மடியநிலை
மடியநிலை (polidy) என்பது ஒரு உயிரணுவில் உள்ள ஒத்தவமைப்புள்ள குறுமவகங்கள் (homologous chromosomes) கூட்டங்களின் அல்லது தொகுதிகளின் (மடங்குகளின்) எண்ணிக்கையைக் குறிக்கும். சில உயிரினங்களில் பொதுவான உடல் உயிரணுக்கள் ஒருமடிய (haploid) நிலையிலும், வேறு சிலவற்றில் உடல் உயிரணுக்கள் இருமடிய (diploid) நிலையிலும், இன்னும் சிலவற்றில் உடல் உயிரணுக்கள் பல்மடிய (polyploid) நிலையிலும் காணப்படும்.
சில உயிரினங்கள் தமது வாழ்க்கை வட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மடியநிலைகளைக் கொண்ட தனியன்களைக் கொண்டிருக்கலாம்.
ஆஸ்திரேலிய bulldog எறும்பு எனப்படும், Myrmecia pilosula ஆனது ஒருமடிய இனமாகும். இங்கே n=1, அதாவது ஒரேயொரு நிறப்புரியைக் கொண்டிருக்கும். இதுவே சாத்தியமான ஆகக்குறைந்த நிறப்புரி எண்ணிக்கை ஆகும்[1]. இவ்வினத்தின் ஒருமடிய தனியன்கள் ஒரேயொரு தனித்த நிறப்புரியையும், இருமடிய தனியன்கள் இரண்டு ஒத்த அமைப்புடைய நிறப்புரிகளையும் கொண்டிருக்கும்.
வேறுபட்ட மடியநிலைகள்
[தொகு]ஒருமடியம்
[தொகு]பொதுவாக உடல் உயிரணுக்களில் (somatic cells) உள்ள மடிய எண்ணிக்கையானது, கருமுட்டை, விந்து போன்ற பால் உயிரணுக்களில் (sex cells) அரைவாசியாகக் குறைக்கப்படும். அதாவது பால் உயிரணுக்கள் அல்லது பாலணுக்கள் ஆகிய கருமுட்டை, விந்து என்பன முறையே ஒரு பெண்ணிலும், ஒரு ஆணிலும் இருந்து பெறப்படும் ஒரேயொரு முழுமையான நிறப்புரிக் கூட்டத்தைக் கொண்டிருக்கும். அதனால் இது ஒருமடியம் (n) எனப்படும். இந்த பால் உயிரணுக்கள் பாலணுக்கள் (gametes) எனவும் அழைக்கப்படும்.
இருமடியம்
[தொகு]இரு புணரிகள் இணைந்தே உடல் உயிரணுக்கள் (somatic cells) உருவாகும். எனவே உடல் உயிரணுக்கள் புணரிகளைப் போல் இரு மடங்கு நிறப்புரிகளைக் கொண்டிருக்கும். அதாவது ஒவ்வொரு நிறப்புரிக்கும், அதே போன்ற இன்னொரு பிரதி நிறப்புரியொன்று காணப்படும். இதனால் ஒத்த அமைப்புடைய இரு கூட்டங்களாக அல்லது தொகுதிகளாக நிறப்புரிகள் இருப்பதனால் இது இருமடியம் (2n) எனப்படும்.
பல்மடியம்
[தொகு]ஒருமடியம் என்பது புணரிகளில் உள்ள நிறப்புரிக் கூட்டங்களின் எண்ணிக்கையைக் குறிக்கின்றது. சிலசமயம் ஒரு தனிக்கூட்டத்தில் இருக்கும் நிறப்புரிகளின் எண்ணிக்கை ஒற்றைத்தொகுதி (Monoploid) எனவும் அழைக்கப்படும். அது x என்ற குறியீட்டால் அடையாளப்படுத்தப்படும். சில உயிரினங்களில் இந்த x உம், n உம் ஒரே எண்ணிக்கையைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக மனிதரில், ஒருமடிய புணரிகளில், x=n=23 ஆக இருக்கும். அதாவது புணரிகள் ஒற்றைத்தொகுதி (monoploid) நிலையில் இருக்கும். அதேவேளை, இருமடிய உடல் உயிரணுக்களில் 2x=2n=46 ஆக இருக்கும்.
ஆனால் வேறு சில உயிரினங்களில் இந்த x உம், n உம் வெவ்வேறு எண்ணிக்கையையும் கொண்டிருக்கலாம். எடுத்துக்காட்டாக Triticum aestivum எனப்படும் Bread wheat தாவரத்தில் 6 கூட்டம்/தொகுதி நிறப்புரிகள் உள்ளன. இந்த குறிப்பிட்ட இனத்திற்கு நெருக்கமற்ற, மூன்று வெவ்வேறு இருமடிய மூதாதை இனங்களின், ஒவ்வொன்றிலுமிருந்து 2 நிறப்புரித் தொகுதிகளைப் பெற்றதன் மூலம், இந்த Bread wheat இனம் 6 தொகுதி நிறப்புரிகளைப் பெற்றுள்ளது. எனவே இந்த தாவரத்தின் உடல் உயிரணுவானது ஒரு அறுமடிய (hexaploid) உயிரணுவாகும். இங்கே 2n=6x=42. இங்கே ஒற்றைத்தொகுதியில் (monoploid) உள்ள நிறப்புரிகளின் எண்ணிக்கை 7 ஆகும். அதாவது x=7. புணரிகளில் உள்ள நிறப்புரிகளின் எண்ணிக்கை n=21. எனவே இங்கு n=3x. இந்த புணரிகள் உண்மையில் 3 தொகுதி நிறப்புரிகளைக் கொண்டுள்ளன. எனவே இவை ஒற்றைத் தொகுதி (monoploid) எனக் கூற முடியாது.
பல தாவரங்கள், நிலநீர் வாழிகள், ஊர்வன, பூச்சி போன்ற உயிரினங்களில் நான்கு தொகுதி நிறப்புரிகள் (2n = 4x) இருப்பதனால் நான்மடிய (Tetraploid) நிலையை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
மனிதரில் மடியநிலை
[தொகு]மனிதர்கள் இருமடிய நிலையில் உள்ளவர்கள். இருமடிய நிலையில் மனிதரின் நிறப்புரிகளின் எண்ணிக்கை 23 சோடியாக (46) ஆக இருக்கும். அதாவது 2n=46. இவற்றில் பால்சாரா நிறப்புரிகள் (autosomes) 22 சோடிகளாகவும், பால்சார் நிறப்புரிகள் (sex chromosomes) 1 சோடியாகவும் இருக்கும். பால்சார் நிறப்புரிகள் பெண்களில் ஒத்த அமைப்புடையவையாக, XX ஆகவும், ஆண்களில் வேறுபட்ட அமைப்புடையவையாக, XY ஆகவும் அமைந்திருக்கின்றன.
இவர்களின் கருமுட்டை, விந்து ஆகிய புணரிகள் ஒருமடியமாக இருக்கும். அவை 23 தனிக்கூட்ட நிறப்புரிகளைக் கொண்டிருக்கும். கருமுட்டையில் பால்சார் நிறப்புரியான, ஒரு நிறப்புரியானது X ஆக இருக்கும். விந்தில் பால்சார் நிறப்புரியான ஒரு நிறப்புரி X ஆகவோ, அல்லது Y ஆகவோ இருக்கும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ எஆசு:10.1126/science.231.4743.1278
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand