உள்ளடக்கத்துக்குச் செல்

நெஞ்செரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோய் உணர்குறிகள் /
நோய் அறிகுறிகள்:
நெஞ்செரிவு
வகைப்படுத்தம் மற்றும் வெளிச்சான்றுகோள்கள்
ஐ.சி.டி.-10 R12.
ஐ.சி.டி.-9 787.1
MeSH D006356

நெஞ்செரிவு (heartburn) அல்லது பைரோசிசு ( pyrosis)[1] என்பது மார்பில் உணரப்படும் ஒருவகை எரிவு உணர்ச்சியாகும்,[2] இது மார்பெலும்பின் பின்பகுதியில் அல்லது வயிற்றின் மேற்பகுதி தொடக்கம் கழுத்துவரை பொதுவாக உணரப்படுகின்றது. சிலவேளைகளில் இவ்வுணர்ச்சி தாடைப்பகுதி, புயம், பிற்பகுதி வரைக்கும் பரவலாம்.[3] நெஞ்செரிவு பொதுவாக இரையக உண்குழலியப் பின்னோட்ட நோயில் அமிலம் மேல்நோக்கிச் செல்வதால் ஏற்படுகின்றது,[4] எனினும் மாரடைப்பு போன்ற இதய குருதி ஊட்டக்குறை நோயிலும் (ischemic heart disease) இத்தகைய நோய் உணர்குறி ஏற்படும், இதனால் இவ்விரு நோய்களையும் அடையாளம் காண்பதற்கு இவ்வறிகுறி மட்டும் போதாது.

காரணம்

[தொகு]

இதயம், உணவுக்குழாய் ஆகியவற்றில் ஏற்படும் குறைபாடுகள் ஒரே அறிகுறிகளைக் கொண்டிருப்பதற்கு அவற்றின் நரம்பு விநியோகம் ஒன்று என்பது காரணமாகின்றது.[5] நெஞ்செரிவு உள்ளவர்களில் முதலில் இதய நோய்கள் உண்டா இல்லையா என அறுதியிடல் அவசியமாகின்றது.

இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய்

[தொகு]

நெஞ்செரிவின் பொதுவான காரணம் இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் ஆகும்,[3] இரைப்பையில் உள்ள அமிலம் உணவுக்குழாயை அரிப்பதால், அங்கு அழற்சி ஏற்படுவதால் நெஞ்செரிவு ஏற்படுகின்றது. எனவே இந்நோயை உண்டாக்கக்கூடிய காரணிகள் நெஞ்செரிவுக்குக் காரணமாகின்றது.

இதய நோய்கள்

[தொகு]

சிலருக்கு இதய குருதி ஊட்டக்குறை நோய்களான மாரடைப்பு, மார்பு நெறிப்பு (angina pectoris) போன்றவற்றில் நெஞ்செரிவதைப் போன்ற உணர்குறிகள் தென்படும்.[6] இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் என்று கருதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 0.6% நபர்களில் இதய குருதி ஊட்டக்குறை நோய் உள்ளது அவதானிக்கப்பட்டுள்ளது.[5]

அறுதியிடல் முறைகள்

[தொகு]

இரையக உண்குழலியப் பின்னோட்ட நோயினால் உண்டாகும் ‘எரியும்’ உணர்ச்சி வேறுபடுத்தி அறியக்கூடியது, இங்கு நெஞ்செரிவு சாப்பாட்டின் பின்னரோ அல்லது இரவு வேளையிலோ ஏற்படும்,[7] அல்லது முற்றிலும் பட்டினியாக உள்ள சந்தர்ப்பங்களிலும் ஏற்படும், ஒரு நபர் நீட்ட நிமிர்ந்து படுக்கும் போது அதிகமாகும். கர்ப்பிணிகளில், மிகையாக உணவு உடகொண்டோரில், காரமான கறித்தூள் பயன்படுத்துவோரில், கொழுப்புணவு மேலும் அமில உணவு உட்கொள்வோரில் பொதுவாக நெஞ்செரிவு அவதானிக்கலாம்.[7][8] சில குறிப்பிட்ட அசுப்பிரின் போன்ற அழற்சிக்கு எதிரான இயக்க ஊக்கிகள் இல்லாத மருந்துகள், புகைப்பிடித்தல் என்பனவும் நெஞ்செரிவுக்கான காரணங்களாகின்றன. உணவின் பின்னர் ஏற்படும் நெஞ்செரிவு விழுங்கற்கடுமையுடன் சேர்ந்து வருதல் உணவுக்குழாய் இறுக்கத்திற்கான (esophageal spasm) அறிகுறிகளாகவும் இருக்கலாம்.[9]

இரையகக்குடலியக் கலவை (GI cocktail)

[தொகு]

அமில எதிர்ப்பிகள் அல்லது லிடோகெய்ன் கொண்ட அமில எதிர்ப்பிகள் அருந்தி ஐந்து தொடக்கம் பத்து நிமிடங்களுள் நெஞ்செரிவு நீங்கினால், அது உணவுக்குழாயுடன் தொடர்புடையது என்று கருதலாம்,[10] எனினும் சில இதயக் காரணங்களில் 10% சம்பவங்களில் அமில எதிர்ப்பி மூலம் இதயத்தால் ஏற்படும் எரிவு நீங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.[11]

அமிலத்தன்மை அளவிடுதல்

[தொகு]

இது அமிலத்தால் ஏற்படுகின்றதா என்பதை அமிலத்தன்மையை (pH) அளவிடும் முறை மூலம் உறுதிப்படுத்திக்கொள்ளலாம். இதன்போது ஒரு சிறுகுழாய், மூக்குவழியாக உணவுக்குழாயின் கீழ்மட்டம் வரையிலும் விடப்பட்டு அங்கு நிகழும் மாற்றங்கள் உடலுக்கு வெளியே கருவி கொண்டு பதியப்படுகின்றது. உணவுக்குழாயின் காயங்களை அகநோக்கி கொண்டு நோக்குவதன் மூலமும் இதனை உறுதிப்படுத்தலாம்.

சிகிச்சை

[தொகு]

நெஞ்செரிவிற்கான காரணங்களைப் பொறுத்து சிகிச்சை தீர்மானிக்கப்படுகின்றது. இரையக ஹிஸ்டமின் ஏற்பித் தடுப்பிகள், புரோட்டான் ஏற்றித் தடுப்பிகள் (Proton pump inhibitors) அமிலம் அதிகளவு சுரக்கப்படுதலைக் கட்டுப்படுத்துகின்றது. ஜெலுசில் போன்ற அமில எதிர்ப்பிகள் அமில ஊடகத்தை நடுநிலையாக்குகின்றது. இரையக இயக்கி (gastrokinetic) கீழ்க்கள இறுக்கியை வலுவாக்குவதிலும், விரைவில் இரைப்பையில் உள்ள உணவுகளை அகற்றுவதிலும் உதவுகின்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pyrosis definition - Medical Dictionary definitions of popular medical terms easily defined on MedTerms". Archived from the original on 2014-01-23.
  2. டோர்லாண்ட் மருத்தவ அகராதியில் heartburn
  3. 3.0 3.1 Differential diagnosis in primary care. Philadelphia: Wolters Kluwer Health/Lippincott Williams & Wilkins. 2008. pp. 211. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7817-6812-8.
  4. Heartburn
  5. 5.0 5.1 Kato H, Ishii T, Akimoto T, Urita Y, Sugimoto M (April 2009). "Prevalence of linked angina and gastroesophageal reflux disease in general practice". World J. Gastroenterol. 15 (14): 1764–8. doi:10.3748/wjg.15.1764. பப்மெட்:19360921. 
  6. Waller CG (December 2006). "Understanding prehospital delay behavior in acute myocardial infarction in women". Crit Pathw Cardiol 5 (4): 228–34. doi:10.1097/01.hpc.0000249621.40659.cf. பப்மெட்:18340239. 
  7. 7.0 7.1 The Mayo Clinic Heartburn page [1] Accessed May 18, 2010
  8. The MedlinePlus Heartburn page [2] Accessed May 18, 2010
  9. MedlinePlus: Esophageal spasms [3] Accessed April 18, 2010
  10. Differential diagnosis in primary care. Philadelphia: Wolters Kluwer Health/Lippincott Williams & Wilkins. 2008. pp. 213. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7817-6812-8.
  11. Hanke, Barbara K.; Schwartz, George Robert (1999). Principles and practice of emergency medicine. Baltimore: Williams & Wilkins. pp. 656. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-683-07646-9.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெஞ்செரிவு&oldid=3733032" இலிருந்து மீள்விக்கப்பட்டது