வேர்
வேர் (Root) என்பது, தாவரங்களின், ஒரு உறுப்பு ஆகும். பொதுவாக இது நிலத்துக்குக் கீழ் காணப்படும் ஒரு பகுதி ஆகும். ஆனாலும், எல்லா வேர்களுமே நிலத்துக்குக் கீழ் இருப்பதில்லை. சில தாவரங்கள் ஆகாய வேர்களைக் கொண்டவை. வேறு சிலவற்றில் மூச்சு வேர்கள் எனப்படும் வேர்களின் பகுதிகள் நிலத்துக்கு மேலும் வளர்வது உண்டு. தாவரங்களில் நிலத்தின் கீழ் அமையும் பகுதிகள் எல்லாமே வேர்களும் அல்ல. சில தாவரங்களில் தண்டுகளும் நிலத்தின் கீழ் அமைவது உண்டு. இவை, "நிலக்கீழ் தண்டுகள்", அல்லது "வேர்த்தண்டுகள்" எனப்படுகின்றன.[1][2][3]
செயற்பாடுகள்
[தொகு]தாவரங்களின் வேர்களுக்கு நான்கு முதன்மையான செயற்பாடுகள் உண்டு. தாவரத்தை நிலத்துடன் பிணைத்து வைத்திருத்தல், உணவைச் சேமித்தல், நிலத்திலிருந்து நீரையும் கனிமங்களையும் உறிஞ்சுதல், உறிஞ்சிய நீரையும், கனிமங்களையும் தாவரத்தின் பிற பகுதிகளுக்குக் கடத்துதல் என்பன இந்நான்கு செயற்பாடுகளும் ஆகும்.
- தாவரங்களின் வேர்கள், மண்ணைத் துளைத்துக் கீழ் நோக்கியும் பக்கவாட்டிலும் செல்கின்றன. இவ்வாறு உருவாகும் வேர்த்தொகுதி தாவரங்களை நிலத்துடன் உறுதியாகப் பிணைத்து வைத்திருக்க உதவுகின்றன.
- சில பருவகாலத் தாவரங்கள் தமது அடுத்த பருவ வளர்ச்சிக்குத் தேவையான உணவை வேர்களின் சேமித்து வைக்கின்றன. ஒரு பருவத்தின் முடிவில் நிலத்தின் மேலுள்ள தண்டும் இலைகளும் அழிந்துவிட நிலத்தின் கீழ் உணவுச் சேமிப்புடன் கூடிய வேர்கள் மட்டும் காணப்படும். அடுத்த பருவத்தில் புதிய தண்டுகளும், இலைகளும் தோன்றுவதற்கான ஆற்றலை இவ்வாறு சேமித்த உணவே வழங்குகிறது.
- தாவரத்தின் பல்வேறு செயற்பாடுகளுக்குத் தேவையான நீரையும், கனிமப் பொருட்களையும் அது வேரினூடாகவே பெறுகின்றது. வேர்கள் நிலத்தை ஊடுருவிச் சென்று அங்கிருக்கும் நீரையும், நீரில் கரைந்துள்ள கனிமங்களையும் உறிஞ்சுகின்றன.
- வேரினால் உறிஞ்சப்படும் நீரையும் கனிமங்களையும், ஒளித்தொகுப்பு மூலம் உணவைத் தயாரிக்கும் இலைக்கும், வேறு தேவைகளுக்காகப் பிற பகுதிகளுக்கும் அனுப்புவதற்கும் வேர்கள் உதவுகின்றன.
வேர்த் தொகுதி
[தொகு]ஆணிவேர்த் தொகுதி
[தொகு]தாவரம் வளரும்போது விதையில் இருந்து உருவாகும் முதல் வேர் முளைவேர் எனப்படும். பெரும்பாலான இருவித்திலைத் தாவரங்களில் இந்த முளைவேர், வேர்த் தொகுதியில் முக்கியமான ஆணிவேர் அல்லது மூலவேர் எனப்படும் வேராக வளர்ச்சியுறுகிறது. நிலத்துள் நேராகக் கீழ் நோக்கிச் செல்லும் ஆணிவேரில் இருந்து, பக்கவேர்கள் வளர்கின்றன. ஆணிவேர் பக்கவேர்களிலும் நீளமாக வளரும்.
நார்வேர்த் தொகுதி
[தொகு]பெரும்பாலான ஒருவித்திலைத் தாவரங்கள் நார்வேர்களைக் கொண்டுள்ளன. இத்தகைய வேர்த் தொகுதி நார்வேர்த் தொகுதி எனப்படும். இவ்வேர்த் தொகுதியைக் கொண்ட தாவரங்களில் முளைவேர் குறுகிய காலத்துக்கே இருக்கும். நார்வேர்கள் பொதுவாகத் தண்டின் நுனியிலிருந்து ஒரு கட்டாக வளரும். நார்வேர்கள் எல்லாம் ஏறத்தாழ ஒரேயளவு நீளம் கொண்டவையாக இருக்கும்.
சிறப்பான வேர் அமைப்புகள்
[தொகு]மிண்டி வேர்
[தொகு]தாழை, றம்பை முதலான தாவரங்களின் பிரதான தண்டில் இருந்து தாவரத்தை நிலை நிறுத்த கானப்படும் சிறப்பான வேர் இதுவாகும்.
தாங்கும் வேர்
[தொகு]தாவரக் கிளைகளில் இருந்து வரும் விழுதுகள் நிலத்தில் வேரூன்றி தாங்கும் வேர்களாக தாவரத்தைத் தாங்குகின்றன.
எ.கா:ஆலமரம்.
மூச்சு வேர்
[தொகு]கிண்ணை முதலான கண்டல் தாவரங்களின் வேர்கள் வளிமண்டல் வளியை உள்ளெடுக்கும் கட்டமைப்புகளுடன் வருத்தியடந்து காணப்படுவது.
உதைப்பு வேர்
[தொகு]மருதை மரம் முதலானவற்றில் வேர்ப்பகுதி தடித்ததாக மாறி தாவரத்தை உறுதியாக நிலைநிறுத்த உதவும். இத்தகைய வேர்கள் உதைப்புவேர்கள் எனப்படும்.
வேரில் உணவு சேமிப்பு
[தொகு]சில தாவரங்கள் வேரில் உணவு சேமிக்கின்றன.
- ஆணி வேரில் உணவு சேமிப்புக் காணப்படும் தாவரங்கள்: கேரட், பீட்ரூட்
- பக்க வேரில் உணவு சேமிப்புக் காணப்படும் தாவரங்கள்: மரவள்ளி, வற்றாளை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Harley Macdonald & Donovan Stevens (3 September 2019). Biotechnology and Plant Biology. EDTECH. pp. 141–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-83947-180-3.
- ↑ Nguyen, Linh Thuy My; Hoang, Hanh Thi; Choi, Eunho; Park, Pil Sun (2023-07-05). "Distribution of mangroves with different aerial root morphologies at accretion and erosion sites in Ca Mau Province, Vietnam". Estuarine, Coastal and Shelf Science 287: 108324. doi:10.1016/j.ecss.2023.108324. பன்னாட்டுத் தர தொடர் எண்:0272-7714. Bibcode: 2023ECSS..28708324N.
- ↑ "Plant parts=Roots". University of Illinois Extension.