உள்ளடக்கத்துக்குச் செல்

துப்பறிவுப் புனைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1960களிலும், 70களிலும் தமிழகத்தில் ஜெய்சங்கர் நடிப்பில் பல துப்பறியும் படங்கள் வெளியாகின. (படம்: சி. ஐ. டி சங்கர் (1970))

துப்பறியும் புனைவு அல்லது துப்பறிவுப் புனைவு (Detective Fiction) ஒரு வித இலக்கியப் பாணி. இது குற்றப்புனைவு பாணியின் உட்பிரிவு. துப்பறிவாளர்(கள்) குற்றத்தை ஆராய்ந்து குற்றவாளியைக் கண்டுபிடித்து மர்மத்தை விளக்கும் கதைக்கருவைக் கொண்டுள்ள படைப்புகள் துப்பறிவுப் புனைவு என்று வழங்கப்படுகின்றன.

தோற்றம்

[தொகு]

விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் இடம் பெற்றுள்ள “சூசன்னாவும் மூத்தோர்களும்” (Susanna and the Elders) என்னும் கதையை துப்பறிவுப் புனைவுக்கு காலத்தால் மிக முந்தைய எடுத்தக்காட்டாக சில அறிஞர்கள் கருதுகிறார்கள். பண்டைய கிரேக்கத்தின் நாடகவியலாளர் சோஃபகிள்ஸ் எழுதிய இடீஃபஸ் ரெக்ஸ் என்னும் நாடகத்திலும், துப்பறிவுப் புனைவு எனக் கருதத்தக்க சில கூறுகள் இடம் பெற்றுள்ளன. இவை தவிர அரபு மொழி இலக்கியமான ஆயிரத்தொரு இரவுகள், சீன இலக்கியங்கள் ஆகியவற்றிலும் சில பகுதிகள் துப்பறிவுப் புனைவுக்கான வரையறைக்கு ஒத்துப்போகின்றன. மேற்கத்திய / ஐரோப்பிய இலக்கியத்தில் வோல்ட்டயர் 1748ல் எழுதிய சாடிக் (Zadig) என்ற கதை மிக முந்தைய துப்பறியும் கதையாகக் கருதப்படுகிறது. 1819ல் தி மர்டர்ஸ் இன் தி ரூ மார்க் என்ற கதையை வெளியிட்ட எட்கர் ஆலன் போ தான் ஆங்கில வாசகர் உலகுக்கு துப்பறியும் கதைகளை அறிமுகப்படுத்தினார். போ உருவாக்கிய சி. அகஸ்டே டியூபின் பாத்திரம் தான் உலகின் முதல் புகழ்பெற்ற (புனைவு) துப்பறியும் நிபுணர். போவைப் பின்பற்றி எமீல் கபோரியூ பிரெஞ்சு மொழியிலும், வில்கி காலின்ஸ் ஆங்கிலத்திலும் 19ம் நூற்றாண்டில் பல துப்பறிவுப் புனைவு படைப்புகளை உருவாக்கினர்.

நவீன துப்பறியும் புனைவுகள்

[தொகு]

1887ல் உலகின் மிகப்புகழ் பெற்ற துப்பறியும் நிபுணர் பாத்திரமான ஷெர்லாக் ஹோம்ஸ், ஆர்தர் கொனன் டொயிலால் உருவாக்கப்பட்டார். 19ம் நூற்றாண்டின் இறுதியிலும், 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளுக்கு கிடைத்த பெரு வெற்றியைத் தொடர்ந்து துப்பறியும் கதைகள் எண்ணிக்கையில் பெருகின. 1920களும் 30களும் துப்பறிவுப் புனைவின் பொற்காலம் என்று அறியப்படுகின்றன. அகதா கிறிஸ்டி, ரேமாண்ட் சாண்ட்லர், டாஷியல் ஹாம்மட், ஏர்ல் ஸ்டான்லி கார்டனர் போன்ற துப்பறிவு புனைவுலகின் பெரும்புள்ளிகள் இக்கால கட்டத்தில் தான் எழுதத்தொடங்கினர். காகிதக்கூழ் இதழ்களின் மூலம் இப்புனைவுகள் விரிந்த வாசகர் வட்டத்தைச் சென்றடைந்தன. இக்கால கட்டத்தில் துப்பறியும் கதைகள் திரைப்படத் துறையிலும் நுழைந்து துப்பறியும் திரைப்படங்கள் எடுப்பது பிரபலமானது. இக்காலகட்டம் முதல் இன்று வரை துப்பறிவுப் புனைவுகளுக்கு வாசகர்களிடமும், பார்வையாளர்களிடமும் உள்ள வரவேற்பு குறையவில்லை. உலகெங்கும் நூற்றுக்கணக்கான மொழிகளில் எண்ணற்ற புதினங்கள், சிறுகதைகள், படக்கதைகள், தொலைக்காட்சித் தொடர்கள், நிகழ்பட ஆட்டங்கள் எனப் பல ரகங்களில் துப்பறிவுப் படைப்புகள் வெளியாகி வருகின்றன.

தமிழில்

[தொகு]

தமிழில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் துப்பறியும் கதைகள் வெளியாகத் தொடங்கின. வடுவூர் துரைசாமி ஐயங்கார், வை. மு. கோதைநாயகி அம்மாள், தேவன் ஆகியோர் இருபதாம் நூற்றாண்டின் முதற்பகுதியில் துப்பறியும் புதினங்களை எழுதிய குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள். தமிழ்த் திரைப்படங்கள் பிரபலமடைந்த பின்னர், துப்பறியும் காவல் துறை அதிகாரி பாத்திரம் பல படங்களில் பயன்படுத்தப்பட்டது.

20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெகுஜன இதழ்களில் தொடர்களாகவும், ”பாக்கட் நாவல்” எனப்படும் புனைவு வடிவத்திலும் துப்பறியும் கதைகள் தமிழ் வாசகர்களிடயே பிரபலமடைந்தன. ராஜேஷ் குமார், சுஜாதா, சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் போன்றோர் இக்காலத்திய துப்பறிவுப்புனைவு எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.