உள்ளடக்கத்துக்குச் செல்

என்றீக்கே என்றீக்கசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹென்றீக் ஹென்றீக்கஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குரு
என்றீக்கே என்றீக்கசு
Henrique Henriques

சே.ச.
சபைகத்தோலிக்க திருச்சபை
(பிரான்சிஸ்கன் சபை [1545 வரை]
இயேசு சபை [1545-1600])
பிற தகவல்கள்
இயற்பெயர்அன்றீக்கே அன்றீக்கசு
பிறப்பு1520 (1520)
விலா விக்கோசா, அலென்டெஜோ,
போர்த்துகல் அரசாட்சி
இறப்பு6 பெப்ரவரி 1600(1600-02-06) (அகவை 79–80)
புன்னக்காலே , போர்த்துகேய இந்தியா
(தற்போது புன்னக்காயல்,
தூத்துக்குடி மாவட்டம்,
தமிழ்நாடு, இந்தியா)
கல்லறைபனிமய மாதா பேராலயம், தூத்துக்குடி
வேலைஇயேசு சபை குரு, சமயப்பரப்பாளர், இறையியல் ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர்
கல்விதிருச்சபைச் சட்டத் தொகுப்பு
படித்த இடம்கோயம்ப்ரா பல்கலைக்கழகம், போர்ச்சுகல்

என்றிக்கே என்றீக்கசு (Henrique Henriques, ஹென்றிக்கே ஹென்றீக்கஸ் அல்லது அன்றீக்கே அன்றீக்கசு[1] 1520–6 பெப்ரவரி 1600), போர்த்துக்கீச இயேசு சபை போதகரும் மதப்பரப்புனரும் ஆவார். அண்டிரிக் அடிகளார் எனப் பொதுவாக அழைக்கப்படும் இவர் தனது வாழ்நாளின் பெரும் பகுதியை தமிழ்நாட்டில் மதப்பரப்புப் பணிகளில் ஈடுபட்டவர். ஐரோப்பாவில் இருந்து தமிழ்நாடு வந்து முதன் முதலாகத் தமிழ் கற்றுக் கொண்டவர் இவரே. முதன்முதலில் தமிழில் அச்சு நூல்களை வெளியிட்டார். 1546 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்த இவர் ஆரம்பகாலத்தை கோவாவில் கழித்த பின்னர் தமிழ்நாட்டுக்கு வந்தார். இயேசு சபை சார்பில் தமக்கு மேலதிகாரியாக இருந்த புனித பிரான்சிசு சேவியரின் (1506-1552) அறிவுறுத்தலின் பேரில் தமிழ் கற்றுக் கொண்டார். தமிழில் எழுதவும் பேசவும் திறமை பெற்றார்.

தொடக்க வாழ்க்கை

[தொகு]

என்றீக்கசு, 1520 -ஆம் ஆண்டில் அன்றைய போர்த்துகல் அரசாட்சியின் அலென்டெஜோ பகுதிக்கு உட்பட்ட விலா விக்கோசா என்னும் ஊரில் பிறந்தார்.

இளம் பருவத்தில் கத்தோலிக்க திருச்சபையின் கீழ்ப்பட்ட பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். எனினும் தன் முன்னோர் செபராது யூதர்கள் என்பதால் அச் சபையுடனான முரணைத் தவிர்க்க எண்ணி வெளியேறினார். பின் கோயம்ப்ரா பல்கலைக்கழகத்தில் திருச்சபைச் சட்டத் தொகுப்பு பயின்றார்.[2]

இயேசு சபையில் 7 அக்டோபர் 1545 அன்று இணைந்த என்றீக்கசு[3] 1546-ஆம் ஆண்டில் இந்தியாவுக்குப் பயணமானார்.[4]

சமயப்பணியும் தமிழ்ப்பணியும்

[தொகு]

இந்தியாவை அடைந்தபின் கோவாவில் சில காலம் வாழ்ந்தார். பின்னர் தூத்துக்குடியில் குடியேறினார். கிறித்தவ சமயப் பணி ஆற்ற மக்கள் மொழியான தமிழைக் கற்றார். தமிழ் மொழியில் புலமைப் பெற்றார். ஐரோப்பாவில் பிறந்து தமிழ்ப் புலமை அடைந்த முதல் அறிஞர் என்னும் பெருமையைப் பெற்றார்.

அது மட்டுமல்லாமல் ‘தம்பிரான் வணக்கம்’ (1578) என்னும் தமிழ் நூலை முதன்முதல் அச்சேற்றி வெளியிட்ட பெருமையையும் அண்டிரிக் அடிகளார் பெற்றார். அடிகள் மற்றொரு நூலையும் அச்சிட்டு வெளியிட்டார். அதன் பெயர் ’அடியார் வரலாறு’ (1586). ’கிரிசித்தியானி வணக்கம்’ (1579)’ கொமபெசயனாயரு’ (1578), ’மலபார் இலக்கணம்’ ஆகியன இவர் எழுதிய பிற நூல்கள் ஆகும்.

தம்பிரான் வணக்கம்

[தொகு]
தம்பிரான் வணக்கம் தம்பிரான் வணக்கம்
தம்பிரான் வணக்கம்
கிரிசித்தியானி வணக்கம்

தமிழ்மொழியைக் கற்றுக்கொண்ட அவர்தான் முதல் தமிழ் (எழுத்துகளில்) அச்சுப் புத்தகமான "தம்பிரான் வணக்கம்" என்னும் நூலை வெளியிட்டார். இதனால் இவர் தமிழ் அச்சுக்கலையின் தந்தை" எனப் போற்றப்படுகிறார். இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக அச்சு கண்டது தமிழ் மொழியே. நூல் பதித்த இடம் கொல்லம் என்றும், பதித்த நாள் அக்டோபர் 20, 1578 என்றும் அந்நூலிலிருந்தே அறிகிறோம். தம்பிரான் வணக்கம், போர்த்துக்கீசிய மொழியில் எழுதப்பட்ட கிறித்துவ சமய போதனை நூலின் தமிழாக்கம்.அக்காலத்தில் தமிழ் மொழி எழுத்துகளுக்கான அச்சுகளையும் முதன்முதலாக உருவாக்க ஏற்பாடு செய்தவர். கோன்சால்வசு என்னும் அச்செழுத்துக்களை வெட்டுவதில் சிறந்த கருமானின் உதவியைப் பெற்று தமிழ் எழுத்துக்கள் வடிக்கப்பட்டன[5] பாதிரி என்றீக்கே என்றீக்கசு தமிழ் நூலை போர்த்துகீசு நாட்டில் லிசிபனில் வெளியிட்டார்).

பிற பணிகள்

[தொகு]

சமயத் தொண்டு, தமிழ்த் தொண்டு மட்டுமல்லாது குமுகாயத் தொண்டும் அண்டிரிக் அடிகளார் செய்தார். உள்ளூர் மக்களின் உதவியுடன் ஒரு மருத்துவமனையை முத்துக்குளித்துறையில் தொடங்கினார். 1567 இல் புன்னைக் காயலில் தமிழ்க் கல்லூரியைத் தொடங்கி அதில் இயக்குநராகவும் ஆசிரியராகவும் இருந்தார். எல்லா மதத்தினரும் அண்டிரிக் அடிகளாரை நேசித்தனர்.

மறைவு

[தொகு]

1600 ஆம் ஆண்டில் பிப்ரவரி 22 ஆம் நாள் தனது 80 வது வயதில் புன்னைக்காயலில் காலமானார். இவரது உடல் தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.[6]

இவற்றையும் பார்க்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. கமில் சுவெலபில் (1992). Companion studies to the history of Tamil literature. BRILL. p. 151. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789004093652.
  2. Padre Henrique Henriques, the Father of the Tamil Press
  3. Jesuits in Ceylon (in the XVI and XVII Centuries) p. 156
  4. Biographical Dictionary of Christian Missions p. 288
  5. http://books.google.com/books?id=VToJrBPbQ9AC&pg=RA1-PA495&lpg=RA1-PA495&dq=henrique+tamil&source=web&ots=W6YGxwsW3Y&sig=ifOAr9a-NSD5B2jP8EkEXZ2ZPkk#PRA1-PA496,M1.
  6. Jesuits in Ceylon (in the XVI and XVII Centuries) பக். 156

உசாத்துணைகள்

[தொகு]