தாய்லாந்து
தாய்லாந்து இராச்சியம் | |
---|---|
குறிக்கோள்: நாடு, சமயம், அரசர் | |
நாட்டுப்பண்: Phleng Chat Thai தாய்லாந்து நாட்டுப்பண் (இசைக்கருவியில்) | |
தலைநகரம் | பாங்காக் |
பெரிய நகர் | தலைநகர் |
ஆட்சி மொழி(கள்) | தாய் (மொழி)[1] |
அதிகாரபூர்வ வர்வடிவம் | தாய் எழுத்து |
இனக் குழுகள் | தாய் மக்கள் (89%) வடகிழக்கு தாய் (34.2%) |
மக்கள் | தாய் |
அரசாங்கம் | ஒற்றையாட்சி நாடாளுமன்ற முறை முடியாட்சி |
• மன்னர் | வஜிராலோங்கார்ன் (Vajiralongkorn) (Rama X) |
• பிரதமர் | பிராயுட் சான் ஓ சா (Prayut Chan-o-cha) (வெளியேற்றம்) பிராவிட் ஓங்சுவான் (Prawit Wongsuwan) (acting) |
சட்டமன்றம் | தேசியப் பேரவை |
• மேலவை | மேலவை |
• கீழவை | பிரதிநிதிகள் அவை |
தோற்றம் | |
1238–1448 | |
1351–1767 | |
1768–1782 | |
6 ஏப்ரல் 1782 | |
• முடியரசு | 24 சூன் 1932 |
பரப்பு | |
• மொத்தம் | 513,120 km2 (198,120 sq mi) (51st) |
• நீர் (%) | 0.4 (2,230 கிமீ2) |
மக்கள் தொகை | |
• 2021 UN மதிப்பிடு | 71,600,000[3] (20வது) |
• 2010 கணக்கெடுப்பு | 65,479,453[4] |
• அடர்த்தி | 132.1/km2 (342.1/sq mi) (88-ஆவது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2022 மதிப்பீடு |
• மொத்தம் | $1.475 டிரில்லியன்[5] (23-ஆவது) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2022 மதிப்பீடு |
• மொத்தம் | $522.012 பில்லியன்[5] |
• தலைவிகிதம் | $7,449[5] (89th) |
ஜினி (2020) | 35.0 மத்திமம் |
மமேசு (2021) | 0.800 அதியுயர் · 66-ஆவது |
நாணயம் | பாட் (฿) (THB) |
நேர வலயம் | ஒ.அ.நே+7 |
வாகனம் செலுத்தல் | left |
அழைப்புக்குறி | +66 |
இணையக் குறி | .th, .ไทย |
தாய்லாந்து (ஆங்கிலம்: Thailand அல்லது Kingdom of Thailand; தாய்: ประเทศไทย), அதிகாரப்பூர்வமாக தாய்லாந்து இராச்சியம் (Kingdom of Thailand), முன்னர் சயாம் (ஆங்கிலம்: Siam, தாய்: สยาม) என்பது தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு ஆகும்.
இந்த நாட்டின் வடக்கில் மியான்மர், லாவோஸ்; கிழக்கில் லாவோஸ், கம்போடியா; தெற்கில் தாய்லாந்து வளைகுடா, மலேசியா; மேற்கில் அந்தமான் கடல் எல்லைகளாக அமைந்துள்ளன. தாய்லாந்தின் கடல் எல்லைகளாக தென்கிழக்கே தாய்லாந்து வளைகுடா; வியட்நாம், தென்மேற்கே அந்தமான் கடலில் இந்தோனேசியா, இந்தியா ஆகிய நாடுகளும் உள்ளன.
மன்னர் ஒன்பதாம் இராமாவின் தலைமையில் அரசியல்சட்ட முடியாட்சி ஆட்சியமைப்பு இங்கு நிலவுகிறது. 1946 இல் முடிசூடிய சக்கிரி வம்சத்தைச் சேர்ந்த ஒன்பதாம் இராமா மன்னர் உலகில் நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் ஒரு நாட்டுத் தலைவரும், தாய்லாந்து வரலாற்றில் நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் மன்னரும் ஆவார்.[6]
பொது
[தொகு]தாய்லாந்து மன்னரே அந்நாட்டின் அரசுத் தலைவரும், இராணுவப் படைகளின் தலைவரும், பௌத்த மதத்தை மேனிலைப்படுத்துபவரும், அனைத்து நம்பிக்கைகளுக்கும் பாதுகாவலரும் ஆவார்.
மொத்தப் பரப்பளவின் அடிப்படையில் தாய்லாந்து 51ஆவது நாடு ஆகும். இதன் பரப்பளவு 513,000 km2 (198,000 sq mi) ஆகும். 64 மில்லியன் மக்களுடன் மக்கள்தொகை அடிப்படையில் இது 20வதும் ஆகும்.
பேங்காக் இதன் தலைநகரும், மிகப்பெரிய நகரமும் ஆகும். இதுவே தாய்லாந்தின் அரசியல், வணிக, தொழிற்துறை மற்றும் கலாசார மையமாகவும் விளங்குகிறது. மக்கள்தொகையின் 75% தாய் இனத்தவரும், 14% சீனரும் 3% மலாய் இனத்தவரும் ஆவர்;[1]
மலைவாழ் இனங்கள்
[தொகு]ஏனையோர் மொன், கெமர், மற்றும் பல்வேறு மலைவாழ் இனங்களும் சிறுபான்மையினமாக உள்ளனர். நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி தாய் மொழியாகும். மொத்த மக்கள் தொகையில் ஏறத்தாழ 95% மக்கள் பௌத்த மதத்தைப் பின்பற்றுகின்றனர்.
1985 முதல் 1996 வரை தாய்லாந்தின் பொருளாதாரத்தில் பெரும் ஏற்றம் காணப்பட்டது. தற்போது இந்நாடு முக்கிய தொழில்வள நாடாகவும் ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் நாடுகளில் ஒன்றாகவும் திகழ்கிறது. தாய் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறையும் முக்கிய பங்கு வகிக்கின்றது.[7][8]
தாய்லாந்தில் 2.2 மில்லியன் சட்டபூர்வ மற்றும் சட்டவிரோத இடம்பெயர்ந்தோர் வசிக்கின்றனர்.[9]
சொற்பிறப்பு
[தொகு]1939 சூன் 23 வரை தாய்லாந்தின் அதிகாரபூர்வ பெயர் சயாம் ஆகும்.[10] பின்னர் இது தாய்லாந்து எனப்பட்டது. மீண்டும் 1945 முதல் 1949 மே 11 வரை சயாம் என அழைக்கப்பட்டு, மீண்டும் தாய்லாந்துக்கு மாற்றப்பட்டது.
சியெம், சியாம் அல்லது சியாமா என்றவாறும் எழுதப்பட்டது, இது சமக்கிருதத்தில் சியாமா ("இருண்ட" அல்லது "பழுப்பு" எனப் பொருள்).[11] சியாம் என்பதன் மூலம் சியாமா என்ற சமக்கிருத சொல்லில் இருந்து தோன்றவில்லை என்ற கருத்தும் நிலவுகிறது.[11]
தாய் (Thai)(ไทย) என்ற சொல் பொதுவாக எண்ணப்படுவது போல்,[சான்று தேவை] தாய் Tai (ไท) என்ற சொல்லில் இருந்து பெறப்படவில்லை. தாய் மொழியில் இதற்கு விடுதலை என்று பொருள், இது மத்திய சமவெளியில் இருந்த இனக்குழுவின் பெயராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது[சான்று தேவை]
புகழ்பெற்ற தாய் (Thai) அறிஞர் தாய் Tai (ไท)என்பது மக்கள் என்ற பொருளை குறிக்கும் சொல் என்கிறார். தாய்லாந்தின் ஊரகப்பகுதியில் தாய் (Thai) சொல்லான கோன் "kon" (คน) என்பதற்கு பதில் மக்களை குறிக்க தாய் (Tai) என்பதை மக்கள் என்று பயன்படுத்துவதை தன் சான்றாக குறிப்படுகிறார்.[12]
வரலாறு
[தொகு]இற்றைக்கு 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் தாய்லாந்தில் மனித நாகரிகம் பரவியிருந்ததற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. தென்கிழக்காசியாவின் ஏனைய பகுதிகளைப் போன்றே, தாய்லாந்திலும் பொஊ 1ம் நூற்றாண்டின் பூனான் இராச்சியம் தொடக்கம் கிபி 13-ஆம் நூற்றாண்டின் கெமர் பேரரசு வரையில் இந்தியாவின் கலாசாரம் மற்றும் மத வாரியான தாக்கம் பெருமளவு இருந்து வந்துள்ளது.[13]
கெமர் பேரரசின் வீழ்ச்சி
[தொகு]13-ஆம் நூற்றாண்டில் கெமர் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், டாய், மொன், கெமர், மலாய் என வெவ்வேறு பிரிவுகளைக் கொண்ட அரசுகள் உருவாகின. ஆனாலும், 12-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் முதலாவது தாய் அல்லது சயாமிய நாடு 1238-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட சுகோத்தாய் எனப்படும் பௌத்த நாடு எனக் கருதப்படுகிறது.
13-ஆம்-14-ஆம் நூற்றாண்டுகளில் கெமர் பேரரசு வீழ்ச்சியடையத் தொடங்கிய பின்னர், பௌத்த தாய் இராச்சியங்களான சுகோத்தாய், லான்னா இராச்சியம், லான் காங் (இன்றைய லாவோஸ்) என்பன எழுச்சி அடைந்து வந்தன. ஆனாலும், 14-ஆம் நூற்றாண்டின் மத்தியில் சாவோ பிரயா ஆறு பிராந்தியத்தில் புதிதாக நிறுவப்பட்ட அயுத்தயா இராச்சியம் ஒரு நூற்றாண்டின் பின்னர் சுகோத்தாயின் பலத்தை மறைக்க ஆரம்பித்தது.
பாரம்பரிய வணிகத் தொழில்
[தொகு]அயுத்தயா படையினர் அங்கோர் நகரை ஊடுருவியதை அடுத்து, 1431-ஆம் ஆண்டில் கெமர் ஆட்சியாளர் அந்நகரைக் கைவிட்டனர்.[14] தாய்லாந்து தனது அயல் நாடுகளில், சீனா முதல் இந்தியா வரை, ஈரான் முதல் அரபு நாடுகள் வரை தமது பாரம்பரிய வணிகத் தொழிலை விரிவுபடுத்தி வந்தது.
ஆசியாவிலேயே அயுத்தயா இராச்சியம் ஒரு முக்கிய வணிக மையமாகத் திகழ்ந்தது. ஐரோப்பிய வணிகர்களின் வருகை இங்கு 16-ஆம் நூற்றாண்டில் ஆரம்பமானது, முதலில் போர்த்துக்கீசரும் , பின்னர் பிரெஞ்சு, டச்சு, ஆங்கிலேயரும் வரத் தொடங்கினர்.
1767-இல் அயுத்தயா இராச்சியம் பர்மியர்களிடம் வீழ்ச்சியடைந்த பின்னர், மன்னர் தக்சின் ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு தாய்லாந்தின் தலைநகரை தோன்புரிக்கு மாற்றினார். தற்போதைய தாய்லாந்தின் இரத்தனகோசின் காலம் 1782-ஆம் ஆண்டில் ஆரம்பமானது. அப்போது சக்கிரி வம்சத்தின் முதலாம் இராமாவின் ஆட்சியில் பேங்காக் தலைநகரானது.
ஐரோப்பியர்களின் செல்வாக்கு
[தொகு]ஐரோப்பியர்களின் செல்வாக்கு இங்கு இருந்திருந்தாலும், தாய்லாந்து ஒன்றே தென்கிழக்காசியாவில் ஐரோப்பியக் குடியேற்றம் இடம்பெறாத நாடாகும்.[15] பிரெஞ்சு இந்தோசீனாவுக்கும் பிரித்தானியப் பேரரசுக்கும் இடையில் இடம்பெற்று வந்த போட்டி மற்றும் பதற்றத்தை தாய்லாந்தின் நான்கு நூற்றாண்டு கால ஆட்சியாளர்கள் வெற்றிகரமாகப் பயன்படுத்தி ஆட்சி நடத்தி வந்துள்ளார்கள்.
இதன் விளைவாக, பெரிய பிரித்தானியா, மற்றும் [[[பிரான்சு]] ஆகிய இரண்டு குடியேற்றவாத நாடுகளின் ஆதிக்கத்திலிருந்த தென்கிழக்காசியாவின் நாடுகளுக்கிடையே தாய்லாந்து ஓர் இடைத்தாங்கு நாடாக விளங்கி வந்தது. ஆனாலும், மேற்கத்தைய செல்வாக்கு 19-ஆம் நூற்றாண்டில் இங்கும் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக மேக்கொங்கின் கிழக்கில் பல பகுதிகளை பிரான்சுக்கும், மலாய் தீபகற்பத்தைப் படிப்படியாக பிரித்தானியாவுக்கு இழக்கவும் வழிவகுத்தது.
முதலாவது அரசியலமைப்பு
[தொகு]ஆரம்ப இழப்புகள் பினாங்கை மட்டும் உள்ளடக்கியிருந்தாலும், பின்னர் மலாய் இனத்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் தெற்கு மாகாணங்கள் நான்கையும் தாய்லாந்து இழந்தது. இவை பின்னர் 1909 ஆங்கிலோ-சயாமிய உடன்படிக்கையின் படி, மலேசியாவின் வடக்கு மாநிலங்களாயின.
1932-இல், இராணுவ மற்றும் குடிமக்களின் பங்களிப்புடன் கானா ரட்சடோன் என்ற குழுவினரின் இரத்தம் சிந்தாப் புரட்சி ஆட்சி மாற்றத்திற்கு உதவியது. மன்னர் பிரஜாதீபக் சயாம் மக்களுக்கு முதலாவது அரசியலமைப்பை அறிவித்தார். அதன் மூலம் வரையறையற்ற முடியாட்சி முடிவுக்கு வந்தது.
இரகசிய இராணுவ ஒப்பந்தம்
[தொகு]இரண்டாம் உலகப் போரின் போது, மலாயா மற்றும் தென்கிழக்காசியா நாடுகளைக் கைப்பற்றும் நோக்கத்தில், ஜப்பானியப் பேரரசு, தனது இராணுவப் படைகளைத் தாய்லாந்தின் வழியாக அனுப்புவதற்காக தாய்லாந்து கடற்கரைகளில் 1941 டிசம்பர் 8-ஆம் தேதி முற்றுகையிட்டது.
தாய்லாந்து இராணுவத்தினருக்கும் ஜப்பானிய இராணுவத்தினருக்கும் இடையே ஆறு முதல் எட்டு மணி நேரம் சண்டை நடந்தது. அதை அடுத்து தாய்லாந்து சமரசத்திற்கு வந்தது.[16]
அமெரிக்கா மீது போர்ப் பிரகடனம்
[தொகு]தாய்லாந்து வழியாகச் செல்வதற்கு ஜப்பானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 1941 டிசம்பர் 21-ஆம் தேதி, ஜப்பானுடன் இரகசியமாக ஓர் இராணுவ ஒப்பந்தத்தை தாய்லாந்து செய்து கொண்டது.
அதன் மூலம் பிரித்தானியா, பிரான்சு நாடுகளிடம் தாய்லாந்து இழந்த பகுதிகளை மீட்டுத் தரவும் ஜப்பான் உடன்பட்டது. இதனை அடுத்து தாய்லாந்து அரசாங்கம் அமெரிக்கா; ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் மீதும் 1942 சனவரி 25-ஆம் தேதி போர்ப் பிரகடனத்தை அறிவித்தது.[16][17]
சயாம் மரண இரயில்பாதை
[தொகு]கூட்டுப் படைகளுடனான சப்பானின் போருக்கு தாய்லாந்து உதவியது. இதே வேளையில், தாய் விடுதலைக்கான இயக்கம் சப்பானிய ஆதிக்கத்திற்கு எதிராக அமெரிக்கக் கூட்டுப் படைகளுடன் சேர்ந்து போராடி வந்தது. அண்ணளவாக 200,000 ஆசியக் கட்டாயத் தொழிலாளர்கள் மற்றும் 60,000 கூட்டுப் படைப் போர்க் கைதிகள் தாய்லாந்து-பர்மிய சயாம் மரண இரயில்பாதை கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.[18] இரண்டாம் உலகப் போரின் முடிவில், தாய்லாந்து அமெரிக்காவின் கூட்டணியில் இணைந்தது.
அரசியல்
[தொகு]தாய்லாந்தின் தற்போதைய அரசியல் அரசியல்சட்ட முடியாட்சியின் அடிப்படையில் இடம்பெற்று வருகிறது. அரசுத்தலைவராக பிரதமரும், நாட்டுத் தலைவராக மரபுவழி அரசரும் உள்ளனர்.
1932 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரசியல் மாற்றத்தை அடுத்து முழுமையான மன்னராட்சி முடிவுக்கு வந்தது. அன்று முதல் தாய்லாந்து 17 அரசியலமைப்புச் சட்டங்களைக் கண்டுள்ளது.[19][20] இக்காலகட்டத்தில் இராணுவ ஆட்சிகளும், சனநாயக ஆட்சிகளும் இடம்பெற்றுள்ளன. ஆனாலும், அனைத்து அரசுகளும் மரபுவழி அரசர்களைத் தமது நாட்டுத் தலைவராக ஏற்றுக் கொண்டன.[21]
சுகோத்தாய் இராச்சியம்
[தொகு]1932 ஆம் ஆண்டுக்கு முன்னர், சயாம் இராச்சியம் ஒரு அரசியலமைப்பைக் கொண்டிருக்கவில்லை. அனைத்து அரசியல் அதிகாரங்களும் மன்னரிடத்திலேயே இருந்தன. கிபி 12ம் நூற்றாண்டில் சுகோத்தாய் இராச்சியம் உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து தாய்லாந்து மன்னர் "தர்ம வழி கொண்டு ஆட்சி நடத்துபவர்" அல்லது "தர்மராசா" என அழைக்கப்பட்டார்.
1932 சூன் 24 ஆம் நாள் மக்கள் கட்சி (கானா ரத்சோதான்) என அழைக்கப்பட்ட பொதுமக்களையும் இராணுவத்தினரையும் கொண்ட குழு ஒன்று இரத்தம் சிந்தாப் புரட்சி ஒன்றை நடத்தி வெற்றி கண்டனர். இதனை அடுத்து 150 ஆண்டு காலம் பதவியில் இருந்த 'சக்கிரி' வம்சம் முடிவுக்கு வந்தது. முடியாட்சிக்குப் பதிலாக அரசியல்சட்ட முடியாட்சி முறை கொண்டுவரப்பட்டது.
புதிய அரசியலமைப்பில் திருத்தங்கள்
[தொகு]1932 ஆம் ஆண்டில் அரசியல்சட்ட வரைபு பிரஜாதீபக் மன்னரால் கையெழுத்திடப்பட்டது. இது தாய்லாந்தின் முதலாவது அரசியலமைப்பாகும். இதன் மூலம் மக்கள் பேரவை அமைக்கப்பட்டு அதன் உறுப்பினர்களாக 70 பேர் நியமிக்கப்பட்டனர். இதன் முதலாவது அமர்வு 1932 சூன் 28 இல் இடம்பெற்றது.
அதே ஆண்டு டிசம்பரில் முழுமையான அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததை அடுத்து 1933 நவம்பர் 15 இல் தேர்தல்கள் நடைபெற நாள் குறிக்கப்பட்டது. மக்கள் பேரவைக்கு 78 பேர் மக்களால் நேரடியாகவும், மேலும் 78 பேர் மக்கள் கட்சியால் தேர்ந்தெடுக்கப்படவும் புதிய அரசியலமைப்பில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.
இராணுவ ஆட்சி
[தொகு]1932 முதல் 1973 வரையான காலப்பகுதியின் பெரும்பாலானவற்றில் இராணுவமே ஆட்சியில் இருந்து வந்தது. முக்கியமான இராணுவ ஆட்சியாளராக பீபன் என அழைக்கப்பட்ட பிளைக் பிபுல்சொங்கிரம் (1938-1944, 1948-1957) என்பவரைக் குறிப்பிடலாம். இவர் இரண்டாம் உலகப் போரின் போது சப்பானுடன் கூட்டிணைந்தார்.
இரண்டாம் உலகப்போரின் இறுதியில் சிறிது காலம் அரசியல்வாதி பிரிதி பனோம்யொங் பிரதமராக இருந்தார். இவரே பேங்காக்கில் அமைந்துள்ள தம்மசத் பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவர். இவருக்குப் பின்னர் 1948 ஆம் ஆண்டில் பீபன் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்.
தானொம் கிட்டிகாசோர்ன்
[தொகு]இவருக்குப் பின்னர் சரித் தனராஜட்ட, தானொம் கிட்டிகாசோர்ன் போன்ற இராணுவ ஆட்சியாளர்களின் ஆட்சியில் ஆதிக்கவாதத்துடன் அமெரிக்காவின் செல்வாக்குடன் நவீனமயமாக்கல், மேலைமயமாதல் போன்றனவும் நடைபெற்றன. அக்டோபர் 1973 இல் தம்மசத் பல்கலைக்கழக மாணவர்களின் மக்களாட்சிக்கு ஆதரவான போராட்டங்களின் போது இடம்பெற்ற படுகொலைகளை அடுத்து தானொம் கிட்டிகாசோர்ன் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
1973 ஆம் ஆண்டு முதல் தாய்லாந்தின் மக்களாட்சி பலமுறை ஆட்டம் கண்டது. 1976 ஆம் ஆண்டு புரட்சியை அடுத்து இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. 1980களின் பெரும்பாலான காலப்பகுதியில் பிரேம் தின்சுலாநந்தா பிரதமராகப் பதவியில் இருந்தார்.
இவர் நாடாளுமன்ற ஆட்சியை மீள அமுல் படுத்தி மக்களாட்சியைப் படிப்படியாகக் கொண்டு வந்தார். அதன் பின்னர் 1991-1992 காலப்பகுதியில் சிறிது காலம் இராணுவ ஆட்சியில் இருந்த தாய்லாந்து பெரும்பாலும் நாடாளுமன்ற ஆட்சியைப் பின்பற்றி வந்தது. பிரபலமான தாய் ராக் தாய் கட்சியின் தலைவர் தக்சின் சினவாத்ரா பிரதமராக இருந்து 2001 முதல் 2006 வரை ஆட்சி நடத்தினார். 2006 செப்டம்பர் 19 இல் ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவம் அரசியலமைப்பை இடைநிறுத்தி நாடாளுமன்றத்தைக் கலைத்து இராணுவ ஆட்சியை அமைத்தது.[22][23]
தாய்லாந்து காட்சியகம்
[தொகு]-
பொ.கா.மு. 2100 காலப்பகுதியைச் சேர்ந்த மட்பாண்டங்கள் உடோன் தானி மாகாணத்தில் பன் சியாங் எனுமிடத்தில் கண்டெடுக்கப்பட்டன.
-
வத் பனான் சொயெங் எனுமிடத்தில் உள்ள, 19 மீற்றர் உயரமான அமர்ந்த நிலை புத்தர் சிலை இந்நகர உருவாக்கத்தின் பின் 1324 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
-
பிரா அச்சானா மாகாணத்தின் சுக்கோத்தாயி எனுமிடத்திலுள்ள 15 மீற்றர் உயரமான புத்தர் சிலை, 13 ஆம் நூற்றாண்டிற் கட்டப்பட்டது.
-
1665 இல் ஒல்லாந்து கிழக்கிந்தியக் கம்பனியின் கட்டளைக்கிணங்க வரையப்பட்ட அயுத்தயாவின் ஓவியம்.
-
நராயி மன்னரின் மடலை கொசா பன் 16 ஆம் லூயிக்கு வெர்செயில்சு அரண்மனையில் கையளித்தல், 1 செப்தெம்பர் 1686.
துணைநூற்கள்
[தொகு]- தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு?, க.ப. அறவாணன், தாயறம் பதிப்பகம், திருச்சி - 17.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 CIA World Factbook Thailand பரணிடப்பட்டது 2010-12-29 at the வந்தவழி இயந்திரம், CIA World Factbook.
- ↑ West, Barbara A. (2009), Encyclopedia of the Peoples of Asia and Oceania, Facts on File, p. 794
- ↑ "World Population Prospects - Population Division - United Nations".
- ↑ National Statistics Office. "100th anniversary of population censuses in Thailand: Population and housing census 2010: 11th census of Thailand" (in Thai), online accessible at: [1] பரணிடப்பட்டது 2012-07-12 at the வந்தவழி இயந்திரம், retrieved on 30 January 2012.
- ↑ 5.0 5.1 5.2 5.3 "Report for Selected Countries and Subjects". International Monetary Fund. பார்க்கப்பட்ட நாள் 14 February 2022.
- ↑ "A Royal Occasion speeches". Worldhop.com Journal. 1996. Archived from the original on 2006-05-12. பார்க்கப்பட்ட நாள் 5 சூலை 2006.
- ↑ Thailand and the World Bank பரணிடப்பட்டது 2005-12-16 at the வந்தவழி இயந்திரம், World Bank on Thailand country overview.
- ↑ The Guardian, Country profile: Thailand, 25 April 2009.
- ↑ THAILAND: Burmese migrant children missing out on education. IRIN Asia. 15 June 2009.
- ↑ history.htm Thailand (Siam) History, CSMngt-Thai.
- ↑ 11.0 11.1 Eliot, Charles (1921). The Project Gutenberg EBook of Hinduism and Buddhism, An Historical Sketch, Vol. 3 (of 3) [EBook #16847]. London: Routledge & Kegan Paul Ltd. pp. Ch. xxxvii 1, citing in turn Footnote 189: The name is found on Champan inscriptions of 1050 A.D. and according to Gerini appears in தொலெமியின் Samarade = Sâmaraṭṭha. See Gerini, Ptolemy, p. 170. But Samarade is located near Bangkok and there can hardly have been Tais there in Ptolemy's time, and Footnote 190: So too in Central Asia Kustana appears to be a learned distortion of the name Khotan, made to give it a meaning in Sanskrit.
- ↑ จิตร ภูมิศักดิ์ 1976: "ความเป็นมาของคำสยาม ไทย ลาวและขอม และลักษณะทางสังคม ของชื่อชนชาติ" (Jid Phumisak 1976: "Coming Into Existence for the Siamese Words for Thai, Laotian and Khmer and Societal Characteristics for Nation-names")
- ↑ Thailand. History. பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்
- ↑ "Science news: What happened at Angkor Wat". வாசிங்டம் போஸ்ட். 13 ஏப்ரல் 2010.
- ↑ "King, country and the coup". The Indian Express. India. 22 September 2006. பார்க்கப்பட்ட நாள் 3 November 2011.
- ↑ 16.0 16.1 Stuart-Fox, Martin (1997). A History of Laos. Cambridge University Press. pp. 24–25. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-59746-3.
- ↑ Simms, Peter; Simms, Sanda (2001). The Kingdoms of Laos: Six Hundred Years of History. Psychology Press. pp. 206–207. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0700715312. பார்க்கப்பட்ட நாள் 22 August 2015.
- ↑ Werner Gruhl, Imperial Japan's World War Two, 1931–1945, Transaction Publishers, 2007 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7658-0352-8
- ↑ The Council of State, Constitutions of Thailand.
- ↑ Thanet Aphornsuvan, The Search for Order: Constitutions and Human Rights in Thai Political HistoryPDF (152 KB), 2001 Symposium: Constitutions and Human Rights in a Global Age: An Asia Pacific perspective
- ↑ "A list of previous coups in Thailand". அசோசியேட்டட் பிரசு. 19 செப்டம்பர் 2006 இம் மூலத்தில் இருந்து 2009-02-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090224093424/http://www.ctv.ca/servlet/ArticleNews/story/CTVNews/20060919/thailand_coups_060919/20060919/. பார்த்த நாள்: 25 ஏப்ரல் 2010.
- ↑ The Nation, NLA 'doesn't represent' all of the people பரணிடப்பட்டது 2006-11-02 at the வந்தவழி இயந்திரம், 14 October 2006
- ↑ The Nation, Assembly will not play a major role பரணிடப்பட்டது 2007-01-16 at the வந்தவழி இயந்திரம், 14 October 2006
வெளி இணைப்புகள்
[தொகு]- தாய்லாந்தில் ஆட்சிக்கவிழ்ப்பு ராணுவம் அறிவிப்பு [2]