உள்ளடக்கத்துக்குச் செல்

கடிகாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயர் கதவு கடிகாரம். கிரீன்விச்

கடிகாரம் ஒலிப்பு) (வேளைப்பொறி, பொழுதுப்பொறி, மணிக்கூடு) என்பது நேரத்தை காட்டுவதற்கும், அளவிடவும், அதனை ஒருங்கிணைக்கவும் பயன்படும் ஒரு கருவியாகும். கடிகாரத்தை மணிக்கூடு என்றும் குறிப்பர். கையில் கட்டப்படும் கடிகாரத்தினை கைக்கடிகாரம் என்பர். பொதுவாக கடிகாரம் எளிதில் தூக்கி செல்லக்கூடியதாக வடிவமைக்கப்படுவதில்லை.

நாகரிக முதிர்ச்சியின் ஒரு கட்டமாக நேரத்தை அளவிடும் முறை மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் பழைய மனித கண்டுபிடுப்புகளில் ஒன்றான இது பொதுவாக இயற்கையான அளவீடான ஒரு நாளினை விட குறுகிய கால அளவை அளக்க பயன்படுத்தப்படுகின்றது. பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வரும் கடிகாரங்கள் இயற்பியல் செயல்முறைகளில் பல வளர்சியினை கண்டுள்ளது.

சூரிய கடிகாரமும் பிற கருவிகளும்

[தொகு]

சூரிய மணி காட்டி என்பது சூரியனின் ஒளியினையும் அதன் விளைவாக நிகழும் நிழல்களின் நகர்வையும் அடிப்படையாகக் கொண்டு நேரம் அளவிடப்பட்டும் கடிகாரத்தினைக்குறிக்கும். வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே சுமேரியர்கள் நேரத்தை அளவிட முயன்றதாகவும், இதில் முன்னோடிகளாக விளங்கியவர்கள் அவர்களே என்றும் கருதப்படுகிறது. சுமேரிய நாகரிகமே ஒரு ஆண்டை மாதங்களாகவும், மாதத்தை நாட்களாகவும், ஒரு நாளைப் பல கூறுகளாகவும் முதலில் பிரித்தது என்று கூறப்படுகிறது.

காலப்போக்கில் அரேபியர்கள் தமது சொந்த முறைகளைக் கையாண்டு நேரத்தை அளப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். மற்றும் சூரியன் நகர்வதைப் பின்பற்றி 24 பெரிய கம்பங்களை வட்டப்பாதையில் நிறுவி, ஒளியும் நிழலும் அவற்றின் மீது விழுவதன் அடிப்படையில் எகிப்தியர்கள் நேரத்தை அளவிட்டனர். தொடர்ந்து நேரத்தை அளவிடும் முயற்சி பல்வேறு நாகரகங்கள் வாயிலாகப் பல நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டது.

சூரியனின் ஒளி இரவில் கிடைக்காதென்பதால் ஒரே சீராக எரியும் திரியினைக்கொண்டு இரவில் காலத்தைக்கணக்கிட்டனர். மணலினை சிறு ஓட்டையில் வடித்தும் (hourglass) காலத்தை அளந்தனர்.

நீர் கடிகாரங்கள்

[தொகு]
அல்-ஜசாரியின் தானியங்கி கடிகாரம், 14ஆம் நூற்றாண்டு.

அதே வேளையில் கிரேக்க நாட்டில் தண்ணீரைப் பயன்படுத்தி நேரத்தை அளவிடும் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சாதனத்தில், தண்ணீர் ஒவ்வொரு துளியாக ஒரு கல் பாத்திரத்தில் விழுமாறு அமைக்கப்பட்டது. திரட்டபட்ட தண்ணிரின் அளவை அடிப்படையாகக் கொண்டு நேரம் அளவிடப்பட்டது. இத்தகைய முறை கி.மு. 320-ல் வழக்கத்தில் இருந்து வந்தது. கிரேக்கர்களும் ரோமானியர்களும் கி.மு.300-400 காலப் பகுதியில் இத்தண்ணீர்க் கடிகாரத்தில் மாற்றங்களைப் புகுத்தி அதனை மேம்படுத்தினர்.

எங்கே, எப்போது இவை முதன் முதலில் பயன்படுத்தப்பட்டன என்பது குறித்த தகவல் இல்லை. கிண்ணத்தில் வடிவத்தில் நீர் வெளிப்படுவது போன்ற எளிய வடிவம் உள்ள கடிகாரங்கள் பாபேல் மற்றும் எகிப்து நாட்டுகளில் கி.மு. 16ஆம் நூற்றாண்டளவில் பயன்படுத்தப்பட்டன. இந்தியா மற்றும் சீனாவிலும் இத்தகைய கடிகாரங்கள் புழக்கத்தில் இருந்தன. கிரேக்கம் வானியலாளர் அன்டுரோனிகஸ் கி.மு. 1இல் ஏதன்சு நகரில் கடிகாரக்கூண்டு ஒன்றை (Tower of the Winds) கட்டியதாக குறிப்புகள் உள்ளன.[1]

கிரேக்கர்களும் உரோமையர்களுமே முதன் முதலில் தண்ணீர் கடிகாரங்களை நவீனப்படுத்தினர் என்பர். பற்சில்லுகளைக்[2] கொண்டு தானியக்கமாக அதிக துல்லியமாக நேரத்தைக்கணக்கிடுமாறு தண்ணீர் கடிகாரங்களை வடிவமைத்தனர். இக்கண்டுபிடுப்புகள் பைசாந்தியப்பேரரசுகளாலும், இசுலாமியர்களாலும் ஐரோப்பாவுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. தனிப்பட்ட முறையில் சீனர்களும் நவீன நீர் கடிகாரங்களை (水鐘) கி.பி 725இல் உருவாக்கினர். அங்கிருந்து இவை கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு பரவின.

சில நீர் கடிகார வடிவமைப்பு தனிப்பட்ட முறையிலும் மற்றும் சில வணிகம் பரவல் மூலம் அறிவு பரிமாற்றத்தால் விளைந்தன. தொழிற்புரட்சியின் போது தேவைப்பட்ட துல்லிய அளவீடுகள் முக்காலத்தில் தேவைப்படவில்லையாதலால் முக்காலத்து கடிகாரங்கள் சோதிடக்கணிப்புக்கே பெரிதும் பயன்பட்டன. சூரிய மணி காட்டியோடு சேர்ந்தே இவை பழக்கத்தில் இருந்தன. இவ்வகை நீர் கடிகாரங்கள் ஒரு நவீன கடிகாரத்தின் துல்லியம் நிலையினை அடையவில்லை என்ற போதும், ஐரோப்பாவில் ஊசல் கடிகாரம் (pendulum clock) 17 ஆம் நூற்றாண்டில் பயன்பாட்டுக்கு வரும் வரையிலும் இதுவே மிகவும் துல்லியமான மற்றும் பொதுவாக பயன்படுத்தப்படும் காலங்காட்டும் கருவியாக இருந்தது.

இஸ்லாமிய நாகரிகத்துக்கே விரிவான பொறியியல் கடிகாரங்களின் துல்லியத்தினை முன்னெடுத்து சென்ற பெருமை சேரும். 797இல் பக்தாத் அப்பாசியக் கலீபா ஹருன் அல்-ரசீது ஆசிய யானை ஒன்றினையும் மிகவும் நுட்பம் வாய்ந்த ஒரு நீர் கடிகாரத்தினையும்[3] சார்லமேன் மன்னருக்கு பரிசாக அளித்தார்.

நவீன கடிகாரம்

[தொகு]

கி.பி.1510-ம் ஆண்டுப் பகுதியில் ஜெர்மன் நாட்டைச் சார்ந்த பூட்டு செய்யும் தொழிலாளியான பீட்டர் ஹென்கின் என்பவர், நேரத்தைக் காட்டும் நின்ற நிலையிலான கடிகாரம் ஒன்றை உருவாக்கினார். பின்னர் 1656-ம் ஆண்டு வாக்கில் டச்சு நாட்டுத் தொழில்நுட்ப வல்லுநர் ஹியூஜன்ஸ் என்பவர் ஊசல் (pendulum) அசைவில் இயங்கும் கடிகாரம் ஒன்றை உருவாக்கி நேரத்தை அளவிடும் முயற்சியில் வெற்றி பெற்றார். இவர் ஒரு நாளை 24 மணிகளாகவும், ஒரு மணியை 60 நிமிடங்களாகவும், ஒரு நிமிடத்தை 60 நொடிகளாகவும் பாகுபாடு செய்தார். புதிய முறைகளைப் பயன்படுத்திக் கடிகாரத்தையும் மேம்படுத்தினார். இப்போதுள்ள கடிகாரங்களெல்லாம் இதன் முன்னேறிய வடிவங்களேயாகும். துவக்கத்தில் இந்தக் கடிகாரத்தின் பகுதிகளெல்லாம் மரத்தில் செய்யப்பட்டவைகளாகவே இருந்தன. பின்னாளில் இப்பகுதிகள் உலோகத்தாலும், கண்ணாடியாலும் செய்யப்பட்டன.

கி.பி.1927-ல் கனடா நாட்டுத் தொலைத்தொடர்புத் துறையைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் வாரன் மோரிசன் என்பவரால் கண்ணாடியால் ஆன கடிகாரம் ஒன்று உருவாக்கப்பட்டது. இது மிகக் குறைந்த காலத்திலேயே பெரிய வரவேற்பைப் பெற்றது.பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கம்வரை, ஊசல்களைப் பயன்படுத்தி இயங்கும் கடிகாரங்களே பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்தன. சமச்சீராக அசையும் ஊசல், கடிகாரத்தின் இரு முட்களை இயக்கிச் சரியான நேரத்தைக் காட்டுவதற்குப் பயன்பட்டது. இவ்வகைக் கடிகாரங்களை இன்றும் ஆங்காங்கே காணலாம். ஆனால் மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், ஊசல் கடிகாரங்கள் மாற்றமடைந்தன.

அலெக்சாண்டர் பெயின் என்பவர் 1840-ம் ஆண்டில் பாட்டரி (battery) என்னும் மின்கலத்தைப் பயன்படுத்தி இயங்கும் கடிகாரத்தைக் கண்டுபிடித்தார். பின்னர் பல அறிவியல் அறிஞர்கள் இவ்வகைக் கடிகாரத்தை மேம்படுத்தினர். பெரிய மின்கலங்களுக்குப் பதிலாகச் சின்னஞ்சிறு மின்கலங்கள் பயன்படுத்தப்பட்டன.இந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் எனப்படும் எச்.எம்.டி. தொழிலகம் இந்தியாவின் பழைய கடிகாரத் தொழிற்சாலைகளுள் ஒன்றாகும். இத்தொழிலகம் கடிகாரங்களைத் தயாரிப்பதற்கு முன்பு பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்ட கடிகாரங்களே நம் நாட்டில் பயன்படுத்தப் பட்டன. தற்போது இந்தியாவில் டைட்டான், டைமெக்ஸ், சிட்டிசன் போன்ற பல கம்பெனிகள் கடிகாரத் தயாரிப்பில் ஈடுபட்டு உலகத் தரத்திற்குக் கடிகாரங்களைத் தயாரித்து வருகின்றன.

வகைகள்

[தொகு]

நேரத் திரை முறைகள்

[தொகு]
10:09 என்ற நேரத்தைக் காட்டும் ஒத்திசைக் கடிகாரம்

ஒத்திசை (Analog)

[தொகு]

ஒத்திசை கடிகாரங்கள் வழக்கமாக ஒரு வட்டமான கடிகார முகத்தை கொண்டுள்ளன, இதில் குறிக்கப்பட்டுள்ள எண்களைப் பார்த்தவாறு சுழலும் சுட்டிகளுக்கு கைகள் என்று பெயர்.உலகம் முழுவதும் வழக்கமான கடிகார வட்ட முகத்தில் உள்ள குறுங்கை 1 முதல் 12 மணி வரையிலான மணியைக் குறிக்க ஒரு நாளில் இரு சுற்றுகளை மேற்கொள்ளும். நீளமான நிமிட முள்ளானது நிகழும் மணியளவின் 60 பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட நிமிடங்களை அதே கடிகார வட்ட முகத்தில் காட்டும்.மேலும் அதே போன்றதொரு நொடி முள்ளும் அப்போதைய நிகழும் நிமிடத்தின் நொடியளவை காண்பித்துச் சுழலும்.இன்று பரவலாக பயன்படுத்தப்படும் கடிகார முகம் 24 மணிநேர ஒத்திசைக் கடிகாரங்கள் மட்டுமே.அதற்கான காரணம் 24 மணி நேர அளவை முறை பயன்பாட்டில் இருக்கும் இராணுவ அமைப்புகள் மற்றும் கால அட்டவணை பயன்படத்தப்படுவதாகும். நவீன கடிகாரங்கள் வழக்கத்திற்கு வருவதற்கு முன்னர் தொழிற்புரட்சி காலகட்டத்தில் ஆண்ட முழுவதும் பல்வேறு நேர முக வடிவமைப்பு கொண்ட கடிகாரங்களும் பயன்படுத்தப்பட்டன. நேரமானது 6,8.10,மற்றும் 24 மணிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.பிரெஞ்சுப் புரட்சியின் போது பிரெஞ்சு அரசாங்கம் தசம அளவிலான மெட்ரிக் அளவிட்டு முறைமையை அமல்படும்தும் பொருட்டு 10 மணி கொண்ட கடிகாரத்தை அறிமுகம் செய்ய முயன்றது.ஆனால் அது எடுபடவில்லை.18 ஆம் நூற்றாண்டில் ஓர் இத்தாலியர் மின் சேமிப்புக்காக 6 மணிகளாக குறைக்கப்பட்ட கடிகாரத்தை மேம்படுத்தினார்.(24 மணிநேரக் கடிகாரம் அதிக மின் சக்தியை நுகர்கின்றன)

இங்கிலாந்தின் கிழக்கு கடற்கரை நகரான சபொல்க்கின் மூட் அரங்கில் செங்குத்தாக வைக்கப்பட்டிருக்கும் சூரிய மணிக்காட்டி

ஒத்திசை கடிகாரத்துக்கு மற்றொரு உதாரணம் சூரிய மணி காட்டி அல்லது சூரிய கடிகாரம் ஆகும்.சூரிய மணி காட்டி என்பது சூரியனின் நிலையை பொறுத்து நாளின் நேரத்தை கணக்கிட உதவும் கருவி ஆகும். பொதுவாக கிடைமட்ட சூரிய மணி காட்டி வடிமைப்பில் சூரியனின் நிழல் ஆனது, அதில் குறிக்கப்பட்டுள்ள நேரத்தை குறிக்கும் கோடுகளின் மீது விழும். நேரம் குறிப்பிடும் அமைப்பான க்னோம் (gnomon)ஆனது பொதுவாக மெல்லிய கம்பியாகவோ அல்லது கூர்மையான அல்லது நேரான விளிம்பைக் கொண்ட அமைப்பாக இருக்கும். சூரியன் நகரும்போது இந்த அமைப்பின் முனையின் நிழலானது வேறுபட்ட நேரத்தை குறிக்கும் கோடுகளின் மீது விழும். சரியான நேரத்தைக் காட்ட அனைத்து சூரிய மணி காட்டிகளும் பூமியின் சுழல் அச்சுடன் ஒத்துப்போகுமாறு அமைக்கப்பட வேண்டும்.

சூரிய மணி காட்டியில் பல்வேறு வகைகள் உள்ளன. சில சூரிய மணி காட்டிகள் ஒரு ஒளிக் கோட்டை நேரத்தை காட்ட பயன்படுத்துகின்றன. மற்றைவைகள் நிழலின் முனைகளை பயன்படுத்துகின்றன

இலக்கமுறை (Digital)

[தொகு]

இலக்க முறை அல்லது எண்ம முறை கடிகாரங்கள் நேரத்தை எண்களாகக் காட்டுகின்றன.பொதுவாக இரண்டு எண்ம வடிவங்கள் இவ்வகைக் கடிகாரங்களில் பயன்படுத்தப்படுகிறது.

  • 00-23 மணிநேரங்கள் கொண்ட 24 மணிநேர குறியீடு
  • முற்பகல்/பிற்பகல் (AM/PM) குறிக்கப்பட்ட 12 மணி நேரக்குறியீடுகள்

முற்பகல் 1 மணியிலிருந்து முற்பகல் 11 மணியைத் தொடர்ந்து வரும் முற்பகல் 12 மணி,பிற்பகல் 1 மணியிலிருந்து பிற்பகல் 11 மணியைத் தொடர்ந்து வரும் பிற்பகல் 12 மணி (உள்நாட்டு சூழல்களில் பயன்படுத்தப்படும் குறிமுறை)

பெரும்பாலான இலக்கமுறைக் கடிகாரங்கள் நீர்மப்படிகக் காட்சி (LCD), ஒளிஉமிழ் இருமுனையம் (LED),வெற்றிட ஒளிர் திரைக்காட்சி (VFD) போன்ற திரைகளைக் கொண்டு மின்னணு வழிமுறைகளில் செயல்படுகின்றன.மீட்டமைக்கப்பட்ட பிறகு, ஒரு காப்பு மின்கலம் (Backup Battery) அல்லது மின்தேக்கி (Capacitor) இல்லாத சமயத்தில் மின்கலம் மாற்றம் அல்லது மின்துண்டிப்பு நிகழ்ந்தால் இந்த கடிகாரங்கள் 12:00 மணியைக் காட்டி நேரம் அமைக்க வேண்டி 12:00 என்ற இலக்கத்தைக் காட்டி ஒளிரும்.சில அண்மைய புதிய கடிகாரங்கள் வானொலி அல்லது இணைய நேர வழங்கிகளை (Servers) அடிப்படையாகக் கொண்டு தங்களை (நேரத்தை) மீட்டமைக்கின்றன. 1960 களில் இலக்க முறை கடிகாரங்களின் வருகையிலிருந்து, ஒத்திசைவு கடிகாரங்களின் பயன்பாடு கணிசமாக குறைந்துவிட்டது

செவிப்புலன் (Auditory)

[தொகு]

தூரம், தொலையொலியம் அல்லது பார்வைக் குறைபாடு போன்றவற்றுக்காக பேசுதல் அல்லது ஒலியாக நேரம் ஒலிக்கப்படுகிறது. ஒலியானது இயல்பாக பேசுதல் போன்றோ (உதாரணம்:தற்போதைய நேரம் பன்னிரெண்டு மணி முப்பது நிமிடம் என பேசுதல்) அல்லது செவிப்புல குறிகளாகவோ (இலண்டன் பிக்-பென் கடிகாரத்தில் ஒலிப்பது போன்று எத்தனை மணியோ அத்தனை எண்ணிக்கையில் தொடர்ச்சியான மணி ஒலிக்கச்செய்தல்) இருக்கும். பெரும்பாலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பேசும் கடிகார சேவையினை வழங்கி வருகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tower of the Winds - Athens
  2. "ஆரம்ப கடிகாரங்கள்-தண்ணீர் கடிகாரங்கள்" (in ஆங்கிலம்). web.archive.org. 15 மார்ச் 2008. Archived from the original on 2008-03-15. பார்க்கப்பட்ட நாள் சனவரி 5, 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)CS1 maint: unfit URL (link) CS1 maint: unrecognized language (link)
  3. James, Peter (1995). Ancient Inventions. New York, NY: Ballantine Books. p. 126. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-345-40102-6.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடிகாரம்&oldid=3586458" இலிருந்து மீள்விக்கப்பட்டது