத்திய இசையிலும் தேர்ந்த பயிற்சி பெற்றிருந்தார். கல்லூரியிலேயே புகழ்பெற்ற பாடகராக விளங்கி பல போட்டிகளில் வென்றார். அவரை அடையாளம் கண்ட எச். எம். வி நிறுவனம் இரண்டு தெலுங்கு மெல்லிசைப் பாடல்களைப் பாடுவதற்காக தேர்வு செய்தது. ராஜாவே எழுதி இசையமைத்த பாடல்கள் அவை. அவற்றின் கருவியிசைப் பகுதிகளை நடத்தி பதிவுசெய்ய இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன் அவருக்கு உதவினார். இப்பாடல்கள் அகில இந்திய வானொலியில் புகழ்பெற்றன. ஒருநாள் பின்னிரவில் அவற்றைக் கேட்க நேர்ந்த ஜெமினி எஸ். எஸ். வாசன் கவரப்பட்டு தன்னுடைய பலமொழிப் படமான சம்சாரம் திரைப்படத்தில் தலைப்புப் பாடலைப் பாடும்படி அழைத்தார். சம்சாரம் பெரும் வெற்றி பெற்று பின்பு இந்தியிலும் எடுக்கப்பட்டது. எல்லா மொழியிலும் அப்பாடலை அவரே பாடினார்.
1951 இல் கே. வி. மகாதேவன் ஏ. எம். ராஜாவை அவரது குமாரி என்ற படத்தில் அழியாத காதல் வாழ்வில்... என்ற பாடலை பாடும்படி அழைத்தார். அன்றுவரை கருநாடக இசையின் பாணியில் பாடப்பட்ட திரைப்பாடல்களைக் கேட்டுப் பழகிய தென்னிந்திய இசை ரசிகர்களுக்கு ராஜா ஒரு புதிய சுவையை அளித்தார். வட இந்திய திரைப்பாடல்கள் மற்றும் கஸல் பாடல்களிலிருந்து அவரே தனக்கென உருவாக்கிக் கொண்ட பாணி அது. இந்தி பாடகர்களான முகமது ரஃபி மற்றும் தலத் மெக்மூத் ஆகியோர் பாடும் முறைமைகளின் பல சிறப்பம்சங்களை எடுத்துக்கொண்டு அவர்களை ஒற்றியெடுத்தாற்போலப் பாடாது தனக்கே உரித்தான பாணியை உருவாக்கியவர் ஏ.எம்.ராஜா.
துயரத்தையும் தாபத்தையும் தேக்கிய பாடல்களே ஏ. எம். ராஜாவை தமிழில் நீங்காப் புகழ்பெறச்செய்தன. சிற்பி செதுக்காத பொற்சிலையே, தென்றல் உறங்கிய போதும் போன்றவை சில எடுத்துக்காட்டுகள். மேலை இசையின் சாயல்கொண்ட துள்ளலான ஆடாத மனமும் ஆடுதே, பாட்டுப் பாடவா பார்த்துப் பேச வா, ஓகோ எந்தன் பேபி போன்ற பாடல்களிலும்கூட ஒரு இனிமையான மென்மையைச் சேர்ப்பது அவரது குரல். மைனர் லைஃப் ரொம்ப ஜாலி போன்ற பாடலகளையும் அவர் தன் பாணியில் பாடியுனார். முறையான கர்நாடக இசைப்பயிற்சி உள்ளவரென்பதனால் ஏ. எம். ராஜா மரபானமுறையில் கர்நாடக ராகங்களுக்குள் அமைக்கப்பட்ட பாடல்களைக்கூட எந்தவிதமான முயற்சியும் தெரியாமல் சுருதித் தெளிவுடன் இயல்பாக பாடினார். மீண்ட சொர்க்கம் படத்தில் வரும் கலையே என் வாழ்க்கையின் வாகீச்வரி ராகத்தில் அமைந்த பாடல். தேன்நிலவு படத்தில் வரும் காலையும் நீயே ஹம்சத்வனி ராகத்தில் அமைந்தது.
அதே இயல்புமாறாத துல்லியத்துடன் வேகமான தாளம் கொண்ட வாடிக்கை மறந்ததும் ஏனோ, கண்மூடும் வேளையிலும் போன்ற பாடல்களையும் அவர் பாடியிருக்கிறார். மெல்லிய நடை கொண்ட நிலவும் மலரும், இதய வானின் உதய நிலவே, கண்ணாலே நான் கண்ட கணமே போன்றவை அவரது குரலின் அழகை முழுக்கக் காட்டுபவை. தன் உணர்ச்சிகளை மென்மையாக பாடல்களில் ஏற்றுவதன் மூலம் ஏ. எம். ராஜா மெட்டுக்கு அப்பால் சென்று பாடல்களுக்கு அளிக்கும் ஒரு தனித்துவம் உண்டு. மாசிலா உண்மைக்காதலே (அலிபாபாவும் நாற்பது திருடர்களும்),, கண்களின் வார்த்தைகள் புரியாதோ' (களத்தூர் கண்ணம்மா) போன்ற பாடல்களை உதாரணமாகக் காட்டலாம்.
ஐம்பது அறுபதுகளில் புகழின் உச்சியில் இருந்த நாட்களில் ஏ. எம். ராஜா எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், என். டி. ராமராவ், ஏ. நாகேஸ்வர ராவ், ஜெமினி கணேசன், சத்யன் பிரேம்நசீர் போன்ற பெரிய நட்சத்திரங்களுக்காக தொடர்ந்து பாடினார். பொதுவாக இளம் காதல் நாயகர்களான ஜெமினிகணேசன், பிரேம்நசீர் போன்றவர்களுக்கு அவரது குரல் பெரிதும் பொருந்தியது. பி. பி. ஸ்ரீனிவாஸ் அறிமுகமாகி, ஜெமினி கணேசனுக்காகப் பாடத்துவங்கும் வரையிலும், ஜெமினியின் பாடற்குரலாகவே விளங்கியவர் ஏ. எம். ராஜா. ஜெமினி கணேசனுக்காக அவர் பாடிய படங்களில், கல்யாணப்பரிசு, மிஸ்ஸியம்மா, மனம் போல மாங்கல்யம், பூலோக ரம்பை, ஆடிப்பெருக்கு ஆகியவை புகழ்பெற்றவை.
நடிகராக
[தொகு]ஏ. எம். ராஜா சில படங்களில் நடித்திருக்கிறார். நாகேஸ்வர ராவ் நடித்து இருமொழிகளில் பெருவெற்றி பெற்ற தேவதாஸ் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் அவர் வந்தார். பின்னர் இசைக்கலைஞனைப் பற்றிய படமான 'பக்க இந்தி அம்மாயி' படத்தில் முதன்மை வேடத்தில் நடித்தார். அந்தப்படம் இந்தியில் பாடோசான் என்றபேரில் மறுவாக்கம் செய்யப்பட்டபோது அதில் கிஷோர் குமார் அந்த பாத்திரத்தில் பாடி நடித்தார். அந்தப்படம் சிலகாலம் கழித்து மீண்டும் 'பக்க இந்தி அம்மாயி' என்ற பேரிலேயே தெலுங்கில் எடுக்கப்பட்டபோது ஏ. எம். ராஜா நடித்த பாத்திரத்தில் எஸ். பி. பாலசுப்ரமணியம் நடித்தார்.
1955இல் மகேஸ்வரி என்ற படத்தின் அழகு நிலவின் பாவனையிலே என்ற பாடலின் ஒத்திகையின்போது ஏ.எம்.ராஜா பாடகி ஜிக்கியிடம் தன் காதலை தெரிவித்தார். அது திருமணத்தில் முடிந்தது. ஜிக்கி ஏ. எம். ராஜா தம்பதியின் குழந்தைகளில் சந்திரசேகர் ஓரளவு தந்தையின் குரலையும் இசைத்திறனையும் கொண்டவர்.
ஏ. எம். ராஜாவும் ஜிக்கியும் தான் பம்பாய்க்குச் சென்று இந்திப் படத்துக்காக பாடிய முதல் தென்னிந்தியப்பாடகர்கள். சங்கர் ஜெய்கிஷன் இசையில் ராஜ்கபூரின் 'ன்' படத்துக்காக. இதேபடத்தின் தெலுங்கு தமிழ் வடிவங்களுக்கான பாடல்களையும் அவர்கள் இருவரும்தான் பாடினர். பகுத் தின் ஹயே போன்ற படங்களுக்கும் அவர்கள் பாடினர். ராஜாவின் பாடும் முறையில் இருந்த ஒரு பொது இந்திய இயல்புக்கு இது சான்றாகும். கன்னடத்தில் அதி மதுர அனுராகா போன்ற புகழ்பெற்ற பாடல்களை ஏ.எம்.ராஜா பாடினார். சிங்களப் படத்தில்கூட அவர் பாடியிருக்கிறார்.
இசையமைப்பாளராக
[தொகு]இசையமைப்பாளராக அவரது முதல் படம் தெலுங்கில் 1958ல் வந்த "சோபா". அது ஒரு பெரும் வெற்றிப்படம். 1960ல் வெளிவந்த பெல்லி காணுகா அவரை தெலுங்கின் நட்சத்திர இசையமைப்பாளராக்கியது.
1959இல் வந்த கல்யாணப்பரிசு இயக்குநர் ஸ்ரீதரின் முதல் படம். தமிழில் இசையமைப்பாளராக ஏ. எம். ராஜாவுக்கும் அதுவே முதல் படம். "வாடிக்கை மறந்தது ஏனோ" போன்ற காதல் பாடல்கள் "காதலிலே தோல்வியுற்றாள்" போன்ற துயரப்பாடல்கள் பெரும் வரவேற்பினைப் பெற்றன. இதைத் தொடர்ந்து, தேன் நிலவு, விடிவெள்ளி போன்ற ஸ்ரீதரின் படங்களுக்கும் ஆடிப்பெருக்கு போன்ற பல வேறு படங்களுக்கும் இசை அமைத்தார். ஆடிப்பெருக்கு திரைப்படத்தில் பி. சுசீலா பாடிய 'காவேரி ஓரம் கவிசொன்ன காதல்..' என்ற பாடல் புகழ்பெற்ற ஒன்றாகும்.
வேறு மொழிகளில்
[தொகு]தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று தென்னிந்திய மொழிகளிலும் உச்சப்புகழுடன் இருந்த பாடகர் ஏ. எம். ராஜா மட்டுமே. 1952இல் வி. தட்சணாமூர்த்தியின் இசையமைப்பில் லோகநீதி என்ற படம் வழியாக ஏ. எம். ராஜா மலையாள திரையுலகில் நுழைந்தார். அவர் தெலுங்கராக இருந்ததால் சில மலையாளச் சொற்களை உச்சரிப்பதில் குளறுபடி இருந்தது. ஆனாலும் மலையாளிகள் அவரை தங்கள் சொந்தப்பாடகராக ஏற்றுக் கொண்டனர். கேரளத்தின் முதல் 'சூப்பர் ஸ்டாரா'ன சத்யனின் குரலாக புகழ்பெற்ற ஏ. எம். ராஜா அறுபதுகளில் கிட்டத்தட்ட ஒரு நட்சத்திரப் பாடகராகவே விளங்கினார். .
ராஜாவின் பல முக்கியமான பாடல்களுக்கு தேவராஜன் இசையமைத்தார். ராஜா பாடிய பெரியாறே பெரியாறே போன்றபாடல்கள் தமிழ்நாட்டிலும் அக்காலத்தில் புகழ்பெற்றிருந்தன. பொதுவாக எவரையும் புகழ்ந்து சொல்லாதவரும் குறைவாகப் பேசுபவருமான தேவராஜன் ராஜாவின் குரலின் இனிமையையும் சுருதி சுத்தத்தையும் மட்டுமில்லாது அவரது இனிய குணத்தையும், அர்ப்பணிப்பையும் புகழ்ந்து சொல்லியிருக்கிறார். வடக்கு கேரளத்தின் காதல்பாட்டுகளான 'மாப்பிளைப்பாட்டு'களின் சாயலில் அமைந்த பல பாடல்களை ராஜா பாடியிருக்கும் விதம் அந்தப் பண்பாட்டின் சாரத்தையே வெளிப்படுத்துவதாக அமைந்து இன்றும் மலையாளிகளின் நெஞ்சங்களில் வாழ்கிறது. உதாரணமாக 'உம்மா' படத்தில் வரும் 'பாலாணு தேனாணு ' என்றபாடலில் என் சைனபா ! என்ற அழைப்பில் ராஜா தன் குரல்மூலம் அளிக்கும் உணர்ச்சிகரமான நெகிழ்வு அதை மறக்கமுடியாத காதல்பாடலா க்குகிறது. கேரளத்தின் என்றும் அழியாத இசைப்பாடல்களில் பல ஏ. எம். ராஜாவின் குரலில் ஒலிப்பவையே. காச கங்கையுடெ கரையில்.. போன்றபாடல்களை மலையாளத் திரையிசையின் 'கிளாசிக்'குகளாகவே சொல்லலாம்.
தெலுங்கில் ஏ. எம். ராஜாவின் பெரும்பாலான பாடல்கள் சரித்திரம் படைத்த வெற்றிகள். 1959ல் அப்பு சேஸி பாப்பு கோடு படத்தில் இடம்பெற்ற 'மூகாவைனா எமி லே' [தமிழில் 'போதும் இந்த ஜாலமே' ]இன்றும் ஆந்திராவில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல். 1954 'விப்ரநாராயணா' படத்தில் இடம்பெற்ற 'சூடுமடே செலியா' 'பாலிஞ்சர ரங்கா', 1957ல் அக்கா செல்லுலு ப்டத்தில் இடம்பெற்ற அந்து மாமிடி போன்றபாடல்களை தெலுங்கு திரையிசை மறக்கவேயில்லை. தமிழில் நீங்காப் புகழ்பெற்ற 'மாசிலா உண்மைக்காதலே' தெலுங்கில் வந்த 'பிரியதமா மனசு மரேனா' என்ற பாடத்தான். [லிபாபா 40 தொங்கலு]. அலாதீன் அற்புத தீபம் படத்தில் இடம்பெற்ற 'அண்டால கொனெட்டிலோனா' [1957] 'அமர சந்தேசம் 'படத்தில் இடம்பெற்ற 'ஏதோ நவீன பாவம்' என அவரது அழியாப்பாடல்களின் பட்டியலைப் பெரிதும் நீட்டமுடியும்.
பிற்காலம்
[தொகு]நடுவே திரைவாழ்க்கையில் ஏ. எம். ராஜாவுக்கு ஓர் இடைவெளி விழுந்தது. தன் மெல்லிசைக் கச்சேரிகள் மூலமாக அவர் வாழ்க்கையை நடத்தினார். பல வருடங்கள் கழித்து எழுபதுகளின் தொடக்கத்தில் இசையமைப்பாளர் வி. குமார் ஏ. எம். ராஜாவை மீண்டும் பாடவைத்தார். ரங்கராட்டினம் படத்துக்காக ஏ. எம். ராஜா பாடிய முத்தாரமே உன் ஊடல் என்னவோ?, புகுந்தவீடு படத்துக்காக ராஜா பாடிய செந்தாமரையே செந்தேனிதழே... ஆகியன குறிப்பிடத்தக்கதாக அமைந்தன. இரு பாடல்களும் சங்கர் கணேஷ் இசையமைத்தவை. 1973இல் வீட்டுமாப்பிள்ளை படத்தின் வழியாக இசையமைப்பாளராகவும் ஏ. எம். ராஜா மறுவருகை புரிந்தார். அதில் வந்த ராசி நல்ல ராசி ஒரு வெற்றிப்பாடல். 1975இல் 'எனக்கொரு மகன் பிறப்பான்' படத்திற்காகவும் ஏ. எம். ராஜா இசையமைத்தார். இக்காலகட்டத்தில் 'தாய்க்கு ஒரு பிள்ளை', 'வீட்டுக்கு வந்த மருமகள்', 'பத்துமாத பந்தம்', 'அன்பு ரோஜா', 'இது இவர்களின் கதை' போன்ற பல படங்களுக்காக தொடர்ந்து பாடினார். 1970இல் ஏ. எம். ராஜா மலையாளத்தில் 'அம்ம எந்ந ஸ்திரீ' படத்திற்கு இசையமைத்தார். ஜிக்கியும் எழுபதுகளில் ஒரு மீள்வரவை நிகழ்த்தினார். 1970இல் 'காதலெனும் காவியம்' முதல் 1993 ல் இளையராஜா- விஸ்வநாதன் இசையில் 'செந்தமிழ்பாட்டு' படத்தில் 'வண்ணவண்ண மெட்டெடுத்து' வரை அந்தப் பயணம் நீண்டது.
மறைவு
[தொகு]ஏ.எம்.ராஜா தன் கடைசிநாள்வரை பாடகராக இயங்கிக்கொண்டு இருந்தார். 1989, ஏப்ரல் 8 ஆம் நாள் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டாலுமூடு என்ற ஊரில் உள்ள பகவதி கோயிலில் இசைநிகழ்ச்சி முடிந்து தன் குழுவினருடன் தொடருந்தில் திரும்பிக் கொண்டிருந்தார். உதவியாளனாக வந்த ஒரு புதிய பையன் தொடருந்தைத் தவறவிட்டு விட்டான் என்று எண்ணி கவலைகொண்டு நாகர்கோயில் - நெல்லை நடுவே வள்ளியூர் என்ற ஊரில் புகையிரத நிலையத்தில் இறங்கி தேடினார். ரயில் புறப்படவே ஓடிவந்து ஏறமுயன்றவர் கால்தவறி ரயிலின் அடியில் விழுந்து நசுங்கி உருக்குலைந்து இறந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Pakka Inti Ammayi 1953 Telugu film at IMDb.
- ↑ "Sobha (1958)". The Hindu. 14 May 2015. http://www.thehindu.com/features/friday-review/sobha-1958/article7205419.ece.
- ↑ "Chennai singer imitates the voice of legendary musician AM Rajah". News Today. 8 June 2018. https://newstodaynet.com/chennai-singer-imitates-the-voice-of-legendary-musician-a-m-rajah.