அகச்சுரப்பித் தொகுதி
அகச்சுரப்பித் தொகுதி அல்லது அகஞ்சுரக்குந் தொகுதி (Endocrine system) என்பது இயக்குநீர்கள் அல்லது ஹார்மோன்கள் எனப்படும் கலப்புற signaling மூலக்கூறுகளை வெளிவிடுகின்ற சிறிய உறுப்புக்களின் தொகுதி ஆகும். அகச்சுரப்பித் தொகுதி, வளர்சிதைமாற்றம், வளர்ச்சி, திசுக்களின் செயற்பாடு ஆகியவற்றை நெறிப்படுத்துவதுடன், மனநிலையைத் தீர்மானிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது. அகச்சுரப்பிகளின் குறைபாடுகள் தொடர்பான மருத்துவத் துறை அகச்சுரப்பியியல் எனப்படுகின்றது.
அகச்சுரப்பித் தொகுதி நரம்புத் தொகுதியைப் போல ஒரு தகவல் சைகைத் தொகுதியாகும். நரம்புத் தொகுதி தகவல்களை அனுப்புவதற்கு நரம்புகளைப் பயன்படுத்துகின்றது, ஆனால், அகச்சுரப்பித் தொகுதி தகவல்களை அனுப்புவதற்குப் பெரும்பாலும் குருதியில் தங்கியுள்ளது. உடலின் பல பகுதிகளிலும் உள்ள நாளமில்லாச் சுரப்பிகள், வளரூக்கிகள் எனும் குறிப்பிட்ட வேதிப்பொருட்களை இரத்த ஓட்டத்தில் வெளிவிடுகிறது. இவ் வளரூக்கிகள் உயிரினங்களின் வேறுபட்ட, பல செயற்பாடுகளை நெறிப்படுத்துகின்றன.
சைகைகளின் வகைகள்
[தொகு]கலச் சைகையின் பொதுவான முறை அகச்சுரப்புச் சைகை ஆகும். இத்துடன், பராகிறைன், ஆட்டோகிறைன், நியூரோஎண்டோகிறைன் ஆகிய வேறு பல சைகை முறைகளும் உள்ளன. நுரோன்களுக்கு இடையிலான தனி நியூரோகிறைன் சைகை முறை நரம்புத் தொகுதிக்கு உரியது ஆகும்.
அகங்சுரக்கும் சுரப்பிகளும் அவற்றினால் இயக்குநீர்களும்
[தொகு]பரிவகக் கீழ்
[தொகு]இயக்குநீர்
[தொகு]வேதியியல் அடிப்படையில் இயக்குநீர்கள் புரதங்கள் மற்றும் இயக்க ஊக்கிகள் (Steroids) ஆகியவையாக உள்ளன. இயக்குநீர்கள் மிகக் குறைந்த அளவில் சுரந்தாலும் செயல் திறம் மிக்கவையாகக் காணப்படுகின்றன.
கபச் சுரப்பி (Pituitary Gland)
[தொகு]நாளமில்லாச் சுரப்பிகள் அனைத்தையும் கபச் சுரப்பி (அல்லது மூளையடிச் சுரப்பி) ஒழுங்குப்படுத்திச் செயற்படுவதால், இது நாளமில்லாக் குழுவின் நடத்துநர் என்றழைக்கப்படுகிறது. இது பட்டாணி அளவில் மூளையின் அடிப்பகுதியுடன் இணைந்து காணப்படுகிறது.
கபச் சுரப்பியின் கதுப்புகள்
[தொகு]மூளையடிச் சுரப்பியின் முன் கதுப்பு அடினோஹைபோபைசிஸ் (Adenohypophysis) என்றும், பின் கதுப்பு நியுரோஹைபோபைசிஸ் (Neurohypophysis) என்றும் அழைக்கப்படுகிறது.
அடினோஹைபோபைசிஸ் இயக்குநீர்கள் வகைப்பாடும் செயல்களும்
[தொகு]- வளர்ச்சி இயக்குநீர் (Somatotrophic Hormone): இந்த இயக்குநீர் பொதுவாக வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதாக உள்ளது. இதன் குறைவான சுரப்புக் காரணமாகச் சிறியவர்களுக்கு, வளர்ச்சிக் குன்றிக் குள்ளத் தன்மையும், மிகைச் சிறப்புக் காரணமாக அத்தகையோருக்கு, வளர்ச்சி மிகுந்து அசுரத் தன்மையும் ஏற்படுகிறது. பெரியவர்களுக்கு இம்மிகைச் சுரப்பினால் கை கால்கள், கீழ்த்தாடை ஆகியவை நீண்டதாக (அக்ரோமேகலி) அமையும்.
- கேடயச் சுரப்பியைத் தூண்டும் இயக்குநீர் (Thyrotrophic Harmone): இந்த வகை இயக்குநீர் கேடயச் சுரப்பியின் வளர்ச்சியைத்தூண்டி, கேடயச் சுரப்பி இயக்குநீர் (Thyroxine) உற்பத்தியை அதிகரிக்கிறது.
- அண்ணீரகப் புறணியைத் தூண்டும் இயக்குநீர் (Adrenocorticotropic Hormone) : அல்டோஸ்டீரோன் (Aldosterone) மற்றும் கார்டிசோன் இயக்குநீர் உற்பத்தியை இது தூண்டுகின்றது.
- பாலிக்கிள் உயிர்மியைத் தூண்டும் இயக்குநீர்: பெண்களில் கிராமியன் பாலிக்கிள் அண்டச் சுரப்பியின் முதிர்வடைவதைத் தூண்டி அண்ட உற்பத்தியை அதிகரிக்கின்றது. அதுபோல், ஆண்களில் விந்து உருவாதலைத் தூண்டுகிறது.
- லூட்டினைசிங் இயக்குநீர் (பெண்) அல்லது இடையீட்டுச் செல்களைத் தூண்டும் இயக்குநீர் (ஆண்) : கிராபியன் பாலிக்கிளிலிருந்து அண்டம் வெளியேறுதல் என்னும் அண்ட விடுபடும் நிகழ்விற்கு லூட்டினைசிங் இயக்குநீர் பயன்படுகிறது. ஈத்திரோசன் (Estrogen), புரோஜெஸ்டரோன் (Progesteron) முதலான பெண்மை இயக்கு நீர்களின் உற்பத்திக்கு அடிகோலுகிறது. ஆண்களில் இடையீட்டுச் செல்கள், ஆண்மையியக்குநீரான இரெசுத்தோசத்தெரோன் (Testosterone) இயக்குநீரைச் சுரக்கச் செய்கின்றன.
- பால் சுரப்பு இயக்குநீர் (Lactogenic hormone) : இது பெண்களில் பால் சுரப்பியின் வளர்ச்சி மற்றும் குழந்தைப் பெற்றிற்குப் பின்னர், பால் உற்பத்தியைத் தூண்டுகிறது.[1]
நியுரோஹைபோபைசிஸ் இயக்குநீர்கள் வகைப்பாடும் செயல்களும்
[தொகு]- ஆக்சிடோசின் : இவ்வியக்குநீர் பெண்களில் கருப்பையைச் சுருக்கியும் விரிவடையச் செய்தும் குழந்தைப்பேறு நிகழ்வை விரைவுபடுத்துகின்றது.
- வாசோ பிரக்சின் மற்றும் சிறுநீர்த்தடுப்பி இயக்குநீர் (Antidiuretic hormone) : இந்த வகை இயக்குநீர், நீர் மீள உறிஞ்சப்படவும் அடர்த்தியான சிறுநீரைக் குறைந்த அளவில் உற்பத்திச் செய்திடவும் உறுதுணையாக இருக்கிறது. மேலும், இரத்தக் குழாய்களைச் சுருங்கச் செய்து இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது. இவ்வியக்குநீரில் பாதிப்புகள் ஏற்பட்டுச் சுரப்பின் அளவு குறையும்போது, மிகை நீரிழிவு நோய் (Diabetes insipidue) உண்டாகின்றது. இதன் காரணமாக, சிறுநீர் நீர்த்து அதிக அளவு வெளியேறுகிறது.[1]
கூம்புச் சுரப்பி (Pineal Gland)
[தொகு]இது, மூளைப்பகுதியிலுள்ள கார்பஸ் கலோசத்தின் அடியில் காணப்படுகிறது. இது கருப்புநிறமி (Melatonin) இயக்குநீரை உற்பத்திச் செய்கிறது. மார்புக் காம்பு, விதைப்பை போன்ற பகுதிகளில் நிறமிகளின் அடர்த்திக்கு இந்நிறமி முக்கியப் பங்கு வகிக்கிறது.
கேடயச் சுரப்பி (Thyroid gland)
[தொகு]கழுத்துப் பகுதியில் குரல்வளையின் இரண்டு புறங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரு கதுப்புகளைக் கொண்டு காணப்படும் அமைப்பிற்கு கேடயச் சுரப்பி என்றுபெயர். கேடயச் சுரப்பியக்குநீர் (Thyroxine) இங்குதான் சுரக்கிறது. இச்சுரப்பியக்குநீரில் அமினோ அமிலமும் அயோடினும் காணப்படுகின்றன. இச்சுரப்பியானது, உடல் வளர்ச்சியை மறைமுகமாகப் பாதிப்பதன் காரணமாக ஆளுமை இயக்குநீர் எனவும் குறிப்பிடப்பெறுகிறது.
கேடயச் சுரப்பியக்குநீரின் பணிகள்
[தொகு]கேடயச் சுரப்பியக்குநீர், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கின்றது. உடலின் வெப்பத்தை அதிகப்படுத்த துணைசெய்கிறது. திசு வளர்ச்சி மற்றும் மாறுபாடு அடைவதைத் தூண்டுகின்றது. மேலும், குருதியில் அயோடின் மற்றும் சர்க்கரை அளவை ஒழுங்குப்படுத்துகிறது. சிறுநீரகச் செயல்பாட்டையும், சிறுநீர்ப் போக்கையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது.
குறைபாடுகளால் உண்டாகும் விளைவுகள்
[தொகு]கேடயச் சுரப்புக்குறை நோய் (Hypothyroidism)
[தொகு]கேடயச் சுரப்பியக்குநீரின் குறை சுரப்புக் காரணமாக, முன் கழுத்துக் கழலை, குறை வளர்சிதை மாற்றம், உடல் வளர்ச்சிக் குறை நோய் (Cretinism) முதலான குறைபாடுகள் ஏற்படுகின்றன.
- முன்கழுத்துக் கழலை : உணவில் அயோடின் பற்றாக்குறையால் இந்நோய் உண்டாகிறது. இதன் காரணமாக, கழுத்துப் பகுதியில் கேடயச் சுரப்பி வீங்கிக் காணப்படும்.
- மிக்சிடிமா என்றழைக்கப்படும் குறைவளர்சிதை மாற்றக் குறைபாடு பெரியவர்களுக்கு ஏற்படுகிறது. குறைந்த வளர்சிதை மாற்றவீதம், உடல், மநம் தரவுற்றுக் காணப்படுதல், எடை அதிகரிப்பு, தோல் கடினத்தன்மை, குறைவான இதயத்துடிப்பு, மனச்சோர்வு முதலான அறிகுறிகள் இக்குறைபாட்டால் நிகழ்கின்றன.
- உடல் வளர்ச்சிக் குறை நோய் : இது சிறியவர்களில் காணப்படும். இந்நோய் பாதிப்பினால் குள்ளத்தன்மை, மனவளர்ச்சிக் குறைபாடு, குறைபாடுடைய பற்கள், நாக்குத் துருத்துதல், தோல் தளர்வுத்தன்மை முதலிய அறிகுறிகள் உண்டாகும்.[1]
கேடயச்சுரப்பு மிகைநோய் (Hyperthyroidism)
[தொகு]கேடயச் சுரப்பியக்குநீரின் மிகைச் சுரப்பினால், மிகையான வளர்சிதை மாற்றம், உயர் இரத்த அழுத்தம், படபடப்பு, மிகுதியாக வியர்த்தல், எடை குறைவு, களைப்படைதல், கண்களில் பிதுக்கம் போன்றவை ஏற்படுகின்றன.
புறக் கேடயச் சுரப்பி(Para thyroid gland)
[தொகு]இவை கேடயச் ச்ரப்பிக்கு உள்ளே இருக்கின்றன. இணை இயக்குநீர் (Parathormone) ,கால்சிடோனின் (Calcitonin) ஆகிய இயக்குநீர் இங்கு உருவாக்கப்படுகின்றன. இவை, கால்சியம் வளர்சிதை மாற்றத்தைப் பராமரிக்கின்றன.
தைமசு சுரப்பி
[தொகு]இதயத்தின் மேல் அமைந்திருக்கும் பெரும் நிணநீர் அமைப்பு தைமசு சுரப்பியாகும். இது தைமொசின் என்னும் இயக்குநீரினைச் சுரக்கின்றது. தைமொசின், நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. மேலும், தைம நிணவணு (T lymphocyte) வேறுபாடு அடைவதைத் தூண்டிவிடுகிறது.
அண்ணீரகச் சுரப்பி (Adrenal gland)
[தொகு]இச்சுரப்பியானது சிறுநீரகத்தின் மேல் அமைந்துள்ளது. இது அண்ணீரக புறணியையும் (Adrenal cortex), அண்ணீரக அகணியையும் (Adrenal medulla) உள்ளடக்கியதாகும்.
அண்ணீரக புறணி
[தொகு]இதில் ஆல்டோஸ்டீரோன், கார்டிசோன் என்னும் இயக்குநீர்கள் சுரக்கின்றன. இவற்றுள், ஆல்டோஸ்டீரோன் நீர், சோடியம் மீண்டும் உரிஞ்சப்படுவதை ஊக்குவித்து பொட்டாசியம், பாசுபேட் அயனிகளைக் கழிவு நீக்கம் செய்கின்றது. தாது உப்புகளின் வளர்சிதை மாற்றத்தைப் பராமரிப்பு மேற்கொள்கிறது. மேலும், மின் பகுளிகளின் (Electrolytes) சமநிலை, உடல்திரவ அடர்த்தி. சவ்வூடு பரவல் அழுத்தம், இரத்த அழுத்தம் முதலியவற்றையும் இது பராமரிக்கிறது. கார்டிசோன் இயக்குநீர், கிளைக்கோசனைக் குளுக்கோசாகச் சிதைவடையச் செய்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது. தவிர, அழற்சித் தடுப்பு வினைகளைத் தோற்றுவித்து நோய்த்தடைக் காப்புத் துலங்கலைக் கட்டுப்படுத்துகின்றது.
அண்ணீரக அகணி
[தொகு]இது, உருமாறிய நரம்புப் புறணியணுக்களால் ஆனது. அதிரனலின், இயலண்ணீரலின் என்கிற இருவகையான இயக்குநீர்களைச் சுரக்கின்றது. இவை ஆபத்துக் கால இயக்குநீர் என அழைக்கப்படுகிறது. ஏனெனில், அழுத்தமான, அபாயகரமான சூழ்நிலைகளை உடல் விரைந்து எதிர்கொள்ள இவை துணைபுரிகின்றன. மேலும், இவை இதயத்துடிப்பு, சுவாசம், விழிப்புணர்வுத் திறன் ஆகியவற்றை அதிகரிக்கச் செய்கின்றன. அதுபோல், கண் பாவையை விரிவடையச் செய்கின்றன. மிகையான வியர்த்தல், முடி சிலிர்க்கச் செய்தல் போன்றவற்றையும் உண்டாக்குகின்றன.[1]
மேற்கோள்கள்
[தொகு]இவற்றையும் பார்க்கவும்
[தொகு]- புறச்சுரப்பித் தொகுதி (Exocrine gland)