தோல் புற்றுநோய்
தோற் புற்றுநோய் | |
---|---|
அடிக்கலப் புற்றுநோய் (basal cell carcinoma). முத்துப்போன்ற பளபளக்கும் திரளையாகக் காணப்படுவதையும், சிறிய குருதிக்கலன்கள் இதன் வெளிப்பரப்பில் இருப்பதையும் காண்க. | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | தோல் மருத்துவம் |
ஐ.சி.டி.-10 | C43.-C44. |
ஐ.சி.டி.-9 | 172, 173 |
ஐ.சி.டி.-ஒ | 8010-8720 |
மெரிசின்பிளசு | 001442 |
ஈமெடிசின் | article/276624, article/870538, article/1100753, article/1965430 |
ம.பா.த | D012878 |
தோற் புற்றுநோய் அல்லது தோல் புற்றுநோய் (skin cancer) என்பது தோலில் உள்ள உயிரணுக்களின் இயல்பை மீறிய வளர்ச்சியும் பெருக்கமும் ஆகும். இது பல்வேறு படிகளில் உள்ளது. மூன்று முதன்மையான கேடுதரு தோற்புற்றுநோய் வகைகள் உள்ளன: அடிக்கலப் புற்றுநோய் (basal cell carcinoma), செதிட்கலப் புற்றுநோய் (Squamous cell carcinoma), மெலனோமா அல்லது கரிநிறமிப் புற்றுநோய். இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட உயிரணுக்களில் ஏற்படுவதால் அவற்றின் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன. தோற் புற்றுநோய் தோலின் மேற்பகுதியான மேற் தோலில் ஏற்படுவதால் புற்றுநோய்க்கட்டிகளை அவதானிக்க முடிகின்றது. மற்றைய புற்றுநோய்களைப் போலல்லாது இவற்றை தொடக்க காலத்திலேயே கண்டறிந்து உகந்த சிகிச்சை பெற முடியும், இக்காரணத்தால் இவ்வகைப் புற்றுநோயால் இறப்போரின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது.[1]
தோற்புற்றுநோய் உண்டாக முதன்மையான காரணம் கதிரவனின் புற-ஊதாக்கதிர்கள் தோலில் நீண்டநேரம் வெளிக்காட்டப்படல் ஆகும். நுரையீரல், மார்பக, குடல், சுக்கிலவக புற்றுநோய்களை விட மெலனோமா மற்றும் ஏனைய தோல் புற்றுநோய்கள் பொதுப்படையில் நோக்குகையில் கூடுதலாகக் காணப்படுகின்றன.[1] தோற்புற்றுநோய்களுள் மெலனோமா தீவிரமானதாகும், இதனால் இறக்கும் வீதம் மற்றைய தோற் புற்றுநோய்களுடன் ஒப்பிடுகையில் மிகையாக உள்ளது, எனினும் மெலனோமா குறைவாகவே மக்களிடையே காணப்படுகின்றது. பொதுவாக உண்டாகும் தோல் புற்றுநோய்கள் எனப்படுமிடத்து அவை மெலனோமா அல்லாத தோற் புற்றுநோய்களாகவே உள்ளன. சிலருக்கு பிறப்பில் அல்லது பின்னர் கரிநிறமி உயிரணுக்களால் (melanocyte) தோன்றும் பெரிய பிறப்புப் புள்ளியில் (பெரும் மச்சம்) பிற்காலத்தில் மெலனோமா உண்டாகக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.
வகைப்பாடு
[தொகு]மூன்று முதன்மையான கேடுதரு தோற்புற்றுநோய் வகைகள் உள்ளன: அடிக்கலப் புற்றுநோய் (basal cell carcinoma), செதிட்கலப் புற்றுநோய் (Squamous cell carcinoma), மெலனோமா அல்லது கரிநிறமிப் புற்றுநோய் (melanoma).
புற்றுநோய் | விளக்கம் | விளக்கப்படம் |
---|---|---|
அடிக்கலப் புற்றுநோய் | பொதுவாக முகம், கழுத்துப்பகுதியில் தோன்றும்[2] , முத்துப்போன்ற பளபளக்கும் திரளையாகக் காணப்படும், சிறிய குருதிக்கலன்கள் இதன் வெளிப்பரப்பில் காணப்படும். | |
செதிட்கலப் புற்றுநோய் | பொதுவாக சிவப்பு, செதிள் திட்டுகளாகத் தோலில் புடைத்துக் காணப்படும். விரைவாகப் பெருகக்கூடிய புற்றுநோய்க் கட்டியாகும், வலி ஒரு பொது இயல்பாக இருக்கும். | |
கரிநிறமிப் புற்றுநோய் | தோலில் வெவ்வேறு நிறங்களில், சமச்சீர் அற்ற ஒழுங்கற்ற வெளி ஓரத்தைக்கொண்டுள்ள நிறமாற்றப்பகுதி மெலனோமாவாக இருக்கலாம். இது 6 மில்லிமீற்றர் விட்டத்துக்கும் அதிகமாகவே இருக்கும்.[3] |
வெய்யில் படும் தோற் பகுதிகளில், முக்கியமாக முகப்பகுதிகளில் அடிக்கலப் புற்றுநோய் உண்டாகின்றது. இவை வேறு இடங்களுக்குப் பரவுதல் (மாற்றிடம் புகல்) அரிது, மேலும் இவற்றால் இறக்கும் வீதமும் மிக அரிது. இவை அறுவைச்சிகிச்ச மூலம் அல்லது கதிரியக்கம் மூலம் இலகுவில் குணப்படுத்தப்படலாம். செதிட்கலப் புற்றுநோய் பொதுவாகக் காணப்படும் ஒன்று, எனினும் அடிக்கலப் புற்றுநோயை விடக் குறைவாகவே காணப்படுகின்றது. இவை ஓரளவு மாற்றிடம் புகலுபவை; ஆனால் கரிநிறமிப் புற்றுநோய் அனைத்து தோற்புற்றுநோயிலும் அரிதாகத் தோன்றினாலும் ஆபத்தானதும் மாற்றிடம் புகல் மிகையனதாகவும் உள்ள தீவிரமான புற்றுநோயாகும்.
மிகக் குறைவாகக் காணப்படும் தோற் புற்றுநோய்கள்: தோல்நார்ச்சதைப்புற்றுப் புடைப்பு, மேர்கேல் உயிரணுப் புற்றுநோய், காபோசியின் சதைப்புற்று, கதிர்க்கலக் கட்டி, கொம்புமுட்கட்டி, மார்பக பகட் நோய் போன்றன.
அறிகுறிகள், உணர்குறிகள்
[தொகு]வெவ்வேறு விதமான அறிகுறிகளும் உணர்குறிகளும் உள்ளன. தோலில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுப் பின்னர் குணமடையாது இருப்பது, தோலில் ஏற்படும் புண்கள், நிறமாற்றம், ஏற்கனவே உள்ள மச்சத்தில் மாறுபாடு ஏற்படுவது போன்றன தோல் புற்றுநோய் எனச் சந்தேகிக்கக்கூடிய அறிகுறிகளாகும். ஏற்கனவே உள்ள மச்சத்தின் ஓரங்கள் ஒழுங்கற்றுப்போவது, அல்லது மச்சம் பெரிதாகிக்கொண்டே போவது என்பன புற்றுநோயின் அடையாளங்களாகும்.
காரணங்கள்
[தொகு]சூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதா கதிர்களே தோல் புற்றுநோய்க்கு முதன்மையான காரணமாகும்.எனினும் வேறு சில காரணிகளும் உள்ளன அவை:
- புகைப்பிடித்தல்
- மனித சடைப்புத்துத் தீ நுண்ம நோய்த் தொற்றுகள் செதிள்கல புற்றுநோயை உருவாக்கலாம்.
- சில மரபணுப் பிறழ்வு மூலமும் இதுவரலாம். பிறக்கும் போது 20 மிமீ (3/4") விட பெரிய மறு உள்ளவர்களுக்கு கரிநிறமிப் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகம் உள்ளது.
- நாள்பட்ட ஆறாத காயங்கள் மூலம் செதிள் உயிரணு புற்றுநோய் உருவாகலாம்.
- அயனியாக்கக் கதிர், சுற்றுச்சூழல், செயற்கை புற ஊதா கதிர்கள் தாக்கம், வயதாதல் மற்றும் வெளிறிய நிறதோல் ஆகியனவும் முக்கிய காரணமாகும்.
- பல நோயெதிர்ப்பு சக்தி தணிப்பு மருந்துகளை பயன்படுத்துவதாலும் தோல் புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கிறது.உதாரணமாக ஒரு சைக்லோஸ்போரின் என்ற மருந்தின் மூலம் 200 மடங்கும் அசாதியோப்ரின் என்ற மருந்து மூலம் 60 மடங்கு ஆபத்து அதிகரிக்கின்றது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
தடுத்தல்
[தொகு]சூரிய கதிர்களில் இருந்து பாதுகாத்து கொள்ளுதலே கரிநிறமிப் புற்றுநோய் மற்றும் செதிள்கல புற்றுநோய் ஆகியவற்றிலிருந்து பாதுகாத்துகொள்ளும் வழி ஆகும்.தோல் புற்றுநோய் ஆபத்தை குறைக்க உச்சி வேளைகளில் சூரியகுளியலை தவிர்க்கவும், பாதுகாப்பு ஆடை பயன்படுத்தவும், கருப்பு கண்ணாடிகள் மற்றும் தொப்பிகள் அணிந்து செல்லவும் அறிவுறுத்தபடுகிறது.அமெரிக்க முன்னெச்சரிக்கை சேவை பணிக்குழு 9 முதல் 25 வயதுடைய மக்கள் புற ஊதா ஒளிகதிர்கள் படுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. தோல் புற்றுநோய் உருவாகும் ஆபத்து புகையிலை பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்தால் குறையும். தூள் புற்று நோயை வைட்டமின் சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற மருந்துகலோ தவிர்க்கும் என்று நம்ப தகுந்த ஆதாரங்கள் கிடைக்கப்படவில்லை
கலைச்சொற்கள்
[தொகு]- Dermatofibrosarcoma protuberans = தோல்நார்ச்சதைப்புற்றுப் புடைப்பு
- Merkel cell carcinoma = மேர்கேல் உயிரணுப் புற்றுநோய்
- Kaposi's sarcoma = காபோசியின் சதைப்புற்று
- keratoacanthoma = கொம்புமுட் கட்டி (கொம்பு + முள் கட்டி)
- spindle cell tumors = கதிர்க்கலக் கட்டி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 National Cancer Institute — Common Cancer Types (http://www.cancer.gov/cancertopics/commoncancers)
- ↑ Wong CS, Strange RC, Lear JT (October 2003). "Basal cell carcinoma". BMJ 327 (7418): 794–8. doi:10.1136/bmj.327.7418.794. பப்மெட்:14525881.
- ↑ "Malignant Melanoma: eMedicine Dermatology".
வெளி இணைப்புகள்
[தொகு]வகைப்பாடு | |
---|---|
வெளி இணைப்புகள் |
|
- தோல் புற்றுநோய் குர்லியில்
- Skin cancer procedures: text, images and videos பரணிடப்பட்டது 2013-12-07 at the வந்தவழி இயந்திரம்