உள்ளடக்கத்துக்குச் செல்

உருகுநிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திண்மமொன்றின் உருகுநிலை (Melting Point) என்பது அப்பொருள் திண்ம நிலையிலிருந்து நீர்ம (திரவ) நிலைக்கு மாறும் போதுள்ள வெப்பநிலையைக் குறிக்கும். உருகுநிலையில் திண்ம, நீர்ம நிலைகள் சமநிலையில் காணப்படும். ஒரு பொருளின் உருகுநிலையானது அங்கிருக்கும் அழுத்தத்தில் (pressure) தங்கியிருக்கும். எனவே உருகுநிலையானது ஒரு குறிப்பிட்ட அழுத்தத்தில் வரையறுக்கப்படும். வெப்பம் ஏற்றப்படும் போது பொருளின் வெப்பநிலை உயர்ந்து கொண்டு செல்லும், எனினும் பொருள் உருகத் தொடங்கியதும் வெப்பநிலை மாற்றம் எதுவும் இல்லாது வெப்பம் உறிஞ்சப்படும். இது உருகல் மறைவெப்பம் எனப்படும். சில பொருட்கள் நீர்மநிலைக்கு (திரவநிலைக்கு) வராமலே வளிம (வாயு) நிலையை அடைவதுண்டு. இது பதங்கமாதல் என அழைக்கப்படுகின்றது.

எதிர்மாறாக, நீர்மநிலையில் இருந்து திண்மநிலைக்கு மாறும்போதுள்ள வெப்பநிலையைக் குறிக்கும்போது இது உறைநிலை (Freezing Point) எனப்படும். பல பொருட்களுக்கு உருகுநிலையும், உறைநிலையும் ஒன்றாகவே இருக்கும். எடுத்துக்காட்டாக தனிமங்களில் ஒன்றான பாதரசத்தின் உருகுநிலை, உறைநிலை இரண்டுமே 234.32 கெல்வின் (−38.83 °C or −37.89 °F). ஆனாலும் சில பதார்த்தங்களுக்கு திண்ம-நீர்ம நிலைமாற்ற வெப்பநிலைகள் வேறுபடும். எடுத்துக்காட்டாக அகார் 85 °C (185 °F) யில் உருகும் ஆயினும், திண்மமாகும் வெப்பநிலை 31 °C - 40 °C (89.6 °F - 104 °F) ஆக இருக்கும்.[1][2][3]

சில பொருட்கள் மீக்குளிர்வுக்கு உட்படுவதனால், உறைநிலையானது ஒரு தனிச் சிறப்புள்ள இயல்பாகக் கருதப்படுவதில்லை. எடுத்துக்காட்டாக பனிக்கட்டியின் உருகுநிலையானது 1 வளிமண்டல அழுத்தத்தில் 0 °C (32 °F, 273.15 K) ஆகும். நீரின் உறைநிலையும் அதுவேயாகும். ஆனாலும், உறைநிலைக்கு போகாமலே நீரானது சிலசமயம் மீக்குளிர்வுக்கு உட்பட்டு −42 °C (−43.6 °F, 231 K) ஐ அடையும்.

கொதிநிலையைப் போல உருகுநிலை அமுக்க மாற்றத்தால் குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கப்படுவதில்லை. வளியமுக்க நிலையில் அறியப்பட்ட பொருட்களுள் மிகக்கூடிய உருகுநிலையைக் கொண்டது கரிமத்தின் ஒரு வடிவமான கிராபைட் ஆகும். இதன் உருகுநிலை 3948 கெல்வின்கள் ஆகும்.

Kofler bench

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ramsay, J. A. (1 May 1949). "A New Method of Freezing-Point Determination for Small Quantities". Journal of Experimental Biology 26 (1): 57–64. doi:10.1242/jeb.26.1.57. பப்மெட்:15406812. http://jeb.biologists.org/cgi/pmidlookup?view=long&pmid=15406812. 
  2. Haynes, p. 4.122.
  3. The melting point of purified water has been measured as 0.002519 ± 0.000002 °C, see Feistel, R.; Wagner, W. (2006). "A New Equation of State for H2O Ice Ih". Journal of Physical and Chemical Reference Data 35 (2): 1021–1047. doi:10.1063/1.2183324. Bibcode: 2006JPCRD..35.1021F. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருகுநிலை&oldid=3769130" இலிருந்து மீள்விக்கப்பட்டது