பர்கதுல்லா
பர்கதுல்லா என்றழைக்கப்படும் அப்துல் ஹபீஸ் முகமது பர்கதுல்லா (Abdul Hafiz Mohamed Barakatullah, 7 ஜூலை, 1854 – 20 செப்டம்பர், 1927) இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட இஸ்லாமியர். எழுத்தாளர்; அனல் பறக்கும் தனது பேச்சாலும், அக்கால இந்திய முன்னணி இதழ்களில் தனது புரட்சிகரமான எழுத்துகள் மூலமும் இந்திய விடுதலைப் புரட்சியைத் தூண்டியவர். தனது கட்டுரைகள் மூலம் இந்திய விடுதலைக்கு ஊக்கமூட்டியவர். இந்தியாவிற்கு வெளியே அமைந்த கதர் கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராக இருந்தவர்.
இளமை
[தொகு]பர்கதுல்லா பிரித்தானிய இந்தியாவின் தற்போதைய மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள போபாலில் 1854, ஜூலை 7 ஆம் நாள் பிறந்தார். இவருடைய தந்தை முன்சி சைஹ் காதரதுல்லா போபாலில் அரசுப் பணியில் இருந்தார். ஆங்கிலம், துருக்கி, ஜப்பானிய மொழி, அரபு, பெர்சியமொழி, ஜெர்மானிய மொழி ஆகியவற்றில் சிறந்த அறிஞராக விளங்கினார். தனது 12 ஆவது வயதிலேயே தந்தையை இழந்தார். 1883-ல் காந்த்வாவில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அதன் பின் மும்பைக்கு சென்று பணியாற்றினார்.[1]
பணி
[தொகு]1887-ல் பெர்சியா, உருது மற்றும் அரபிய மொழி கற்பிக்க இங்கிலாந்து சென்றார். இங்கிலாந்தில் இருக்கும் போது ஜெர்மனி, பிரெஞ்சு, ஜப்பானிய மொழி ஆகியவற்றைக் கற்றார். ஆங்கில உயரதிகாரி 'அப்துலா குயில்லம்' (Abdullah Quilliam) என்பவரின் அழைப்பின் பேரில் 'லிவர்பூல் இஸ்லாமியக் கல்வி மையத்தில் (Liverpool Muslim Institute) பணியாற்றினார். அங்கு பணியாற்றும் போது ஆப்கானித்தானின் 'நசுருல்லா கான்' அறிமுகமானார். இவரின் சகோதரர் அமீர் தனது 'சிராஜ்-உல்-அக்பர்' (Sirejul-ul-Akber') என்ற இதழில் இந்திய-பிரித்தானிய ஆட்சியின் அக்கிரமங்களைப் பற்றி எழுதி வந்தார். பர்கத்துல்லா இதழியலில் நுழைந்து தனது படைப்பின் மூலம் இந்திய விடுதலை உணர்வுக்கு உரமூட்டினார். இங்கிலாந்தில் இருந்த போது முஸ்லீம் தேசிய சங்கத்தார் நடத்தும் கூட்டங்களில் பங்குகொண்டார். அங்கு 1897-ல் பர்கத்துல்லா மற்றொரு புரட்சியாளரான சியாமிஜி கிருஷ்ணவர்மா என்பவரைச் சந்தித்தார். பின்னர் லாலா ஹர்தயாள் மற்றும் ராஜா மகேந்திர பிரதாப் ஆகியோரின் தொடர்பு கிடைத்தது. அதன்பின் 1899-ல் அமெரிக்கா சென்றார். 1913-ல் சான்பிரான்சிஸ்கோவில் கதர் கட்சியினை நிறுவியோரில் இவரும் ஒருவராவார்.1904-ல் ஜப்பான் சென்றார். டோக்கியோ பல்கலைக்கழகத்தில் இந்துஸ்தானி பேராசிரியராகப் பணியமர்த்தப்பட்டார்.
இடைக்கால இந்திய அரசு
[தொகு]1915-ல் காபூலில் ராஜா மகேந்திர வர்மாவின் தலைமையில் இந்திய இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த அரசாங்கத்தின் அமைச்சர்களுள் ஒருவராக பர்கதுல்லா நியமிக்கப்பட்டார். பல்வேறு நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டு அந்நாட்டுத் தலைவர்களைச் சந்தித்து இந்திய விடுதலைக்கான ஆதரவு தேடுவதில் ஈடுபட்டார்.
மறைவு
[தொகு]பஞ்சாபிய சிறைக்கைதிகளின் குடும்பங்களுக்கு நிதியுதவி அளித்துவந்தார். ஆனால் சுதந்திரத்தைக் காணாமலேயே 1927, செப்டம்பர் 20 ஆம் நாள் மறைந்தார்.
மேற்கோள்
[தொகு]- ↑ J.C. KerPolitical Trouble in India, p132