உள்ளடக்கத்துக்குச் செல்

பரவளைவுத் தெறிப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரவளைவு ஆடிக்குள் வரும் ஒன்றுக்கொன்றி இணையான அலைகள் புள்ளி F இல் குவிகின்றன.

பரவளைவுத் தெறிப்பி என்பது, பரவளைவு வடிவில் அமைந்த ஒரு தெறி கருவி ஆகும். இது ஒளி, ஒலி, வானொலி அலைகள் போன்ற ஆற்றல் அலைகளைத் தெறிப்பதற்கோ அல்லது பரவுவதற்கோ பயன்படுகிறது.[1][2][3]

கோட்பாடு

[தொகு]

பரவளைவுத் தெறிப்பியின் செயற்பாட்டுக்கு அதன் வடிவவியல் இயல்பே காரணமாகும். இவ்வடிவத்தின் அச்சுக்கு இணையாகச் சென்று தெறிப்பியில் படும் கதிர் எதுவும் தெறித்து ஒரு குறிப்பிட்ட புள்ளியூடாகச் செல்லும். இது குவியப் புள்ளி அல்லது குவியம் எனப்படும். ஒன்றுக்கொன்று இணையாக வந்து தெறிப்பியில் படும் ஆற்றல் அலைகள் அனைத்தும் ஒரே புள்ளியில் குவிக்கப்படும். மறுதலையாக, குவியத்திலிருந்து புறப்படும் அலைகள் தெறிப்பியின் அச்சுக்கு இணையான கற்றைகளாகத் தெறித்து வெளியேறும்.

வரலாறு

[தொகு]

பரவளைவு ஆடிகளை முதலில் விபரித்தவர் 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அராபிய இயற்பியலாளரான இபின் சாஹுல் என்பவராவார். இது பின்னர் 1021 ஆம் ஆண்டில் இபின் அல்-ஹேதம் என்பவராலும் அவர் எழுதிய ஒளியியல் நூல் என்னும் நூலில் விபரிக்கப்பட்டது. 1721 ஆம் ஆண்டில், ஜான் ஹாட்லி என்பவர் பரவளைவு ஆடிகளை, தெறிப்புவகைத் தொலைநோக்கி ஒன்றை உருவாக்கப் பயன்படுத்தியது மூலம் நடைமுறை வானியலில் பயன்படுத்தினார். இதற்கு முன்னர் கோள ஆடிகளே தொலைநோக்கிகளில் பயன்படுத்தப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டில் கூடிய செயற்திறன் கொண்ட ஃபிரெஸ்னெல் வில்லை கள் அறிமுகப்படுத்தப்பட முன்னர், பரவளைவு ஆடிகளே கலங்கரை விளக்கங்களில், ஒரு விளக்கிலிருந்து ஒளிக்கற்றைகளை உருவாக்கப் பயன்பட்டது.

பயன்பாடுகள்

[தொகு]

தற்காலத்தில் பரவளைவுத் தெறிப்பிகள் சிறிதும் பெரிதுமான பல வகையான கருவிகளில் பயன்படுகின்றன. இவற்றுள், செய்மதி அலைவாங்கிகள், தெறிப்புவகைத் தொலைநோக்கிகள், வானொலித் தொலைநோக்கிகள், பரவளைவு ஒலிவாங்கிகள் போன்றவையும், பலவகை மின்விளக்குகளின் தெறிப்பிகளும் அடங்கும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Servicing Mission 1". NASA. Archived from the original on April 20, 2008. பார்க்கப்பட்ட நாள் April 26, 2008.
  2. Administrator. "The Scheffler-Reflector". www.solare-bruecke.org.
  3. "Prehistory of Radio Astronomy". www.nrao.edu.