பஞ்சீகரணம்
இந்து சமயம் தொடர்பான கட்டுரை |
இந்து சமயம் |
---|
இந்து சமயம் வலைவாசல் சைவம் வலைவாசல் வைணவம் வலைவாசல் |
பஞ்சீகரணம் (Panchikarana) எனில் ஐந்தின் சேர்க்கை என்று பொருள். பிரபஞ்சம் மற்றும் சீவராசிகள், சூக்கும நிலையில் உள்ள ஆகாயம் முதலிய பஞ்சபூதங்கள், குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து உருவாகும் பருப்பொருளின் (ஸ்தூலம்) (Matter) தோற்றத்திற்கு பஞ்சீகரணம் என்று சாங்கிய தத்துவம் சொல்வதை வேதாந்த சாத்திரங்களும் ஏற்றுக் கொள்கிறது.
படைப்பின் தொடக்கத்தில் தோன்றிய சூக்கும பூதங்கள் (பஞ்ச சூக்கும பூதங்கள்) ஒன்றுடன் ஒன்று சேர்க்கை நடைபெறாமல் இருந்ததால் செயல்பாடுகள் நிறைந்த உலகிற்குத் தகுந்த ஸ்தூலபொருட்கள் (பருப் பொருட்கள்) (சடப் பொருள்கள்) தோற்றுவிக்கும் திறமையற்று விளங்கியது. பஞ்சீகரணத்தால் சூக்கும பூதங்கள், சட வடிவ பஞ்சபூதங்களாக வெளிப்படும் தன்மையைப் பெற்று செயலாற்றும் தகுதியைப் பெறுகின்றன.
பஞ்சீகரணம் எவ்வாறு நடைபெறுகிறது
[தொகு]சூக்கும நிலையில் உள்ள பஞ்சபூதங்கள் ஒவ்வொன்றும் இரு சமமான பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன. இவ்விதமாக பிரிக்கப்பட்ட பத்து பகுதிகளில் முதல் ஐந்து பகுதிகள் ஒவ்வொன்றும் நான்கு சமமான பகுதிகளாக பிரிக்கப்படுகின்றது. இதன் பிறகு, ஒவ்வொரு பூதத்தின் மூலப்பொருளின் ஒரு பகுதி மற்ற நான்கு மூலப்பொருட்களின் நான்கு பகுதிகளுடன் சேர்க்கப்படுகிறது.[1]
இதனை கீழ்கண்டவாறு பகுத்து ஆராயப்படுகிறது. எடுத்துக்காட்டு பூமி. (பகுதி) செயல்படா சூக்கும பஞ்சபூதங்களின் கலவையினால் எவ்வாறு செயல்படும் சட பூமி (ஸ்தூல பூமி) உருவாகிறது எனில் = ½ பங்கு சூக்கும பூமி + 1/8 பங்கு நீர் + 1/8 பங்கு நெருப்பு + 1/8 பங்கு காற்று + 1/8 பங்கு ஆகாயம் - இந்த விகிதத்தில் பஞ்ச சூக்கும பூதங்களின் கலவையினால் (பஞ்சீகரணத்தினால்) செயல்படும் இந்த சட பூமி உருவாகிறது. இது போன்ற கலவையால் (பஞ்சீகரணத்தால்) மற்ற சடமான பஞ்ச பூதங்களான காற்று, நெருப்பு, நீர் ஆகிய சட பூதங்கள் உருவாகிறது.
வித்யாரண்யர் எழுதிய பஞ்சதசீ எனும் வேதாந்த சாத்திர நூலில் (1. 27) பஞ்சீகரணம் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை விளக்குகிறது. ஒவ்வொரு சூக்கும பூதத்தின் மூலப் பொருளையும் இரு சம பகுதிகளாக பிரித்து மீண்டும் அவற்றின் முதல் பாதியின் ஒவ்வொரு பகுதியையும் நான்கு பகுதிகளாகப் பிரித்து, பிறகு ஒவ்வொரு மூலப் பொருளுடைய மறுபாதியுடன் மற்ற மூலப் பொருட்களிருந்து பெற்ற நான்கு பகுதிகளில் ஒன்றைச் சேர்த்துவிட்டால் ஒவ்வொரு மூலப்பொருளுமே ஒன்றில் ஐந்து பகுதிகளை உடையதாக ஆகிறது.
பல உபநிடதங்களில் குறிப்பாக சாந்தோக்கிய உபநிடதத்தில் அக்னி, நீர், நெருப்பு போன்ற மூன்று சூக்கும பூதங்களின் பஞ்சீகரணம் குறித்து ஒரு மந்திரத்தில் விளக்கம் அளிக்கிறது.
பிரம்ம சூத்திரம் (2. 4. 22) –இல், பஞ்சபூதங்களின் மூலப்பொருட்களிலே ஒவ்வொன்றுமே ஐந்து பூதங்களின் மூலப்பொருட்களின் கலவையைப் பெற்று இருப்பதால், எந்த பூதத்தின் மூலப்பொருளின் பகுதியானது அதிக பங்கு உள்ளதோ அந்த பூதத்திற்கு அப்பெயரே நிலை பெறுகிறது. எடுத்துக்காட்டாக பஞ்சீகரணத்தில், நீர் எனும் சூக்கும பூதத்தின் மூலப்பொருளின் அளவு அரைப் பங்காகவும், மற்ற நான்கு பூதங்களின் அளவு 1/8 பங்காகவும் இருப்பின் இக்கலவைக்கு நீர் எனும் பூதம் எனப்படுகிறது. மேலும் பூமியானது நீர், நெருப்பு, மண் என்கிற மூன்று முக்கியப் பகுதிகளைக் கொண்டிருந்தாலும் அவற்றுள் மண்னே அதிகம். எனவே பூமி அல்லது மண் என்றே அது பெயர் பெறலாயிற்று.
நெருப்பு என்பது தீ, நீர் மற்றும் மண் இவற்றைக் கொண்டிருந்தாலும், மற்ற இரண்டைவிட அதில் தீயின் மூலப்பொருளே அதிகமாக இருப்பதால் அக்னி என்ற பூதத்தின் பெயருடன் விளங்குகிறது. நீர் என்பதிலும் தீ மற்றும் பூமியின் கலவை குறைவே. நீரின் கலவை அதிகம் என்பதால் அதற்கு நீர் எனும் பூதத்தின் பெயராயிற்று.
பஞ்சீகரணத்தின் விளைவுகள்
[தொகு]பஞ்சீகரணத்தால் சூக்கும பூதங்கள், சட பூதங்களாக (ஸ்தூல பூதங்கள்) உருக்கொள்கிறது. ஒரு பூதம் எந்த பூதத்திலிருந்து தோண்றியதோ அப்பூதத்தின் தன்மையும் தன்னகத்தே கொண்டிருக்கும்.[2] ஆகாயம் என்ற பூதத்திலிருந்து தோண்றிய மற்ற சட பூதங்களின் தன்மைகள் பற்றி ஆராய்ந்தால்:
- ஆகாயம் எனும் சட பூதத்தில் ஒலியின் தன்மை (சப்தம்) கொண்டுள்ளது.
- ஆகாயம் எனும் பூதத்திலிருந்து தோண்றிய காற்று எனும் சட பூதத்தில் தன் சுய தன்மையான ஊறு (தொடு உணர்வு) என்ற தன்மையுடன் ஆகாயத்தின் சுய தன்மையான ஒலி எனும் தன்மையுடன் இரண்டு தன்மைகளை கொண்டிருக்கிறது.
- காற்று எனும் பூதத்திலிருந்து தோண்றிய நெருப்பு எனும் சட பூதத்தில் தன் சுய தன்மையான ஒளியுடன், ஆகாயத்தின் தன்மையான ஒலி மற்றும் காற்றின் தன்மையான ஊறு (தொடு உணர்வு) மூன்று தன்மைகள் கொண்டுள்ளது.
- நெருப்பு எனும் பூதத்திலிருந்து தோண்றிய நீர் எனும் சட பூதத்தில் தன் சுய தன்மையான சுவையுடன், ஆகாய பூதத்தின் ஒலி, காற்று எனும் பூதத்தின் ஊறு, நெருப்பு எனும் பூதத்தின் வடிவம் எனும் நான்கு தன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
- நீர் எனும் பூதத்திலிருந்து தோண்றிய பூமி எனும் சட பூதத்தில், தன் சுய தன்மையான மணமும், நீரின் சுவையும், நெருப்பின் வடிவத்தையும், காற்றின் தொடு உணர்வு (ஸ்பர்சம்), ஆகாயத்தின் ஒலி ஆகிய ஐந்து தன்மைகளை கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://books.google.co.in/books?id=12kSkNpBx-sC&pg=PA144&dq=Panchikarana&hl=en&sa=X&ei=IC7qUJrcJMbHkQXI3IHIAg&ved=0CEYQ6AEwAw#v=onepage&q=Panchikarana&f=false
- ↑ வேதாந்த ஸாரம், நூலாசிரியர், ஸ்ரீசதானந்தர், வெளியீட்டாளர், ஸ்ரீஇராமகிருஷ்ண மடம், சென்னை
மேலும் காண்க
[தொகு]உசாத் துணை
[தொகு]- வேதாந்த சாரம் (சுலோகம் 99 முதல் 102 முடிய), நூலாசிரியர், ஸ்ரீசதானந்தர், வெளியீடு, இராமகிருஷ்ண மடம், சென்னை.