முற்றுகை (ஆங்கிலம்: siege)என்பது, ஒரு நகரத்தையோ கோட்டையையோ கைப்பற்றும் நோக்கில் படை நடவடிக்கை மூலம் அதைச் சுற்றி வளைத்துத் தடைகளை ஏற்படுத்துவதைக் குறிக்கும். முற்றுகைப் போர் தீவிரம் குறைவான ஒரு போர் உத்தி அல்லது வடிவம் ஆகும். இதில் ஒரு தரப்பு வலுவானதும், நிலையானதுமான ஒரு பாதுகாப்பு நிலையைக் கொண்டிருக்கும். இதன் விளைவாக இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்களும் ஏற்படுவது உண்டு. இரு தரப்பும் அருகருகே இருப்பதும், வெற்றிக்கான வாய்ப்புக்கள் மாறிக்கொண்டு இருப்பதும் இராசதந்திர நடவடிக்கைகளை ஊக்குவிப்பது உண்டு.

சிலியின் விடுதலைப் போரின்போது இடம்பெற்ற ரங்காகுவா முற்றுகை

தாக்குதல் நடத்தும் தரப்பு ஒரு கோட்டையையோ நகரத்தையோ எதிர்கொள்ளும்போது, அதை ஊடறுத்து உட்செல்ல முடியாத நிலையில், எதிர்த்தரப்பு சரணடைவதற்கும் மறுக்கும்போது முற்றுகை ஏற்படுகிறது. குறித்த இலக்கைச் சுற்றி வளைத்து, மேலதிக படை உதவிகளைப் பெறுவதையும், உள்ளிருக்கும் படைகள் தப்பிச் செல்வதையும், உணவு முதலிய தேவைகள் கிடைப்பதையும் தடைசெய்வதே முற்றுகையின் நோக்கம் ஆகும். இவற்றுடன் சேர்த்து முற்றுகைப் பொறிகள், கனரக ஆயுதங்கள், சுரங்கம் தோண்டுதல் போன்றவற்றைப் பயன்படுத்தி மதில்களை உடைக்க முயற்சி செய்வர். பாதுகாப்பை ஊடறுத்துச் செல்வதற்கு ஏமாற்று, துரோகம் போன்ற செயற்பாடுகளையும் பயன்படுத்துவதுண்டு. படை நடவடிக்கைகள் பயன் தராதவிடத்து, பட்டினி, தாகம், நோய்கள் போன்றவற்றினால் முற்றுகை இடும் தரப்போ, அதற்கு உள்ளாகும் தரப்போ பாதிக்கப்படுவது முற்றுகையின் முடிவைத் தீர்மானிக்கக் கூடும்.

நகரங்கள் பெரும் மக்கள்தொகையோடு கூடிய மையங்களாக வளர்ச்சியடைவதற்கு முன்பே முற்றுகைகள் இருந்திருக்கக்கூடும். மையக் கிழக்கின் பண்டைக்கால நகரங்களில் அரண் செய்யப்பட்ட நகர மதில்கள் இருந்ததற்கான தொல்லியற் சான்றுகள் உள்ளன. பண்டைய சீனாவின் போரிடும் நாடுகள் காலத்தில் நீண்ட முற்றுகைகளும், நகர மதில்களைப் பாதுகாப்பவர்களுக்கு எதிரான முற்றுகைப் பொறிகளின் பயன்பாடும் இருந்ததற்கான எழுத்துமூலச் சான்றுகளும், தொல்லியற் சான்றுகளும் உள்ளன. கிரேக்க-உரோம காலத்திலும் முற்றுகைப் பொறிகளின் பயன்பாடு ஒரு மரபாக இருந்தது. மறுமலர்ச்சிக் காலத்திலும், தொடக்க நவீன காலத்திலும் ஐரோப்பாவில் இடம்பெற்ற போர்களில் முற்றுகைப் போர் முக்கியத்துவம் பெற்று விளங்கியது. ஒரு ஓவியராகப் புகழ் பெற்றிருந்தது போலவே லியொனார்டோ டா வின்சி தனது அரண்களின் வடிவமைப்புக்காகவும் புகழ் அடைந்திருந்தார்.

மத்தியகாலப் போர்கள் பொதுவாக தொடர் முற்றுகைகளைச் சுற்றியே வடிவமைக்கப்பட்டிருந்தன. நெப்போலியக் காலத்தில் தொடந்து அதிகரித்து வந்த ஆற்றல் வாய்ந்த பீரங்கிகளின் பயன்பாட்டால், அரண்களின் பெறுமதி குறையலாயிற்று. 20 ஆம் நூற்றாண்டில், பழைய முற்றுகைகளின் முக்கியத்துவம் குறைந்து விட்டது. நகர்வுப் போர்முறைகளின் அறிமுகத்தோடு நிலையான ஒற்றை அரண் முன்னைப்போல் முடிவைத் தீர்மானிக்கும் ஒன்றாக இல்லாமல் போய்விட்டது. ஆனாலும், மரபுவழியான முற்றுகைகள் இப்போதும் இருக்கவே செய்கின்றன. ஆனால், போர்களின் போக்கு மாறிவிட்டதால், முக்கியமாக பெருமளவிலான அழிப்பு ஆற்றலை மிக இலகுவாக ஒரு நிலையான இலக்கு மீது செலுத்த் முடியும் என்பதால், முற்றுகை முன்னைப்போல் வழமையான ஒன்றாக இல்லை.

பண்டைக்காலம்

தொகு

நகர மதில்களின் தேவை

தொகு

பண்டைக்காலத்தில் அசிரியர்கள் பெருமளவிலான மனித வலுவைப் பயன்படுத்தி அரண்மனைகளையும், கோயில்களையும், பாதுகாப்பு மதில்களையும் கட்டினர்.[1] சிந்துவெளி நாகரிகத்திலும் சில குடியிருப்புக்கள் அரண் செய்யப்பட்டு இருந்தன. கிமு 3500 அளவில், நூற்றுக்கணக்கான சிறிய வேளாண்மை சார்ந்த ஊர்கள் சிந்து ஆற்றின் வடிநிலங்களில் காணப்பட்டன. இவற்றுட் பல திட்டமிட்டு அமைக்கப்பட்ட வீதி அமைப்புக் கொண்டவையாகவும், அரண் செய்யப்படவாகவும் இருந்தன. சிந்துவெளி நாகரிகத்தின் முன்னோடிக் குடியேற்றங்களுள் ஒன்றான, பாகிசுத்தானில் உள்ள கொட் டிசியில், கற்களாலும், மண் கற்களாலும் கட்டப்பட்ட வீடுகளின் தொகுதிகள் பெரும் வெள்ளத் தடுப்பு அணைகளாலும், பாதுகாப்பு மதில்களாலும் சூழப்பட்டு இருந்ததன. வேளாண்மை நிலங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக அயல் குடியிருப்பக்களிடையே அடிக்கடி பிணக்குகள் இருந்ததாலேயே இவ்வாறான பாதுகாப்புத் தேவையாக இருந்தது.[2] தென்கிழக்கு ஆப்கானிசுத்தானில் உள்ளதும், கிமு 2500 காலப்பகுதியைச் சேர்ந்ததுமான முண்டிகக் என்னும் இடத்தில் பாதுகாப்பு மதிலும், சதுர வடிவிலான கொத்தளமும் இருந்தன.[1]

பண்டைய அண்மைக் கிழக்கில் உருவான முதல் நகரங்களில் நகர மதில்களும், அரண்களும் அவசியமாக இருந்தன. உள்ளூரில் கிடைப்பதைப் பொறுத்து மதில்கள் மண் கற்கள், கற்கள், மரம் அல்லது இவை எல்லாமே மதில்கள் அமைப்பதற்குப் பயன்பட்டன. இவ்வரண்கள், தாக்கும் போது பாதுகாப்பு அளிப்பது மட்டுமன்றி, எதிரிகளுக்குத் தமது வலிமையையும், ஆற்றலையும் காட்டுவனவாகவும் இவை பயன்பட்டன. சுமேரிய நகரமான ஊருக்கைச் சுற்றியிருந்த மதில் பரவலான மதிப்பைப் பெற்றிருந்தது. இம்மதில் 9.5 கிமீ (5.9 மைல்) நீளமும், 12 மீட்டர் (39 அடி) உயரமும் கொண்டிருந்தது. பின்னர், காவற் கோபுரங்கள், அகழிகள் ஆகியவற்றோடு கூடிய பபிலோனின் மதில்களும் இதுபோலவே பெயர் பெற்று விளங்கின.

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 Fletcher & Cruickshank 1996, ப. 20.
  2. Stearns 2001, ப. 17.

உசாத்துணைகள்

தொகு

மேலும் வாசிக்க

தொகு

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முற்றுகை&oldid=4044329" இலிருந்து மீள்விக்கப்பட்டது