உள்ளடக்கத்துக்குச் செல்

கட்டிடத் தகவல் மாதிரியாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டிடத் தகவல் மாதிரியாக்கம் (Building Information Modelling) கட்டிடம் ஒன்றின் இருப்புக்காலம் முழுவதும் அது தொடர்பான தரவுகளை உருவாக்கி அவற்றை மேலாண்மை செய்யும் ஒரு வழிமுறையாகும். பொதுவாக இதற்கு, முப்பரிமாண, உடன்நிகழ், இயங்குநிலைக் கட்டிட வரைபட மாதிரிகளை உருவாக்கும் மென்பொருள்கள் பயன்படுகின்றன. இத்தகைய மாதிரிகளில், குறிப்பிட்ட கட்டிடம் தொடர்பான வடிவ அமைப்பு, இடத்தொடர்புகள், புவியியல் தகவல்கள், கட்டிடக் கூறுகளின் கணிய அளவுகள், இயல்புகள் என்பன பொதித்து வைக்கப்படுகின்றன.

தோற்றம்

[தொகு]

ஜார்ஜியா தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த சார்லசு ஈசுட்மன் என்பார் 1970 களின் பிற்பகுதியில் இருந்து தான் எழுதிய நூலிலும், கட்டுரைகளிலும் "கட்டிட உற்பத்தி மாதிரி" என்னும் தொடரைப் பரவலாகப் பயன்படுத்தி வந்தார். பொறியியலில், "தரவு மாதிரி" அல்லது "தகவல் மாதிரி" என்னும் பொருள் தரக்கூடிய இச் சொற்றொடர் "கட்டிடத் தகவல் மாதிரி" என்பதற்கு ஒத்த பொருள் கொண்டது எனக் கருதும் ஒரு பகுதியினர் ஈசுட்மனே இக் கருத்துருவை முதலில் பயன்படுத்தியவர் என்கின்றனர். எனினும், தகவல் பரிமாற்றம், அதன் பல்லிடப் பயன்பாடு என்பவற்றின் வசதிக்காக கட்டிட வழிமுறைகளை "எண்ணிய" (digital) வடிவில் கொடுப்பதற்கான பெயராக, கட்டிடத் தகவல் மாதிரியாக்கம் என்பதைப் பரவலாக உலகுக்கு அறியப்படுத்தியவர் ஜெரி லைசேரின் என்பவரே எனப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப் படுகின்றது. இவரும், வேறு பலரும் கட்டிடத் தகவல் மாதிரியாக்கம் கிராபிசாஃப்ட் நிறுவனத்தின் "ஆர்க்கிகாட்" என்னும் மென்பொருள் பயன்படுத்திய மெய்நிகர் கட்டிடக் கருத்துருவின் கீழேயே 1987 ஆம் ஆண்டில் முதன் முதலில் நடைமுறைப் படுத்தப்பட்டது என்கின்றனர்.