உள்ளடக்கத்துக்குச் செல்

உக்ரைனில் உருசிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உருசிய மொழி (உருசியம்) உக்ரைன் நாட்டின் உள்ளூர் மொழிகளில் ஒன்று. தொன்பசு, கிரிமியா ஆகிய பகுதிகளில் அதிகம் பேசப்படும் மொழியாகவும், உக்ரைனின் கிழக்கு, தெற்குப் பகுதிகளில் ஆதிக்க மொழியாகவும் உள்ளது. உக்ரைன் நாட்டின் ஒரே ஆட்சி மொழியாக உக்ரேனிய மொழி அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உருசிய மொழிக்கு உள்ளூர் ஆட்சிமொழி என்ற நிலை புதிய சட்டமொன்றின் மூலம் வழங்கப்பட்டது. உக்ரைனிய மொழிப் பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் உருசிய மொழி முக்கியப் பாடங்களில் ஒன்றாக கற்பிக்கப்படுகிறது. பெரும்பான்மையான ஊடகங்கள் உருசிய மொழியிலேயே உள்ளன. எண்ணிக்கை அளவில் குறைவானவர்கள் பேசினாலும், உருசிய மொழி ஆதிக்க மொழியாகவும் முக்கிய மொழியாகவும் திகழ்கிறது.[1][2][3]

உருசிய மொழியும், உக்ரைனிய மொழியும் சிரில்லிக் எழுத்துக்களால் எழுதப்படுகின்றன. இவ்விரு மொழிகளும் ஒரே மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதால், பல சொற்களும், இலக்கணமும் இருமொழிகளுக்கும் பொதுவாக இருக்கின்றன. இதனால் இவ்விரு மொழி பேசுபவர்களும் ஒருவர் மொழியை மற்றொருவர் ஓரளவேனும் புரிந்துகொள்வர்.


உக்ரைனில் உருசிய மொழியின் வரலாறு

[தொகு]

கிழக்கு சிலேவிய மொழிகள் ரசு என்னும் பெரும்பகுதியில் பேசப்பட்டன. இப்பகுதி பிரிக்கப்பட்ட போது வெவ்வேறு பகுதிகளில் பேசப்பட்ட மொழி வழக்குகள் தனி மொழிகளாயின.

மசுக்கோ (மாஸ்கோ) பகுதியினர் பேசிய மொழி தற்கால உருசிய மொழியாக உருவெடுத்தது, லிதுவேனிய பகுதியினர் பேசிய மொழி பெலாருசிய மொழியாகவும், தெற்கு போலந்துப் பகுதியில் பேசப்பட்ட மொழி உக்ரைனிய மொழியாகவும் ஆயின. உக்ரைன் என்ற பெயரே தற்காலத்தில் வழங்கப்படுவதுதான். முற்காலத்தில் உக்ரைன், பெலாருசியப் பகுதிகள் “சிறிய”, “வெள்ளை” ருசியப் பகுதிகள் எனவும், ருசியா நாடு “பெரிய ருசியா” எனவும் அழைக்கப்பட்டன. உருசிய, உக்ரைனிய மொழி பேசிய மக்கள் கலந்து வாழ்ந்திருந்தனர். நிலத்தில் எல்லைகள் மொழிவாரியாகப் பிரிக்கப்படவில்லை. பின்னர், தாங்கள் வாழும் பகுதியில் இருந்த அரசுகளின் ஆணைக்கேற்ப தங்கள் மொழியின் நிலைபெற்ற வடிவத்தைப் பின்பற்றத் தொடங்கினர்.

உருசிய மொழி உக்ரைனில் பேசப்படுவதற்கு இரு காரணங்கள் உள்ளன. ஒன்று, உருசிய மொழி பேசியவர்கள் உக்ரைன் நாட்டிற்கு குடிபெயர்ந்தது. இன்னொன்று, உக்ரைன் நாட்டு மக்கள் உருசிய மொழியைப் பேசத் தொடங்கியது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல உருசியர்கள் உக்ரைனில் குடியேறினர். உக்ரைனில் உள்ள அனைத்து பெரிய நகரங்களிலும் உருசிய மொழி பேசியவர்களே பெரும்பான்மையினராக இருந்தனர். எடுத்துக்காட்டாக,

நகரம் விழுக்காடு(%)
கீவ் 54.2
கார்கீவ் 63.1
ஒடெசா 49.09
மிக்கோலைவ் 66.33
மரியுபோல் 63.22
லுகன்ஸ்க் 68.16
கெர்சன் 47.21
மெலிடோபோல் 42.8
தினிபுரொபெற்றோவ்ஸ்க் 41.78
கிரொவொஹர்ட் 34.64
சிம்ஃபெரோபோல் 45.64
யால்டா 66.17
கெர்ச் 57.8
செவஸ்டோபோல் 63.46

இப்பகுதிகளில் குடியேறிய உக்ரைன் மக்கள் உருசிய மொழி ஆட்சி மொழியாக செயல்பட்டதால், அம்மொழியை ஏற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

உக்ரைனிய மொழிக்கு கீழ்நிலை

[தொகு]

உருசிய அரசு, உருசிய மொழியின் பரவலுக்கும், வளர்ச்சிக்கும் உதவியது. உக்ரைனிய மொழி இலக்கியங்கள் மசுக்கோவிலும், புனித பீட்டர்ஸ்பர்க்கிலும் அச்சடிக்கப்பட்டன. உக்ரைனிய மொழி எழுச்சியைக் கண்ட உருசிய அமைச்சர், உக்ரைனிய மொழியில் எழுதப்பட்ட சமய நூல்களுக்குத் தடை விதித்ததார். பின்னர் வந்த அமைச்சர்களும் உக்ரைனிய மொழி நாடகங்கள், உரைகளுக்குத் தடை விதித்தனர். உருசியாவில் ஆட்சி மொழி இல்லையென்றாலும், உருசிய மொழியே நாடெங்கிலும் பேசப்பட்டது. உக்ரைனிய மொழிக்கு அரசு வளர்ச்சி நிதி வழங்கினாலும், மக்களிடையே தாழ்வான நிலையைப் பெற்றிருந்தது. எனவே, மக்கள் உக்ரைனிய மொழியில் பேசுவது குறைத்துக் கொண்டனர்.

1960களில் அனைத்து நூல்களும் மசுக்கோவில், உருசிய மொழியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற அரசாணை வெளியானது. இதனால் அனைத்து அறிவியல் ஆக்கங்களும் உருசிய மொழியிலேயே எழுதப்பெற்றன. பள்ளிகளிலும் உருசிய மொழி கட்டாயப் பாடமாகக் கற்பிக்கப்பட்டது. இதனால் உருசிய மொழி பெரிதும் வளர்ச்சியுற்றது.

மக்கட்தொகைக் கணக்கெடுப்பு

[தொகு]

2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, 14,273,000 மக்கள் (30 விழுக்காட்டினர்) உருசிய மொழியைத் தாய்மொழியாகப் பேசுகின்றனர். இவர்களில் 56 விழுக்காட்டினர் உருசிய இனத்தவராகவும், பிறர் உருசிய மொழி பேசும் வேற்று இனத்தவர்களாகவும் உள்ளனர். உருசிய மொழியைப் பேசுகின்ற வேற்று இனத்தவர்களின் மக்கட்தொகை:

மக்கள் எண்ணிக்கை
உக்ரைனியர்கள் 5,545,000
பெலாருசியர்கள் 172,000
யூதர்கள் 86,000
கிரேக்கர்கள் 81,000
பல்கேரியர்கள் 46,000
மால்டோவியர்கள் 43,000
டார்டர்கள் 43,000
ஆர்மீனியர்கள் 43,000
போலியர்கள் 22,000
செருமானியர்கள் 21,000
கிரிமிய தார்தார்கள் 15,000

உக்ரைனில் ஆட்சி மொழியாக இல்லாத அதிகம் பேசப்படும் மொழியாக உருசிய மொழி உள்ளது. உருசியர்கள் உருசியாவிற்கு அடுத்தபடியாக உக்ரைனில்தான் அதிகம் பேர் வாழ்கிறார்கள்.

வாக்கெடுப்புகள்

[தொகு]

உக்ரைனில் உருசிய மொழி தொடர்பான வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டன.

தாய்மொழி

[தொகு]

ஒரு ஆய்வில், உருசிய மொழியைத் தாய்மொழியாகப் பேசுகிறவர்களின் எண்ணிக்கையைவிட அதிகம் பேர் வீட்டில் உருசிய மொழி பேசுகின்றனர் எனக் கண்டறிந்துள்ளனர்.

உக்ரைனில் ஏறத்தாழ பாதிபேர் உருசிய மொழி பேசியதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்தன. தெற்கு. கிழக்கு மாநிலங்களில் உருசிய மொழி ஆதிக்க மொழியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. உக்ரைனின் தலைநகரான கீவ் பகுதியிலும் பொது வழக்கில் பேசப்படும் மொழி உருசிய மொழியே.

மாநிலம் விழுக்காடு
கிரிமியா 97
தினிபுரொபெற்றோவ்ஸ்க் 72
டொனெட்ஸ்க் 93
சபோரிழியா 81
லுகான்ஸ்க் 89
மிகோலைவ் 66
ஒடெசா 85
கார்கிவ் 74

வீட்டில் பேசும் மொழி

[தொகு]

தாய்மொழியாக இன்றி, வீட்டில் பேசப்படும் மொழிகளைக் கணக்கிட்டபோது கிடைத்த முடிவுகள் கீழே தரப்பட்டுள்ளன.

வீட்டில் பேசப்படும் மொழி 1994 1995 1996 1997 1998 1999 2000 2001 2002 2003 2004 2005
உருசிய மொழி 32.4 32.8 33.1 34.5 33.4 33.6 36.0 36.7 33.2 36.0 34.3 36.4
உருசியம், உக்ரைனியம் 29.4 34.5 29.6 26.8 28.4 29.0 24.8 25.8 28.0 25.2 26.3 21.6

இரண்டாம் ஆட்சி மொழியா

[தொகு]

உக்ரைனில் மூன்றில் ஒருவர் உருசிய மொழி பேசுபவராக உள்ளார். எனவே, உருசிய மொழியை ஆட்சி மொழியாக ஏற்கலாமா வேண்டாமா என்பது குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 39 விழுக்காட்டினர் உருசிய மொழியும் ஆட்சி மொழியாக வேண்டும் என்றும் 38 விழுக்காட்டினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

மற்றொரு ஆய்வின் முடிவுகள் கீழே தரப்பட்டுள்ளன. கேட்கப்பட்ட கேள்வி, “நீங்கள் உருசிய மொழியை ஆட்சி மொழியாக ஏற்பீர்களா?”

பதில் 1995 1996 1997 1998 1999 2000 2001 2002 2003 2004 2005
ஆம் 52.0 50.9 43.9 47.6 46.7 44.0 47.4 48.6 47.3 47.5 48.6
குழப்பம் 15.3 16.1 20.6 15.3 18.1 19.3 16.2 20.0 20.4 20.0 16.8
இல்லை 32.6 32.9 35.5 37.0 35.1 36.2 36.0 31.1 31.9 32.2 34.4
பதில் இல்லை 0.1 0.0 0.1 0.1 0.1 0.5 0.4 0.3 0.3 0.3 0.1

இணையதளங்கள்

[தொகு]

உக்ரைனிய அரசு இணையதளங்கள் அனைத்தும் உக்ரைனிய மொழியில் இருக்கின்றன என்றாலும் உக்ரைன் நாட்டில் பெரும்பாலான இணையதளங்கள் உருசிய மொழியிலேயே இருக்கின்றன. உதாரணமாக, உருசிய விக்கிப்பீடியா, உக்ரைனிய விக்கிப்பீடியாவைக் காட்டிலும் ஐந்து மடங்கு பிரபலமானதாக இருக்கின்றது. கூகுள் தேடலில் "авто" (அவ்டோ/auto, "வண்டி") எனத் தட்டச்சிட்டால், முதலில் வரும் பத்து முடிவுகளில் ஒன்பது முடிவுகள் உருசிய மொழியிலேயே உள்ளன.

அரசியலில் உருசிய மொழி

[தொகு]

உக்ரைனில் உருசிய மொழி ஆட்சி மொழியல்ல, தேசிய சிறுபான்மையினர் மொழியாகும். உக்ரைனிய அரசியலமைப்புச் சட்டத்தில், “உருசிய மொழியும், பிற சிறுபான்மையினர் மொழிகளும் பயன்படுத்தப்படவும் பாதுகாக்கப்படவும் வேண்டும்” என்று இயற்றப்பட்டுள்ளது. இச்சட்டம், உக்ரைனிய மொழியை ஆட்சி மொழியாகக் கொண்டிருந்தாலும், பிற மொழிகளுக்கு பாதுகாப்பு வழங்குகிறது.

சோவியத் ஒன்றியத்தின் பிற நாடுகள் உருசிய மொழியை தொடர்பு மொழியாகக் கொண்டிருந்தாலும், உக்ரைன் உக்ரைனிய மொழியையே தொடர்பு மொழியாகக் கொண்டிருந்தது.

சிறுபான்மை மொழிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான சட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் செயற்படுத்தினாலும், உக்ரைன் ஐந்து ஆண்டுகள் கழித்தே இச்சட்டத்தை நிறைவேற்றியது. உருசிய மொழியை ஆட்சி மொழியாக்க சட்டங்கள் இயற்றப்படும் என்று கூறியே தேர்தல்களில் வெற்றி பெறுகிறார்கள் அரசியல்வாதிகள். 2006 ஆம் ஆண்டில் கார்கிவ் நகரம் உருசிய மொழியை ஆட்சி மொழியாக ஏற்றுக்கொண்டது. இதைத் தொடர்ந்து பல தெற்கு, கிழக்கு மாநிலங்கள் உருசிய மொழியை ஆட்சி மொழியாக ஏற்றுக்கொண்டன.

உருசிய மொழியில் கல்வி

[தொகு]

உக்ரைன் நாட்டுக் கல்விச் சட்டம், உக்ரைனில் வாழும் குடும்பத்தினர் தங்கள் தாய்மொழியில் கல்வி கற்கலாம் எனத் தெரிவிக்கிறது. தற்போதுவரை அனைத்துப் பள்ளிகளிலும் (உக்ரைனிய மொழிப் பள்ளிகள் உட்பட) உருசிய மொழி கட்டாய மொழியாகக் கற்பிக்கப்படுகிறது. அதே போல், உருசிய மொழிப் பள்ளிகளில் உக்ரைனிய மொழி கட்டாயமாக கற்பிக்கப்படும் மொழியாகும்.

உள்ளூர் ஆட்சிமொழி

[தொகு]

ஆகஸ்டு 2012 இல் இயற்றப்பட்ட சட்டத்தில், ஒரு பகுதியில் குறைந்தது 10 விழுக்காட்டினர் பேசும் மொழி அப்பகுதியின் ஆட்சி மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதன்படி தெற்கு, கிழக்கு மாநிலங்களின் பல பகுதிகளில் உருசிய மொழி உள்ளூர் ஆட்சி மொழியாக ஏற்கப்பட்டது.

நீதிமன்றங்களில் உருசிய மொழி

[தொகு]

சனவரி 1, 2010 ஆம் நாளிலிருந்து, நீதிமன்றங்களில் உருசிய மொழியில் வழக்காடலாம் என்று அரசாணை தெரிவித்துள்ளது. உக்ரைனிய மொழியிலோ, உருசிய மொழியிலோ பேசத் தெரியாதவர்கள் தங்கள் தாய்மொழியிலேயே பேசலாம் அல்லது மொழிபெயர்ப்பாளரின் உதவியை நாடலாம் என்று தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bilaniuk, Laada; Svitlana Melnyk (2008). "A Tense and Shifting Balance: Bilingualism and Education in Ukraine". In Aneta Pavlenko (ed.). Multilingualism in Post-Soviet Countries. Multilingual Matters. p. 85. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84769-087-6. Archived from the original on May 8, 2016. பார்க்கப்பட்ட நாள் November 25, 2015.
  2. "Ukrainians and their language. The Act on the State Language of Ukraine". OSW Centre for Eastern Studies (in ஆங்கிலம்). 2019-06-11. பார்க்கப்பட்ட நாள் 2022-04-21.
  3. Magocsi, Paul R. (2010). A History of Ukraine: The Land and Its Peoples. University of Toronto Press. p. 73. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4426-1021-7. பார்க்கப்பட்ட நாள் 14 February 2017.