செலுலாயிடு
செலுலாயிடுகள் (celluloids) என்பவை ஒரு வகையான சேர்மங்களாகும். இவை நைட்ரோசெல்லுலோசு, கற்பூரம் ஆகியவற்றில் இருந்து மேலதிகமாக சாயங்களும் சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது. இந்த செலுலாயிடுகளே முதன்முதலாக உருவாக்கப்பட்ட வெப்ப நெகிழி எனக் கருதப்படுகிறது. 1866 இல் பார்க்கின்சைன் என்ற பெயரிலும்,[1] 1869 இல் சைலோநைட் என்ற பெயரிலும் தயாரிக்கப்பட்டது. பின்பு 1870 இல் செலுலாயிடு என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டது. இந்த செலுலாயிடை எந்த வடிவமாகவும் எளிதில் வார்த்தெடுக்கலாம். முன்பெல்லாம் கத்தியின் கைப்பிடிகள், இசைக் கருவிகள் மற்றும் பல சாதனங்கள் செய்ய யானைத் தந்தங்கள் பயன்படுத்தப்பட்டது. அதற்கு (யானைத் தந்தத்திற்கு) மாற்றாக முதன்முதலில் பரவலாக பயன்படுத்தப்பட்ட பொருள் இந்த செலுலாயிடே ஆகும். ஒளிப்பட மற்றும் நிகழ்படத் தொழிற்சாலைகள், படச்சுருள்கள் (film) தயாரிக்க இந்த செலுலாயிடை மட்டுமே பயன்படுத்தின. பின்பு 1950களில் அசிடேட் படச்சுருள்கள் புழக்கத்திற்கு வந்தன. இந்த செலுலாயிடு எளிதில் தீப்பிடிக்கக்கூடியது. மேலும் இதைத் தயாரிப்பது கடினம் மற்றும் மிகுந்த செலவுபிடிக்கும். ஆதலால் இவை பரவலாக பயன்படுத்தப்படுவது இல்லை. எனினும் தற்போது, டேபிள் டென்னிசு பந்துகள், இசைக்கருவிகள் மற்றும் கித்தாரை மீட்ட பயன்படும் சிப்பிகள் தயாரிக்க செலுலாயிடு பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Stephen Fenichell, Plastic: The Making of a Synthetic Century, p. 17