ஒளிப்பதிவு
ஒளிப்பதிவு (Cinematography) அசையும் படங்களின் படப்பிடிப்புத் தொடர்பான ஒரு கலையும், அறிவியலும் ஆகும்.[1] இது படப்பிடிப்பு, படச்சுருள் உருத்துலக்கல் என்பவற்றை உள்ளடக்கிய நுட்பத்தைக் குறிக்கும்.[2] திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்பவர் ஒளிப்பதிவாளர் எனப்படுகின்றார். ஒளிப்பதிவாளர் திரைப்படங்களின் காட்சி தொடர்பான விடயங்களில் இயக்குனருடன் சேர்ந்து முக்கியமான பங்கு வகிப்பவராக உள்ளார்.[3]
வரலாறு
[தொகு]ஒளிப்பதிவு, திரைப்படத் தாயாரிப்போடு தொடர்புடைய ஒரு கலை வடிவம். ஒளியுணர் பொருட்களைப் பயன்படுத்தி விம்பங்களைப் படமாகப் பிடிக்கும் முறை 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே கண்டுபிடிக்கப்பட்டு இருந்தாலும், அசையும் படங்களைப் பிடிப்பதற்குப் புதிய வடிவத்திலான படப்பிடிப்பு முறையும், புதிய வகை அழகியலும் தேவையாக இருந்தது.
1873 ஆம் ஆண்டு யூன் 19 ஆம் தேதி, எட்வார்டு முய்பிரிட்சு (Eadweard Muybridge) என்பவர், 24 ஒளிப்படக் கருவிகளைப் பயன்படுத்தி "சாலி கார்டினர்" என்னும் பெயர்கொண்ட குதிரை ஓடுவதை வெற்றிகரமாகப் படம்பிடித்தார். ஒளிப்படக் கருவிகள் குதிரை ஓடும் பாதைக்கு இணையாக வரிசையாக வைக்கப்பட்டு இருந்தன. அடுத்தடுத்த ஒளிப்படக்கருவிகளுக்கு இடையிலான தூரம் 21 அங்குலமாகவும், இந்த வரிசையின் மொத்த நீளம் 20 அடியாகவும் இருந்தது.
ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர், 1882 ஆம் ஆண்டில், பிரெஞ்சு அறிவியலாளரான எட்டியென்-யூல்சு மரே (Étienne-Jules Marey) என்பவர் ஒரு செக்கனுக்கு 12 தொடர் படங்களைப் பிடிக்கக்கூடிய ஒளிப்படக் கருவி ஒன்றைக் கண்டுபிடித்தார். இரண்டாவது சோதனை அசைபடம் "ரவுன்டே பூங்காக் காட்சி" (Roundhay Garden Scene) என்பது இதை லூயிசு லே பிரின்சு (Louis Le Prince) என்பவர் உருவாக்கினார். இங்கிலாந்தின் லீசு என்னும் இடத்தில் உள்ள ரவுன்டே என்னும் இடத்தில் 1888 அக்டோபர் 14 ஆம் தேதி பிடிக்கப்பட்ட இப்படமே தற்போது தப்பியிருக்கும் மிகப் பழைய அசைபடம்.
குறிப்புகள்
[தொகு]- ↑ Merriam-Webster Dictionary
- ↑ http://www.thefreedictionary.com/cinematography
- ↑ Giannetti, Louis (2008). Understanding Movies. Toronto: Pearson Prentice Hall. p. 66.