உள்ளடக்கத்துக்குச் செல்

பல்லவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்லவப் பேரரசு
பல்லவ நாடு
பொ.ஊ. 275–பொ.ஊ. 897
கொடி of பல்லவப் பேரரசு
கொடி
நரசிம்மவர்மன் கால பல்லவ நாடு
நரசிம்மவர்மன் கால பல்லவ நாடு
தலைநகரம்காஞ்சிபுரம்
பேசப்படும் மொழிகள்பிராகிருதம், தமிழ்
சமயம்
சமணம், பௌத்தம், இந்து சமயம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்மத்திய காலம்
• தொடக்கம்
பொ.ஊ. 275
• முடிவு
பொ.ஊ. 897
பின்னையது
}
சோழர்
சாளுக்கியர்
தற்போதைய பகுதிகள் இந்தியா
 இலங்கை
பல்லவ சிம்ம கொடி
பல்லவ மன்னர்களின் பட்டியல்
முற்காலப் பல்லவர்கள்
பப்பதேவன் சிவகந்தவர்மன்
விசய கந்தவர்மன்
புத்தவர்மன்
விட்ணுகோபன் I
இடைக்காலப் பல்லவர்கள் - தமிழ் நாடு
குமாரவிட்ணு I
கந்தவர்மன் I
வீரவர்மன்
கந்தவர்மன் II II பொ. யு. 400 - 436
சிம்மவர்மன் I II பொ. யு. 436 - 477
கந்தவர்மன் III
நந்திவர்மன் I
இடைக்காலப் பல்லவர்கள் - ஆந்திர பிரதேசம்
விட்ணுகோபன் II
சிம்மவர்மன் II
விட்ணுகோபன் III
பிற்காலப் பல்லவர்கள்
சிம்மவர்மன் III
சிம்மவிட்டுணு பொ. யு. 556 - 590
மகேந்திரவர்மன் I பொ. யு. 590 - 630
நரசிம்மவர்மன் I (மாமல்லன்) பொ. யு. 630 - 668
மகேந்திரவர்மன் II பொ. யு. 668 - 669
பரமேசுவரவர்மன் பொ. யு. 669 - 690
நரசிம்மவர்மன் II (இராசசிம்மன்) பொ. யு. 690 - 725
பரமேசுவரவர்மன் II பொ. யு. 725 - 731
நந்திவர்மன் II (பல்லவமல்லன்) பொ. யு. 731 - 796
தந்திவர்மன் பொ. யு. 775 - 825
நந்திவர்மன் III பொ. யு. 825 - 850
நிருபதுங்கவர்மன் (தென் பகுதி) பொ. யு. 850 - 882
கம்பவர்மன் (வட பகுதி) பொ. யு. 850 - 882
அபராசிதவர்மன் பொ. யு. 882 - 901
தொகு
இரண்டாம் நரசிம்மவர்மனால் கட்டப்பட்ட மகாபலிபுரத்திலுள்ள கடற்கரைக் கோயில்

பல்லவர் (Pallavas) என்போர் தென்னிந்தியாவில் பொ.ஊ. 275 முதல் பொ.ஊ. 897 வரை சுமார் ஐந்நூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் நிலைத்து ஆட்சி புரிந்தவர்கள். இவர்கள் இலங்கையை அடுத்த மணிபல்லவத் தீவிலிருந்து வந்தவர்கள்; தொண்டை மண்டலத்துப் பழங்குடிகள்; பஹலவர்கள் எனும் பாரசீக மரபினர் என்று பல்வேறு கருத்து வேற்றுமைகள் உண்டு. அவர்களைப் பற்றிக் கிடைத்துள்ள சான்று மூலங்களைக்கொண்டு, பட்ட முறைமையை முற்றும் முறைப்படுத்தவும் முடியவில்லை.வின்சென்ட் ஸ்மித் என்னும் ஆங்கில வரலாற்றாசிரியர் தமது நூலின் முடிவாகப் பல்லவர் தென்னிந்தியரே என்று வரையறுத்துள்ளார்.[1] சாதவாகனப் பேரரசில் குறுநில மன்னர்களாகவும் ஆட்சியாளர்களாகவும் செயல்பட்டு வந்த இவர்கள் சாதவாகனப் பேரரசு வலுக்குன்றியதும் கிருஷ்ணா ஆற்றிற்குத் தெற்குப்பகுதியை ஆளத் தொடங்கினர்.[2][3][4] போதிய வலிமை பெற்றதும் தொண்டை நாட்டையும், களப்பிரர்களையும், சிற்றரசர்களாக இருந்த சோழர்களையும் வென்று புதுக்கோட்டை வரை சென்று தமிழகத்தின் வட பகுதியை ஆளத் தொடங்கினர்.[5]

பல்லவர் காலக் குடைவரைக் கோயில் சிலை

பல்லவரின் தோற்றம்பற்றிய கூற்றுகள்

[தொகு]

வட இந்தியாவிலிருந்து வந்தவர்கள்

[தொகு]

தமிழ் நாட்டில் பொ.ஊ. நான்காம் நூற்றாண்டு தொடக்கம் முதல் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை ஏறத்தாழ 700 வருடங்கள் ஆட்சி புரிந்தனர். இவர்களது ஆட்சி தமிழகத்தின் வரலாற்றில் பல்வேறு அம்சங்களில் திருப்புமுனையாக அமைந்தது எனலாம். எனினும் இவர்களுடைய வரலாறு பற்றி நம்பத்தகுந்த தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. இவர்கள் தமிழர்களேயென ஒரு பிரிவினர் நிறுவ முயல, வேறு சிலர் இவர்கள், தமிழகத்துக்கு வெளியிலிருந்து வந்த தமிழரல்லாத இனத்தவர்கள் என்கின்றனர். இவர்கள் மூலத்தைத் தென்னிந்தியாவில் மட்டுமன்றி பாரசீகம், ஈழம் போன்ற பகுதிகளிலும் ஆய்வாளர்கள் தேடியுள்ளார்கள். முற்காலப் பல்லவர்கள் வெளியிட்ட சாசனங்களின் மொழி மற்றும் அவற்றின் உள்ளடக்கங்களை வைத்து, இவர்கள் இந்தியாவின் வடபகுதியிலிருந்து வந்த ஒரு பிராமணக்குடியினர் என்று சிலர் கருதுகிறார்கள்.[6] பல்லவர்களின் மிகப் பண்டைய கல்வெட்டுக்கள் பெல்லாரி, குண்டூர் மற்றும் நெல்லூர் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன.[7] பிற்காலத்தில் அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பல்லவர்கள் தமிழ் மொழியின் பயன்பாட்டை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.[8][9]

தென்னிந்தியர்

[தொகு]

இந்திய வரலாற்று நூலாசிரியரான 'வின்சென்ட் சுமித்' என்பவர், தமது 'பண்டைய இந்திய வரலாறு' என்னும் நூலின் முதற்பதிப்பில், 'பல்லவர் என்பவர் பஹலவர் என்னும் பாரசீக மரபினர்' என்றும், இரண்டாம் பதிப்பில் 'பல்லவர் என்பவர் தென் இந்தியாவிற்கே உரியவர்' என்றும் குறிப்பிடுகிறார். இவர்கள் கோதாவரிக்கும் கிருஷ்ணா ஆற்றுக்கும் இடைப்பட்ட வேங்கி நாட்டவராகலாம்' என்றும், மூன்றாம் பதிப்பில், பஹலவர் என்னும் சொல்லைப் பல்லவர் என்னும் சொல்லோடு ஒப்பிட்டுப் பார்த்து பாரசீகரெனக் கூறல் தவறு. 'பல்லவர் என்பவர் தென் இந்தியரே ஆவர்' என்றும் முடிவு கூறியுள்ளார்.

ஆயினும், ரைஸ் என்னும் ஆராய்ச்சியாளர், 'பகலவர்கள் மரபினரே பல்லவர்' என்று முடிவு செய்தார். பேராசிரியர் துப்ராய் என்பவர், 'பொ.ஊ. 150 இல் 'ருத்ர தாமன்' என்னும் ஆந்திரப் பேரரசன் அமைச்சனான கவிராகன் என்பவன் பஹலவன். அவன் மரபினரே ஆந்திரப் பேரரசு அழிவுறுங்காலத்தில் அதன் தென்பகுதியை தமதாக்கி ஆண்டவராவர். கிடைத்துள்ள பட்டயங்களில் காணப்படுபவர் முதற் பல்லவ அரசர் அல்லர். ஆந்திரப் பேரரசின் தென் மேற்கு மாகாணங்களை ஆண்டு வந்த சூட்டுநாகர் பெண்ணை மணந்து பட்டம் பெற்றவனே முதற்பல்லவன். அவனே பல்லவர் பட்டயங்களில் கூறப்படுபவன்' என்று வரைந்துள்ளார்.[10] இங்ஙனம் பல்லவர் என்பர் பஹலவர் மரபினரே என்று முடிவு கொண்டவர் பலர். புதுக்கோட்டை மன்னர் தன்னைப் பல்லவராயர் எனக் கூறிக்கொள்கிறார். இம்மன்னர் இந்நாட்டுக் குடியாகிய கள்ளர் குலத்தலைவர். மற்றும் வெள்ளாள மரபினருள் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் பல்லவராய கோத்திரத்தைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே புகழோடு விளங்கிய இராசசேகரன் என்பவர் தமது ‘புவன கோசம்' (Bhuvanakosa) என்ற நூலிலே சிந்து வெளிப் பல்லவர், தென்னாட்டுப் பல்லவர் என பல்லவர்களை இரு பிரிவாக்குகிறார். மேற் கூறியவற்றிலிருந்து பல்லவர் இந்நாட்டவரே என்று வாதிக்கப்படுகிறது.[11]

இலங்கையர்

[தொகு]

இலங்கையிற் சிறந்த ஆராய்ச்சியாளராக இருந்த இராசநாயகம் என்பவர். 'இலங்கையை அடுத்துள்ள மணிபல்லவம் (காரைத்தீவு) பல்லவர் பிறப்பிடமாகும். மணிமேகலையில் கூறப்பட்டுள்ள சோழனை மணந்த பீலிவளை என்பவர் நாகர் மகள் ஆவாள். அவன் பெற்ற மைந்தனே திரையால் கடத்தப்பட்டுக் கரை சேர்ந்த முதல் பல்லவன். அவன் தொண்டைக் கொடியால் உந்தப்பட்டு வந்தமையின் 'திரையன்' என்றும் வழங்கப்பெற்றான். அவன் மரபினரே தம் தாயகம் தாங்கிப் (மணிபல்லவம்) பல்லவர் எனப்பட்டனர். பல்லவர் முதல் அரசன் பெரும்பாணாற்றுப்படையில் புகழ்பெற்ற தொண்டைமான் இளந்திரையன் ஆவான்' என விளக்கியுள்ளார்.

யாழ்ப்பாணம் யாழ்ப்பாண மக்களால் 'மணிபுரம்' எனப்படுகிறது. அங்கு நாகரும் இருந்தமையால் 'மணி நாகபுரம்' என்னும் பெயர் பெற்றது. இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி வருபவர்க்கு யாழ்ப்பாணம் ஒரு போது (போத்து - sprout) போலக்காணப்படுதலின், அது போது (போத்து) எனப்பட்டது. போது, போத்து, பல்லவம் என்பன ஒரே பொருளைக் குறிப்பன. யாழ்ப்பாணத்திலிருந்து போந்தவர் ஆதலின், தம்மைப் 'போத்தர்' என்றும், 'பல்லவர்' என்றும் பல்லவ அரசர் கூறிக்கொண்டனர். 'மணிபல்லவம்' என்னும் தீவு மணிமேகலையில் குறிக்கப்பட்டிருத்தலால் மணிமேகலை காலத்து மக்கட்கு விளங்கி இருத்தல் புலனாகும். 'வீரகூர்ச்சன் நாகர் மகளை மணந்து அரசு பெற்றான்' என்று பல்லவர் பட்டயம் கூறுதலும், கிள்ளிவளவன் நாகர் மகளை மணந்து பெற்ற இளந்திரையன், தொண்டை மண்டலம் ஆண்டான் என்பதும் ஆராய்ச்சிக்கு உரியன. மேலும், பல்லவர், இன்ன இடத்திலிருந்து வந்ததாக ஒரு பட்டயத்திலும் கூறப்படவில்லை. 'தொண்டைமண்டலத்துப் பழங்குடியினரான குறும்பர்களே பிற்காலப் பல்லவர்' என்றும் முடிவு செய்தனர்.[12]

பல்லவர் தமிழர் அல்லர்

[தொகு]

வின்செண்ட் சுமித் தமது மூன்றாம் பதிப்பில் கூறியதே பெரிதும் பொருத்தமுடையதாகத் தெரிகின்றது. பிராகிருத மொழியில் வெளியிடப்பட்ட பல்லவப் பட்டயங்களோ, அல்லது வடமொழியில் எழுதப்பெற்ற பல்லவர் பட்டயங்களோ, பிற கல்வெட்டுகளோ 'பல்லவர் பஹலவர் மரபினர்' என்றோ, வேற்று நாட்டவர் என்றோ, 'திரையர் மரபினர்' என்றோ, 'மணிபல்லவத் தீவினர்' என்றோ குறிக்கவில்லை. சங்ககாலத்தில் தொண்டை மண்டலத்தை ஆண்ட இளங்கிள்ளி, இளந்திரையன் என்பார்க்கும் சிவஸ்கந்தவர்மன், 'புத்தவர்மன்' வீரகூர்சவர்மன் என்பார்க்கும் தொடர்பு ஏதும் இருந்திருத்தல் இயலாது. மேலும் பல்லவர் பட்டயங்கள் அனைத்தும் பிராக்ருத மொழியிலும் பெரும்பாலானவை வடமொழியிலும் இருக்கின்றன. பல்லவர் காலத்தில் வடமொழி தொண்டை மண்டலத்தில் பேரரசு செலுத்தியது எனலாம். பாரவி, தண்டி முதலிய வடமொழிப் புலவர்கள் பல்லவர் ஆட்சியில் செல்வாக்குப் பெற்றிருந்தனர் என்பது தெரிகிறதேயன்றி, எந்தத் தமிழ்ப் புலவரும் பொ.ஊ. எட்டாம் நூற்றாண்டுவரை பல்லவர் ஆதரவு பெற்றதாகத் தெரியவில்லை. மேலும், பல்லவர், தம்மைப் 'பரத்வாச கோத்திரத்தார்' என்று பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் கூறிக்கொள்கின்றனர்; இன்ன பிற காரணங்களால், பல்லவர் தமிழரின் வேறுபட்டவர் என்பதைத் தெளிவுறக் காணலாம்.

பல்லவர் - பஹலவர் மரபினர்

[தொகு]

பகலவர்கள் முன்பு பார்த்தியர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இவர்கள் தொண்டை மண்டலமாக இன்று அறியப்படும் ஆந்திர கடல் கரை பிரதேசம், காஞ்சி பிரதேசத்தில் தங்கி அங்கிருந்து தங்களது பல்லவ சாம்ராஜ்யத்தை நிறுவினர்.[13] பஹலவ மன்னர்கள் தங்கள் சின்னமாக நெருப்பைக் கொண்டிருந்தார்கள். ஒரு பாத்திரத்தில் நெருப்பு எரிவதை தங்களது சின்னமாகவும் தங்களது சிற்பங்களிலும் வடித்து வைத்திருந்தனர். அதுவே பல்லவர்களும் செய்தது. பல்லவர்களது சின்னமாக இருந்ததும் நெருப்பு சட்டியே.[சான்று தேவை] பல்லவர்கள் பெர்சியா (ஈரான்) நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற கூற்றும் நிலவுகிறது.[14]

தொண்டை நாடும் சங்க நூல்களும்

[தொகு]
இரண்டாம் நரசிம்ம வர்மன் காலத்தில் பாறையைக் குடைந்து கட்டப்பட்ட பஞ்சபாண்டவர் இரதங்கள்,மாமல்லபுரம்.

வடபெண்ணையாற்றைத் தென் எல்லையாகவும் சோணையாற்றை வடஎல்லையாகவும் அரபிக்கடலை மேற்கு எல்லையாகவும் கலிங்கத்தையும் வங்க மாகாணத்தையும் கிழக்கு எல்லையாகவும் கொண்ட ஆந்திரப் பெருநாடு பொ.ஊ.மு. 184 முதல் பொ.ஊ. 260 வரை செழிப்புற்று இருந்தது. வடபெண்ணை முதல் தென்பெண்ணை வரை இருந்த நிலப்பரப்பே அக்காலத் 'தொண்டை மண்டலம்' எனப்பட்டது. அஃது அருவாநாடு, அருவாவடதலைநாடென இரண்டு பிரிவுகளாக இருந்தது - முன்னதில் காஞ்சிநகரம் உட்பட்டது. பின்னது காஞ்சி முதல் வடபெண்ணை வரை இருந்த நாடாகும். இது குன்றுகளும் காடுகளும் சூழ்ந்த இடமாகும். காளத்தி முதலிய மலையூர்களைத் தன்னகத்தே பெற்றது. அவ்விடம் இன்றும் 'தொண்டைமான் மாகணி' (மாகாணம்) எனப்படுகிறது.

வடக்கே இருந்த அருவாவடதலை நாட்டில் திருப்பதியைத் தன் அகத்தே கொண்ட மலைநாட்டுப் பகுதியைத் திரையன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் தலைநகரம் 'பாவித்திரி' என்பது. அஃது இப்பொழுதைய கூடூர் தாலுக்காவில் உள்ள ரெட்டிபாளையம் என்னும் ஊராகும். இந்நிலப்பகுதி முன்னாளில் காகந்திநாடு எனப்பெயர் பெற்றது. காகந்தி என்பது புகாரின் மறுபெயர் ஆகும். இங்ஙனம் தொண்டை மண்டலம் கரிகால் சோழன் காலத்தில் சோழர் ஆட்சிக்கு வந்ததெனப் பட்டினப்பாலை முதலிய தமிழ் நூல்கள் கூறுகின்றன. முதல் சோழர் மரபினர் ஒருவர் தொண்டை மண்டலத்தை ஆண்ட செய்தி சங்கநூல்களில் காணக்கிடைக்கின்றது. 'திரையன்' அருவாவடதலை நாட்டை ஆண்டபோது, 'இளந்திரையன்' அருவா நாட்டை ஆண்டனன். தொண்டைமான் இளந்திரையன் என்பவன் காஞ்சியை ஆண்ட தமிழ் அரசனாகப் பெரும்பாணாற்றுப்படையில் சிறப்பிக்கப்படுகிறான். இந்த அளவே அகநானூறு முதலிய சங்க நூல்களால் பல்லவர் ஆட்சிக்கு முன்னிருந்த தொண்டை நாடுபற்றி அறிய முடிகிறது.

மூன்று பிரிவுப் பல்லவர்கள்

[தொகு]
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்.

பல்லவர்களில்

  1. முற்காலப் பல்லவர்கள்
  2. இடைக்காலப் பல்லவர்கள்
  3. பிற்காலப் பல்லவர்கள்

என்ற மூன்று பிரிவினர் உண்டு.

முற்காலப் பல்லவர்கள்

[தொகு]

முற்காலப் பல்லவர்களில் பப்பதேவன், சிவகந்தவர்மன், விசய கந்தவர்மன், இளவரசன் புத்தவர்மன், புத்யங்குரன் ஆகிய ஐவரது பெயர்கள் மயித ஹோலு, ஹீரஹதகல்லி, குணபதேய என்ற மூன்று இடங்களில் கிடைத்த படயங்களின் மூலம் வெளிப்பட்டன.[15] இவர்கள் காலத்தில் ஆந்திரப் பகுதியும் தொண்டை நாட்டின் வடபகுதியும் பல்லவ நாடாக விளங்கின.[16]

இடைக்காலப் பல்லவர்கள்

[தொகு]

இடைக்காலப் பல்லவர்களின் காலம் பொ.ஊ. 340 முதல் பொ.ஊ. 615 வரை நீண்டது.

  1. முதலாம் குமாரவிட்ணு
  2. முதலாம் கந்தவர்மன்
  3. வீரகூர்ச்சவர்மன்
  4. கந்தசிஷ்யன் எனப்பட்டஇரண்டாம் கந்தவர்மன்
  5. இளவரசன் விட்ணுகோபன்
  6. புத்தவர்மனாகிய இரண்டாம் குமாரவிட்ணு
  7. இரண்டாம் சிம்மவர்மன்
  8. மூன்றாம் கந்தவர்மன்
  9. மூன்றாம் குமாரவிட்ணு

எனப் பதின்மூன்று பேர்களின் விவரங்கள் கிடைக்கின்றன.

பிற்காலப் பல்லவர்கள் மரபு

[தொகு]

பிற்காலப் பல்லவர்களில் சிம்மவிஷ்ணுவின் மரபில் வந்த முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன், இரண்டாம் மகேந்திரவர்மன், பரமேசுவரவர்மன், இரண்டாம் நரசிம்மவர்மன், அவன் மகன் மூன்றாம் மகேந்திரவர்மன் என ஒரு மரபு நீள்கிறது. பிற்காலப் பல்லவர்களின் பிந்தைய தலைமுறையினரில் பரமேசுவரவர்மனும், இராஜசிம்மன் என்று அழைக்கப்பட்ட இரண்டாம் நரசிம்மனும் சிறப்புற்ற மன்னர்களாவர். இவர்கள் காலத்தில் தான் இன்றும் நிலைத்திருக்கும் மாமல்லபுரத்துக் கலைச் செல்வங்கள் உருவாக்கப்பட்டன.

எல்லைப்போர்கள்

[தொகு]
களப்பிரர் கால பல்லவ நாடு. (சிவப்பு நிறம்) பொ.பி. 3-5 நூற்றாண்டு.

பல்லவர் ஆட்சிக் காலம் தொடக்கத்திலிருந்தே ஓயாதபோர்கள் நிகழ்ந்தன. வடக்கில் குப்தர்கள், கதம்பர்கள், வாகாடகர்கள், சோழர்கள், சாளுக்கியர்கள் மற்றும் இராட்டிரகூடர்களின் இடைவிடாத தாக்குதல்களை பல்லவர்கள் சந்திக்க வேண்டியிருந்தது. இவை தவிர காவிரிக்குத் தெற்கே குடகு நாட்டை ஆண்ட கங்கர்கள், கீழைச் சாளுக்கியர், பாண்டியர் போன்றோரும் பல்லவர்களுக்குத் தலைவலியாக இருந்து வந்தனர். தொண்டை நாட்டைச் சேர்ந்த சீமாறன் சீவல்லபனும் தனது பெரும் எதிர்ப்பைப் பிற்காலத்தில் காட்டினார். ஆட்சியைத் துவக்கும்போதே பல்லவர்கள் களப்பிரர்களை வேரறுத்துத் தான் துவக்கினர். அவ்வாறே பல்லவ மரபு முடியும்போதும், பாண்டியர்களின் போர் அவர்களுக்கு முற்றுப் புள்ளியாய் அமைந்தது.

பல்லவர் காலமும் சமுதாய மாற்றமும்

[தொகு]

பல்லவர்கள் காலத்தில் ஏற்பட்ட சமுதாய மாற்றங்கள் பற்பல. அவற்றுள் முதன்மையானது சங்க கால மன்னர்களுக்குப் பின் மக்களின் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்குவதில் பல்லவர்கள் காட்டிய அக்கறையாகும். பல பேரேரிகளையும் குளங்களையும், கிணறுகளையும் ஆற்று வாய்க்கால்களையும் வெட்டியவர்கள் பல்லவர்கள். பல்லவர்கள் காலத்தில் வரிச்சுமை அதற்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் கூடுதலாகவே அமைந்தது. வேளாண்மை வரி, தொழில்வரி என்று தனித்தனியே பிரித்து வரி வசூலித்தனர். அவர்கள் காலத்தில் வடமொழிக் கல்வியே ஊக்குவிக்கப்பெற்றது. இக்காலத்தில் சமண, பௌத்த, வைணவ சமயங்கள் நிலவிய போதும் சைவமே தழைத்தோங்கி செல்வாக்கு பெற்றது.

பல்லவர் ஆட்சி முறை

[தொகு]

பல்லவ நாடு பல இராட்டிரங்களாகப் (மண்டலங்களாக) பிரிக்கப்பட்டது. ஒவ்வோர் இராட்டிரமும் பல விஷயங்களாகப் (கோட்டங்களாக) பிரிக்கப்பட்டிருந்தது. முண்டராட்டிரம், வெங்கோராட்டிரம் (வெங்கிராட்டிரம்), துண்டகராட்டிரம் (தொண்டை மண்டலம்) எனபன பல்லவர் பட்டயங்களில் குறிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பல்லவர் கோட்டம், நாடு, ஊர் போன்ற ஆட்சிப்பிரிவுகளை அமைத்தனர். நாட்டின் ஆட்சிக்குப் பொறுப்பாளர்கள் நாட்டார் என்றும் ஊரின் ஆட்சிக்குப் பொறுப்பானவர்கள் ஊரார் என்றும் அழைக்கப்பட்டனர்.

மன்னர்

[தொகு]

நாடாளும் பொறுப்பு முழுவதும் மன்னன் கைகளில் இருந்தது. அரசனாகும் உரிமை பரம்பரை வழி உரிமையாக வந்தது. சில சமயங்களில் மக்களே மன்னனைத் தேர்ந்தெடுத்தனர் என்பதை இரண்டாம் பரமேசுவரன் மகன் சித்திரமாயன் அரசனாக ஆவதற்குத் தகுதியற்றவனெனக் கருதப்பட்டு, பல்லவ மன்னன் இரண்டாம் நந்தி வர்மன் என்ற பட்டப் பெயருடன் மன்னனாக ஆனதைக் குறிப்பிடலாம். பல்லவ மன்னர்கள் கல்வி, அறிவு, கலையறிவு, பண்பாடு, ஆட்சித்திறன், வீரம் ஆகியவற்றில் சிறப்புற்று விளங்கினர். சமயத்திலும் இறைவழிபாட்டிலும் பல்லவ மன்னர் அளவிலாத ஈடுபாடு கொண்டனர்.

பல்லவர் கோயில் சிலை

அரசு அலுவலர்கள்

[தொகு]

பல்லவ மன்னர்களுக்கு ஆமாத்தியர்கள் என்ற அமைச்சர்கள் இருந்தனர் என்பதற்கும், அமைச்சர் குழு இருந்தது என்பதற்கும் சான்றுகள் கிடைக்கின்றன. இரண்டாம் நந்திவர்மனது தலைமை அமைச்சர் பிரம்மஸ்ரீ ராஜன், மூன்றாம் நந்திவர்மனது அமைச்சன் நண்பன் இறையூர் உடையன், தமிழ்ப்பேரரையன் என்ற அமைச்சர் பெயர்களால் தகுதியுடைய பிராமிணர்களும் வேறு பெருமக்களும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர் என்று அறிகிறோம்.பல்லவ வேந்தர்களிடம் உள்படு கருமத்தலைவர், வாயில் கேட்பார், கீழ்வாயில் கேட்பார் போன்ற அதிகாரிகள் ஆட்சி நடத்த உதவி புரிந்தனர். பொற்கொல்லர், பட்டய எழுத்தாளர், காரணீகர் போன்றோர் அரண்மனை அலுவலராக விளங்கினர்.

சின்னம்

[தொகு]

பல்லவ வேந்தர் நந்தி இலச்சினை கொண்டனர். சில பட்டயங்களில் சிங்கச் சின்னம் காணப்படுகின்றது. இச்சிங்கச்சின்னம் பட்டயங்கள் பல்லவ மன்னர்களால் போர்க்களங்களிலிருந்து விடப்பட்டவையாகும். பல்லவர் நாணயங்களிலும் நந்திச் சின்னம் பொறித்தனர்.

நீதி

[தொகு]

காஞ்சி போன்ற பெருநகரங்களில் நடைபெற்ற நீதிமன்றங்களுக்கு அதிகரணம் என்று பெயர் வழங்கப்பட்டது. அந்நீதிமன்றத் தலைவர்கள் 'அதிகரண போசகர்' என்று அழைக்கப்பட்டார். சிற்றூரில் உள்ள நீதிமன்றங்கள் 'கரணங்கள்' எனவும் அதன் தலைவர் 'கரண அதிகாரிகள்' என்றும் அழைக்கப்பட்டனர். இவ்வதிகரணங்கள், குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் எனவும் 'தருமாசனம்' எனப்படும் உயர்நீதிமன்றம் அரசனது நேரான மேற்பார்வையில் பிற வழக்குகளை விசாரிக்கும் எனவும் ஒருவாறு உணரலாம். சிற்றூர்களில் இருந்த அரங்கூர் அவையத்தார் வழக்குகளை ஆட்சி(அநுபோக பாத்தியர்), ஆவணம்(எழுத்து மூலமான சான்றுகள்), அயலார் காட்சி, கண்டார் கூறு ஆகிய சான்றுகளின் அடிப்படையில் விசாரித்து முடிவு கூறினர்.

பல்லவர் படை வலிமை

[தொகு]

பல்லவர் பண்பட்டதும், திறனுடையதுமான படை வைத்திருந்தனர் என்பது அவர்கள் கதம்பர், சாளுக்கியர், கங்கர், இராஷ்டிரகூடர் போன்ற வடபுலத்து மன்னர்களோடும், பாண்டிய சோழ, களப்பிரரோடும் போரிட்டதிலிருந்து அறியலாம். சிம்மவர்மன், நரசிம்மன் காலத்தில் பரஞ்சோதி (சிறுத்தொண்ட நாயனார்), இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் வில்வலம் என்னும் ஊருக்கும் வேகவதியாற்றுக்கும் தலைவனான பூசான்மரபினைச் சேர்ந்த உதயசந்திரன், மூன்றாம் நந்திவர்மன் காலத்தின் பூதிவிக்கிரமகேசர் என்னும் கொடும்பாளுர் சிற்றரசன் ஆகியோர் சிறந்த படைத்தலைவர்களாக விளங்கிப் பல்லவ நாட்டைக் காத்தனர்.

பல்லவர் மிக வலிமையுடைய கடற்படை வைத்திருந்தனர் என்ற செய்தியை மாமல்லனாகிய நரசிம்மவர்மன் இலங்கை நாட்டு மானவன்மனுக்கு அரசுரிமை கிடைக்க ஈழத்தின்மீது படையெடுத்ததிலிருந்தும், நிருதுபங்கவர்மன் காலத்தில் சீமாறன் சீவல்லபன் என்ற பாண்டியன், பல்லவனின் கடற்படை கொண்டு ஈழத்தின் மீது படையெடுத்ததிலிருந்தும் அறியலாம். மேலும் சீனம், சயாம் போன்ற கடல் கடந்த நாடுகளுடன் கடல் வாணிகம் செய்த செய்திகளையும் அறிகிறோம். கப்பலை நாணயத்தில் பொறித்து வெளிட்ட தமிழக மன்னர்களில் முதல்வர் பல்லவர்களே.

போர்கள்

[தொகு]

ஊராட்சி முறை

[தொகு]

ஊரின் ஆட்சி ஊரவைப் பெருமக்களால் நடைபெற்றது. ஊரவைகள், ஏரிவாரியம், தோட்டவாரியம் போன்ற பல வாரியங்கள் வாயிலாக மக்களாட்சி நடத்தியது. ஆளுங்கணத்தார் என்போர் சிற்றூர்களை நேரே பொறுப்பாக அரசியலுக்குட்பட்டு ஆண்டவர்களாவர். கோயில் தொடர்புற்ற பல்வகை செயல்களையும் கவனித்துக் கோயில்களைப் பாதுகாத்தவர் 'அதுர்கணத்தார்' எனப்பட்டனர். இவர்கள் கோயில் தொடர்பான செய்திகளில் ஊரவைக்குப் பொறுப்பானவர்களாவர்.

சிற்றூர்களின் எல்லைகள் அளக்கப்பட்டுக் குறிக்கப்பட்டன. கிணறுகள், குளங்கள், கோயில்கள், ஓடைகள் முதலியன ஊருக்குப் பொதுவாக விளங்கின. நெல் அடிக்கும் களத்துகு வரியாக, நிலத்துச் சொந்தக்காரர் குறிப்பிட்ட அளவு நெல்லைச் சிற்றூர்க் களஞ்சியத்துக்குச் செலுத்தினர்.

பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட சிற்றூர்கள் பிரமதேயச் சிற்றூர்கள் எனப்பட்டன. இவை எவ்வித வரியும் அரசுக்குச் செலுத்த வேண்டியதில்லை.[17] சில உரிமைகள் வழங்கப்பட்டதோடு நிலங்கள் தானமாக அளிக்கப்படுவதற்கு முன்னர் அவற்றின் மேலிருந்த தனிப்பட்ட குடிமக்களின் உரிமை அடையாளங்கள் மாற்றப்பட்டன. தானம் அளிக்க விரும்பும் ஒருவன் தானமாக வழங்கப்பட இருக்கும் நிலத்தின் உரிமையாளரிடமிருந்து விலைக்கு வாங்கி தன் சொந்தமாக்கிக் கொண்டபிறகே தானமாக வழங்குவான். பிராமணர்களுக்கு அளிக்கப்பட்ட பிரமதேயம், கோயில்களுக்கு வழங்கப்படும் தேவபோகம் தேவதானமாகப் பௌத்த, சமண சமய மடங்களுக்கு வழங்கப்பட்ட பள்ளிச்சந்தம் ஆகியவை இம்முறையைப் பின்பற்றியே தானமாக வழங்கப்பட்டன. இக்கிராமங்களின் நிர்வாகத்தினை நாடுகாப்பாணும்,அதன்பணியை தானம் பெற்றவர்களும் அவர்கள் மரபு வழியினரும் கவனித்து வர வேண்டும் என்பது தானத்தில் நிபந்தனையாகும்.

வரிகள்

[தொகு]

வேளாண்மை வரிகள்

[தொகு]

தென்னை, பனை, பாக்கு ஆகிய மரங்களைப் பயிரிடும் உரிமை பெற அரசாங்க வரி விதிக்கப்பட்டது. கள் இறக்கவும், சாறு இறக்கவும், பனம்பாகு காய்ச்சவும், கடைகளில் பாக்கு விற்கவும் வரி விதிக்கப்பட்டது, கல்லால மரம் பயிரிட, சித்திரமூலம் என்னும் செங்கொடி பயிரிட, கரிசலாங்கண்ணி என்னும் மூலிகை பயிரிட உரிமை பெறக் கல்லாலக்காணம், செங்கொடிக்காணம், கண்ணிட்டுக் காணம் ஆகிய தொகைகள் அரசாங்க உரிமை பெறச் செலுத்தப்பட்டன.

மருக்கிழுந்து பயிரிட மருக்கொழுந்துக் காணம், நீலோற்பலம், குவளை ஆகியவை நடுவதற்கு உரிமை பெற குவளை நடுவரி, விற்பனை செய்யக் குவளைக் காணம் ஆகியன அரசாங்கத்தால் பெறப்பட்டன. பிரம்மதேயம், தேவதானச் சிற்றூர்கள் இவ்வரிகளிலிருந்து விலக்குப் பெற்றன.

தொழில் வரிகள்

[தொகு]

ஆடு, மாடு ஆகிய காலநடைகளால் பிழைப்பவர், புரோகிதர், வேட்கோவர்(குயவர்), பலவகைக் கொல்லர், வண்ணார், ஆடைநெய்வோர், நூல் நூற்போர், வலைஞர், பனஞ்சாறு எடுப்போர், மணவீட்டார், ஆகிய தொழிலாளரும், பிறரும் அரசாங்கத்திற்கு வரி செலுத்தினர்.

பண்டாரம்

[தொகு]

ஊர்மன்றங்களில் வழக்காளிக்கு விதிக்கப்பட்ட தண்டம் "மன்றுபாடு" எனப்பட்டது.பல்லவர் அரசாங்கப் பண்டாரத்தைத் தகுதியுடைய பெருமக்களே காத்துவந்தனர். இவர்கள் பேரரசுக்குரிய பண்டாரத்தலைவர் எனப்பட்டனர். இவர்களுக்குக் கீழ் மாணிக்கம் பண்டாரம் காப்போர், பண்டாரத்திலிருந்து பொருள் கொடுக்கும்படி ஆணையிடும் அலுவலர்கள் ஆகிய கொடுக்கப் பிள்ளைகள் எனபோரும் இருந்தனர்.

அளவைகளும் நாணயங்களும்

[தொகு]

நில அளவை

[தொகு]

பல்லவர் காலத்தைல் விளங்கிய நில அளவைகள் குழி, வேலி என்பன. மேலும் கலப்பை, நிவர்த்தனர், பட்டிகாபாடகம் என்பனவும் நில அளவைகளாக வழங்கின.

முகத்தலளவை

[தொகு]

முகத்தல் அளவைகளாகக் கருநாழி, நால்வாநாழி, மாநாய நாழி, பிழையாநாழி, நாராய(ண)நாழி என்பனவும் உழக்கு (விடேல் விடுகு உழக்கு), சிறிய அளவையான பிடி, சோடு, மரக்கால், பதக்கு, குறுணி, காடி, கலம் என்பனவும் பயன்பட்டன.

நிறுத்தலளவை

[தொகு]

கழஞ்சு மஞ்சாடி என்பன பொன் நிறுக்கும் அளவைகள்

நாணயங்கள்

[தொகு]
பொ.ஊ. 300 பல்லவர் காலத்துக் கப்பல் பொறிக்கப்பட்ட நாணயம்

பல்லவர் காசுகள் செம்பாலும் வெள்ளியாலும் பொன்னாலும் செய்யப்பட்டவை. அவை நந்தி, பாய்மரக் கப்பல், சுவஸ்திக், கேள்விக்குரிய சங்கு, சக்கரம், வில், மீன், குடை, கோயில், குதிரை, சிங்கம் ஆகிய உருவங்களைப் பொறித்தும் வழங்கப்பட்டன.

நீர்ப்பாசன வசதிகள்

[தொகு]

காடுகளை அழித்து உழுவயல்களாகப் பல்லவர்கள் மாற்றியதால், அவர்களுக்குக் காடுவெட்டிகள் என்ற பெயரும் உண்டு[18]. காடு வெட்டிகளான பல்லவர்கள் நாடு திருத்த நீர்ப்பாசன வசதிகள் நிரம்பச் செய்தனர். பல்லவ அரசர்களும், சிற்றரசர்களும், பொதுமக்களும் ஏரிகள், கூவல்கள்(கிணறுகள்), வாய்க்கால்கள், மதகுகள் அமைத்து நீர்ப்பாசன வசதிகளைச் செய்து வளம் பெருக்கினர்.

ஏரிகள்

[தொகு]

இராச தடாகம், திரளய தடாகம்(தென்னேரி), மகேந்திர தடாகம்(மகேந்திரவாடி ஏரி),சித்திரமேக தடாகம்(மாமண்டூர் ஏரி), பரமேசுவர தடாகம்(வரம் ஏரி), வைரமேகன் தடாகம்(உத்திரமேரூர் ஏரி), வாலிவடுகன் ஏரி, மாரிப்பிடுகன் ஏரி(திருச்சி ஆலம்பாக்கம்), வெள்ளேரி, தும்பான் ஏரி, மூன்றாம் நந்திவர்மன் காலத்தி அவனி நாராயண சதுர்வேதி மங்கலத்து ஏரி(காவேரிப்பாக்கத்து ஏரி, மருதநாடு ஏரி வந்த வாசிக் கூற்றம்), கனகவல்லி தடாகம்(வேலூர்க்கூற்றம்) ஆகியன பல்லவர் காலத்தில் வெட்டப்பட்ட ஏரிகளாகும்.[19]

கிணறுகளும், கால்வாய்களும்

[தொகு]

பல்லவர்கள் காலத்தில் ஏராளமான கிணறுகளும் கால்வாய்களும் வெட்டப்பட்டன. திருச்சிராப்பள்ளி திருவெள்ளறையில் தோண்டப்பட்ட கூவல் என்னும் மார்ப்பிடுகு பெருங்கிணறு முப்பத்தேழு சதுர அடிகொண்ட சுவஸ்திக் வடிவத்தில் விளங்குவது. அது இக்காலத்திய கிணறுகளுக்குச் சான்றாகும். மேலும் பாலாறு, காவிரி முதலிய ஆறுகளிலிருந்து நீரைக் கொண்டு செல்லும் கால்வாய்கள், ஆற்றுக்கால், நாட்டுக்கால் எனப்பெயர் பெற்றன. வைரமேகம் வாய்க்கால், பெரும்பிடுகு வாய்க்கால், கணபதிவாய்க்கால், ஸ்ரீதரவாய்க்கால் என்பன அவற்றுள் சில.

பஞ்சங்கள்

[தொகு]

பல்லவர் காலத்தில் இடைவிடாத பல போர்கள் காரணமாகப் பஞ்சங்களும் தோன்றின. இராசசிம்மன் காலத்துப் பஞ்சம் பற்றி அவைக்களத்துப் புலவர் தண்டி விளக்கமாக எடுத்துரைக்கிறார். மூன்றாம் நந்திவர்மன்காலத்துத் தெள்ளாற்றுப் போர் போன்ற போர்களின் காரணமாக உண்டான பஞ்சம் பற்றிப் பெரிய புராணம் கூறுகிறது.[20]

நடுகல்

[தொகு]

பல்லவர் காலத்தில் ஒருவர் செய்த சிறப்பு மிக்க செயலுக்காகப் பாராட்டி அவர் பெயரால் கோவிலுக்குப் பொன் கொடுத்து விளக்கேற்றச் சொல்லுதலோ, வேறு நற்செயலோ நடைபெறச் செய்தல் வழக்கமாகும். சிறந்த செயல் செய்தோ, போரிலோ ஒருவர் இறந்துவிட்டால் அவர் நினைவாக வீரகற்கள் நடுவதும் சில இடங்களில் பள்ளிப்படைக் கோயில்கள் கட்டுவதும் அக்காலத்து வழக்கமாகும்.

பல்லவர் காலத்துக் கல்வியும் சமுதாய நிலையும்

[தொகு]
பல்லவ எழுத்து முறை கல்வெட்டு காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்-இல் உள்ளது. இது பல்லவப் பேரரசின் காலத்தில் c. 700s CE -இல் கட்டப்பட்டது.

பல்லவர் காலக் கல்விநிலை என்பது சமயம் சார்ந்ததாக இருந்தது. சமயக் கல்விதான் கல்வியோ என்று ஐயுற வேண்டிய வகையில் வடமொழியிலும் தமிழ் மொழியிலும் கல்வி கற்பிக்கப்பட்டது.[21]

கல்வி

[தொகு]

மக்கள் வடமொழியும், தமிழ்மொழியும், பல்வேறு கலையறிவும் பெற உதவியாகக் கல்வியமைப்பு இருந்தது.[22] காஞ்சி மாநகரில் வடமொழியில் வேதங்கள் போன்ற உயர் ஆராய்ச்சிக்கல்வி அளிக்கும் கடிகைகள் இருந்தன. மேலும் கடிகாசலம் எனப்படும் சோழசிங்கபுரம் கடிகை, தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் வடமொழிக்கல்லூரி, தேவாரம், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் ஆகிய நூல்கள் படைக்கும் ஆற்றலளிக்கும் தமிழ்க்கல்வி இருந்தது. அவை அக்காலக் கல்வி மேம்பாட்டுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.

சமயநிலை

[தொகு]

துவக்கத்தில் சமணர்களாக இருந்த பல்லவர்கள், சைவ சமயத்தில் ஈடுபாடு காட்டினர். சைவ சமய உட்பிரிவுகளான பாசுபதம், காபாலிகம், காளாமுகம், ஆகியவை இவர்கள் காலத்தில் செல்வாக்கு பெற்றிருந்தன.சைவர்களே ஆனாலும் பல்லவர்கள் வைணவம் தழைக்கவும் வழி செய்தனர்.இவர்கள் காலத்தில் தேவாரப் பதிகங்களும் திவ்வியப் பிரபந்தமும் பாராயணம் செய்யப்பட்டன.

கலை இலக்கிய வளர்ச்சி

[தொகு]

பல்லவர்கள் காலத்திலேயே தமிழ் நாட்டில் இந்து சமய மறுமலர்ச்சியும், சிற்பம்,இசை, ஓவியம், கட்டிடக்கலை முதலிய கலை வளர்ச்சியும் இலக்கியமும் அவர்கள் காலத்தில் உச்ச நிலையடைந்தன.[23] கலை ஆர்வலர்களான பல்லவர்கள் எல்லாக் கலைகளிலும் ஒருமித்த ஆர்வம் காட்டினார்கள். தாமே பண்களைத் தொகுத்தும் பாடியும் மகிழ்ந்தனர். நாயன்மார்களும், ஆழ்வார்களும், பாடிய பாடல்கள் பலவற்றிற்கு அவர்கள் காலத்தில் பண்கள் அமைக்கப்பட்டிருந்ததன. அவை கடவுள் உலாக்களின் போது பாடப்பட்டன. இசைக்கருவிகளிலும் புதிய மாற்றங்களைப் பல்லவர்கள் செய்து அறிமுகப்படுத்தினர். ஓவியக் கலையில் பல்லவர்களுக்கு இருந்த ஈடுபாடு சித்தன்னவாசல் ஓவியங்களின் முலம் நன்கு வெளிப்படுகிறது. பல்லவர்கள் காலம் கட்டடக்கலைக்கு உலகப் புகழ் தேடித்தந்த காலமாகும். அவர்களது குடைக் கோயில்களும் மாமல்லபுரத்துச் சிற்பங்களும் குடைவரைக் கோயில்களும் இன்றளவும் உலக மக்களின் போற்றுதலுக்கு உரியனவாகும்.

இலக்கியம்

[தொகு]

தமிழிலக்கியங்கள்

[தொகு]

பல்லவர் காலத்துப் பக்தி இயக்கம் தமிழுக்குப் புதிய வகை இலக்கியத்தினை அளித்தது. ஆழ்வார்களும் நாயன்மார்களும் அருளிச்செய்த பக்திப் பாடல்கள் அக்கால சமுதாய நிலை சமய, மொழி நிலையையும், கலைச் சிறப்பையும் உணர்த்துவன. பழைய அகப்பாடல் மரபுகள் இப்பாடல்களில் புது உருவம் பெறினும், வட சொல்லாட்ட்சி மிகுந்து காணப்படுகின்றன. மேலும் நந்திக் கலம்பகம், பெருந்தேவனார் பாடிய பாரதம், பெருங்கதை, இறையனார் களவியலுறை திருமந்திரம், சங்க யாப்பு, பாட்டியல் நூல், மகாபுராணம், முத்தொள்ளாயிரம், புராண சாகரம், கலியாண கதை, அணியியல், அமிர்தபதி, அவிநந்த மாலை, காலகேசி, இரணியம், சயந்தம், தும்பிப் பாட்டு முதலிய நூல்களும் பல்லவர் காலத்தில் தோன்றியனவே. காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமாள் ஆகியோரும் பல்லவர் காலத்தில் வாழ்ந்தவர்களே.[24]

வடமொழி இலக்கியங்கள்

[தொகு]

பல்லவர்களில் பலர் சிறந்த வடமொழியறிஞர்களாக விளங்கினர். லோக விபாகம், அவந்தி சுந்தரி கதை, காவியதர்சம் முதலான நூல்கள் தோன்றின. முதலாம் மகேந்திர வர்மன் மத்தவிலாசப் பிரகசனம் எனும் நகைச்சுவை நாடகத்தை வடமொழியில் எழுதினான். மேலும் பாரவி, தண்டி போன்ற புலவர்களும் இருந்தனர். அவந்தி சுந்தரி, கதா போன்ற வடமொழிப்பாடல்கள் தோன்றின. வடமொழிப் பட்டயங்கள் அழகிய இலக்கிய நடையில் எழுதப்பட்டன. காஞ்சியிலும் கடிகாசலத்திலும், பர்கூரிலும் வடமொழிக் கல்லூரிகள் இருந்தன. கடிகாசலத்தில் மயூரசன்மன் மாணவனாக இருந்தான். தர்மபாலர் என்னும் பெரியார் இங்கிருந்து நாளந்தாப் பல்கலைக் கழகத்திற்குச் சென்றார்.

இசைக்கலை

[தொகு]

பல்லவர்காலத்தில் தமிழகத்தில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் இசைக்கருவிகளுடன், அடியார்கள் புடை சூழ தேவர் மூலருக்கும் பாடல்கள் பாடிக்கொண்டு ஆலயங்கள் தோறும் சென்று சைவத்தையும் வைணவத்தையும் வளர்த்தனர். தாளத்தோடு கூடிய இன்னிசையைப் பரப்பினர். நாயன்மார்களது பதிகங்களில் சாதாரி, குறிஞ்சி, நட்டபாடை, இந்தளம், வியாழக் குறிஞ்சி, சீகாமரம், பியந்தைக் காந்தாரம், செவ்வழி, கொல்லி, பாலை போன்ற பண்கள் பயன்படுத்தப்பட்டன

தோற்கருவி, துளைக்கருவி நரம்புக்கருவி, கஞ்சக்கருவி போன்ற வகையினைச் சார்ந்த யாழ், குழல், வீணை, தமருகம், சக்கரி, கொக்கரி, கரடிகை, மொந்ந்தை, முழவம், தக்கை, துந்துபி, குடமுழா, உடுக்கை, தடி, தாளம் முதலிய இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டன, திருநீலகண்ட யாழ்ப்பாணர், ஆனாயானார் போன்ற இசைப் பேரறிஞர்கள் கருவியிசை மூலமாகச் சமயம் வளர்த்தனர்.

சதுரஸ்ரம், திஸ்ரம், மிஸ்ரம், கண்டம், சங்கீரணம் எனும் தாள வகைகள் கடைசியான சங்கீரணம் என்பதனைப் புதியதாகக் கண்டு அதன் வகைகளையும் ஒழுங்குகளையும் அமைந்த காரணத்தால் மகேந்திரவர்ம பல்லவன் சங்கீரண சாதியென அழைக்கப்பட்டான்.

இசை நுட்பம் உணர்ந்த மகேந்திரவர்மன் காலத்தில், புதுக்கோட்டையைச் சேர்ந்த குடுமியா மலையில் இசை மாணவர் நன்மைக்காகப் பண்களை வகுத்துத் தந்தவர் உருத்திராச்சாரியார் என்பவர் ஆவார். மாணவனான அரசன் கட்டளைப்படி இங்கு இசைக்கல்வெட்டு அமைக்கப்பட்டது. எட்டு நரம்புகளைக் கொண்ட வீணைக்கும் பயன்படுமாறு கண்டறிந்த பண்கள் இதில் பொறிக்கப்பட்டுள்ளன எனத் தெரியவருகிறது. பரிவாதினி எனும் வீணையில் வல்லவனாக இம்மன்னன் திகழ்ந்தான்.

ஆடற்கலை

[தொகு]

மகேந்திரவர்மன் காலத்துச் சித்தன்னவாசல் ஓவியங்கள் பல்லவர்கள் காலத்தில் நடனக் கலை பெற்றிருந்த ஏற்றத்தினை விளக்குகின்றன. பரமேசுவர விண்ணகரம் எனப்படும் வைகுந்தப் பெருமாள் கோவிலில் ஆடவரும் பெண்டிரும் அணி செய்து கொண்டு ஆடி நடிக்கும் காட்சி சிற்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

பல்லவர் காலத்துக் கோயில்களுள் இசையும், கூத்தும் வளர்க்க அடிகள்மார், மாணிக்கத்தார், கணிகையர் என்னும் பெண்மக்கள் இருந்தனர். இது தேவாரம் போன்றா சிற்றிலக்கியங்கள் வாயிலாகவும், கல்வெட்டுகள் வாயிலாகவும் தெரிய வருகிறது. காஞ்சி கைலாசநாதர் கோயிலில் சிவபெருமான் ஆடிய நாதாந்த தூக்கிய திருவடி(குஞ்சித பாதம்) நடனம் சிற்பவடிவத்தில் செதுக்கப்பட்டுள்ளது.

கட்டடக்கலை

[தொகு]

மகேந்திரவர்மனால் தமிழகத்தில் கட்டப்பட்ட குகைக்கோயில்கள் சிறப்பு வாய்ந்தவை. சிம்மவிஷ்ணுவால் கட்டப்பட்டன என்று கருதப்படும் ஆதிவராகர் கோயில் குகைக்கோயிலாகும். மகேந்திரவர்மன் கட்டிய குகைக் கோயில்கள் அனைத்தும் மலைச் சரிவுகளில் குடைந்து அமைத்தவையாகும்.[25] இத்தகைய குகைக்கோயில்கள் சீயமங்கலம், பல்லாவரம், வல்லம், தளவானூர், திருக்கழுக்குன்றம், திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் சிவன் கோயில்களாக அமைந்தன. மாமண்டூர், மகேந்திரவாடி, சிங்காவரம், நாமக்கல் ஆகிய இடங்களில் பெருமாள் கோயில்களாக அமைந்தன. மண்டகப்பட்டில் குடைந்துள்ள குகைக்கோயிலில் பிரமன், சிவன், திருமால் ஆகிய மூவருக்கும் ஒவ்வொரு அறை வீதம் மூன்று அறைகளோடு அமைக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள தருமராசர் மண்டபமும், கொடிக்கால் மண்டபமும் மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்டவை. இங்கு நரசிம்மவர்மனால் அமைக்கப்பட்ட பஞ்சபாண்டவர் தேர்கள் என்றழைக்கப்படுபவை ஒரே கல்லைக் கோயிலாக அமைத்துக் கொண்ட கட்டடக்கலை அமைப்பைச் சேர்ந்ததாகும். திரௌபதியம்மன் தேர் என்றழைக்கப்படும் கோயில் தூங்காணை மாடம் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட கட்டடக் கலை அமைப்பைச் சேர்ந்ததாகும். இது பண்டைக் காலத்து பௌத்த சைத்தியத்தை ஒத்தது. பரமேசுவரவர்மன், கூரம் என்னும் சிற்றூரில் அமைத்த சிவன் கோயில் தமிழகத்து முதற் கற்கோயில் ஆகும்[26]

தளவானூர் குடைவரைக்கோவில்

சிற்பக்கலை

[தொகு]
துவாரபாலகர் என்னும் வாயில்-வரவேற்பாளர், வராக-மண்டபம், மாமல்லபுரம்

மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் ஆகிய பல்லவ மன்னர்கள் தாம் அமைத்த குகைக் கோயில்களில் வாயிற்காவலர் (துவாரபாலகர்), விஷ்ணு, சிவன், லிங்கம், இசைவாணர்(கந்தர்வர்), முயலகன், ஆதிவராகர், மகிஷாசுரமர்த்தினி, வராக அவதாரம், வாமன அவதாரம், கங்கைக் காட்சி, அர்ச்சுனன் தவம் அல்லது பகீரதன் தவம், கோவர்த்தன கிரியைக் கண்ணன் குடையாகப் பிடித்தது போன்ற காட்சிகளைச் சிற்பங்களாக அமைத்துள்ளனர். பல்லவர் அமைத்த கோயில்களின் தூண்களும், சுவர்களும், போதிகைகளும், விமானங்களும் கண்கவரும் சிற்பங்களைக் கொண்டு திகழ்கின்றன. மகாபலிபுரம் பல்லவரின் சிற்பக்கலைக் கூடமாகவே திகழ்கின்றது.

ஓவியக்கலை

[தொகு]

ஓவியக் கலையில் பல்லவர்களுக்கு இருந்த ஈடுபாடு சித்தன்னவாசல் ஓவியங்களின் மூலம் நன்கு வெளிப்படும். 1400 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட அந்த ஓவியங்கள் வண்ணக்கலவை மாறாது அவற்றின் தனிச்சிறப்பை உணர்த்துவன. இவ்வோவியங்கள் சமண சமயத்தைச் சார்ந்தவை.

மேலும் காணலாம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. தமிழக வரலாறும் பண்பாடும், தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம், பக் 79
  2. The journal of the Numismatic Society of India, Volume 51, p.109
  3. Alī Jāvīd and Tabassum Javeed. (2008). World heritage monuments and related edifices in India, p.107 [1]
  4. Ancient India, A History Textbook for Class XI, Ram Sharan Sharma, National Council of Educational Research and Training, India pp 209
  5. ஆர், கோபாலன். "History of the Pallavas" (in English). தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம். pp. 79-100. 
  6. KR Subramanian. (1989). Buddhist remains in Āndhra and the history of Āndhra between 224 & 610 A.D, p.71: The Pallavas were first a Telugu and not a Tamil power. Telugu traditions know a certain Trilochana Pallava as the earliest Telugu King and they are confirmed by later inscriptions. [2]
  7. KR Subramanian. (1989). Buddhist remains in Āndhra and the history of Āndhra between 224 & 610 A.D, p.71
  8. South Indian History Congress. (February 15–17). Proceedings of the First Annual Conference. The Congress, 1980. {{cite book}}: Check date values in: |date= and |year= / |date= mismatch (help); Unknown parameter |Volume= ignored (|volume= suggested) (help)
  9. A.Krishnaswami. Topics in South Indian history: from early times upto 1565 A.D. Krishnaswami, 1975. pp. 89–90.
  10. The Sangam work, Perumbanatruppadai]], traces the line of the younger Tiriyan (aka Ilam Tiriyan) to the Solar dynasty of Ikshvakus, while the later Tamil commentators identify him as the illegitimate child of a Chola king and a Naga princess.
  11. தமிழ்நாடும் மொழியும்/பல்லவப் பேரரசு.
  12. [3], ஆராய்ச்சியாளராகிய எலியட் செவேல் முதலியோர் 'தொண்டைமண்டலத்துப் பழங்குடியினரான குறும்பர் மரபினரே பிற்காலப் பல்லவர்' என்றும் முடிவு செய்தனர். - பல்லவர் யாவர்? மா.இராசமாணிக்கனார் http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=323 . Also published in the monthly archaeological journal Varalaaru
  13. http://www.iranchamber.com/history/articles/india_parthian_colony1.php
  14. இந்தியாவின் பெர்சியக் காலனி
  15. name="earlygrant">Now referred to as the Mayidavolu, Hirahadagalli and the British Museum plates – Durga Prasad (1988)
  16. 'பப்ப' என்பது 'அப்பன்' என்னும் பொருளது. இச்சொல் பல பட்டயங்களில் வருதல் கண்கூடு ஆதலின், இஃது ஒரு மனிதன் பெயரன்று. எனவே, சிவஸ்கந்தவர்மனின் தந்தை பெயர் இன்னதென்பது தெரியவில்லை. Vide. D. Sircar's Successors of the Satavahanas, p.183-184, and Dr. G. Minzkshi's "Administration and Social Life under the Pallavas" pp.6-10
  17. Foulkes T (Oct 1889) The Early Pallavas of Kánchípura, Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland, New Series, Volume 21, Number 4, pp. 1111–1124
  18. பக் 43, ப.கோமதிநாயகம் (மார்ச், 2000). தமிழகப் பாசன வரலாறு. ஸ்நேகா பதிப்பகம். p. 87. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-87371-07-2. {{cite book}}: Check date values in: |date= (help)
  19. தமிழக வரலாறும் பண்பாடும்,தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகம் பக்.113
  20. சேக்கிழார்,பெரிய புராணம்,(கோட்புலி நாயனார் புராணம்
  21. name = "கோபாலன்,பக். 114".
  22. Rajan K. (Jan-Feb 2008). Situating the Beginning of Early Historic Times in Tamil Nadu: Some Issues and Reflections, Social Scientist, Vol. 36, Number 1/2, pp. 40-78
  23. கா. சிவத்தம்பி. தமிழ் இலக்கிய வரலாறு. http://noolaham.net/library/books/01/50/50c.htm பரணிடப்பட்டது 2007-08-05 at the வந்தவழி இயந்திரம்
  24. அ. ஜெயம், சந்திரலேகா வைத்தியநாதன், தமிழிலக்கிய வரலாறு, ஜனகா பதிப்பகம். 1997
  25. name="HM & PMI 109-130">Marilyn Hirsh (1987) Mahendravarman I Pallava: Artist and Patron of Māmallapuram, Artibus Asiae, Vol. 48, Number 1/2 (1987), pp. 109-130
  26. தமிழக வரலாறும் பண்பாடும் பக்.126

உசாத்துணை

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லவர்&oldid=4142397" இலிருந்து மீள்விக்கப்பட்டது