உள்ளடக்கத்துக்குச் செல்

ருவால் அமுன்சென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ருவால் அமுன்ட்சென்
Roald Amundsen
1912 இல் ஆமுன்ட்சென்
பிறப்புரூவால் ஏங்கெல்பிரெக்ட் கிராவ்னிங் ஆமுன்ட்சென்
(1872-07-16)16 சூலை 1872 [1]
போர்கி, நோர்வே
காணாமல்போனது18 சூன் 1928 (அகவை 55)
பேரன்ட்ஸ் கடல்
தேசியம்நோர்வே
பணிநாடுகாண் பயணி
அறியப்படுவது
பெற்றோர்
  • யென்சு ஆமுன்ட்சென்
  • அன்னா சால்கிவிஸ்ட்
விருதுகள்
  • உபார்டு பதக்கம் (1907)
  • சார்லசு டாலி பதக்கம் (1912)
  • வேகா பதக்கம் (1913)
கையொப்பம்

ருவால் அமுன்சென் (Roald Amundsen) எனச் சுருக்கமாக அழைக்கப்படும் "ரூவால் ஏங்கெல்பிரெக்ட் கிராவ்னிங் ஆமுன்ட்சென்" (Roald Engelbregt Gravning Amundsen; சூலை 16, 1872 - சூன் 18, 1928) நோர்வே நாட்டைச் சேர்ந்தவரும், துருவப் பகுதிகளில் பயணங்களை மேற்கொண்டவருமான ஒரு தேடலாய்வாளர் ஆவார். 1910 டிசம்பர் 14 ஆம் தேதியன்று தென் துருவத்தை அடைந்த 1910-1912 ஆம் ஆண்டுகளின் முதல் அன்டார்க்டிக் பயணக் குழுவின் தலைவராக இவர் இருந்தார். அன்டார்க்டிக் பயணத்தின் வீர யுகத்தில் ஒரு பிரதானமான பயணத் தலைவராக ருவால்டு அமுன்சென் இருந்தார். 1926 ஆம் ஆண்டில் வான் வழியாக வட துருவத்தை அடைந்த பயணக்குழுவிற்கும் இவர் பயணத் தலைவராக இருந்தார், சர்ச்சைகள் ஏதுமில்லாமல் இரு துருவங்களையும் அடைந்த முதல் மனிதர் இவராவர்[2][3].ஆர்க்டிக் கண்டத்தின் வடமேற்கு பாதை வழியாக (1903-06) பயணித்த முதல் பயணியாகவும் இவர் கருதப்படுகிறார்.

இளமைக் காலம்

[தொகு]

நார்வே நாட்டிலுள்ள பிரெட்ரிக்சிடாடு, சார்ப்சுபோர்க் நகரங்களுக்கு இடையிலிருக்கும் போர்க் நகராட்சியில் வசித்த கப்பலுக்குச் சொந்தக்காரரான ஒரு நார்வே தம்பதியருக்கு அமுன்சென் பிறந்தார். யென்சு அமுன்சென் மற்றும் அன்னா சால்க்வாவிசுட். ஆகியோர் இவரது பெற்றோர்களாவர். குடும்பத்தில் நான்காவது மகனாக அமுன்சென் பிறந்தார். குடும்பத் தொழிலான கடற்படை வர்த்தகத்தை தவிர்த்து ஒரு மருத்துவராக அமுன்சென் வரவேண்டும் என இவரது தாயார் விரும்பினார். அமுன்சென்னும் தன்னுடைய தாயார் இறக்கும்வரை அவரது விருப்பப்படியே இருப்பதாக சத்தியம் செய்து கடைபிடித்தார். அமுன்சென்னுக்கு 21 வயதாக இருந்தபோது அவருடைய தாயார் இறந்தார். உடனடியாக அமுன்சென் பல்கலைக்கழக வாழ்வைத் துறந்து கடலை நோக்கி திரும்பினார்[4]

1888 ஆம் ஆண்டில் கிரீன்லாந்தை கிழக்கிலிருந்து மேற்காகக் கடக்கத் திட்டமிட்டு, அதன்படி 2 மாதங்கள் வரை வட அட்லாண்டிக் பெருங்கடலில் கப்பல் மூலம் பயணித்தவரான பிரிட்யோப் நான்சன் என்ற கடற்பயணி மற்றும் ஆர்க்டிக் பிரதேசப் பயணத்தை இழந்த பிரித்தானிய கடற்பயணியான யான் பிராங்ளின் என்ற கடற்பயணி போலவும் தான் ஒரு கடற்பயணியாக வேண்டும் என்ற விருப்பத்தை அமுன்சென் அதுவரை மறைத்து வாழ்ந்து வந்தார். தாயின் மறைவுக்குப் பின்னர் இத்தகைய புதிரான பகுதிகளுக்கு சென்று ஆராய்வது என்ற ஒரு வாழ்க்கையை அவர் தீர்மானித்தார் [5].

துருவப் பயணங்கள்

[தொகு]

பெல்கியம் அண்டார்டிக் பயணம் (1897-1899)

[தொகு]
பெல்கிகா கப்பல் 1898 இல் பனிக்கட்டியில் உறைந்த காட்சி

அமுன்சென் பெல்கியம் அண்டார்டிக் பயணக்குழுவுடன் முதலாவது துணையாக இணைந்தார். அட்ரியன் டி கெர்லாச்சின் தலைமையில் ஆர்.வி. பெல்கிக்கா என்ற கப்பலில் தொடங்கிய இந்த அண்டார்டிக்கா பயணமானது குளிர்காலத்தில் அண்டார்டிக்காவை அடைந்த முதல் பயணமாக மாறியது [6] பெல்கிகா கப்பல் தவறுதலாகவோ அல்லது வடிவமைப்பு காரணமாகவோ அண்டார்க்டிக் தீபகற்பத்தின் மேற்குப் பகுதியில் உள்ள அலெக்சாண்டர் தீவுக்கு 70 ° 30 'தெற்கில் கடல் பனிக்கட்டியில் சிக்கிக்கொண்டது. பெல்கியக் கடற்பயணக் குழுவானது ஒரு குளிர்காலத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் குழுவினருக்கு அக்குளிரை சாமாளிக்கும் அளவுக்கு வசதிகள் இல்லாமல் மோசமான தயாரிப்பு நிலையிலிருந்தனர். அமுண்ட்செனின் சொந்த மதிப்பீட்டின்படி, அமெரிக்கரான பிரடெரிக் குக் என்பவர் பயணக் குழுவினரை உயிர்ச்சத்து பற்றாக்குறை நோயான சிகர்வி நோயிலிருந்து காப்பாற்றினார். விலங்குகளை வேட்டையாடி பயணக்குழுவினருக்கு புத்தம் புதிய இறைச்சியை உண்ணக் கொடுத்தனர். உயிர்ச்சத்துக்கு ஆதாரமான சிட்ரசு வகை பழங்கள் இல்லாதவிடத்தில் விலங்குகளின் புத்தம்புதிய இறைச்சியை உண்பதால் அவை தேவையான வைட்டமின் சி யை உருவாக்கிக் கொள்ளும். இதனால் சிகர்வி நோய் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். இதுவே இந்நோய்க்கான மருத்துவ முறையுமாகும். அமுன்சென்னின் எதிர்காலப் பயணங்களுக்கு இந்நிகழ்ச்சி ஒரு பாடமாகவும் அமைந்தது.

வடமேற்கு பாதை (1903–1906)

[தொகு]

அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களுக்கு இடையே கனடாவின் வடமேற்குப் பாதையை அமுன்சென் தலைமையிலான முதலாவது பயணக்குழு வெற்றிகரமாக 1903 ஆம் ஆண்டில் கடந்து சென்றது. நெகிழ்தன்மையைப் பெறுவதற்காக 45 டன் எடை கொண்ட மீன்பிடிக் கப்பலில் ஆறு ஆட்கள் மட்டுமே அடங்கிய ஒரு சிறிய பயணக்குழுவை அமுன்சென் திட்டமிட்டார். அவரது கப்பலின் அடிப்பாகம் ஒப்பீட்டளவில் மேலோட்டமான அமைப்புடன் இருந்தது. ஒரு சிறிய கப்பலைப் பயன்படுத்துவதோடு அங்குலம் அங்குலமாக நகர்ந்து கடலோரப் பகுதிக்குச் செல்வதே அமுன்சென்னின் நுட்பமாக இருந்தது. மேலும், ஒரு சிறிய பெட்ரோல் இயந்திரத்துடன் இவருடைய கப்பல் இணைக்கப்பட்டிருந்தது [7] அமுன்சென் குழுவினர் பாஃவின் குடா, பாரி கால்வாய் வழியாகச் சென்று, அங்கிருந்து பீல்சவுண்ட் நீர்வழி, யேம்சு ரோசு நீர் சந்தி, சிம்சன் நீர்சந்தி மற்றும் ரே நீர்சந்தி வழியாக தெற்கே சென்றார்கள்.1903–04 மற்றும் 1904–05 காலத்தின் இரண்டு குளிர் காலங்களையும் கிங் வில்லியம் தீவின் துறைமுகத்தில் அவர்கள் கழித்தனர். தற்போது அப்பகுதி கனடாவின் மிகப்பெரிய ஆட்சிநிலப்பகுதியான நூனவுட்டுக்கு அருகில் குயோவா ஆவென் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது [6]. இங்கிருந்த காலத்தில் அமுன்சென் குழுவினர் உள்ளூரைச் சேர்ந்த நெட்சிலிக் இனுயிட் மக்களிடமிருந்து ஆர்க்டிக் பகுதியில் உயிர் வாழ்வதற்கான திறன்களைப் பற்றிக் கற்றுக் கொண்டனர். சரக்குகளை எடுத்துச் செல்வதற்காக சில்ட் நாய்களைப் பயன்படுத்துதல், கனமான, கம்பளி மேலாடைகளுக்குப் பதிலாக விலங்கு தோல்கள் அணிதல் போன்ற நுணுக்கங்கள் எதுவும் இப்பயணத்திற்குப் பின்னரான தென் துருவப் பயணத்திற்கு பயனளிக்கவில்லை.

குவோயா ஆவனை விட்டு அமுன்சென் மேற்கு நோக்கிச் சென்று கேம்பிரிட்சு குடாவைக் கடந்தார். முன்னதாக 1852 இல் ரிச்சர்ட் காலின்சன் மேற்கிலிருந்து கேம்பிரிட்சு குடாவை அடைந்திருந்தார். விக்டோரியா தீவுக்கு தெற்கே தொடர்ந்து பயனித்த இவர்கள் கனடாவின் ஆர்க்டிக் தீவுக்கூட்டத்தை ஆகத்து 17, 1905 ஆம் நாள் அடைந்தனர். அலாசுகா மாவட்டத்தின் பசிபிக் கரையோரத்தில் நோம் நகரத்திற்குப் போகும் முன்னர், குளிர்காலத்திற்காக கப்பல் நிறுத்தப்பட வேண்டியிருந்தது. 500 மைல்களுக்கு அப்பால் அலாசுகாவிலுள்ள ஈகிள் நகரத்தில் ஒரு தந்தி நிலையம் இருந்தது; அமுன்சென் அவ்விடத்திற்குப் பயணம் செய்து டிசம்பர் 5, 1905 இல் வெற்றிச் செய்தியை அனுப்பிவிட்டுத் திரும்பினார். 1906 ஆம் ஆண்டு பயணக்குழு நோம் நகரை அடைந்தது. நார்வே சுவீடனிடமிருந்து சுதந்திரம் பெற்று தனிநாடாக மாறியது என்றும் அந்நாட்டிற்கு ஒரு புதிய மன்னர் இருப்பதையும் அமுன்சென் அந்த நேரத்தில்தான் அறிந்தார். தான் வடமேற்கு வழியைக் கடந்த சாதனையானது நார்வேக்கு சிறந்த பயனுள்ளதாக இருக்கும் என அந்நாட்டு புதிய அரசன் ஏழாம் ஆக்கோனுக்கு செய்தி அனுப்பினார் [8]. கிட்டத்தட்ட 3.5 ஆண்டுகள் பயணத்திற்குப் பின்னர் அமுன்சென் தலைமையிலான பயணக்குழுவினர் ஒசுலோ நகரை வந்தடைந்தனர் [8].

தென்துருவப் பயணம்

[தொகு]
ருவால்டு அமுன்சென் மற்றும் அவருடைய பயணக் குழுவினர் 1911 ஆம் ஆண்டு தென் துருவத்தில் நார்வே நாட்டுக் கொடியை பார்வையிடுகின்றனர்

அமுன்சென் அடுத்ததாக வட துருவத்திற்கு ஒரு பயணத்தை மேற்கொள்வதற்காகவும், ஆர்க்டிக் படுகைப் பகுதியை ஆராயவும் திட்டமிட்டார். அமெரிக்கர்களான பிரடெரிக் குக்கும் இராபர்டு பியரியும் வடதுருவத்தை நோக்கிச் செல்ல முடிவு எடுத்திருந்ததை 1909 ஆம் ஆண்டு அமுன்சென் அறிந்தார். இரண்டு வெவ்வேறு பயணக்குழுக்கள் உருவாகிவிட்ட காரணத்தால் நிதிவசதியை மேம்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே அண்டார்டிக்காவிற்கே மாற்று வழியில் செல்வது என முடிவெடுத்தார்[9].தனது நோக்கங்களைப் பற்றிய தெளிவு அமுன்சென்னிடன் இல்லாததால் ஆங்கிலேயர்களான ராபர்ட் எஃப். சிகாட் மற்றும் நார்வே ஆதரவாளர்கள் அமுன்சென் தங்களை தவறாக வழிநடத்துவதாகக் கருதினர். சிகாட் அந்த ஆண்டிலேயே தனியாக தென் துருவப் பயணத்திற்கு செல்லத் திட்டமிட்டார். அமுன்சென் பிராம் கப்பல் மூலம் தன் பயணத்தை 1910 ஆம் ஆண்டு சூன் 3 இல் தொடங்கி ஓசுலோவை விட்டு புறப்பட்டார். அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள போர்த்துக்கீசிய தீவுக்கூட்டத்தில் ஒன்றான மதீராவை அடைந்ததும் அமுன்சென் தன்குழுவினரிடம் நாம் அண்டார்டிக்காவை நெருங்கிவிட்டோம் என உற்சாகப்படுத்தினார். தனியாகச் சென்ற சிகாட்டுக்கு, பிராம் கப்பல் அண்டார்ட்டிகாவை நெருங்குகிறது என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் என ஒரு தந்தியை அனுப்பி வைத்தார்[9]

ஏறத்தாழ ஆறு மாதங்களுக்கு பின்னர் 1911 ஆம் ஆண்டு சனவரி 14 இல் அப்போது மகா பனி தடுப்புகள் என அழைக்கப்பட்ட ராசு பனியடுக்கின் கிழக்கு முனையை இவர்கள் அடைந்தனர். ஒரு பெரிய கழிமுகமாகக் காணப்படும் இப்பனிக்கட்டித் துறைமுகம் பே ஆஃப் வேல்சு அல்லது திமிங்கல குடா என அழைக்கப்படுகிறது. அமுன்சென் அங்கே தனது முகாமை நிறுவி, அதை பிராம்கீம் எனப் பெயரிட்டு அழைத்தார். முந்தைய அண்டார்டிக்கா பயணங்களின் போது பயன்படுத்திய கனமான கம்பளி ஆடைகள் அணிவதை கைவிட்டார்.

பனிநடைக் கட்டைகள், நாய் சறுக்கு வண்டிகள் போன்றவற்றை போக்குவரத்துக்காக இவர்கள் பயன்படுத்தினர். அமுன்சென் மற்றும் அவரது குழுவினர் திமிங்கல குடாவிற்கு தெற்கில் 80 °, 81 ° மற்றும் 82 ° அளவுகளில் நேரடியாக துருவத்திற்குத் தெற்கில் விநியோக மையங்களை ஏற்படுத்தினர்[4] மேலும், பயணக்குழுவிலிருந்த நாய்கள் சிலவற்றைக் கொன்று புதிய இறைச்சிக்கு அவற்றை ஆதாரமாக்கவும் திட்டமிட்டிருந்தார். எசால்மர் யோகான்சென், கிறித்தியன் பிரெசுதட் மற்றும் யோர்கான் சிடெபருட் உள்ளிட்டவர்கள் அடங்கிய ஒரு சிறிய குழுவை செப்டம்பர் 8, 1911 இல் அமைத்தார். ஆனால் தீவிரமான வெப்பநிலைச் சூழல் காரணமாக அவர்கள் பயணம் கைவிடப்பட்டது. இக்கட்டான இப்பின்வாங்கல் குழுவினரிடத்தில் ஒரு சண்டையை ஏற்படுத்தியது, இதனால் அமுன்சென், யோகன்சனையும் மற்றும் இரண்டு நபர்களையும் ஏழாம் எட்வர்டின் நாட்டை கண்டுபிடிக்க அனுப்பி வைத்தார்.

ஒலாவ் பியாலேண்டு, எல்மர் ஏன்சென், சிவெர் ஆசெல், ஆசுகார் விசுட்டிங் ஆகியோருடன் அமுன்சென் தன்னுடைய இரண்டாவது முயற்சியைத் தொடங்கினார். ஓசுலோ முகாமை விட்டு 1911 ஆம் ஆண்டு அக்டோபர் 19 அன்று புறப்பட்டார். 52 நாய்களும் நான்கு சிலெட்சு வண்டிகளும் குழுவினருடன் சென்றன.முன்னர் அறியப்படாத ஆக்செல் ஐபெர்க் கிளேசியர் என்ற பாதையில் ஏறக்குறைய அவர்கள் நான்கு நாள் பயணம் செய்து நவம்பர் 21 அன்று போலார் பீடபூமியின் விளிம்புக்கு வந்தனர்.14 டிசம்பர் 1911 இல் இந்த ஐவர் குழு 16 நாய்களுடன் துருவத்தினை(90° 0′ தெ) அடைந்தனர். சிகாட் குழுவினர் வந்து சேர்வதற்கு 33-34 நாட்கள் முன்பாகவே இவர்கள் அப்பகுதியைச் சென்று அடைந்திருந்தனர். அமுன்சென் தன்னுடைய தென்துருவ முகாமுக்கு போல்கீம் என்று பெயரிட்டார். இதன் பொருள் துருவத்தில் ஒரு வீடு என்பதாகும். மேலும் அண்டார்டிக் பீடபூமியையும் அமுன்சென் அரசர் ஏழாம் ஆக்கூன் பீடபூமி என்று மறுபெயரிட்டு அழைத்தார். பிராம்கீம் முகாமுக்கு ஒருவேளை இவர்கள் பாதுகாப்பாகத் திரும்பவில்லை என்றால் அவர்கள் சாதனையை பிறர் அறியவேண்டுமென்பதற்காக ஒரு சிறிய கொட்டகையையும் ஒரு கடிதத்தையும் அங்கு அவர்கள் விட்டுச் சென்றனர்.

1912 ஆம் ஆண்டு சனவரி மாதம் 25 ஆம் தேதி அமுன்சென் பயணக் குழுவினர் பிராம்கீம் முகாமுக்குத் திரும்பினர். 11 நாய்கள் எஞ்சியிருந்தன. அவர்கள் கண்டத்தை விட்டு வெளியேறி ஆத்திரேலியாவிலுள்ள ஒபார்ட்டு நகரத்திற்குச் சென்றனர். அங்கு அமுன்சென் 1912 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி தனது வெற்றியை அறிவித்தார். அவருடைய ஆதரவாளர்களுக்கும் செய்தித் துணுக்குகளை அனுப்பினார்.

கவனமான தயாரித்தல், நல்ல உபகரணங்கள், பொருத்தமான ஆடை, ஒரு எளிய முதன்மை பணி, நாய்களைப் புரிந்து கொண்டு பழகுதல், மற்றும் அவற்றை பயிற்றுவித்தல் மற்றும் பனிநடைக் கட்டைகளின் பயனுள்ள பயன்பாடு ஆகியவற்றால் அமுன்சென் குழுவினரின் பயணம் வெற்றியில் முடிந்தது. மாறாக சிகாட் குழுவினர் இவற்றை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் கருதவேண்டும். அமுன்சென்னின் பயணம் ஒப்பீட்டளவில் மென்மையானதாகவும் எதிர்பாராததல்ல என்பதையும் நிரூபித்தது.

அருங்காஅட்சியகத்தில் பனிச்சறுக்கு இழுவை நாய்

இது மிகப்பெரிய காரியம் என்றுதான் நான் சொல்ல வேண்டும். பயணத்திற்கு ஏற்ற பொருத்தமான கருவிகள், பயணத்தின் போது சந்திக்க நேரும் இடர்பாடுகள், அவற்றை எதிர்கொள்வதற்கு அல்லது அவற்றை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இவையணைத்தையும் எவர் கவனித்து நடவடிக்கை எடுத்தாரோ அவருக்கு வெற்றி கிடைக்கிறது. மக்கள் அவ்வெற்றியை பாக்கியம் என்று அழைக்கிறார்கள். உரிய நேரத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் புறக்கணித்தவருக்கு தோல்வி ஏற்பட்டது. இதை துர்பாக்கியம் என்கிறார்கள் என்று அமுன்சென் தன்னுடைய தென் துருவம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Østfold county, Borge in Borge, Parish register (official) nr. I 6 (1861–1874), Birth and baptism records 1872, page 114". பார்க்கப்பட்ட நாள் 25 July 2012.
  2. "Roald Amundsen and the 1925 North Pole Expedition". Historynet.com. பார்க்கப்பட்ட நாள் 11 March 2010.
  3. "Roald Amundsen". PBS.org. Archived from the original on 15 ஜனவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 11 March 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. 4.0 4.1 Thomas, Henry; Dana Lee Thomas (1972). Living Adventures in Science. Ayer Publishing. pp. 196–201. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8369-2573-4.
  5. Amundsen, Roald (1927). My Life as an Explorer. Garden City, N.Y.: Doubleday, Page & company.
  6. 6.0 6.1 The Houghton Mifflin Dictionary of Biography. Houghton Mifflin Reference Books. 2003. pp. 43 1696. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-618-25210-X.
  7. Kingston, Thomas (1979). A History of Scandinavia: Norway, Sweden, Denmark, Finland, and Iceland. U of Minnesota Press. p. 298. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8166-3799-7.
  8. 8.0 8.1 Roald Amundsen and the Exploration of the Northwest Passage. Oslo, Norway: Fram Museum. 2008. pp. 63, 65. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788282350013.
  9. 9.0 9.1 Simpson-Housley, Paul (1992). Antarctica: Exploration, Perception and Metaphor. Routledge. pp. 24–37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-08225-0.

உருவப் படங்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]