உள்ளடக்கத்துக்குச் செல்

காடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐதரோகுளோரிக் அமிலம் நாகத்துடன் தாக்கமடைந்து ஐதரசன் வாயுவை வெளியேற்றுகின்றது.

ஓர் அமிலம் அல்லது காடி அல்லது புளிமம் (Acid)என்பது ஒரு புரோட்டானைக் கொடையாக வழங்கக்கூடிய மூலக்கூறு அல்லது அயனியைக் குறிப்பிடுகிறது. புரோட்டான் என்பது ஐதரான் அல்லது ஐதரச மின்மவணு H+ ஆகும் மாறாக, எலக்ட்ரான் இணையுடன் சேர்ந்து (இலூயிக் அமிலம்) சக பிணைப்பாக உருவாகும் திறன் கொண்டவற்றையும் காடி அல்லது அமிலம் எனலாம்.

புரோட்டான் வழங்கிகள் அல்லது புரோன்சிட்டெடு அமிலங்கள் முதலாவது வகை அமிலங்கள் எனப்படுகின்றன. நீர்த்த கரைசல்கள் எனப்படும் சிறப்பு சூழல்களில், புரோட்டான் வழங்கிகள் ஐதரோனியம் அயனிகளாக (H3O+) உருவாகின்றன. இவற்றை அறீனியசு அமிலங்கள் என்கிறோம். புரோன்சிட்டெடு மற்றும் மார்ட்டின் லோரி ஆகியோர் நீரியமில்லாத கரைப்பான்களுக்கும் அறீனியசு கோட்பாடு பொருந்தும் வகையில் கோட்பாட்டை பொதுமைப்படுத்தினர். ஒரு புரோன்சிட்டெடு அல்லது அறீனியசு அமிலம் வழக்கமாக வேதிக்கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட ஒரு ஐதரசன் அணுவைக் கொண்டிருக்கும். இந்த ஐதரசன் அணுவை இழந்தபிறகும் வேதிக்கட்டமைப்பானது ஆற்றல் மிக்கதாகவே பிணைக்கப்பட்டிருக்கும்.

நீரிய அறீனியசு அமிலங்கள் அவற்றுக்கான தனிச்சிறப்பு மிக்க பண்புகள் சிலவற்றைப் பெற்றுள்ளன. இப்பண்புகள் ஓர் அமிலம் குறித்த நடைமுறை விளக்கத்தை வழங்குகின்றன [1].

அமிலங்கள் புளிப்புச் சுவையுடன் நீர்த்த கரைசல்களாக உருவாகின்றன. நீல லிட்மசு தாளை சிவப்பு லிட்மசு தாளாக மாற்றுகின்றன. காரங்களுடனும் கால்சியம் போன்ற உலோகங்களுடனும் வினைபுரிந்து உப்புகளை உருவாக்குகின்றன. இலத்தீன் மொழியில் புளிப்புச் சுவைக்கு அசிடசு/அசெர் என்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதிலிருந்துதான் அமிலம் என்ற சொல் உருவானது[2]. ஓர் அமிலத்தின் நிர்த்த கரைசல் காரகாடித்தன்மை சுட்டெண் மதிப்பு (pH) 7 க்கும் குறைவாக உள்ளது. காரகாடித்தன்மைச் சுட்டெண் 0 வில் இருந்து 14 வரை கணக்கிடப்படுகிறது. சுத்தமான நீரின் அமிலக்காரதன்மை 25 ° செ இல் 7.0 ஆகும், இதை நடுநிலை நீர்மம் என்று அழைக்கிறார்கள். காரகாடித்தன்மை சுட்டெண் 7.0 க்கும் கீழ் இருந்தால் அக்கரைசலை அமிலம் என்றும் காரகாடித்தன்மை சுட்டெண் 7.0 க்கும் மேல் அதிகமாக இருந்தால் அக்கரைசல் காரமாகவும் கருதப்படுகிறது. காரகாடித்தன்மை சுட்டெண் மதிப்பு குறைவு எனில் அக்கரைசலின் அமிலத்தன்மை அதிகம் என்றும் அதில் அதிக அடர்த்தியில் ஐதரசன் நேர்மின் அயனிகள் உள்ளன என்பது பொருளாகும். வேதிப்பொருட்கள் அல்லது பொருள்கள் அமிலங்கள் என்று அழைக்கப்பட்டால் அவை அமிலத்தன்மையுடன் காணப்படுகின்றன என்பதும் அதன் பொருளாகும்.

ஐதரோகுளோரிக் அமிலம், அசிட்டிக் அமிலம், கந்தக அமிலம், சிட்ரிக் அமிலம் போன்றவை அமிலங்களுக்கு எளிய பொதுவான எடுத்துக்காட்டுகளாகும். இரைப்பை நீரில் காணப்படுவதும், செரிமானத்தை செயலூக்குவதும் ஐதரசன் குளோரைடின் கரைசலான ஐதரோகுளோரிக் அமிலமேயாகும். கரிம அமிலமான அசிட்டிக் அமிலம் வினீகர் என்றும் அழைக்கப்படுகிறது. கந்தக அமிலம் கார்களின் மின்கல அடுக்குகளில் பயன்படுத்தப்படுகிறது. சிட்ரிக் அமிலம் எலுமிச்சை போன்ற சிட்ரசு வகைப் பழங்களில் காணப்படுகிறது. இங்கு கூறப்பட்ட அனைத்து அமிலங்களுமே திட, திரவ, வாயு நிலைகளில் காணப்படும் தூய்மையான பொருட்களின் கரைசல்களில் இருந்து தருவிக்கப்பட்ட கரைசல்கள் ஆகும். வலிமையான அமிலங்களும். அடர்த்தி மிகுந்த ஆனால் வலிமை குறைந்த சில அமிலங்களும் அரிப்புத்தன்மை கொண்டுள்ளன. இப்பண்பிற்கு கார்போரேன்களும் போரிக் அமிலமும் விதிவிலக்குகளாகும்.

இலூயிக் அமிலங்கள் இரண்டாவது வகை அமிலங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. இவை எலக்ட்ரான் இணைகளுடன் சேர்ந்து சகப்பிணைப்பாக உருவாகின்றன. போரான் முப்புளோரைடு இலூயிக் அமிலத்திற்கு எடுத்துக்காட்டாகும். இதிலுள்ள போரான் அணுவில் ஒரு காலியான ஆர்பிட்டால் உள்ளது. இந்த ஆர்பிட்டால் காரத்திலுள்ள அணுவின் தனி இணை எலக்ட்ரான்களுடன் காலியிடத்தைப் பகிர்ந்து கொண்டு சகப்பிணைப்பாக உருவாகின்றது. அமோனியாவில் உள்ள நைட்ரசன் காரத்திலுள்ள அணுவுக்கு உதாரணமாகும். புரோன்சிட்டெடு வரையறையை பொதுமைப்படுத்துதலின் ஒரு பகுதியாக இலூயிசு கருதினார். இதன்படி ஓர் அமிலமென்பது எலக்ட்ரான் இணைகளை நேரடியாக ஏற்றுக் கொள்ளும் அல்லது புரோட்டான்களை கரைசலில் வெளியிட்டு பின்னர் எலக்ட்ரான் இணைகளை ஏற்றுக்கொள்ளும் ஒரு வேதிப்பொருள் என பொருள் கொள்ளப்படுகிறது. எனினும், ஐதரசன் குளோரைடு, அசிட்டிக் அமிலம் மற்றும் பெரும்பாலான அமிலங்கள் போன்ற புரோன்சிட்டெடு அமிலங்கள் எலக்ட்ரான் இணைகளுடன் சேர்ந்து சகப்பிணைப்புகளாக உருவாவதில்லை. எனவே இவை இலூயிக் அமிலங்களாகக் கருதப்படுவதில்லை[3]. மறுதலையாக, பல இலூயிக் அமிலங்கள் அறீனியசு அல்லது புரோன்சிட்டெடு லோரி அமிலங்களாக இருப்பதில்லை. நவீன சொல்லியலில் ஓர் அமிலம் என்பது முழுமைபெறாத புரோசிடெட்டு அமிலம் என்றும் மற்றும் இலூயிக் அமிலமாக இல்லாதது என்றும் கருதப்படுகிறது. எனவே வேதியியலர்கள் எப்போதும் இலூயிக் அமிலத்தை திட்டவட்டமாக இலூயிக் அமிலம் என்றே அழைக்கின்றனர்.

மாற்று விளக்கம்

[தொகு]

காடிகள் எதிர்மின்னிகளை ஏற்றுக்கொள்ளும் தன்மை படைத்தவை.

காடி நீரில் எப்படி கலக்கிறது?

[தொகு]

காடிகள் நீரில் கரையும் போது ஐதரசன் மின்மவணுக்களை (அயனிகளை (H+)) உருவாக்குகிறது. அதாவது தன்னிடமுள்ள ஐதரசனின் எதிர்மின்னியை ஈர்த்துக் கொண்டு நேர்மின்னியை (புரோடானை) தனியாக விட்டுவிடுகிறது. (ஐதரசன் ஒரேயொரு நேர்மின்னியும் எதிர்மின்னியும் கொண்ட எளிய அணு. ஓர் எதிர்மின்னி பிரிந்தால் H+ என்னும் ஐதரசன மின்மவணுவாக மாறிவிடுகின்றது.

இதனால் காடி - 'கரைசலில் நேர்மின்னியை உருவாக்கும்' என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கமான போதிலும், ஐதரசன் இல்லாத காடிகளும் உண்டென்பதால், மேற்ச் சொன்ன விளக்கமே பொதுவான விளக்கமாகிறது.

வரையறைகளும் கோட்பாடுகளும்

[தொகு]

அமிலங்கள் தொடர்பான நவீன வரையறைகள் அனைத்தும், அனைத்து அமிலங்களுக்கும் பொதுவான அடிப்படை இரசாயன வேதிவினைகளில் அக்கறை செலுத்துகின்றன. பெரும்பாலான அமிலங்கள் யாவும் அன்றாட வாழ்வில் நீர்த்த கரைசல்களாக அல்லது தண்ணீரில் கரைந்த கரைசல்களாக பயன்படுத்த வேண்டியுள்ளது. எனவே, அறீனியசு மற்றும் புரோன்சிடெட்டு லோரி வரையறைகள் மிகப்பொருத்தமானவையாக உள்ளன. அதிலும் குறிப்பாக புரோன்சிடெட்டு லோரி வரையறை மிகப்பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. வேறுவகையில் சிறப்பாக எதுவும் குறிப்பிடப்படாத வரையில், அமில கார வினைகள் என்பவை அமிலத்திலிருந்து காரத்திற்கு புரோட்டானை மாற்றுகின்ற ஒரு வேதிவினை என்றே அவை கருதப்படுகின்றன.

மேலே குறிப்பிடப்பட்ட மூன்று வகையான வரையரைகளிலும் ஐதரோனியம் அயனிதான் அமிலம் என்ற கருத்து வலுப்பெறுகிறது. ஆல்ககால்களும் அமீன்களும் கூட புரோன்சிடெட்டு லோரி வரையறைகளின்படி அமிலங்களாக இருக்க முடியும் என்பது ஆர்வமூட்டும் செய்தியாகும். ஆக்சிசன் மற்றும் நைட்ரசன் அணுக்கள் மீதுள்ள தனி இணை எலக்ட்ரான்களால் இவை இலூயிசு காரங்களாகவும் செயல்பட இயலும்.

அறீனியசு அமிலங்கள்

[தொகு]
சுவாந்தே அறீனியசு

சுவீடன் நாட்டு வேதியியலாளர் சுவாந்தே அறீனியசு 1884 இல் ஐதரசன் அயனிகளின் அல்லது புரோட்டான்களின் அமிலத்தன்மை இயற் பண்புகளை அறிவித்தார். தண்ணீரில் H+ அயனிகளின் அடர்த்தியை அதிகரிக்கும் பொருளே ஓர் அறீனியசு அமிலம் எனப்படுகிறது [3][4]. அமிலக்கார வினைகளைக் குறித்து விவரிக்கும்போது வேதியியலர்கள் பெரும்பாலும் H+(நீர்) என்று எழுதுவது வழக்கமென்பதை கவனத்திற் கொள்ள வேண்டும். ஆனால் தனி ஐதரசன் உட்கரு, அதாவது புரோட்டான் தண்ணிரில் தனியாக இருக்காது என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். பெரும்பாலும் இது H3O+அயனியாகவே இருக்கும். எனவே அறீனியசு அமிலம் என்பதற்கான வரையறையை, எந்தப்பொருளை தண்ணீருடன் சேர்க்கும் பொழுது, ஐதரோனியம் அயனிகளின் அடர்த்தி அதிகரிக்கிறதோ அப்பொருளை அறீனியசு அமிலம் என்றும் கூறலாம். மூலக்கூற்று சேர்மங்களான ஐதரோகுளோரிக் அமிலம் மற்றும் அசிட்டிக் அமிலம் ஆகியனவற்றை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். எந்தப்பொருளை தண்ணீருடன் சேர்க்கும் பொழுது, ஐதராக்சைடு அயனிகளின் (OH−) அடர்த்தி அதிகரிக்கிறதோ அப்பொருளை அறீனியசு காரம் என்று கூறலாம். இதனால் ஐதரோனியம் அயனிகளின் அடர்த்தி குறையும். ஏனெனில் அவை ஐதராக்சைடு எதிர்மின் அயனிகளுடன் வினைபுரிந்து நீர் மூலக்கூற்றை உருவாக்குகின்றன.

H3O+(aq) + OH−(aq) ⇌ H2O(l) + H2O(l)

சமநிலையின் காரணமாக, ஐதரோனியம் அயனியின் அடர்த்தி எப்பொழுதெல்லாம் அதிகரிக்கின்றதோ அப்போதெல்லாம அதற்கிணையாக ஐதராக்சைடு அயனியின் அடர்த்தி குறைகிறது என்றும் பொருளாகும். இதனால், ஒர் அறீனியசு அமிலத்தால் குறைக்கப்படும் ஐதராக்சைடு அயனியின் அடர்த்தியானது ஓர் அறீனியசு காரத்தால் உயர்த்தப்படுகிறது என்பதை அறியலாம்.

அமிலக்கரைசல்களில் ஐதரோனியம் அயனிகளின் அடர்த்தி லிட்டருக்கு 10−7 மோல்கள் அதிகமாகும். ஏனெனில் காரக்காடித்தன்மை சுட்டெண் (pH) ஐதரோனியம் அயனிகளின் அடர்த்தியின் கழித்தல் மடக்கை அடிப்படையிலானது ஆகும். எனவேதான் அமிலக் கரைசல்களின் காரக்காடித்தன்மை சுட்டெண் மதிப்பு 7 க்கு குறைவாகக் காணப்படுகிறது.

புரோன்சிட்டெடு – லோரி அமிலங்கள்

[தொகு]

அறீனியசு கோட்பாடு பல வேதி வினைகளைப் பற்றி விவரிக்கப் பயன்பட்டது என்றாலும் அதன் எல்லைகள் சுருக்கப்பட்டிருந்தன. அமிலக்கார வினைகள் என்பவை புரோட்டான் பரிமாற்றத்தால் நிகழக்கூடியவை என்பதை 1923 ஆம் ஆண்டில் இயோஃகானசு நிக்கோலசு புரோன்சிட்டெடு , மார்ட்டின் லோரி என்னும் வேதியியலாளர்கள் தனித்தனியாக அடையாளம் கண்டறிருந்திருந்தனர்.

ஒரு புரோன்சிட்டெடு லோரி அமிலம் (சுருக்கமாக புரோன்சிட்டெடு அமிலம்) என்பது ஒரு புரோன்சிட்டெடு லோரி காரத்திற்கு புரோட்டானை வழங்கக்கூடிய ஓரினமாகும் [4] புரோன்சிட்டெடு லோரி அமிலக்காரக் கொள்கையானது அறீனியசு கோட்பாட்டைக் காட்டிலும் கூடுதலான அனுகூலங்களைக் கொண்டுள்ளது. அசிட்டிக் அமிலத்தின் பின்வரும் வினையைக் கருதுவோம். இந்தக்கரிம அமிலம் வினீகரை அதன் தனிச்சிறப்பு சுவையாகக் கொண்டுள்ளது.

CH3COOH + H2O ⇌ CH3COO− + H3O+

CH3COOH + NH3 ⇌ CH3COO− + NH+4

இரண்டு கோட்பாடுகளும் முதல் வினையை எளிதாக விவரிக்கின்றன. CH3COOH அறீனியசு அமிலமாகச் செயல்படுகிறது. ஏனெனில் இது தண்ணிரில் கரைந்து H3O+ அயனிக்கு ஆதார மூலமாகச் செயல்படுகிறது. மற்றும் இது ஒரு புரோட்டானை கொடையளிப்பதன் மூலம் ஒரு புரோன்சிட்டெடு அமிலமாக செயல்படுகிறது. இரண்டாவது உதாரணத்தில் CH3COOH இதே மாற்றத்தைக் காண்கிறது. இந்நிகழ்வில் புரோட்டானை அமோனியாவுக்கு (NH3) கொடையளிக்கிறது. ஆனால் இவ்வினையில் ஐதரோனியம் அயனி உற்பத்தி இல்லை என்பதால் அமிலம் என்பதற்கான அறீனியசு வரையறையுடன் தொடர்பு இல்லை. எப்படி இருப்பினும், CH3COOH ஒரு அறீனியசு மற்றும் புரோன்சிட்டெடு-லோரி அமிலம் ஆகும்.

நீரியமில்லா கரைசல்களில் அல்லது வாயுநிலையில் மூலக்கூற்று சேர்மங்களின் வினைகளை விளக்க புரோன்சிட்டெடு- லோரி கோட்பாடு பயன்படுகிறது. ஐதரசன் குளோரைடும் அமோனியாவும் பல்வேரு நிபந்தனைகளுக்கு உட்பட்டு அமோனியம் குளோரைடாக (NH4Cl) உருவாகின்றன. நீரியக் கரைசலில் ஐதரசன் குளோரைடு வாயு ஐதரோகுளோரிக் அமிலமாக செயல்படுகிறது. மேலும் ஐதரோனியம் மற்றும் குளோரைடு அயனிகளாகவும் இங்கு காணப்படுகிறது. அறீனியசு வரையறையின் எல்லைகளை பின்வரும் வினைகள் காட்டுகின்றன.

  1. H3O+
    (aq)
    + Cl
    (aq)
    + NH3 → Cl
    (aq)
    + NH+
    4
    (aq) + H2O
  2. HCl(benzene) + NH3(benzene) → NH4Cl(s)
  3. HCl(g) + NH3(g) → NH4Cl(s)

அசிட்டிக் அமிலத்தின் வினைகளைப் போலவே, இரு வரையறைகளும் முதலாவது வினைக்கே பொருந்துகின்றன. இங்கு நீர் ஒரு கரைப்பானாகவும் ஐதரோனியம் அயனி HCl கரைபொருளினாலும் உருவாகிறது. அடுத்த இரண்டு வினைகளிலும் அயனிகள் உருவாக்கம் நிகழ்வதில்லை. ஆனால் அவை புரோட்டான்-பரிமாற்ற வினைகளாக உள்ளன. இரண்டாவது வினையில் ஐதரசன் குளோரைடு மற்றும் அமோனியா (பென்சீனில் கரைந்தது) இரண்டும் வினைபுரிந்து பென்சீன் கரைப்பானில் உள்ள திண்ம அமோனியம் குளோரைடு உருவாகிறது. மூன்றாவது வினையில் ஐதரசன் குளோரைடு வாயுவும் அமோனியாவும் இணைந்து திடப்பொருளாக உருவாகின்றன.

இலூயிசு அமிலம்

[தொகு]

புரோட்டான் பரிமாற்றம் இல்லாத அமிலக்கார பண்புகள் கொண்ட வினைகளை உள்ளடக்கிய சற்றே தொடர்பான மூன்றாவது கோட்பாட்டை கில்பர்ட் என் இலூயிசு 1923-ம் ஆண்டு முன்மொழிந்தார். ஓர் இனத்திலிருந்து ஒரு சோடி இனை எலக்ட்ரான்களைப் பெற்றுக் கொள்ளும் மற்றொரு இனம் இலூயிசு அமிலம் எனப்படுகிறது. சுருங்கச் சொல்வதென்றால் இதுவொரு எலக்ட்ரான் இணை ஏற்பி எனலாம் [4] புரோன்சிட்டெடு அமிலக்கார வினைகள் எல்லாம் புரோட்டான் பரிமாற்ற வினைகள் என்பது போல இலூயிசு அமிலக்கார வினைகள் எல்லாம் எலக்ட்ரான் இணை பரிமாற்ற வினைகளாகும். பல இலூயிசு அமிலங்கள் புரோன்சிட்டெடு லோரி அமிலங்களாக இருப்பதில்லை. மாறாக, அமிலக்கார வேதியியல் அடிப்படையில் பின்வரும் வினைகள் எப்படி விவரிக்கப்படுகிறது என்பதைக் காணலாம்.

முதல் வினையில் ஒரு புளோரைடு அயனி F− ஓர் எலக்ட்ரான் இணையை போரான் முப்புளோரைடுக்குக் கொடையளித்து விளைபொருளாக டெட்ராபுளோரோபோரேட்டு உருவாகிறது. புளோரைடு ஒரு சோடி இணைதிறன் எலக்ட்ரான்களை இழக்கிறது. ஏனெனில் B—F பிணைப்பில் பகிர்ந்து கொள்ளப்படும் எலக்ட்ரான்கள் இரண்டு அணுக்களின் உட்கருக்களுக்கிடையில் இடம்பெற்றுள்ளன. எனவே, அவை இருக்கும் தனி புளோரைடு அயனியில் இருப்பதைக் காட்டிலும் புளோரைடு உட்கருவிலிருந்து அதிக தொலைவில் உள்ளன.

BF3 ஒர் இலூயிசு அமிலமாகும். ஏனெனில் இது புளோரைடிலிருந்து எலக்ட்ரான் இணைகளைப் பெற்றுக் கொள்கிறது. புரோட்டான் பரிமாற்றம் ஏதுமில்லாததால், இவ்வினையை புரொன்சிட்டெடு கோட்பாடு மூலம் விளக்க இயலாது. இரண்டாவது வினையை இரண்டு கோட்பாடுகளாலும் விளக்க முடியும். குறிப்பிட்டு சொல்லப்படாத புரோன்சிட்டெடு அமிலத்திலிருந்து புரோன்சிட்டெடு காரமான அமோனியாவுக்கு ஒரு புரோட்டான் பரிமாறப்படுகிறது. மாற்றாக அமோனியா ஒரு இலூயிசு காரமாகச் செயல்பட்டு தனி இணை எலக்ட்ரான்களை ஐதரசன் அயனிக்குப் பரிமாற்றம் செய்து பிணைப்பை உருவாக்குகிறது. எலக்ட்ரான் இணைகளைப் பெற்றுக் கொள்ளும் இனம் இலூயிசு அமிலமாக கருதப்படுகிறது. உதாரணமாக, ஐதரோனியம் அயனியிலுள்ள (H3O+) ஆக்சிசன் ஒரு சோடி எலக்ட்ரான்களைப் பெற்றுக்கொள்கிறது. H—O பிணைப்புகளில் ஒன்று உடையும்பொழுது அதில் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ள எலக்ட்ரான்கள் ஆக்சிசனுக்குள் உள்ளடங்குகின்றன. சூழலைப்பொறுத்தும் இலூயிசு அமிலத்தை ஒர் ஆக்சிசனேற்றி அல்லது ஒரு மின்னணுகவரியாகவும் விவரிக்கமுடியும். கரிம புரோசிட்டெடு அமிலங்களான அசிட்டிக் அமிலம், சிட்ரிக் அமிலம், அல்லது ஆக்சாலிக் அமிலம் போன்றவை இலூயிசு அமிலங்கள் அல்ல [3]. அவை தண்ணிரில் பிரிகையடைந்து இலூயிசு அமிலத்தை உற்பத்தி செய்கின்றன.(H+). ஆனால் அதே சமயத்தில் அதற்கு இணையான அளவுக்கு இலூயிசு காரத்தையும் (அசிட்டேட்டு, சிட்ரேட்டு அல்லது ஆக்சலேட்டு) உருவாக்குகின்றன.

பிரிகையும் சமநிலையும்

[தொகு]

அமிலங்களின் வினைகள் யாவற்றையும் HA ⇌ H+ + A− என்ற சமன்பாட்டால் பொதுமைப்படுத்தலாம். இங்குள்ள HA அமிலத்தைக் குறிக்கிறது. அமிலத்திற்கு இணையான இணை காரத்தை A− குறிக்கிறது. புரோட்டான்பகுப்பு என்ற பெயரால் இவ்வினை அழைக்கப்படுகிறது. புரோட்டானேற்ற வடிவம் (HA) பெற்ற ஓர் அமிலம் சில சமயங்களில் தனி அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது. அமிலத்தன்மை அளிக்கும் புரோட்டானை மட்டுமே கொண்ட அமிலம் அல்லது ஆக்சிசன் இடம்பெறாத அமிலம் தனி அமிலம் எனப்படுகிறது[5].

அமிலக்கார இணை இரட்டைகள் ஒரு புரோட்டானால் வேறுபடுகின்றன. இவற்றை புரோட்டானேற்றம் மற்றும் புரோட்டான் நீக்கம் செய்வதன் மூலமாக ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்றமுடியும். அமிலம் மின்சுமை ஏற்ற இனமாகவும் அதனுடைய இணை காரம் நடுநிலைமையுடனும் இருப்பதை HA+ ⇌ H+ + A. என்று பொதுமைப்படுத்திய சமன்பாடாக எழுதலாம். கரைசலில் அமிலத்திற்கும் அதன் இணை காரத்திற்கும் இடையில் ஒரு சமநிலை நிலவுகிறது. கரைசலில் உள்ள அயனிகள் அல்லது மூலக்கூறுகளின் அடர்த்திச் சமநிலையை சமநிலை மாறிலி K வால் அறியலாம். அடைப்புக்குறிகள் அடர்த்தியைக் குறிக்கின்றன. அதாவது [H2O] என்று குறிப்பிடப்பட்டால், தண்ணிரின் அடர்த்தி என்பது இதன் பொருள் ஆகும். அமிலக்கார வினைச்சூழலில் பொதுவாக காடித்தன்மை எண் அல்லது அமிலத்தன்மை எண்ணைக் குறிக்க Ka என்ற குறியீட்டைப் பயன்படுத்துவர். Ka மாறிலியின் எண்ணியல் மதிப்பை காணவேண்டுமென்றால், விளைபொருட்களின் அடர்த்திகளின் பெருக்கற்தொகையை வினையில் ஈடுபட்ட வினைபடு பொருளின் அடர்த்தியால் வகுத்துப் பெற வேண்டும். இங்கு வினைபடு பொருள் (HA) மற்றும் வினை விளைபொருட்கள் இணைகாரமும், புரோட்டானும் (H+) ஆகும்.

இரண்டு அமிலங்களில் Ka மதிப்பு எதற்கு அதிகமாக உள்ளதோ அந்த அமிலமே வலிமையான அமிலமாகும். வலிமையான அமிலங்களே புரோட்டானை இழப்பதில் அதிக நாட்டமுள்ள போக்கைக் கொண்டிருப்பதால் ஐதரசன் அயனிக்கும் அமிலத்திற்குமான விகிதம் வலிமையான அமிலங்களில் உயர்ந்த அளவாக இருக்கும். இந்த விகிதம் பல பதின்ம அடுக்குகளுக்கு ஏற்றவாறு மாறும் என்பதால் Ka மதிப்புகளை மடக்கை அளவில் குறிப்பது வழக்கம். மடக்கை காடித்தன்மை எண், pKa என்பது −log10 Ka என்பதற்கு ஈடாகும். வலிமையான அமிலங்கள் வலிமை குறைந்த அமிலங்களைக் காட்டிலும் pKa மதிப்பை குறைவாகக் கொண்டிருக்கும்.

மேற்கோள்களிலும் நூல்களிலும் கொடுக்கப்படும் pKa தரவுகள் நீரின் வெப்பநிலை 25;°செல்சியசில் இல் அளக்கப்பட்டு சோதிக்கப்பட்ட அளவுகளாகும்.[6][7].

பெயரிடல்

[தொகு]

மரபார்ந்த பெயரிடல் முறையில் எதிர்மின் அயனிகளின் அடிப்படையில் அமிலங்களுக்குப் பெயரிடப்பட்டது. பின்னர் அயனி பின்னொட்டுகள் கைவிடப்பட்டு கீழுள்ள அட்டவணையில் உள்ள ஒட்டுகள் பின்னொட்டாக சேர்க்கப்பட்டு பெயரிடப்பட்டன. சில சமயங்களில் முன்னொட்டாகவும் இவை சேர்த்துக் கொள்ளப்பட்டன. உதாரணமாக HCl இல் குளோரைடு என்பது எதிர்மின் அயனியாகும். எனவே ஐடு என்ற பின்னொட்டை ஐயுபிஏசி பெயரிடும் முறையில் ஐதரோகுளோரிக் அமிலம் எனப் பெயரிட்டார்கள். மரபார்ந்த பெயரிடல் முறை:

எதிரயனி முன்னொட்டு எதிரயனி பின்னொட்டு அமில முன்னொட்டு அமிலப் பின்னொட்டு உதாரணம்
பெர் ஏட்டு பெர் இக் அமிலம் பெர்குளோரிக் அமிலம் (HClO4)
ஏட்டு இக் அமிலம் குளோரிக் அமிலம் (HClO3)
இட்டு அசு அமிலம் குளோரசு அமிலம் (HClO2)
ஐப்போ இட்டு ஐப்போ அசு அமிலம் ஐப்போகுளோரசு அமிலம் (HClO)
ஐடு ஐதரோ இக் அமிலம் ஐதரோகுளோரிக் அமிலம் (HCl)

அமிலங்களீன் வலிமை

[தொகு]

ஒரு புரோட்டானை இழக்கும் திறன் அடிப்படையில் ஓர் அமிலத்தின் வலிமை அளவிடப்படுகிறது. தண்ணீரில் முழுமையாகப் பிரிகையடைக்கூடிய அமிலம் வலிமையான் அமிலம் எனக் கருதப்படுகிறது. ஒரு மோல் அளவுள்ள வலிமையான அமிலம் HA தண்ணிரில் கரைந்து ஒரு மோல் அளவுள்ள H+ மற்றும் ஒரு மோல் அளவுள்ள இணை காரம் A− மற்றும் சிறிதளவும் புரோட்டானேற்றம் பெற்ற HA இல்லாமல் போவது என்றும் அமிலத்தின் வலிமையைக் குறிப்பிடலாம். மாறாக வலிமை குன்றிய ஓர் அமிலத்தில் பகுதியாக பிரிகை நிகழ்ந்து, கரைசலில் அமிலமும் இணை காரமும் சமநிலையில் இருப்பதை குறைந்த வலிமை என்ற சொல் விளக்குகிறது. ஐதரோகுளொரிக் அமிலம் (HCl), ஐதரோ அயோடிக் அமிலம் (HI), ஐதரோ புரோமிக் அமிலம் (HBr), பெர்குளோரிக் அமிலம் (HClO4), நைட்ரிக் அமிலம் (HNO3), கந்தக அமிலம் (H2SO4) போன்றவை வலிமையான அமிலங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும். தண்ணிரில் இவை ஒவ்வொன்றும் 100 சதவீதம் அளவுக்கு அயனியாகின்றன. எளிமையாக புரோட்டானை இழக்கும் பொருள் வலிமையான அமிலம் என்று கருதப்படுகிறது. H—A பிணைப்பின் முனைவுப் பண்பும், A அணுவின் உருவ அளவும் இரண்டு முக்கிய காரணிகளாக புரோட்டான் நீக்கத்தை கட்டுப்படுத்துகின்றன. இவையே H—A பிணைப்பின் வலிமையையும் உறுதிப்படுத்துகின்றன. இணை காரத்தினுடைய நிலைப்புத்தன்மையும் கூட அமிலங்களின் வலிமையை சிலநேரங்களில் நிர்ணயிக்கின்றன.

வலிமையான அமிலங்கள் உயர் Ka மதிப்பும் வலிமை குன்றிய அமிலங்களைக் காட்டிலும் குறைவான pKa மதிப்பும் கொண்டிருக்கும்.

கரிம ஆக்சி அமிலங்களான சல்போனிக் அமிலங்கள் வலிமையான அமிலங்கள் என்ற வகையில் பகுக்கப்பட்டுள்ளன. தொலுயீன்சல்போனிக் அமிலம் இதற்கு எடுத்துக்காட்டாகும். கந்தக அமிலத்தைப் போலன்றி சல்போனிக் அமிலங்கள் திண்மங்களாகும். உண்மையில் பாலிசிடைரின் செயல்சார்புடைய பாலிசிடைரின் சல்போனெட்டு வலிமையான அமிலத்தன்மை கொண்ட வடித்தலுக்குட்பட்ட நெகிழி ஒரு திண்மமாகும் மீவீரிய அமிலங்கள் 100% கந்தக அமிலத்தைக் காட்டிலும் வலிமையானவையாகும். புளோரோ ஆண்டிமோனிக் அமிலம், மந்திர அமிலம், பெர்குளோரிக் அமிலம் போன்றவை மீவீரிய அமிலங்களுக்கு உதாரணங்களாகும். மீவீரிய அமிலங்களால் நிரந்தரமாக தண்ணீரை புரோட்டானேற்றம் செய்து படிகநிலை ஐதரோனியம் உப்புகளை தரமுடியும். அமிலச் சேர்மத்தின் வலிமையை Ka அளவுகள் தெரிவிப்பது போல நீரிய அமிலங்களின் வலிமையை pH, அளவுகள் தெரிவிக்கின்றன.

வேதியியல் பண்புகள்

[தொகு]

ஒற்றை புரோட்டிக் அமிலங்கள்

[தொகு]

பிரிகைச் செயல்முறையின் போது ஓர் அமில மூலக்கூற்று அலகுக்கு ஒரு புரோட்டானை மட்டும் கொடையளிக்க வல்ல அமிலங்கள் ஒற்றை புரோட்டிக் அமிலங்கள் எனப்படும். HA என்ற குறியீடு இதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. HA(நீரிய) + H2O(நீர்மம்l) ⇌ H3O+(நீரிய) + A−(நீரிய) Ka

கனிம அமிலங்களில் ஐதரோகுளோரிக் அமிலமும் (HCl), நைட்ரிக் அமிலமும் (HNO3) ஒற்றை புரோட்டிக் அமிலங்களுக்குப் பொதுவான எடுத்துக்காட்டுகளாகும். கரிம அமிலங்களைப் பொறுத்தவரையில் ஒரு கார்பாக்சிலிக் குழு இடம்பெற்ற அமிலங்கள் ஒற்றை புரோட்டிக் அமிலங்கள் என்ற பொருளில் அழைக்கப்படுகின்றன. பொதுவாக இவை மோனோ கார்பாக்சிலிக் அமிலங்கள் அல்லது ஒற்றை கார்பாக்சிலிக் அமிலங்கள் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. பார்மிக் அமிலம் (HCOOH), அசிட்டிக் அமிலம் (CH3COOH), பென்சாயிக் அமிலம் (C6H5COOH) உள்ளிட்ட அமிலங்கள் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

பாலிபுரோட்டிக் அமிலங்கள்

[தொகு]

ஓர் அமில மூலக்கூற்று அலகுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட புரோட்டான்களை கொடையளிக்க வல்ல அமிலங்களை பாலிபுரோட்டிக் அமிலங்கள் என்கிறார்கள். மேலும் இவற்றை பாலிக்கார அமிலங்கள் என்றும் அழைக்கிறார்கள். தனிச்சிறப்பு மிக்க பாலிபுரோட்டிக் அமிலங்கள் கூடுதலாக டைபுரோட்டிக் அமிலங்கள்ம் டிரைபுரோட்டிக் அமிலங்கள் போன்ற சிறப்புப் பெயர்களைக் கொண்டுள்ளன.

இங்கு H2A என்ற குறியீட்டால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளடைபுரோட்டிக் அமிலம் அதனுடைய pH தன்மையைப் பொறுத்து ஒரு முறை அல்லது இருமுறை பிரிகை அடைகிறது. ஒவ்வொரு பிரிகைக்கும் தனித்தனியான பிரிகை மாறிலிகள் உண்டு.

H2A(aq) + H2O(l) is in equilibrium with H3O+
(aq)
+ HA
(aq)
      Ka1
HA
(aq)
+ H2O(l) is in equilibrium with H3O+
(aq)
+ A2−
(aq)
      Ka2

முதலாவது பிரிகை மாறிலி குறிப்பாக இரண்டாவது பிரிகை மாறிலியைக் காட்டிலும் அதிக மதிப்பைக் கொண்டது. ( Ka1 > Ka2). உதாரணமாக கந்தக அமிலம் (H2SO4) பைசல்பேட்டு எதிரயனி (HSO−4) உருவாக ஒரு புரோட்டானை கொடையளிக்க முடியும். இதற்கான Ka1 மதிப்பு அதிகமாகும்; பின்னர் இது (SO2−4) எதிரயனியை உருவாக்க இரண்டாவது புரோட்டானை கொடையளிக்கிறது. இங்கு இதற்கான Ka2 மதிப்பு இடைநிலை வலிமை கொண்டது. உயர் Ka1 மதிப்பு கொண்ட முதலாவது பிரிகை கந்தக அமிலத்தை வலிமையான அமிலமாக அடையாளப்படுத்துகிறது. இதேபோல வலிமை குறைந்த நிலையற்ற கார்பானிக் அமிலம் (H2CO3) ஒரு புரோட்டானை இழந்து பைகார்பனேட்டு எதிரயனியையும் (HCO−3), இரண்டாவது புரோட்டானை இழந்து கார்பனேட்டு எதிரயனியையும் (CO2−3) கொடுக்கிறது. இரண்டுமே Ka மதிப்புகள் குறைவு என்றாலும் Ka1 > Ka2 ஆக கருதப்படுகிறது. ஒரு டிரைபுரோட்டிக் அமிலத்தால் (H3A) ஒன்று, இரண்டு அல்லது மூன்று பிரிகைகள் அடைய முடியும். இவற்றுக்கான மூன்று பிரிகை மாறிலிகளும் இதற்கு உண்டு. இங்கு இவற்றின் மதிப்பு Ka1 > Ka2 > Ka3.ஆகும்.

H3A(aq) + H2O(l) is in equilibrium with H3O+
(aq)
+ H2A
(aq)
        Ka1
H2A
(aq)
+ H2O(l) is in equilibrium with H3O+
(aq)
+ HA2−
(aq)
      Ka2
HA2−
(aq)
+ H2O(l) is in equilibrium with H3O+
(aq)
+ A3−
(aq)
        Ka3

கனிம அமிலங்களின் டிரைபுரோட்டிக் அமிலத்திற்கு ஆர்த்தோபாசுபாரிக் அமிலத்தை (H3PO4), உதாரணமாகக் கூறலாம். வழக்கமாக இது பாசுபாரிக் அமிலம் என்ற பெயராலேயே அழைக்கப்படுகிறது. மூன்று புரோட்டான்களும் அடுத்தடுத்து இழக்கப்பட்டு H2PO−4, பின்னர் HPO2−4, மற்றும் இறுதியாக ஆர்த்தோபாசுப்பேட்டு அயனி PO3−4,உருவாகிறது. வழக்கமாக இதை பாசுப்பேட்டு என்றே அழைக்கின்றனர். பாசுபாரிக் அமில மூலக்கூறில் மூன்று புரோட்டான்களின் அமைவிடங்களும் சமமாக இருந்தாலும் அடுத்தடுத்த Ka மதிப்புகள் வேறுபடுகின்றன. கரிம வேதியியலில் டிரைபுரோட்டிக் அமிலத்திற்கு எடுத்துக்காட்டாக சிட்ரிக் அமிலம் இதேபோல மூன்று புரோட்டான்களை இழந்து சிட்ரேட்டு அயனியாக உருவாகிறது.

ஒவ்வொரு ஐதரசன் அயனியாக தொடர்ந்து இழப்பதற்கு குறைந்த சாத்தியம் என்றாலும், அனைத்து இணை காரங்களும் கரைசலில் உள்ளன. உதாரணமாக ஒரு டைபுரோட்டிக் அமிலத்தால் கரைசலில் H2A, HA-, மற்றும் A2-: என்ற மூன்று இனங்களை உருவாக்க முடியும். ஒவ்வொரு இனத்திற்குமான பின்ன செறிவுகளை α (ஆல்பா), இங்குள்ளவாறு கணக்கிட இயலும். pH மதிப்பும் இணைகாரங்களின் செறிவும் கொடுக்கப்பட்டால்,

:

கொடுக்கப்பட்ட K1 and K2 pH மதிப்பிற்கு எதிரான பின்னச் செறிவுகளை இத்திட்டத்தின் மூலம் கணக்கிட முடியும். இத்திட்டம் பெய்றம் திட்டம் எனப்படுகிறது. இத்திட்டத்தின் பாங்கை அவதானித்து பொதுவாக n புரோட்டிக் அமிலத்திற்கான i முறைகள் பிரிகை கணக்கீட்டிற்காக இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

இங்கு K0 = 1 மற்றும் இதர K-அளவுகள் அமிலத்தினுடைய பிரிகை மாறிலிகளாகும்.

நடுநிலையாக்கல்

[தொகு]

ஓர் அமிலமும் ஒரு காரமும் வினைபுரிந்து ஓர் உப்பும் நிரும் உருவாகும் வினை நடுநிலையாக்கல் எனப்படும். உதாரணமாகம் ஐதரோகுளோரிக் அமிலமும் சோடியம் ஐதராக்சைடும் வினைபுரிந்து சோடியம் குளோரைடும் தண்ணீரும் உருவாகின்றன. நடுநிலையாக்கல் வினைக்கு இது ஓர் எளிய எடுத்துக்காட்டாகும்.

HCl(aq) + NaOH(aq) → H2O(l) + NaCl(aq)

பருமனறிபகுப்பாய்வில் பயன்படும் தரம்பார்த்தல் சோதனைக்கு நடுநிலையாக்கல் வினையே அடிப்படையாகும். இவ்வினையில் பயன்படுத்தப்படும் pH காட்டி சமானப்புள்ளியைக் காட்டுகிறது. ஓர் அமிலத்தை நடுநிலையாக்க எத்தனை மோல் காரம் சேர்க்கப்படுகிறது என்பது இவ்வினையில் கண்டறியப்படுகிறது. நடுநிலையாக்கல் வினையால் பெரும்பாலும் pH மதிப்பு 7.0 உள்ள கரைசல் உருவாவதாக தவறாக பொருள் கொள்ளப்படுகிறது. ஒரே வலிமை கொண்ட அமிலமும் காரமும் வினைபுரியும் நிகழ்வுகளில் மட்டுமே இத்தகைய கரைசல் உருவாகும். அமிலத்தைவிட வலிமை குறைந்த காரத்தை நடுநிலையாக்கும் போது வலிமை குறைந்த அமில உப்பு உருவாகிறது. உதாரணமாக, வலிய ஐதரோகுளோரிக் அமிலமும், வலிமை குறைந்த அமோனியாவும் நடுநிலையாக்கப்படும் போது வலிமை குறைந்த அமோனியம் குளொரைடு என்ற அமில உப்பு உருவாகிறது. இதேபோல ஒரு வலிமை குறைந்த அமிலம், வலிய காரத்துடன் நடுநிலையாக்கப்படும்போது வலிமை குறைந்த கார உப்பு உருவாகிறது. உதாரணமாக ஐதரோபுளோரிக் அமிலமும் சோடியம் ஐதராக்சைடும் நடுநிலையாக்கப்பட்டால் சோடியம் புளோரைடு உருவாகிறது.

வலிமை குறைந்த அமிலம் – வலிமை குறைந்த காரம் சமநிலை

[தொகு]

புரோட்டானேற்ற அமிலத்திலிருந்து ஒரு புரோட்டானை நீக்கும்போது அவ்வமைப்பின் pH மதிப்பானது அமிலத்தின் pKa மதிப்பைக் காட்டிலும் கண்டிப்பாக உயரும். இந்தக் காரக் கரைசலில் ஏற்படும் H+ இன் அடர்த்திக் குறைவு சமநிலையை இணை காரத்தை நோக்கி (புரோட்டான் நீக்கம் செய்யப்பட்ட அமில வடிவம்) செலுத்துகிறது. தாழ் மதிப்பு கொண்ட pH கரைசல்களில் உயர் அடர்த்தி H+ அமிலத்தை புரோட்டானேற்ற வடிவத்திலேயே வைத்திருக்கிறது. வலிமை குறைந்த அமிலக் கரைசலும் அவற்றின் இணை கார உப்புகளும் சேர்ந்து தாங்கல் கரைசல்களாக உருவாகின்றன.

பயன்கள்

[தொகு]

அமிலங்கள் பல பயன்களைக் கொண்டுள்ளன.

  • உலோகங்களில் துரு மற்றும் பிற அசுத்தங்களை நீக்க பயன்படுத்தப்படுகிறது.
  • நீர்ம மின்கலத்தில் கந்தக அமிலம் மின்னாற்பகு பொருளாக பயன்படும்.
  • வலுவான அமிலங்கள் குறிப்பாக கந்தக அமிலம் பரவலாக கனிமங்களை பயன்படுத்தப்படுத்தி வினை பொருட்களை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, பாசுபேட்டு தாதுவுடன் கந்தக அமிலம் சேர்த்து பாசுபேட்டு உரங்கள் மற்றும் பாசுபாரிக் அமிலம் முதலியன தயாரிக்கப்படுகின்றன. மற்றும் துத்தநாகத் தயாரிப்பின் போது, துத்தநாக ஆக்சைடு கந்தக அமிலத்தில் கரைத்து துத்தநாகம் பிரித்தெடுக்கப்படுகிறது.
  • இரசாயன துறையில் உப்புக்களை உற்பத்தி செய்ய அமிலங்கள் நடுநிலையாக்கிகளாக பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக நைட்ரிக் அமிலத்துடன் அம்மோனியா வினைபுரிந்து அம்மோனியம் நைட்ரேட் என்ற உரமாகப் பயன்படும் உப்பை உற்பத்தி செய்கிறது. மேலும் கார்பாக்சிலிக் அமிலங்கள் ஆல்ககாலுடன் வினைபுரிந்து ஈதர் தயாரிக்கப்படுகிறது.
  • அமிலங்கள் பானங்கள் மற்றும் உணவுகளில் அவற்றின் சுவையை மாற்றவும் நிலைப்படுத்தும் காரணியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டாக பாசுபாரிக் அமிலம் கோலா பானத்தின் ஒரு அங்கமாகும். அசிட்டிக் அமிலம் வினிகர் என்ற பெயரில் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும். கார்பானிக் அமிலம் சில கோலா பானங்கள் மற்றும் சோடாவின் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது. சிட்ரிக் அமிலம் சுவையூட்டிகள் மற்றும் ஊறுகாய்களில் நிலைப்படுத்தும் பொருளாகப் பயன்படுகிறது.

  • டார்டாரிக் அமிலம் மாம்பழம், புளி போன்ற உணவுகளில் ஒரு முக்கியமான பகுதிப்பொருள் ஆகும்.மேலும் இயற்கை பழங்கள் மற்றும் காய்கறிகளும் அமிலங்களைக் கொண்டிருக்கின்றன.

சிட்ரிக் அமிலம் ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் மற்ற சிட்ரசு பழங்களில் உள்ளது. ஆக்சாலிக் அமிலம் தக்காளி, கீரை போன்ற உணவுப்பொருட்களில் காணப்படுகின்றது. அசுகார்பிக் அமிலம் (விட்டமின் சி) மனித உடலில் ஒரு அத்தியாவசிய வைட்டமின் ஆகும். நெல்லிக்காய், எலுமிச்சை, சிட்ரசு பழங்கள், கொய்யா போன்ற உணவுகளில் உயிர்சத்து சி இருக்கிறது.

  • மனித உடலில் அமிலங்கள் முக்கிய பங்குவகிக்கின்றன. மனித வயிற்றில் சுரக்கும் ஐதரோகுளோரிக் அமிலம் பெரிய, சிக்கலான உணவு மூலக்கூறுகளை சிறியதாக உடைத்து செரிமானத்தை எளிமையாக்குகின்றது.

அமினோ அமிலங்கள் உடல் திசுக்களின் வளர்ச்சி மற்றும் மறுசீரமைக்கத் தேவையான புரதங்களின் உருவாக்கத்தில் பயன்படுத்தப்படுகிறது. கொழுப்பு அமிலங்களும் உடல் திசுக்களின் வளர்ச்சிக்கு அவசியமான ஒன்றாக உள்ளது. சந்ததியினருக்கு மரபு பண்புகளை கடத்தும் டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ களை உருவாக்க நியூக்ளிக் அமிலங்கள் பயன்படுகின்றன. உடலில் கார சமநிலையை பராமரிக்க கார்பானிக் அமிலம் அவசியமாகும்.

அமில வினையூக்கிகள்

[தொகு]

அமிலங்கள் தொழில்துறை மற்றும் கரிம வேதியியல் துறைகளில் அதிக அளவில் வினையூக்கியாக பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, கந்தக அமிலம் பெட்ரோல் உற்பத்தியின் போது ஆல்க்கைலேற்ற செயல்பாட்டில் பயன்படுத்தப்படுகிறது. கந்தக, பாசுபாரிக் மற்றும் ஐதரோகுளோரிக் அமிலம் போன்ற வலுவான அமிலங்கள் நீர்நீக்க மற்றும் ஒடுக்க எதிர்வினைகளில் முக்கிய பங்காற்றுகிம்றன. உயிர்வேதியியல் துறையில் பல நொதிகள் அமிலங்களை வினையூக்கிகளாகப் பயன்படுத்துகின்றன.

உயிரியல் நிகழ்வுகள்

[தொகு]
அமினோ அமிலத்தின்

அடிப்படைக் கட்டமைப்பு]].

உயிரியலின் பல முக்கிய மூலக்கூறுகளில் அமிலங்கள் உள்ளன. டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ உள்ளிட்ட நியூக்ளிக் அமிலங்கள் அமில பாசுப்பேட்டு குழுக்களால் ஆக்கப்பட்டுள்ளன. நியூக்ளிக் அமிலங்கள் மரபணுக் குறியீடுகளைக் கொண்டிருக்கின்றன. இவையே பெற்றோர்களிடம் இருந்து பிள்ளைகளுக்கு அனுப்பப்பட்டு உயிரினத்தின் பண்புகள் பலவற்றை தீர்மானிக்கின்றன. மற்றும் அமினோ அமிலத் துணையலகுகளால் உருவாக்கப்பட்ட டிஎன்ஏ புரதங்கள் தொகுப்புக்கான இரசாயன செயல்திட்டத்தைக் கொண்டிருக்கிறது. செல் சவ்வுகளில் பாசுப்போலிபிடுகள் போன்ற கொழுப்பு அமில எசுத்தர்கள் உள்ளன.

ஓர் α-அமினோ அமிலத்தில் உள்ள ஒரு மைய கார்பன் அணு, சக பிணைப்பால் பிணைக்கப்பட்ட ஒரு கார்பாக்சில் தொகுதி (இவை கார்பக்சிலிக் அமிலங்கள் என்பதால்), ஒர் அமினோ தொகுதி, ஒரு ஐதரசன் அணு மற்றும் ஒரு மாறுபடும் தொகுதி ஆகியனவற்றை கொண்டுள்ளது. மாறுபடும் தொகுதி ஆர் தொகுதி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட அமினோ அமிலத்தின் பல பண்புகளை பக்கச் சங்கிலியான இதுவே உறுதிப்படுத்தி அடையாளப்படுத்துகிறது.

எளிய அமினோ அமிலமான கிளைசினில் ஐதரசன் அணுவே மாறுபடும் தொகுதியாக அதாவது ஆர் தொகுதியாக உள்ளது. ஆனால் மற்ற அனைத்து அமினோ அமிலங்களிலும் ஐதரசனுடன் பிணைக்கப்பட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கார்பன் அணுக்கள் மற்றும் கந்தகம், ஆக்சிசன், நைட்ரசன் போன்ற பிற தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. கிளைசின் தவிர, ஏனைய இயற்கையாகத் தோன்றும் அமினோ அமிலங்கள் அனைத்தும் படியா மூலக்கூறு எனப்படும் கைரல் தன்மையும் மற்றும் மாறாத எல் கட்டமைப்பிலும் காணப்படுகின்றன. சில பாக்டீரியா செல் சுவர்களில் பெப்டிதோகிளைகேன் எனப்படும் டி- அமினோஅமிலங்கள் காணப்படுகின்றன. உடலியல் pH மதிப்பு பொதுவாக 7 என இருக்குமிடங்களில் தனி அமினோ அமிலங்கள் மின்சுமையேற்ற வடிவங்களில் உள்ளன. இங்கு அமில கார்பாக்சில் தொகுதி (-COOH) புரோட்டானை இழக்கிறது. (-COO-) மற்றும் கார அமீன் தொகுதி (-NH2) புரோட்டானை ஏற்கிறது (-NH + 3). ஒட்டுமொத்த முழு மூலக்கூறும் நிகரமாக நடுநிலையுடன் ஓர் இருமுனை அயனியாக உள்ளது கார அல்லது அமில பக்கச் சங்கிலியுடன் கூடிய அமினோ அமிலங்கள் மட்டும் இதற்கு விதிவிலக்காகும். உதாரணமாக அசுபார்டிக் அமிலம். இதில் புரோட்டனேற்றம் பெற்ற ஓர் அமீனும், புரோட்டான் நீக்கம் செய்யப்பட்ட இரண்டு கார்பாக்சில் தொகுதிகளும் உள்ளன. உடலியல் pH மதிப்பின் நிகர மின்சுமை −1 ஆகும். உயிரியலில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கை அளிக்கின்ற கொழுப்பு அமிலங்களும், கொழுப்பு அமிலவழிப்பொருட்களும் மற்றொரு தொகுதியாக அமைந்துள்ள கார்பாக்சிலிக் அமிலங்கள் ஆகும். இவை நீண்ட ஐதரோகார்பன் சங்கிலிகளையும், கார்பாக்சிலிக் அமிலத் தொகுதியை ஒரு முனையிலும் கொண்டுள்ளன. கிட்டத்தட்ட அனைத்து உயிரினங்களின் செல் சவ்வும் முதன்மையாக பாசுப்போலிபிடு ஈரடுக்கால் ஆக்கப்பட்டுள்ளன. சில செல் சவ்வுகளில் கூடுதலாக சில் கூறுகள் இடம்பெற்றுள்ளன. இவை சில அமில கார வினைகளில் பங்கேற்கின்றன.

மனிதர்கள் மற்றும் பல விலங்குகளில் வயிற்றில் சுரக்கும் இரைப்பை நீரில் ஐதரோகுளோரிக் அமிலம் ஒரு பகுதியாக உள்ளது. புரதங்கள் மற்றும் பாலிசாக்கரைடுகளை நீராற்பகுப்பு செய்யவும், அதே போல் செயலற்ற-நொதி, பெப்சினோகென் முதலியவற்றை நொதியாகவும், பெப்சினாகவும் மாற்ற உதவுகிறது. சில உயிரினங்கள் பாதுகாப்பு க்கான அமிலங்களை உற்பத்தி செய்கின்றன. உதாரணமாக, எறும்புகள் பார்மிக் அமிலத்தை உற்பத்தி செய்கின்றன. .

பாலூட்டிகளின் மூச்சை ஒழுங்குபடுத்துவதில் அமில கார சமநிலை முக்கியப்பங்கு வகிக்கிறது. உணவில் சேமிக்கப்பட்டுள்ள இரசாயன ஆற்றலை வெளியிடும் செயல்பாடான உயிரணு செல்களின் சுவாசம் ஆக்சிஜன் வாயுவால் (O2) நிகழ்கிறது. இச்செயல்முறையில் கார்பனீராக்டைடு உடன் விளைபொருளாக உருவாகிறது. ஆக்சிசன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு வாயுக்கள் நுரையீரலில் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. ஆற்றல் தேவைகளுக்கு ஏற்ப உடலின் காற்றோட்ட விகிதம் சரிசெய்யப்படுகிறது. உதாரணமாக உழைப்பு காலங்களில், சேமிக்கப்பட்டுள்ள கார்போவைதரேட்டு, கொழுப்பு முதலியவற்றை உடல் வேகமாக சிதைத்து இரத்த ஓட்டத்திலிருந்து CO2 வாயுவை வெளியிடுகிறது. இரத்தம் போன்ற நீரிய கரைசல்களில் கார்பானிக் அமிலம், பைகார்பனேட்டு அயனி ஆகியனவற்றுடன் CO2 சமநிலையுடன் காணப்படுகிறது.

CO2 + H2O ⇌ H2CO3 ⇌ H+ + HCO−

உடலின் pH அளவு குறையும்போது வேகமாகவும் ஆழ்ந்தும் சுவாசித்து கார்பனீராக்சைடை வெளியேற்றவும், ஆக்சிசனை மீண்டும் அனுப்பவும் மூளையிலிருந்து செய்திகள் அனுப்பப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொழுப்பு விரும்பி கொழுமிய அசைல் சங்கிலிகளால் உட்புறம் ஆக்கப்பட்டுள்ளதால் செல் சவ்வுகளில் பொதுவாக முனைவு மூலக்கூறுகள் போன்றவை எதுவும் உட்புகமுடியாது. உயிரியல் ரீதியான மருந்து முகவர் உட்பட பல முக்கிய மூலக்கூறுகள் புரோட்டானேற்ற வடிவில் சவ்வைக் கடந்து செல்கின்றன. இந்த காரணத்தினாலேயே பல மருந்துகளில் அவற்றின் செயல்பாடுகள் இரத்தத்தில் கரையுமாறு உயர்த்தப்படுகின்றன.

பொதுவான அமிலங்கள்

[தொகு]

கனிம அமிலங்கள்

[தொகு]
  • ஐதரசன் ஆலைடுகள் மற்றும் அவற்றின் கரைசல்கள்: ஐதரோகுளோரிக் அமிலம் (HCl), ஐதரோபுளோரிக் அமிலம் (HF), ஐதரோபுரோமிக் அமிலம் (HBr), ஐதரோ அயோடிக் அமிலம் (HI).
  • ஆலசன் ஆக்சோ அமிலங்கள்: ஐப்போகுளோரசு அமிலம் (HClO), குளோரசு அமிலம் (HClO2), குளோரிக் அமிலம் (HClO3), பெர்குளோரிக் அமிலம் (HClO4), மற்றும் இதேவரிசையில் அமைந்த புரோமின், அயோடின் அமிலங்கள்.
  • ஐப்போபுளோரசு அமிலம் (HFO)
  • கந்தக அமிலம் (H2SO4)
  • புளோரோகந்தக அமிலம் (HSO3F)
  • நைட்ரிக் அமிலம் (HNO3)
  • பாசுபாரிக் அமிலம் (H3PO4)
  • புளோரோ ஆண்டிமோனிக் அமிலம் (HSbF6)
  • புளோரோபோரிக் அமிலம் (HBF4)
  • எக்சாபுளோரோபாசுபாரிக் அமிலம் (HPF6)
  • குரோமிக் அமிலம் (H2CrO4)
  • போரிக் அமிலம் (H3BO3)

சல்போனிக் அமிலங்கள்

[தொகு]

RS(=O)2–OH என்ற பொதுவாய்ப்பாட்டில் அமைந்த அமிலங்கள் சல்போனிக் அமிலங்களாகும். இங்கு R என்பது கரிம இயங்குறுப்பு ஆகும்.

  • மெத்தேன்சல்போனிக் அமிலம் (CH3SO3H)
  • எத்தேன்சல்போனிக் அமிலம் (CH3CH2SO3H)
  • பென்சீன்சல்போனிக் அமிலம் ( C6H5SO3H)
  • பாரா-தொலுயீன்சல்போனிக் அமிலம் ( CH3C6H4SO3H)
  • டிரைபுளோரோமெத்தேன்சல்போனிக் அமிலம்

(CF3SO3H)

  • பாலிசிடைரின் சல்போனிக் அமிலம் [CH2CH(C6H4)SO3H]n)

கார்பாக்சிலிக் அமிலங்கள்

[தொகு]

R-C(O)OH என்ற பொதுவாய்ப்பாட்டில் அமைந்த அமிலங்கள் கார்பாக்சிலிக் அமிலங்கள் எனப்படும். இங்கு R என்பது கரிம வேதியியல் இயங்குறுப்பு ஆகும். கார்பாக்சில் தொகுதியில் (-C(O)OH) ஒரு கார்பனைல் தொகுதியும் C=O, ஒரு ஐதராக்சில் தொகுதியும் ( O-H) உள்ளன.

  • அசிட்டிக் அமிலம் (CH3COOH)
  • சிட்ரிக் அமிலம் (C6H8O7)
  • பார்மிக் அமிலம் (HCOOH)
  • குளுக்கோனிக் அமிலம் HOCH2-(CHOH)4-COOH
  • லாக்டிக் அமிலம் (CH3-CHOH-COOH)
  • ஆக்சாலிக் அமிலம் (HOOC-COOH)
  • டார்டாரிக் அமிலம் (HOOC-CHOH-CHOH-COOH)

ஆலசனேற்ற கார்பாக்சிலிக் அமிலங்கள்

[தொகு]

ஆல்பா நிலையில் ஆலசனேற்றம் அடைந்த அமிலங்கள் அசிட்டிக் அமிலத்தைக் காட்டிலும் வலிமையானவை ஆகும்.

  • புளோரோ அசிட்டிக் அமிலம்
  • டிரைபுளோரோ அசிட்டிக் அமிலம்
  • குளோரோ அசிட்டிக் அமிலம்
  • டைகுளோரோ அசிட்டிக் அமிலம்
  • டிரைகுளோரோ அசிட்டிக் அமிலம்

வினைலொத்தகார்பாக்சிலிக் அமிலங்கள்

[தொகு]

சாதாரணமான கார்பாக்சிலிக் அமிலங்கள் நேரடியாக ஒரு கார்பனைல் தொகுதியையும் ஒரு ஐதராக்சில் தொகுதியையும் கொண்டிருக்கும். ஆனால் வினைலொத்த கார்பாக்சிலிக் அமிலங்களில் ஒரு கார்பன் – கார்பன் இரட்டைப் பிணைப்பு இவற்றைப் பிரித்திருக்கும்.

  • அசுகார்பிக் அமிலம்.

கரிமக் காடிகள் (Organic Acids)

[தொகு]
நீரில் கரைக்கப்பட்ட அசிட்டிக் அமிலம்

இவை கார்பன் அணுக்களைக் கொண்டவை. பானங்கள், உடலழகுப் பொருட்கள், டிட்டர்ச்செண்ட், சோப்புகள், உணவு, மருந்துகள், நெகிழிகள் படைக்க உதவுபவை.

சிட்ரிக் காடி, அசுகார்பிக் காடி (விட்டமின் C), அசிட்டைல் சாலிசிலிக் காடி (ஆஸ்பிரின்) மற்றும் அமினோக் காடிகள் போன்றவை பரவலாக அறிந்த கரிமக் காடிகள்.


நியூக்ளிக் அமிலங்கள்

[தொகு]
  • டீயாக்சிரிபோநியூக்ளிக் அமிலம் (டி.என்.ஏ)
  • ரிபோநியூக்ளிக் அமிலம் (ஆர்.என்.ஏ)

மேற்கோள்கள்

[தொகு]
  1. Petrucci R.H., Harwood, R.S. and Herring, F.G. General Chemistry (8th ed., Prentice-Hall 2002) p.146 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-13-014329-4
  2. Merriam-Webster's Online Dictionary: acid
  3. 3.0 3.1 3.2 Oxtoby, D. W; Gillis, H.P., Butler, L. J. (2015).Principles of Modern Chemistry, Brooks Cole. p. 617. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1305079113
  4. 4.0 4.1 4.2 Ebbing, D.D., & Gammon, S. D. (2005). General chemistry (8th ed.). Boston, MA: Houghton Mifflin. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-618-51177-6
  5. Stahl, P. Heinrich; Nakamo, Masahiro (2008). "Pharmaceutical Aspects of the Salt Form". In Stahl, P. Heinrich; Warmth, Camille G. (eds.). Handbook of Pharmaceutical Salts: Properties, Selection, and Use. Weinheim: Wiley-VCH. pp. 92–94. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-906390-58-1. {{cite book}}: Unknown parameter |name-list-format= ignored (help)
  6. Shriver, D.F (1999). Inorganic Chemistry (3rd ed.). Oxford: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-850331-8. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help) Chapter 5: Acids and Bases
  7. Speight, J.G. (2005). Lange's Handbook of Chemistry (18th ed.). McGraw–Hill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-143220-5. Chapter 8

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காடி&oldid=4043658" இலிருந்து மீள்விக்கப்பட்டது