இலண்டன்
இலண்டன்
London (ஆங்கிலம்) | |
---|---|
இலண்டன் மாநகர் இங்கிலாந்துக்குள் காட்டப்பட்டுள்ளது | |
ஆள்கூறுகள்: 51°30′26″N 0°7′39″W / 51.50722°N 0.12750°W | |
நாடு | ஐக்கிய இராச்சியம் |
அரசமைப்பு | இங்கிலாந்து |
அமைக்கப்பட்டது | பொ.ஊ. 50 |
அரசு | |
• ஆட்சியாளர் | இலண்டன் சட்டசபை |
• நகர தந்தை | கென் லிவிங்ஸ்டோன் |
பரப்பளவு | |
• தலைநகரம் | 1,577.3 km2 (609.0 sq mi) |
ஏற்றம் | 24 m (79 ft) |
மக்கள்தொகை (2006) | |
• தலைநகரம் | 75,12,400 |
• நகர்ப்புறம் | 82,78,251 |
• பெருநகர் | 12–14 மில்லியன் |
• பெருநகர் அடர்த்தி | 4,761/km2 (12,331/sq mi) |
• இனக்குழு | 69.6% வெள்ளை 3.4% கலப்பு 12.9% தெற்காசியர் 10.8% கருப்பு 3.3% மற்றவர் |
நேர வலயம் | ஒசநே±00:00 (ஒ.அ.நே.) |
• கோடை (பசேநே) | ஒசநே+1 (பிரித்தானிய கோடை நேரம்) |
இணையதளம் | www |
இலண்டன் (London), ஐக்கிய இராச்சியத்தினதும், இங்கிலாந்தினதும் தலைநகரமாகும். ஏழு மில்லியனுக்கு மேற்பட்ட குடித்தொகையைக் கொண்ட பெருநகர் இலண்டன், மாஸ்கோவுக்கு அடுத்ததாக ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய குடித்தொகை கொண்ட நகர்ப்புறம் ஆகும். உரோம மாகாணமான பிரித்தானியாவின் தலைநகரமான லண்டனியம் ஆக இருந்து, பிரித்தானியப் பேரரசின் மையமாகத் திகழ்ந்த இலண்டன், இன்று ஐக்கிய இராச்சியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) 17% ஐப் பங்களிக்கின்றது. இது உலகின் நான்காவது பெரியதாகும். பல நூற்றாண்டுகளாக, இலண்டன், உலகின் முக்கியமான வணிக மற்றும் அரசியல் மையமாகத் திகழ்கின்றது.
இலண்டன் ஒரு முக்கியமான உலக நகரமாக இருப்பதுடன், ஐரோப்பாவில் ஆகக்கூடுதலான நகரத்துக்குரிய மொத்த உள்ளுர் உற்பத்தியுடன் உலகின் மிகப் பெரிய நிதி மையமும் திகழ்கின்றது. மைய இலண்டன் ஐக்கிய இராச்சியத்தின் மிகப் பெரிய 100 நிறுவனங்களில் பெரும்பாலானவற்றின் தலைமையகங்களைக் கொண்டிருப்பதுடன், ஐரோப்பாவின் மிகப்பெரிய 500 நிறுவனங்களில் 100 நிறுவனங்களின் தலைமையகங்களின் தலைமையகங்களையும் கொண்டுள்ளது. அரசியல், நிதி, கல்வி, பொழுதுபோக்கு, ஊடகம், கலைகள், பண்பாடு போன்ற துறைகளில் இலண்டனின் செல்வாக்கு அதனை உலகில் முக்கியமான ஒரு நிலையில் வைத்துள்ளது. இந்நகரம், உள்நாட்டினரதும், வெளிநாட்டினரதும் சுற்றுலாப் பயணத்துக்குரிய இடமாகவும் விளங்குகின்றது. 1948 ஆம் ஆண்டின் கோடைகால ஒலிம்பிய விளையாட்டுக்கள் இலண்டனில் நிகழ்ந்தன. மீண்டு இது 2012 ஆம் ஆண்டில் இலண்டனில் நடைபெறவுள்ளது. இலண்டனில் நான்கு உலகப் பாரம்பரியக் களங்கள் அமைந்துள்ளன. இவை, இலண்டன் கோபுரம்; பழங்கால கிரீனிச் குடியிருப்புக்கள்; தாவரவியல் பூங்கா; வெசுட்மின்சுட்டர் அரண்மனை, வெசுட்மின்சுட்டர் மடாலயம், புனித மார்கிரட் தேவாலயம் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதி என்பனவாகும்.
இலண்டனில் பல வகையான மக்களுடன், பல பண்பாடுகளும், சமயங்களும் நிலவுகின்றன. இந்நகரத்தின் எல்லைக்குள் 300க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுவதாகச் சொல்லப்படுகின்றது. யூலை 2007 ஆம் ஆண்டில் பெரிய இலண்டனின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 7,556,900 மக்கள் வாழ்ந்தனர். இதலால் இது ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகக் கூடிய மக்கள்தொகை கொண்ட மாநகரப் பகுதியாக விளங்குகிறது. பெரிய இலண்டன் நகர்ப்புறப் பகுதி 8,278,251 என்னும் மக்கள் தொகையுடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இரண்டாவது பெரிய நகர்ப்புறப் பகுதியாக உள்ளது. அதே நேரம் இலண்டன் நகர்ப்பெருமப் பகுதி 12 மில்லியனுக்கும் 14 மில்லியனுக்கும் இடைப்பட்ட மக்கள் தொகையைக் கொண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இலண்டன் பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பே உலகின் மிகப்பெரியதும் பழமையானதுமான பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பு ஆகும்.
அமைவிடம்
[தொகு]"லண்டன்" என்னும் சொல் பல நூறு ஆண்டுகளாகவே வரலாற்றுப் புகழ் பெற்ற மிடில்செக்ஸ், இங்கிலாந்து கவுண்டியிலிருந்த சிறிய நகரமான இலண்டனை மையமாகக் கொண்டிருந்த இணைந்திருந்த தனிநகர்களை (conurbation) ஐக் குறிக்கப் பயன்பட்டு வந்தது. இன்று பொதுவாக இது பெரிய இலண்டன் (Greater London) என் அறியப்படுகின்ற நிர்வாகப் பிரதேசத்தையே குறித்தாலும், சிலவேளைகளில் இலண்டன் தபால் மாவட்டம், 020 என்னும் தொலைபேசிக் குறியீட்டு எண்ணால் குறிக்கப்படும் பகுதிகள், இலண்டனுக்கான முழு-வலயப் போக்குவரத்து அட்டைகள் பயன்படும் பகுதி, எம்25 மோட்டார்வாகனச் சாலைக்குள் அடங்கும் பகுதி போன்றவற்றையும் குறிக்கப் பயன்படுவதுண்டு.
இலண்டனின் மையத்தின் அமைவிடம், ((ட்)ரபல்கர் சதுக்கத்துக்கு அண்மையிலுள்ள செயாரிங் சந்தி (Charing Cross)எனக்கூறப்படுகின்றது) அண்ணளவாக 51°30' N, 0°8' W ஆகும்.
வரலாறு
[தொகு]தலைமைக் கட்டுரை: இலண்டனின் வரலாறு
சொற்பிறப்பு
[தொகு]இலண்டன் என்னும் சொல் எப்படி உருவானது என்பது குறித்துத் தெளிவு இல்லை.[1] இது மிகவும் பழைய பெயர். இரண்டாம் நூற்றாண்டிலிருந்தே இப்பெயர் வழங்கி வந்ததைச் சில மூலங்களிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. பொ.ஊ. 121 ஆம் ஆண்டில் இது இலண்டனியம் என அழைக்கப்பட்டது. இச்சொல் உரோம-பிரித்தானிய மூலத்தைக் காட்டுகிறது.[1] மான்மவுத் என்னும் இடத்தைச் சேர்ந்த செஃப்ரி (Geoffrey of Monmouth) என்பவர் தனது இசுட்டோரியா ரீகம் பிரிட்டனி (Historia Regum Britanniae) என்னும் நூலில் இச் சொல்லுக்கு விளக்கம் கொடுக்க முயன்றார்.[1] இச் சொல்லின் தோற்றம் பற்றிய மிகவும் பழைய விளக்கங்களுள் ஒன்றான இதைத் தற்கால அறிஞர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இப்பகுதியை லுட் என்னும் அரசர் கைப்பற்றி ஆண்டதாகவும், அவரது பெயரைத் தழுவியே இந்நகரத்துக்குப் பெயர் ஏற்பட்டதாகவும் அவர் விளக்கினார்[2] 1899 ஆம் ஆண்டிலிருந்து லாண்டினசு என்பவருக்குச் சொந்தமான இடம் என்னும் பொருள் கொண்ட செல்ட்டிய மொழிச் சொல்லிலிருந்து தோன்றியதாகக் கருதப்பட்டது. இந்த விளக்கமும் பின்னர் கைவிடப்பட்டது. 1998 ஆம் ஆண்டில் ரிச்சார்டு கோட்சு (Richard Coates) என்பவர், செல்டியத்துக்கு முந்திய பழைய ஐரோப்பிய மொழிச் சொல்லான "லோவொண்டியா" ((p)lowonida) என்பதிலிருந்தே இலண்டன் என்னும் சொல் தோன்றியதாக விளக்கினார். "லோவொண்டியா" என்னும் சொல் கடக்க முடியாதபடி அகலமான ஆறு என்னும் பொருள் தரும் ஒரு சொல். இச்சொல் தொடக்கத்தில் இலண்டனூடாகச் செல்லும் தேம்சு ஆற்றின் பகுதியைக் குறித்ததாகவும், இதிலிருந்தே இப் பகுதியில் இருந்த குடியேற்றத்துக்கு செல்ட்டிய மொழி வடிவமான லோவொனிடன்யன் என்னும் பெயர் ஏற்பட்டதாகவும் "கோட்சு" விளக்கினார்.[3]
வரலாற்றுக்கு முந்திய காலமும் பழமையும்
[தொகு]மிகப் பழைய காலத்திலேயே இப்பகுதியில் குடியேற்றங்கள் இடையிடையே இருந்ததற்கான சான்றுகள் இருப்பினும், முதல் குறிப்பிடத்தக்க குடியேற்றம் உரோமர்களால் பொ.ஊ. 43 ஆம் ஆண்டிலேயே நிறுவப்பட்டது.[4] இது 17 ஆண்டுகள் மட்டுமே நிலைத்திருந்தது. பொ.ஊ. 61ல், போடிக்கா என்னும் அரசியின் தலைமையிலான ஐசெனி என்னும் பழங்குடியினர் இக் குடியேற்றத்தைத் தாக்கி எரித்து அழித்துவிட்டனர்.[5] பின்னர், பொ.ஊ. 100 ஆம் ஆண்டளவில் பெரிய அளவில் திட்டமிடப்பட்ட குடியேற்றம் இப்பகுதியில் நிறுவப்பட்டதுடன், அதுவரை உரோமப் பேரரசின் பிரித்தானிக்கா மாகாணத்தின் தலைநகரமாக இருந்த கால்செசுட்டருக்குப் பதிலாக இது தலைநகரமும் ஆனது. இரண்டாம் நூற்றாண்டில் இதன் உச்ச நிலையில் இதன் மக்கள்தொகை ஏறத்தாழ 60,000 வரை இருந்திருக்கக் கூடும் என மதிப்பிட்டுள்ளனர்.
உரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், இந்த நகரம் கைவிடப்பட்டு, லுண்டென்விக் என்னும் சக்சன் (Saxon) நகரமொன்று மேற்குத் திசையில், ஓரிரு மைல்களுக்கு அப்பால் அல்ட்விச் (Aldwych) பகுதியில் 7 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது.[6] இப் பகுதியில் பிளீட் ஆற்றின் கழிமுகப் பகுதியில் மீன் பிடிப்பதற்கும், வணிகத்துக்குமான ஒரு சிறு துறைமுகம் இருந்திருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது. நகரத்தை வைக்கிங்குகள் கைப்பற்றும்வரை இவ் வணிக நடவடிக்கைகள் வளர்ந்து வந்தன. ஆனால் வைக்கிங்குகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக இந் நடவடிக்கைகள் மீண்டும் முன்னர் "லண்டனியம்" இருந்த இடத்துக்கு மாற்றப்பட வேண்டியதாயிற்று.[7] வைக்கிங்குகளின் தாக்குதல்கள் பொ.ஊ. 886 ஆம் ஆண்டுவரை தொடர்ந்ததாயினும், அவ்வாண்டில் பேரரசர் அல்பிரட் இலண்டனைக் கைப்பற்றியதுடன் டேனியத் தலைவர் குத்ரம் என்பவருடன் அமைதி ஒழுங்கும் செய்துகொண்டார்.[8] தொடக்ககால "லுண்டன்விக்" நகரத்தின் பெயர் "பழைய நகரம்" என்னும் பொருள்படும் "ஈல்விக்" ஆனது. இதுவே தற்கால நகரமான வெஸ்ட்மின்ஸ்ட்டரில் உள்ள "அல்ட்விக் (Aldwych) ஆகும்.
நடுக் காலம்
[தொகு]1016 ஆம் ஆண்டில் "கனூட்" இங்கிலாந்தின் அரசராகி, 1035 ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரை இலண்டன் நகரத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். இவரது இறப்புக்குப் பின்னர் இவரது மனைவிக்கு முந்திய கணவர் மூலம் பிறந்த மகனான எட்வார்ட் தலைமையில் நாடு மீண்டும் சக்சன்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. எட்வார்ட் வெஸ்ட்மின்ஸ்டர் மடாலயத்தை மீண்டும் கட்டியதுடன், வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையையும் கட்டினார்.[9] இக் காலத்தில் இங்கிலாந்து அரசின் தலைமையிடமாக வின்செசுட்டர் இருந்தபோதும், இலண்டன் இங்கிலாந்தின் மிகப் பெரியதும், வளம் மிக்கதுமான நகரமானது. நோர்மண்டியின் டியூக் ஆக இருந்த வில்லியம் என்பவர் ஆஸ்டிங்ஸ் போரில் வெற்றி பெற்று இங்கிலாந்தின் அரசரானார். புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டிருந்த வெஸ்ட்மின்ஸ்டர் மடாலயத்தில் 1066 ஆம் ஆண்டு நத்தார் நாளன்று அவர் முடிசூட்டிக்கொண்டார்.[10] அவர், இலண்டன் நகர மக்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக அவர்களுக்குச் சிறப்புச் சலுகைகளை வழங்கியதுடன், நகரத்தின் தென்கிழக்கு மூலையில் இலண்டன் கோபுரம் எனப்படும் கட்டிடத்தையும் கட்டினார்.[11]
1097 ஆம் ஆண்டில், இரண்டாம் வில்லியம் வெஸ்ட்மின்ஸ்டர் மடாலயத்துக்கு அருகில், வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தைக் கட்டினார். இம் மண்டபமே நடுக்காலம் முழுதும் அரசர்களின் வதிவிடமாக அமைந்த புதிய வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் அடிப்படையாக அமைந்தது.[12][13] வெஸ்ட்மின்ஸ்டர் அரச அவையினதும், அரசினதும் இடமாக அமைந்தபோதும் அதன் அண்மையில் அமைந்திருந்த இலண்டன் நகரம், வணிக நடவடிக்கைகளின் மையமாகத் திகழ்ந்தது. இது இலண்டன் கார்ப்பரேசன் எனப்படும் தனியான நிருவாகத்தின் கீழ் இருந்தது. 1100 ஆம் ஆண்டில் 18,000 ஆக இருந்த இதன் மக்கள்தொகை 1300 ஆம் ஆண்டில் ஏறத்தாழ 100,000 ஆகியது.[14] இக் காலத்தில் யூதர்களின் மக்கள்தொகை கூடியிருந்தது,[15] முதலாம் எட்வார்டு அரசர் 1260 ஆம் ஆண்டில் வெளியிட்ட ஒரு ஆணையின் மூலம் அவர்களை இங்கிலாந்தில் இருந்து வெளியேற்றினார்.[15] "கறுப்புச் சாவு" எனப்பட்ட ஒரு தொற்றுநோய் ஏற்பட்டு 14 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில், இலண்டனின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இறந்து போனார்கள்.[16] 1381 ஆம் ஆண்டில் "குடியானவர்களின் புரட்சி"யின்போது இடம்பெற்ற ஆக்கிரமிப்பு ஒன்றைத் தவிர, அக்காலங்களில் இடம்பெற்ற உள்நாட்டுக் குழப்பங்களால் இலண்டன் அதிகம் பாதிப்பு அடையவில்லை.[17]
புதுக் காலத் தொடக்கம்
[தொகு]டியூடர் காலத்தில் சீர்திருத்த இயக்கத்தினால் நகர மக்கள் படிப்படியாகப் புரொட்டஸ்தாந்தத்தின் பக்கம் சென்றனர். இலண்டன் நகரம் திருச்சபையிலிருந்து தனியார் சொத்துடைமை முறைக்கு மாறியது. வணிகவியம் வளர்ச்சியடைந்ததுடன், பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி போன்ற தனியுரிமைக் கம்பனிகள் உருவானதுடன், வணிகம் புது உலகப் பக்கமும் விரிவடைந்தது. இங்கிலாந்திலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் குடியேறிகள் இலண்டனுக்கு வந்தனர். இலண்டன் வட கடல் பகுதியின் முதன்மைத் துறைமுகம் ஆனது. 1530 ஆம் ஆண்டில் 50,000 ஆக இருந்த மக்கள்தொகை 1605 ஆம் ஆண்டில் 225,000 ஆக வளர்ச்சியடைந்தது. 16 ஆம் நூற்றாண்டில் அரங்கக் கலைக்கு எதிர்ப்பு இருந்த காலத்தில் வில்லியம் சேக்சுப்பியரும், அவர் போன்ற பிறரும் இலண்டனில் வாழ்ந்தனர். 1603 ஆம் ஆண்டில் டியூடர் கால முடிவில், இலண்டன் நகரம் இறுக்கமாகச் சிறிய அளவாகவே இருந்தது. 1605 ஆம் ஆண்டி நவம்பர் 5 ஆம் தேதி வெஸ்ட்மின்ஸ்டரில், முதலாம் சேம்சைக் கொல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலண்டன் நகரம் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டது. 1665–1666 காலப்பகுதியில் இது தீவிரமாகியது. இதனால் 100,000 பேர் வரை கொல்லப்பட்டனர். இது மொத்த மக்கள் தொகையின் ஐந்தில் ஒரு பகுதியாகும். 1666 ஆம் ஆண்டு செப்டெம்பர் 5 ஆம் தேதி இடம்பெற்ற இலண்டனின் பெரும் தீ விபத்தில் ஏராளமான மரக் கட்டிடங்கள் எரிந்து சாம்பராயின. இதனைத் தொடர்ந்த மீள் கட்டுமானப் பணிகள் முடிவதற்குப் 10 ஆண்டுகள் பிடித்தன. இப் பணிகள் ராபர்ட் ஊக் (Robert Hooke) என்பவரின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றன.
போக்குவரத்து
[தொகு]இலண்டன் மிகவும் வளர்ச்சியடைந்த பொதுப் போக்குவரத்து வலையமைப்பைக் கொண்டுள்ளது. நகரின் பெரும்பாலான தரைவழி போக்குவரத்து லண்டனுக்கான போக்குவரத்து நிறுவனம் [Transport for London – TfL] பொறுப்பாகும். அனேகரது அன்றாடப் பயணங்கள் பாதாளத் தொடர்வண்டி,புகையிரதம், பேருந்து, டீராம் வண்டி போன்ற பொதுப் போக்குவரத்திலேயே நடைபெறுகின்றன. இப் பயணங்களுக்கு ஒய்ஸ்டர் அட்டை எனப்படும் மின்னணுப் பணம் செலுத்தும் அட்டை முறையை, எல்லாப் பாதாள தொடர்வண்டிகள், பேருந்துகள் போன்றவற்றுக்கும் பயன்படுத்தமுடியும்
பாதாளத் தொடர்வண்டி சேவை
[தொகு]இலண்டன் பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பே உலகின் மிகப்பெரியதும் பழமையானதுமான பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பு ஆகும். 270 தரிப்பிடங்களை இலண்டன் முழுவதும் கொண்டுள்ள இவ் பாதாளத் தொடர்வண்டி சேவையை தினமும் 3 மில்லியன் இலண்டன் வாசிகள் பயன்படுத்துவதாக அறியப்படுகின்றது.
பேருந்து சேவை
[தொகு]இலண்டனின் பேருந்து சேவை வலையமைப்பானது உலகில் மிகப்பெரிய பேருந்து சேவை வலையமைப்பாகும். 8000க்கும் மேற்பட்ட 24மணி நேர சேவையை வழங்கக்கூடிய பேருந்துகளையும் 700க்கும் மேற்பட்ட தரிப்பிடங்களையும் கொண்டுள்ள இவ்வலையமைப்பை தினமும் 6 மில்லியன் பயணிகள் பயன்படுத்துகின்றனர்.
காலநிலை
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், இலண்டன் (Greenwich Observatory) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 14.0 (57.2) |
16.0 (60.8) |
21.0 (69.8) |
26.0 (78.8) |
30.0 (86) |
33.0 (91.4) |
34.0 (93.2) |
37.5 (99.5) |
30.0 (86) |
26.0 (78.8) |
19.0 (66.2) |
15.0 (59) |
37.5 (99.5) |
உயர் சராசரி °C (°F) | 7.9 (46.2) |
8.2 (46.8) |
10.9 (51.6) |
13.3 (55.9) |
17.2 (63) |
20.2 (68.4) |
22.8 (73) |
22.6 (72.7) |
19.3 (66.7) |
15.2 (59.4) |
10.9 (51.6) |
8.8 (47.8) |
14.8 (58.6) |
தாழ் சராசரி °C (°F) | 2.4 (36.3) |
2.2 (36) |
3.8 (38.8) |
5.2 (41.4) |
8.0 (46.4) |
11.1 (52) |
13.6 (56.5) |
13.3 (55.9) |
10.9 (51.6) |
8.0 (46.4) |
4.8 (40.6) |
3.3 (37.9) |
7.2 (45) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | -10.0 (14) |
-9.0 (15.8) |
-8.0 (17.6) |
-2.0 (28.4) |
-1.0 (30.2) |
5.0 (41) |
7.0 (44.6) |
6.0 (42.8) |
3.0 (37.4) |
-4.0 (24.8) |
-5.0 (23) |
-7.0 (19.4) |
−10.0 (14) |
பொழிவு mm (inches) | 51.9 (2.043) |
34.0 (1.339) |
42.0 (1.654) |
45.2 (1.78) |
47.2 (1.858) |
53.0 (2.087) |
38.3 (1.508) |
47.3 (1.862) |
56.9 (2.24) |
61.5 (2.421) |
52.3 (2.059) |
54.0 (2.126) |
583.6 (22.976) |
சராசரி மழை நாட்கள் (≥ 1 mm) | 10.9 | 8.1 | 9.8 | 9.3 | 8.5 | 8.4 | 7.0 | 7.2 | 8.7 | 9.3 | 9.3 | 10.1 | 106.6 |
சூரியஒளி நேரம் | 45.9 | 66.1 | 103.2 | 147.0 | 185.4 | 180.6 | 190.3 | 194.4 | 139.2 | 109.7 | 60.6 | 37.8 | 1,461.0 |
Source #1: அதிகபட்சம் மற்றும் குறைந்தபட்சம் அளவீடு - பிபிசி வானிலை,[18] except August maximum from Met Office[19] | |||||||||||||
Source #2: மற்ற எல்லாத் தகவல்களும் வானிலை ஆய்வு அலுவலகத்திலிருந்து பெறப்பட்டது.[20] |
இலண்டனின் சுற்றுலா மையங்கள்
[தொகு]- இங்கிலாந்து வங்கி
- பக்கிங்ஹாம் மாளிகை
- பிரித்தானிய அருங்காட்சியகம்
- சைனாடவுன்
- கிளியோபாட்ராவின் ஊசி (Cleopatra's Needle)
- கொவெண்ட் தோட்டம்
- டவுனிங் சாலை
- ஹாம்ப்டன் கோட் மாளிகை
- குதிரை காவலர் (Horse Guards)
- இம்பீரியல் போர் அருங்காட்சியகம்
- கென்சிங்டன் கூரைத் தோட்டங்கள்
- லீசெஸ்டர் சதுக்கம்
- இலண்டன் அருங்காட்சியகம்
- தேசிய காட்சிக்கூடம் (National Gallery)
- இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்
- பழைய சத்திர சிகிச்சைக்கூட அருங்காட்சியகம்
- லண்டனின் கண்
- இலண்டன் முருகன் கோயில்
- இலண்டன் மகாலட்சுமி கோயில்
- வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை (நாடாளுமன்ற அவைகள் மற்றும் பிக்பென் மணிக்கூண்டு)
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Mills 2001, ப. 139
- ↑ Ackroyd, Peter. "'London'". New York Times. http://www.nytimes.com/2001/12/02/books/chapters/02-1st-ackro.html?ex=1225339200&en=b9c2c11ad6e1f435&ei=5070. பார்த்த நாள்: 2008-10-28.
- ↑ Coates, Richard (1998). "A new explanation of the name of London". Transactions of the Philological Society 96 (2): 203–229. doi:10.1111/1467-968X.00027. http://doi.org/10.1111/1467-968X.00027.
- ↑ Perring, Dominic (1991). Roman London. London: Routledge. p. 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-203-23133-3.
- ↑ "British History Timeline — Roman Britain". பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். பார்க்கப்பட்ட நாள் 2008-06-07.
- ↑ "The early years of Lundenwic". இலண்டன் அருங்காட்சியகம். பார்க்கப்பட்ட நாள் 2008-06-07.
- ↑ "Viking and Danish London". இலண்டன் அருங்காட்சியகம். பார்க்கப்பட்ட நாள் 2008-06-06.
- ↑ "Medieval London — Vikings". இலண்டன் அருங்காட்சியகம். பார்க்கப்பட்ட நாள் 2008-06-07.
- ↑ "Edward the Confessor (c.1003 – 1066)". பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். பார்க்கப்பட்ட நாள் 2008-09-27.
- ↑ "History – 1066 – King William". பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். பார்க்கப்பட்ட நாள் 2008-05-05.
- ↑ Tinniswood, Adrian. "பிரித்தானியக் கட்டிடக்கலை வரலாறு - வெண் கோபுரம் (A History of British Architecture — White Tower)". பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். பார்க்கப்பட்ட நாள் 2008-05-05.
- ↑ "ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றம் - நாடாளுமன்றம்: கட்டிடம் (UK Parliament — Parliament: The building)". UK Parliament. 2007-11-09. Archived from the original on 2012-12-24. பார்க்கப்பட்ட நாள் 2008-04-27.
- ↑ "வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை (Palace of Westminster)". UK Parliament. Archived from the original on 2008-04-04. பார்க்கப்பட்ட நாள் 2008-04-27.
- ↑ Schofield, John (2003). நடுக்கால நகரங்கள்: ஐரோப்பியப் பின்னணியில் பிரித்தானிய நகரங்களின் தொல்லியல் (Medieval Towns: The Archaeology of British Towns in Their European Setting). Continuum International Publishing Group. p. 26. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8264-6002-8.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ 15.0 15.1 Patai, Raphael (1989). The Myth of the Jewish Race. Wayne State University Press. p. 43. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8143-1948-2.
{{cite book}}
: Unknown parameter|coauthors=
ignored (help) - ↑ "BBC – History – Black Death". bbc.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2008-11-03.
- ↑ "The Causes of the Wars of the Roses". பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். 16 July 2003. பார்க்கப்பட்ட நாள் 2008-10-12.
- ↑ "London, Greater London: Average conditions". பிபிசி வானிலை. Archived from the original on 2011-02-28. பார்க்கப்பட்ட நாள் 2011-05-09.
- ↑ "August 2003 — Hot spell". Met Office. Archived from the original on 2011-02-28. பார்க்கப்பட்ட நாள் 2011-05-09.
- ↑ "வானிலை ஆய்வு அலுவலகம்: காலநிலை சராசரி 1971–2000". வானிலை ஆய்வு அலுவலகம். Archived from the original on 2011-02-28. பார்க்கப்பட்ட நாள் 2011-05-09.
வெளியிணைப்புகள் - ஆங்கிலத்தில்
[தொகு]- The Open Guide to London - லண்டன் குறித்த அனைத்து தகவல்களையும் விக்கியில் தொகுப்பதற்கான முனைவு
- London Guide பரணிடப்பட்டது 2005-03-25 at the வந்தவழி இயந்திரம் London Guide on Englandguide.co.uk
- First chapter of the book "London: The Biography" by Peter Ackroyd
- Mayor of London, the London Assembly and the Greater London Authority official web site for the Mayor of London and the London Assembly. www.london.gov.uk
- London பரணிடப்பட்டது 2003-10-28 at the வந்தவழி இயந்திரம் at தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)'s Earth Observatory
- "லண்டன்" பெயரின் விரிவுரை - ஆங்கிலத்தில்[தொடர்பிழந்த இணைப்பு] (PostScript file)
- லண்டன் உணவகங்களின் விமரிசனங்கள்.
- London from Evening Standard பரணிடப்பட்டது 2005-07-12 at the வந்தவழி இயந்திரம்
- லண்டன் உணவகங்களின் வழிகாட்டி.
- London Bars and Pubs Guide.
- London Directory பரணிடப்பட்டது 2004-11-21 at the வந்தவழி இயந்திரம்
- more London Directories
- Transport for London Site பரணிடப்பட்டது 2005-07-12 at the வந்தவழி இயந்திரம்
- London Underground பரணிடப்பட்டது 2005-04-11 at the வந்தவழி இயந்திரம் The Tube
- லண்டனின் தங்கும் விடுதிகள் பரணிடப்பட்டது 2004-12-04 at the வந்தவழி இயந்திரம்
- லண்டனின் தங்கும் விடுதிகள் பரணிடப்பட்டது 2004-11-19 at the வந்தவழி இயந்திரம் 2PL Network
- விக்கிடிராவல் லண்டன் பயண வழிகாட்டி
- The Londinium directory of London