தொடுப்புழா வசந்தி
தொடுப்புழா வசந்தி' (Thodupuzha Vasanthi) இவர் ஓர் தென்னிந்திய நடிகையாவார். இவர் முக்கியமாக மலையாள படங்களில் நடித்த்துள்ளார். இவர் 450 க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் 16 தொலைக்காட்சித் தொடரிலும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களிலும் தோன்றியுள்ளார். திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடிக்கத் தொடங்குவதற்கு முன்பு, இவர் ஒரு நாடகக் கலைஞராக இருந்தார். இவரது முதல் முழு நீள பாத்திரம் 1982 இல் காக்கா என்றத் திரைப்படத்தில் இருந்து தொடங்கியது. இவரது மிகவும் பிரபலமான படங்களில் சில, யவனிகா, பூச்சக்கொரு மூக்குத்தி, நிரகூட்டு மற்றும் காட்பாதர் ஆகியன. இவர் வரமணி நாட்டியாலயத்தில் நடன ஆசிரியராகவும் இருந்தார். தொண்டை புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த இவர் 2017 நவம்பர் 28, தனது 65 வயதில் இறந்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]கே. ஆர். இராமகிருட்டிணன் நாயர் மற்றும் பி.பங்கஜாட்சி அம்மா ஆகியோருக்கு மூன்று குழந்தைகளில் இரண்டாவதாக இவர் பிறந்தார். இவரது தந்தை நாடகக் கலைஞராகவும், தாய் நடன ஆசிரியராகவும் இருந்தார். இவருக்கு இராதாமணி என்ற ஒரு மூத்த சகோதரியும், மற்றும் சுரேஷ்குமார் என்ற ஒரு தம்பியும் இருந்தனர். இவர் மணக்காடு நகராட்சி தொடக்கப்பள்ளியில் படித்தார். இவர் தனது தந்தையின் நாடக குழுவான 'ஜெயபாரத்' என்ற நாடகத்தில் நடிக்கத் தொடங்கினார். இவர் முன் பல்கலைக்கழக பட்டம் படிக்கும் போதே நாடக கலைஞரானார். 1975 ஆம் ஆண்டில் தனது 16 வயதில் 'தர்மசேத்ரா குருசேத்ரா' என்றப் படத்தில் ஒரு நடனக் காட்சியின் மூலம் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1979 ஆம் ஆண்டில் 'என்டே நீலகாசம்' படத்தில் முதன்முதலில் ஒரு கதாபாத்திரதப் பெற்றார். 'தொடுப்புழா' என்ற பெயரை 'பீனல் கோட்' என்ற நாடகத்தில் நடிகை அடூர் பவானியுடன் ஒன்றாக நடித்துக்கொண்டிருந்தபோது இவரது பெயருக்கு முன்னொட்டாகச் சேர்த்துள்ளார்.[1] 1982 ஆம் ஆண்டில் ஆலோலம் படத்தில் நடித்ததற்காக இவர் பிரபலமானார். இவரது கடைசி படம் 2016 இல் வெளியான இத்து தாண்டா போலீஸ் என்பதாகும்.[2]
இவர் இராசேந்திரன் என்பவரை 1982இல் திருமணம் செய்து கொண்டார். தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. இவர் 'வரமணி நாட்டியாலயா' என்ற நடனப் பள்ளியை நிர்வகித்து வந்தார்.[3] இவரது தந்தை இராமகிருட்டிணன் நாயர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 2007 இல் இறந்த பிறகு இவர் நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றார். கணவரின் வற்புறுத்தலின் பேரில் 'எல்சம்மா என்ன குட்டி' என்றத் திரைப்படத்தின் மூலம் திரும்பி நடிக்க வந்தார். ஆனால் ஆகஸ்ட் 2010 இல் கணவர் இறந்ததாலும், பின்னர் இவரது தாயின் மரணத்தாலும் இவர் மீண்டும் நடிபிலிருந்து விலகி இருக்க வேண்டியிருந்தது. இவரும் பல்வேறு வியாதிகளால் அவதிப்பட்டார். இவர் சில காலமாக தொண்டை புற்றுநோயுடன் போராடி வந்தார். மேலும் இவரது உடல்நிலை மோசமடைந்ததால், 2017 நவம்பர் 24, அன்று எர்ணாகுளம் மாவட்டத்தின் வாகாகுளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.[4] பல உறுப்பு செயலிழப்பு காரணமாக இவர் 2017 நவம்பர் 28 அன்று இறந்தார். அவரது இறுதிச் சடங்குகள் தொடுப்புழாவில் நடந்தது.
விருதுகள்
[தொகு]- 2012 கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்க விருதுகள் - சலாச்சித்ரா பிரதிபா விருது
- நாடகத்துறையில் நடித்ததற்காக 1991 கேரள மாநில நாடக விருது
குறிப்புகள்
[தொகு]- ↑ "കണ്ണ് നിറയും തൊടുപുഴ വാസന്തിയുടെ കദനകഥ കേട്ടാൽ". manoramaonline. பார்க்கப்பட்ட நாள் 29 November 2017.
- ↑ http://english.manoramaonline.com/news/kerala/2017/11/28/kerala-actress-thodupuzha-vasanthi-dies.html
- ↑ http://www.marunadanmalayali.com/scitech/cyber-space/wcc-extends-hands-to-help-thodupuzha-vasanthi-86376
- ↑ http://indianexpress.com/article/entertainment/malayalam/malayalam-actor-thodupuzha-vasanthi-passes-away-at-65-4958521/
வெளி இணைப்புகள்
[தொகு]- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் தொடுப்புழா வசந்தி
- https://www.youtube.com/watch?v=tZtYN7Ufhpg
- http://www.malayalamcinema.com/star-details.php?member_id=374 பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- http://www.malayalachalachithram.com/profiles.php?i=7260
- http://entertainment.oneindia.in/celebs/thodupuzha-vasanthi.html[தொடர்பிழந்த இணைப்பு]
- Thodupuzha Vasanthi at MSI