உள்ளடக்கத்துக்குச் செல்

கராபி பாதைப்பாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கராபி பாதைப்பாலம்
போக்குவரத்து தொடர்வண்டிப் பாதை
தாண்டுவது டுரூயேர்
கட்டுமானப் பொருள் தேனிரும்பு
மொத்த நீளம் 565 மீ (1,854 அடி)
அதிகூடிய அகல்வு 165 மீ (541 அடி)
கட்டுமானம் தொடங்கிய தேதி 1882
கட்டுமானம் முடிந்த தேதி 1884
அமைவு 44°58′31″N 3°10′39″E / 44.97528°N 3.17750°E / 44.97528; 3.17750

கராபி பாதைப்பாலம் (பிரெஞ்சு: Viaduc de Garabit) என்பது ஒரு தொடர்வண்டிப்பாதை வளைவுப் பாலம் ஆகும். இது டுருயேர் ஆற்றுக்குக் குறுக்கே அமைந்துள்ளது. இது பிரான்சின் கொந்தலில் உள்ள ருயின்சு-ஒ-மர்கரீட் என்னும் இடத்துக்கு அண்மையில் மலைப் பாங்கான மசிஃப் நடு பகுதியில் அமைந்துள்ளது. இப்பாலம் குஸ்தாவ் ஐபெல் என்பவரால் 1882க்கும் 1884க்கும் இடையில் கட்டப்பட்டது. இதன் அமைப்புப் பொறியியல் வடிவமைப்பு மோரிசு கொயெக்லான் என்பவரால் செய்யப்பட்டது. 1885ம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்ட இப்பாலம், 565 மீட்டர் (1,854 அடி) நீளமுடையது. இதன் முதன்மை வளைவு 165 மீட்டர் (541 அடி) அகல்வு கொண்டது.[1]

பின்னணி

[தொகு]

1870களின் முடிவில் குஸ்தாவ் ஐபெலினால் தொடங்கப்பட்ட ஐபெல் அன்ட் கம்பனி, தியோபில் சேரிக் என்பவருடன் இணைந்து பிரான்சின் முன்னணிப் பொறியியல் நிறுவனங்களில் ஒன்றாக விளங்கியது. 1875க்கும் 1877க்கும் இடையில் இந்நிறுவனம் போர்ட்டூவுக்கு அண்மையில் தொவ்ரூ ஆற்றுக்குக் குறுக்கே மரியா பியா பாலத்தைக் கட்டிக் கொடுத்தது. டுருயேர் ஆற்றுக்குக் குறுக்கே தொடர்வண்டிப் பாலம் ஒன்றைக் கட்டுவதற்கு கொந்தல் வேலைகள் திணைக்களம் திட்டமிட்டபோது, இவ்வேலை வழமையான போட்டிக் கேள்வி கோரல் நடைமுறைகள் எதுவும் இல்லாமல், தேசிய நெடுஞ்சாலைகள் திணைக்களப் பொறியாளர்களின் பரிந்துரைக்கு அமைய ஐபெலுக்குக் கொடுக்கப்பட்டது. முன்மொழியப்பட்ட பாலம் தொடர்பான தொழில்நுட்பப் பிரச்சினைகள் மரியா பியா பாலத்தினதைப் போலவே இருந்ததால் இந்தப் பரிந்துரை வழங்கப்பட்டது. உண்மையில், ஐபெல் அன்ட் கம்பனியின் பரியா பியா பாலத் திட்டத்தின் வெற்றியே கராபியில் பாதைப்பாலம் கட்டும் திட்டத்துக்கு வித்திட்டது.[2]

வடிவமைப்பும் கட்டுமானமும்

[தொகு]

1885 நவம்பரில் ஒற்றைப் பாதையுடன் திறக்கப்பட்ட இப்பாலத்தின் நீளம் 565 மீட்டரும் (1,854 அடி), 3,587 தொன்கள் நிறையும் கொண்டிருந்தது. ஐபெல் கணித்தபடியே பாலத்தின் கீழ்நோக்கிய விலக்கம் சரியாக 8 மில்லிமீட்டர்களாக இருந்தது ஒரு சிறப்பம்சம். ஆற்றில் இருந்து 124 மீட்டர் (407 அடி) உயரத்தில் அமைந்திருந்த இப்பாலம், அது கட்டப்பட்ட காலத்தில் உலகின் மிக உயரமான பாலமாக இருந்தது.[3][4] இரண்டு கரைகளிலும் தாங்கப்பட்ட தேனிரும்பால் உருவாக்கப்பட்ட வளைவின்மீது தாங்கப்பட்டு இருந்த தூண்கள் தொடர்வண்டிப் பாதையுடன் கூடிய பாலத்தைத் தாங்கின. திட்டத்துக்கான முழுச் செலவு 3,100,000 பிராங்குகள்.[5] 2009 செப்டெம்பர் 11ம் தேதி வரை இரண்டு திசைகளிலும் நாளொன்றுக்கு ஒவ்வொரு பயணிகள் தொடர்வண்டி பாலத்தினூடாகச் சென்றுவந்தது. மேற் குறிப்பிட்ட தேதியில் நடைபெற்ற சோதனையின் போது, அத்திவார முளை ஒன்றில் வெடிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. திருத்தவேலையின் பின் அடுத்த மாதத்தில் 10கிமீ/மணி (6 மைல்/மணி) வேகக் கட்டுப்பாட்டுடன் பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.[6]

திரைப்படத்தில்

[தொகு]

1976ல் எடுக்கப்பட்ட "த கசான்ட்ரா கொரொசிங்" (The Cassandra Crossing) என்னும் ஆங்கிலப் படத்தில், 30-40 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இல்லாத ஒரு பாலம் முக்கிய இடம் பெறுகிறது. அயலில் வாழ்ந்தவர்கள் இது விழுந்துவிடக்கூடும் என அஞ்சி அவ்விடத்தைவிட்டுச் செல்லும் அளவுக்கு அது ஆபத்தான நிலையில் உள்ளதாகக் காட்டப்பட்டது. அதனூடாக ஒரு தொடர்வண்டியைப் பயணிகளுடன் செலுத்தி வழவைக்கச் சிலர் முயல்வதும் அதைத்தடுக்கச் சிலர் நடவடிக்கை எடுப்பதுமே கதை. கராபி பாதைப்பாலமே மேற்படி பாலமாகப் படத்தில் காட்டப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]