தொழுவன் பூச்சி
தொழுவன் பூச்சி (European mantis) பயிர்களைத் தாக்கும் பூச்சி இனங்களைக் கொன்றுண்ணும் இயல்பு உடையது. இப்பூச்சியின் முன்கால்கள் இரையைப் பிடிப்பதற்கு வசதியாக மடங்கும் தன்மையுடனும் முள்களுடனும் இருக்கும். இக்கால்கள் நடப்பதற்கு பயன்படாது. முன்கால்களை நீட்டி, முன்னும் பின்னும் அசைப்பதால் இவ்வசைவுகள், மனிதர்கள் பசுவிடம் பால் கறப்பதை ஒத்துள்ளன. எனவே இப்பூச்சியைத் தொழுவன்பூச்சி (Mantis religiosa) என்பர்.
தொழுவன் பூச்சியில் ஆண், பெண் வேறுபாடு உண்டு. ஆண் பூச்சி பெண் பூச்சியுடன் கலவியில் இணையும்போது, பெண் பூச்சி ஆண் பூச்சியின் தலையைக் கடித்துத் தின்றுவிடுவது வழக்கம். பெண் தொழுவன் பூச்சி முட்டைகளைக் குவியலாக, வயிற்றின் நுனியிலிருந்து சுரக்கும் ஒரு வகை நீர்மத்தால் மூடி, செடிகளின் இலை மற்றும் தண்டுகளின் மீது இடும். ஒவ்வோர் இனத் தொழுவன் பூச்சியும் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் முட்டைக் கூடுகளை அமைக்கும். சில நாள்களில் முட்டைகள் பொரிந்து இளரிகள் (nymphs) எனப்படும் குஞ்சுகள் முட்டைக் கூடுகளைக் கிழித்துக் கொண்டு வெளி வரும். இறக்கைகள் அற்று இருக்கும்.
இளங்குஞ்சுகள் தாய்ப் பூச்சியின் உருவ அமைப்பைக் கொண்டிருக்கும். தம் அளவிற்கு ஏற்ற சிறு புழு பூச்சிகளைப் பிடித்து உண்டு வளரும். ஒவ்வொரு படிநிலை வளர்ச்சிக்கும் இடையில் தம் தோலை உரித்து ஐந்து இளநிலைப் பருவங்களைக் கடந்து முழு வளர்ச்சி அடைந்து தொழுவன் பூச்சிகளாகின்றன. இளறிகளின் 4,5 ஆம் இளநிலைப் பருவங்களில் இறக்கைகள் முளைவிட்டு இறுதி நிலையில் முழு இறக்கைகளாக விரிகின்றன. இந்நிலைக்குப்பின் பூச்சிகள் வளர்வதில்லை.
தொழுவன் பூச்சி, தன் தலையை அனைத்துத் திசைகளிலும் எளிதாகத் திருப்பும் அமைப்புடையது. தலையில் இரண்டு கூட்டுக்கண்களும், மூன்று புள்ளிக் கண்களும், இரண்டு உணர் கொம்புகளும் உண்டு. வாய்ப்பகுதியில் இரண்டு வலுவான பற்கள் உள்ளன. இவற்றின் உதவியால் தொழுவன் பூச்சி தன் இரையைக் கடித்து மென்று விழுங்கும்.
இயல்பாக தொழுவன் பூச்சி பச்சை நிறத்தில் இருக்கும். செடிகளின் ஊடே இருக்கும்போது பெரும்பாலும் கண்ணுக்குப் புலப்படாது. சில வகைத் தொழுவன் பூச்சி காய்ந்த சருகு நிறத்திலும் இருக்கும். காய்ந்து உதிர்ந்த இலைச்சருகுகளின் ஊடே இருந்துகொண்டு அங்கு வரும் பூச்சிகளைத் தின்று வாழும். தொழுவன் பூச்சி மற்ற பூச்சியினங்களை வேட்டையாடுவதில் சிறந்தது. தொழுவன் பூச்சி தன்னைவிட உருவில் பெரிய பூச்சிகளைக் கூட எளிதில் தன் வலுவான முள்கள் நிறைந்த முன்கால்களால் பிடித்துத் தின்றுவிடும். இயற்கையில், தொழுவன் பூச்சி ஒரு பயனுடைய கொன்றுண்ணியாகும்.
மேற்கோள்கள்
[தொகு]உசாத்துணை
[தொகு]- அறிவியல் களஞ்சியம் தொகுதி 13