விண்ணகம்
இது தொடர் கட்டுரைகளில் ஒன்றாகும் |
கிறித்தவம் |
---|
கிறித்தவம் வலைவாசல் |
விண்ணகம் அல்லது விண்ணுலகம் என்பது, கடவுள் வாழும் இடத்தைக் குறிப்பிட கிறிஸ்தவர்களால் பயன்படுத்தப்படும் தமிழ் சொல் ஆகும். வானகம், மோட்சம், சொர்க்கம், சுவனம் போன்றவை இதற்கு இணையான சொற்கள் ஆகும். தேவதூதர்களும், புனிதர்களும் கடவுளின் மாட்சியில் பங்குபெறும் இடமாகவும் இது கருதப்படுகிறது.
பெயர் காரணம்
[தொகு]பூமியைச் சுற்றிக் காணப்படும் அண்ட வெளியைக் குறிக்கும் விண் அல்லது வான் என்ற சொல், பொதுவாக உயரே தெரிகின்ற சூரியன், நிலவு, விண்மீன்கள் ஆகியவற்றின் இருப்பிடத்தைச் சுட்டிக்காட்டுகிறது. இத்தகையதோர் உயர்ந்த இடத்திலேயே கடவுள் இருப்பதாக நம்பிக்கை நிலவுகிறது. எனவேதான் கிறித்தவம், கடவுளின் உறைவிடத்தை விண்ணகம் அல்லது விண்ணுலகம் என்று பெயரிட்டு அழைக்கிறது.
பழைய ஏற்பாட்டில்
[தொகு]பழைய ஏற்பாடு விண்ணகத்தை கடவுளின் அரியணையாகவும், உலகத்தை அவரது கால்மணையாகவும் என்று குறிப்பிடுகிறது.[1] "மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு எவரும் இலர் என இன்று அறிந்து, உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள்" [2] என்பது விவிலியத்தின் போதனை. "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே! மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் உம்மைப் போன்ற வேறு கடவுள் யாரும் இல்லை" [3] என்று இசுரயேலர் கடவுளைப் புகழ்ந்தனர்.
பழைய ஏற்பாட்டின் மக்கள் கடவுளை, விண்ணகத்தில் உறைபவராகவே கருதினர்.[4] "நீர் உமது தூய உறைவிடமாகிய விண்ணிலிருந்து கண்ணோக்கி, நீர் எங்கள் மூதாதையருக்கு ஆணையிட்டுக் கூறியபடி உம் மக்களாகிய எங்களுக்கும் எங்களுக்குக் கொடுத்துள்ள பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டுக்கும் ஆசிவழங்குவீராக!"[5] "நீர் விண்ணிலிருந்து உமது அடியாருக்குத் தீர்ப்பு வழங்குவீராக!"[6] "உமது உறைவிடமாகிய விண்ணிலிருந்து நீர் செவி சாய்த்து மன்னிப்பீராக!"[7] என்று அவர்கள் மன்றாடினர்.
விண்ணகம் கடவுளின் இருப்பிடமாக கருதப்பட்டாலும், அதைப் படைத்தவர் கடவுளே என்ற கருத்தும் பழைய ஏற்பாட்டில் உள்ளது.[8] 'ஆண்டவர் ஆறு நாள்களில் விண்ணுலகையும், மண்ணுலகையும், அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்'[9] என்று விவிலியம் குறிப்பிடுகிறது. "விண்ணகம், மண்ணகம் அனைத்தையும் படைத்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் வாழ்த்தப் பெறுவாராக!"[10] என்பது யூத மக்களின் புகழ்ச்சியாக இருந்தது.
கடவுளின் மேன்மையும் விண்ணகத்தின் உயரமும் ஒன்றையொன்று பெருமைப்படுத்துவதாக இசுரயேலர் கருதினர்: "மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன" என்கிறார் ஆண்டவர்.[11] "விண்ணகக் கடவுள்தாமே எங்களுக்கு வெற்றி அளிப்பார்!"[12] என்று அவர்கள் கூறினர். "விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, படைப்புகளுக்கெல்லாம் மன்னரே, என் மன்றாட்டுக்குப் பரிவோடு செவிசாயும்"[13] என்று அவர்கள் உதவி வேண்டினர். இறைவாக்கினர் எலியா விண்ணகம் எடுத்துக்கொள்ளப்பட்ட நிகழ்வும்[14] பழைய ஏற்பாட்டில் காணப்படுகிறது.
புதிய ஏற்பாட்டில்
[தொகு]இயேசு கிறிஸ்து விண்ணரசு பற்றி போதித்த செய்தியை புதிய ஏற்பாடு நமக்கு தருகிறது. "ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது"[15] என்றும், "நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது"[16] எனவும் இயேசு போதித்தார். "என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில்' உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்"[17] என்றும் அவர் கற்பித்தார்.
மேலும், கடவுள் நம் விண்ணகத் தந்தை என்று மக்களுக்கு இயேசு அறிமுகம் செய்தார். "உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்;[18] உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்"[19] என்று அவர் போதித்தார். "விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல மண்ணுலகிலும் நிறைவேறுக!"[20] என்று தொடங்கும் இறைவேண்டலையும் அவர் கற்பித்தார்.
இயேசுவின் பிறப்பு பற்றி குரு செக்கரியா, "நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது"[21] என்று இறைவாக்கு உரைத்தார். இயேசு பிறப்பை இடையர்களுக்கு அறிவித்த தூதரோடு இணைந்து, "உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக!" என்று விண்ணகத் தூதரணி கடவுளைப் புகழ்ந்தது.[22] "விண்ணகத்தில் இருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே"[23] என்று தம்மைப் பற்றிக் கூறுகிறார். சிலுவையில் இறந்து, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசு நாற்பது நாட்களாக சீடர்களுக்கு காட்சி அளித்த பின்பு, விண்ணேற்றம் அடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார்[24] என்று புதிய ஏற்பாடு குறிப்பிடுகிறது.
"விண்ணேற்றமடைந்த இயேசு யாவும் சீர்படுத்தப்படும் காலம் வரை விண்ணுலகில் இருக்க வேண்டும்"[25] என்று திருத்தூதர் பேதுரு எடுத்துரைக்கிறார். "உலகையும், அதிலுள்ள அனைத்தையம் படைத்த கடவுள் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவர்"[26] என்றும், "கால நிறைவில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் ஒன்று சேர்க்க வேண்டும் என்பதே கடவுளின் திட்டம்"[27] எனவும் திருத்தூதர் பவுல் குறிப்பிடுகிறார். எருசலேம் கோவில் விண்ணகத்தின் சாயல்[28] என எபிரேயருக்கு எழுதிய திருமுகம் கூறுகிறது. "விண்ணகத்தில் கடவுளின் கோவில் திறக்கப்பட்டது"[29] என்று திருவெளிப்பாடு நூல் குறிப்பிடுகிறது.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ எசாயா 66:1 ஆண்டவர் கூறுவது இதுவே: "விண்ணகம் என் அரியணை; மண்ணகம் என் கால்மணை."
- ↑ இணைச் சட்டம் 4:39
- ↑ 1 அரசர்கள் 8:23
- ↑ 2 குறிப்பேடு 20:6 "எங்கள் மூதாதையின் கடவுளாகிய ஆண்டவரே! விண்ணகக் கடவுள் நீரே அன்றோ!"
- ↑ இணைச் சட்டம் 26:15
- ↑ 1 அரசர்கள் 8:32
- ↑ 1 அரசர்கள் 8:39
- ↑ 2 அரசர்கள் 19:15 "இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவரே! விண்ணையும் மண்ணையும் படைத்தவர் நீரே!"
- ↑ விடுதலைப் பயணம் 20:11
- ↑ 2 குறிப்பேடு 2:12
- ↑ எசாயா 55:9
- ↑ நெகேமியா 2:20
- ↑ யூதித்து 9:12
- ↑ 2 அரசர்கள் 2:11 'எலியா சுழற்காற்றில் விண்ணகத்துக்குச் சென்றார்.'
- ↑ மத்தேயு 5:3
- ↑ மத்தேயு 5:10
- ↑ மத்தேயு 5:11-12
- ↑ மாற்கு 11:25-26 "யார் மேலாவது நீங்கள் மனத்தாங்கல் கொண்டிருந்தால், மன்னித்துவிடுங்கள். அப்போது உங்கள் விண்ணகத் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிப்பார்"
- ↑ மத்தேயு 5:44-45,48
- ↑ மத்தேயு 6:9-10
- ↑ லூக்கா 1:79
- ↑ லூக்கா 2:13
- ↑ யோவான் 6:51
- ↑ மாற்கு 16:19
- ↑ திருத்தூதர் பணிகள் 17:24
- ↑ திருத்தூதர் பணிகள் 17:24
- ↑ எபேசியர் 1:10
- ↑ எபிரேயர் 8:5 "இவர்கள் வழிபடும் இடம் விண்ணகக் கூடாரத்தின் சாயலும் நிழலுமே."
- ↑ திருவெளிப்பாடு 11:19
வெளி இணைப்புகள்
[தொகு]- Catechism of the Catholic Church I believe in Life Everlasting Explanation of Catholic teaching about Heaven, Hell & Purgatory.
- Catholic Encyclopedia: Heaven
- Jewish Encyclopedia: Heaven
- Stanford Encyclopedia of Philosophy entry on Heaven and Hell.
- In Films, Heaven’s No Paradise New York Times Wed. July 22, 2009:
- Heaven: A fool's paradise, The Independent, April 21, 2010
- Swedenborg, E. Heaven and its Wonders and Hell. From Things Heard and Seen (Swedenborg Foundation, 1946)