வெண்கலக்கால வீழ்ச்சி
வெண்கலக்கால வீழ்ச்சி அல்லது பிந்திய வெண்கலக்கால வீழ்ச்சி எனப்படுவது, ஏஜியப் பகுதி, தென்மேற்கு ஆசியா, கிழக்கு நடுநிலக்கடற் பகுதி ஆகிய பகுதிகளில் வெண்கலக்காலம், தொடக்க இரும்புக்காலத்துக்கு மாறியதைக் குறிக்கிறது. கடுமையானதாகவும், சடுதியானதாகவும், பண்பாட்டு அடிப்படையில் தகர்ப்புத்தன்மை கொண்டதாகவும் அமைந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வெண்கலக்காலத்தைச் சேர்ந்த ஏஜியப் பகுதி, அனத்தோலியா ஆகியவற்றில் காணப்பட்ட அரண்மனைப் பொருளாதாரம், கிரேக்க இருண்ட காலங்களின் தனித்தனி ஊர்ப் பண்பாடுகளாக மாறியது.
கிமு 1206க்கும் 1150க்கும் இடைப்பட்ட காலத்தில், அனத்தோலியாவிலும், சிரியாவிலும் இருந்த மைசீனிய இராச்சியங்கள், இட்டைட்டுப் பேரரசு என்பவற்றிலும்,[1] சிரியாவிலும் கனானிலும் இருந்த புதிய எகிப்து இராச்சியத்திலும்[2] ஏற்பட்ட பண்பாட்டு வீழ்ச்சி வணிகப் பாதைகளைத் தடைப்படுத்தி கல்வியறிவும் குறையக் காரணமாயிற்று. இக்காலப் பகுதியின் முதல் கட்டத்தில் பைலோசுக்கும், காசாவுக்கும் இடையில் இருந்த எல்லா நகரங்களுமே அழிக்கப்பட்டன. அத்துசா, மைசீனி, உகாரிட் என்பன இவ்வாறு அழிந்த நகரங்களுக்கு எடுத்துக்காட்டுகள்.[3] கிமு 13 ஆம் நூற்றாண்டு இறுதிப் பகுதியையும், கிமு 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியிலும், நாற்பது முதல் ஐம்பது ஆண்டுகளுக்கு உள்ளாகவே கிழக்கு நடுநிலக் கடற் பகுதியைச் சேர்ந்த ஏறத்தாழ எல்லா முக்கிய நகரங்களுமே அழிந்து விட்டன. இவற்றுட் பல மீண்டும் மக்கள் வாழக்கூடிய இடங்களாக மாறவில்லை.
குறிப்புகள்
[தொகு]- ↑ For Syria, see M. Liverani, "The collapse of the Near Eastern regional system at the end of the Bronze Age: the case of Syria" in Centre and Periphery in the Ancient World, M. Rowlands, M.T. Larsen, K. Kristiansen, eds. (Cambridge University Press) 1987.
- ↑ S. Richard, "Archaeological sources for the history of Palestine: The Early Bronze Age: The rise and collapse of urbanism", The Biblical Archaeologist (1987)
- ↑ The physical destruction of palaces and cities is the subject of Robert Drews, The End of the Bronze Age: changes in warfare and the catastrophe ca. 1200 B.C., 1993.