நோவா
நோவா | |
---|---|
நோவாவின் பலி - டானியேல் மக்லிசின் சித்திரம் | |
பேழையை உருவாக்கியவர் | |
பிறப்பு | மெசொப்பொத்தேமியா (?) |
ஏற்கும் சபை/சமயங்கள் | யூதம் கிறித்தவம் இசுலாம் மண்டனிசம் பகாய் சமயம் |
செல்வாக்குக்கு உட்பட்டோர் | பலர் யூதர், கிறித்தவர், இசுலாமியர் |
ஆபிரகாமிய சமயங்களின் நம்பிக்கையின்படி, நோவா (/ˈnoʊ.ə/[1]; எபிரேயம்: נֹחַ, נוֹחַ; அரபு மொழி: نُوح Nūḥ; பண்டைக் கிரேக்கம்: Νῶε) என்பவர் ஊழிவெள்ளம் வருவதற்கு முன் இருந்த பத்தாவதும் இறுதி பெருந்தந்தையரும் ஆவார். நோவா என்னும் பெயருக்கு எபிரேயத்தில் 'ஆறுதல்' என்பது பொருள்.[2][3]
நோவாவின் பேழையினைக்குறித்த விவரிப்பு விவிலியத்தின் தொடக்க நூலின் 6 முதல் 9 வரையான அதிகாரங்களிலும் திருக்குர்ஆனின் 71ஆம் சுராவிலும் விவரிக்கப்படுகின்றது. விவிலியத்தில் தொடக்க நூலில் இது காமின் சாபம் பற்றிய சம்பவத்தின் பின் காணப்படுகின்றது. தொடக்க நூலுக்கு வெளியே நோவா பற்றிய குறிப்புக்களை எசாயா, எசேக்கியேல், புலம்பல், மத்தேயு நற்செய்தி, லூக்கா நற்செய்தி, 1 பேதுரு, 2 பேதுரு ஆகியவற்றில் காணலாம். திருக்குர்ஆன் உட்பட பிற்காலத்தில் ஆபிரகாமிய சமயங்களின் மரபுக்கதைகளில் இவர் முக்கிய இடம் பெறுகின்றார்.
விவிலிய விவரிப்பு
[தொகு]ஊழிவெள்ளம் வருவதற்கு முன் இருந்த பத்தாவது பெருந்தந்தையரான இவரின் தந்தை இலாமேக்கு ஆவார். இலாமேக்கிற்கு நூற்று எண்பத்திரண்டு வயதானபோது அவருக்கு பிறந்த குழந்தைக்கு "ஆண்டவரின் சாபத்திற்குள்ளான மண்ணில் நமக்கு உண்டான கடின வேலையிலும் உழைப்பிலும் நமக்கு ஆறுதல் அளிப்பான்" என்று சொல்லி 'நோவா' என்று பெயரிட்டார். நோவாவிற்கு ஐந்நூறு வயதானபோது, அவருக்குச் சேம், காம், எப்பேத்து ஆகியோர் பிறந்தனர்.
நோவாவின் அறுநூறாம் வயதின் போது கடவுள் முன்னிலையில் மண்ணுலகு சீர்கெட்டிருந்தது, பூவுலகு வன்முறையால் நிறைந்திருந்தது. ஆயினும் நோவா கடவுள் முன் மாசற்றவராய் இருந்ததால் அவரைத்தவிற மற்ற அனைவரையும் ஊழிவெள்ளத்தால் அழிக்க கடவுள் முடிவுசெய்து, நோவாவை ஒரு பேழை செய்யப்பணித்தார். அப்பேழையின் வழியாகக்கடவுள் நோவாவை காப்பாற்றினார். நோவாவுக்கு அறுநூற்றொன்று வயதான ஆண்டின் முதல் மாதத்தின் முதல் நாளில் மண்ணுலகப் பரப்பில் இருந்த வெள்ளம் வற்றியது. அப்பொழுது நோவா ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் கட்டி அதன்மேல் எரி பலி செலுத்தினார். அப்போது ஆண்டவர், "மனிதரை முன்னிட்டு நிலத்தை இனி நான் சபிக்கவே மாட்டேன். இப்பொழுது நான் செய்ததுபோல இனி எந்த உயிரையும் அழிக்கவே மாட்டேன். மண்ணுலகு இருக்கும் நாளளவும் விதைக்கும் காலமும் அறுவடைக் காலமும் குளிரும் வெப்பமும், கோடைக்காலமும் குளிர்க்காலமும் பகலும் இரவும் என்றும் ஓய்வதில்லை." என்று கூறி நோவாவுடன் உடன்படிக்கை செய்துகொண்டார் என விவிலியம் கூறுகின்றது.
வெள்ளப்பெருக்குக்குப் பின்னர் நோவா முந்நூற்றைம்பது ஆண்டுகள் வாழ்ந்தார்.[4] நோவா மொத்தம் தொள்ளாயிரத்து ஐம்பது ஆண்டுகள் வாழ்ந்தபின் இறந்தார் என விவிலியம் கூறுகின்றது.
ஏனோக்கு நூல்
[தொகு]விவிலியத் திருமுறை நூல்களில் சேராத ஏனோக்கு நூலின் 10:1-3இல் கடவுள் அதிதூதர் ஊரியல் என்னும் வானத்தூதர் வழியாக நோவாவுக்கு வெள்ளத்தைப்பற்றி எச்சரித்தார் என குறிக்கப்பட்டுள்ளது.[5]
நோவா கதையின் தோற்றம்
[தொகு]விவிலியத்தில் வரும் நோவாவும் வெள்ளப் பெருக்கும் என்னும் நிகழ்வு, சுமார் கி.மு 2500இல் மெசொப்பொத்தேமியாவில் இயற்றப்பட்ட கில்கமெஷ் காப்பியத்தின் தழுவல் என பல ஆராய்ச்சியாளர் நம்புகின்றனர். இக்காப்பியம் விவிலிய விவரிப்புடன் மிகச்சில இடங்களில் மட்டுமே வேறுபட்டிருப்பதே இதற்கு காரணம்.[6]
யூத மரபுக்குப்பின் எழுந்த கிரேக்கத் தொன்மவியலில் நோவாவின் கதையினை ஒத்தக்கதை ஒன்று உண்டு, தியுகாலியன் என்பவர் நோவாவைப்போன்றே இரசம் தயாரிக்கும் தொழில் செய்துவந்தார். இவர் சியுசு மற்றும் பொசைடன் பெருவெள்ளம் குறித்து எச்சரிக்கப்பட்டு ஒரு பேழை செய்து அதில் தப்பித்தார். நோவாவைப்போன்றே இவரும் ஒரு புறாவை அனுப்பி வெள்ளம் முடிந்ததா என பரிசோதித்தார் என்பர். வெள்ளம் முடிந்தப்பின்பு நோவாவைப்போலவே இவரும் கடவுளுக்கு நன்றி செலுத்தினார் என விவரிக்கப்படுகின்றார்.
நோவா மது அருந்தியது
[தொகு]விவிலியத்தின் தொடக்க நூல் 9:20-21 என்னும் பகுதி, நோவா, திராட்சை இரசத்தைக் குடித்துப் போதைக்குள்ளாகி சுயநினைவிழந்து படுத்திருந்ததாகக் குறிக்கின்றது. துவக்ககாலம் முதலே விவிலிய விரிவுரையாளர்கள், திராட்சை இரசத்தின் இனிமையைக் கண்டறிந்த முதல் மனிதன் நோவா என்று விவரிதுள்ளனர்.[7]
திருச்சபையின் மறைவல்லுநரான புனித யோவான் கிறிசோஸ்தோம், நோவாவே முதன் முதலில் திராட்சை இரசத்தை சுவைத்த மனிதராதலால், அதன் விளைவுகள் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனக்கூறி நோவாவின் செயல்களை நியாயப்படுத்துகின்றார்.[8]
யூத பாரம்பரியத்தின்படி, சாத்தான், சில விலங்குகளின் இரத்தத்திலிருந்த போதை பண்புகளை நோவாவுக்கு தெரியாமல் அவரின் திராட்சை இரசத்தில் களந்ததால் அவர் அதைக் குடித்துப் போதைக்குள்ளாகினார் என நம்புகின்றனர்.[9]
நோவாவின் புதல்வர்கள்
[தொகு]சேம், காம், எப்பேத்து, ஆகியோர் பேழையிலிருந்து வெளிவந்த நோவாவின் புதல்வர்கள் ஆவர். இவர்களிலிருந்துதான் மண்ணுலகு முழுவதும் மனித இனம் பரவியது என விவிலியம் விவரிக்கின்றது.
கிறித்தவத்தில்
[தொகு]2 பேதுரு 2:5இல் நோவா நீதியைப் பற்றி அறிவித்து வந்தார் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் புதிய ஏற்பாடு நூலான லூக்கா நற்செய்தி நோவாவின் காலத்தில் நடந்ததுபோலவே மானிட மகனுடைய காலத்திலும் நடக்கும் என இயேசு குறிப்பிடுகின்றார்.[10]
1 பேதுரு 3:20-21 நோவாவும் அவரை சேர்ந்தவரும் பேழையில் தண்ணீர் வழியாகக் காப்பாற்றப்பட்டனர். அந்தத் தண்ணீரானது திருமுழுக்கிற்கு முன்னடையாளம் எனக்குறிக்கின்றது. துவக்க கிறுத்தவ எழுத்தாளர்கள் நோவாவின் பேழையினை திருச்சபையோடு ஒப்பிட்டு, எவ்வாறு பேழைக்குள் இருந்தவர்கள் மட்டும் காப்பாற்றப்பட்டனரோ அவ்வாறே திருச்சபையில் இணைந்திருப்பவர் மட்டுமே மீட்படைவர் என நம்பப்படுகின்றது. ஹிப்போவின் அகஸ்டீன் (354–430), தனது கடவுளின் நகரம் என்னும் தனது நூலில், நோவாவின் பேழையினை கிறிஸ்துவின் மறையுடலோடு ஒப்பிடுகின்றார்.
மத்தியக்கால கிறித்தவத்தில் நோவாவின் புதல்வர்கள் மூவரும் மூன்று கண்டங்களின் மக்களின் மூதாதையராக நம்பப்பட்டது: எப்பேத்து/ஐரோப்பா, சேம்/ஆசியா, காம்/ஆப்பிரிக்கா. இதுவே கருப்பினத்தவரின் அடிமை முறையினை ஞாயப்படுத்தவும் பயன்பட்டது.[சான்று தேவை] ஆயினும் சில இடங்களில் இது மக்களின் மூன்று குலத்தவரைக்குறிக்கவும் பயன்பட்டது: எப்பேத்து/வீரர்கள், சேம்/குருக்கள், காம்/வேளையாட்கள்.
மொர்மனியத்தின் இறையியல் நம்பிக்கையின்படி கபிரியேல் தேவதூதரின் மனிதப்பிறப்பு நோவா ஆவார். கபிரியேல் என்பது நோவாவின் விண்ணக பெயராகும்.[11]
இசுலாமில்
[தொகு]நோவா இசுலாமில் மிக முக்கிய நபிமார்களுல் ஒருவராகக் கருதப்படுகின்றார். திருக்குர்ஆனில் நோவாவைப்பற்றி 28 அதிகாரங்களில் 43 இடங்களில் குறிப்புகள் உள்ளன. மேலும் 71ஆம் அதிகாரம் இவரின் பெயரால் குறிக்கப்படுகின்றது. ஆபிரகாம், மோசே, இயேசு கிறிஸ்து மற்றும் முகம்மது நபி ஆகியோலைப்போலவே இவரோடும் அல்லா ஒர் உடன்படிக்கையினை செய்தார் என கூறுகின்றது. மேலும் இவர் அல்லாவை பற்றி இவர் இருந்த சமூகத்திற்கு எச்சரிக்கை செய்துகொண்டே இருந்ததாகவும் திருக்குர்ஆன் விவரிக்கின்றது. வெள்ளப்பெருக்குக்குப்பின்பு ஜூதி மலைமீது நோவாவின் பேழை தங்கியதாக திருக்குர்ஆன் 11:44இல் விவரிக்கப்படுள்ளது.
பகாய் சமயத்தில்
[தொகு]பகாய் சமயம் நோவாவின் கதையையும், பேழையையும், பெறுவெள்ளத்தையும் ஒரு உவமையாகவே பார்கின்றது.[12] நோவாவின் வழிகாட்டுதல்களை பின்பற்றியவர்கள் மட்டுமே ஆன்மீக வாழ்வில் நிலைத்திருந்தனர், மற்றவர்கள் ஆன்மீக வாழ்வில் இறந்தனர் என இவர்கள் நம்புகின்றனர்.[13][14]
குறிப்புக்கள்
[தொகு]- ↑ LDS.org: "Book of Mormon Pronunciation Guide" (retrieved 2012-02-25), IPA-ified from «nō´a»
- ↑ K. A. Mathews.The New American Commentary, Vol. 1 – Genesis 1–11 p.316
- ↑ Sarna. Genesis p.46
- ↑ Genesis 9:28-29
- ↑ http://www.sacred-texts.com/bib/boe/boe013.htm
- ↑ A. R. George (2003). The Babylonian Gilgamesh Epic: Introduction, Critical Edition and Cuneiform Texts. Oxford University Press. pp. 70–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-927841-1. பார்க்கப்பட்ட நாள் 8 நவம்பர் 2012.
- ↑ Ellens & Rollins. Psychology and the Bible: From Freud to Kohut, 2004, (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 027598348X, 9780275983482), p.52
- ↑ Hamilton, 1990, pp. 202–203
- ↑ Gen. Rabbah 36:3
- ↑ லூக்கா 17:26
- ↑ "NOAH, BIBLE PATRIARCH". The Church of Jesus Christ of Latter-day Saints.
- ↑ From a letter written on behalf of Shoghi Effendi, அக்டோபர் 28, 1949: Bahá'í News, No. 228, பெப்ரவரி 1950, p. 4. Republished in Compilation 1983, ப. 508
- ↑ Poirier, Brent. "The Kitab-i-Iqan: The key to unsealing the mysteries of the Holy Bible". பார்க்கப்பட்ட நாள் 2007-06-25.
- ↑ Shoghi Effendi 1971, ப. 104
வெளியிணைப்புக்கள்
[தொகு]- Jewish Encyclopedia: Noah from the 1901–1906 Jewish Encyclopedia
- Catholic Encyclopedia: Noah
- MuslimWiki: Nuh